மருந்து, மாத்திரை தருவதா மருத்துவம்?

Posted: 12/10/2014 in அனுபவம்
குறிச்சொற்கள்:, , , ,

மருத்துவம் என்பது மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை; மனதை வருடும் வார்த்தைகளில்தான் அதிகமிருக்கிறது. இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சிடுசிடுவென எரிந்து விழும் மருத்துவர்களிடம் சென்றால், நோய்க்கொடுமை மேன்மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. இது, நானறிந்த உளவியல்.
நோயாளியிடமோ, உடன் வருபவரிடமோ, கூடுதலாக ஓரிரு வார்த்தைகள் கூடப் பேசாத டாக்டர்களை பார்த்திருக்கிறேன். கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல விரும்பாமல், எரிந்து விழும் டாக்டர்களையும் சந்தித்திருக்கிறேன். நோயாளியை ஏறெடுத்துக்கூட பார்க்காத டாக்டர்களும் உண்டு. இவர்களுக்கு மாறாக, ‘போதும் போதும்’ என்கிற அளவுக்கு நோயாளியிடம் பேசும் டாக்டர்களையும் பார்த்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் டாக்டர், மருத்துவமனையில் இருந்தால், அந்த இடமே கலகலப்பாக இருக்கும். நோயாளியிடம் சத்தமாகத்தான் பேசுவார்; விசாரிப்பார்; கண்டிப்பார். அவர் பேசுவது, அந்த மருத்துவமனையில் இருக்கும் அத்தனை அறைகளுக்கும் கேட்கும். அவர், போனில் பேசினால் கூட அப்படித்தான். அங்கு ரகசியம் என்பதே கிடையாது. அவரிடம் சென்று விட்டால், ஆலோசனை, வைத்தியம் எல்லாமே, முன்பு சொன்னது போலவே, ‘போதும்போதும்’ என்கிற அளவுக்கு இருக்கும்.
அய்யாவுக்கு உடல் நலம் பாதித்தால், ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். அந்த மருத்துவர், வெறும் எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தவர். அய்யாவைப் பார்த்ததும், ‘வாங்க கவுண்டரே… வாங்க…வாங்க…வாங்க…’ என்பார். ‘உங்களுக்கென்ன கவுண்டரே… நீங்கெல்லாம் அந்தக்காலத்துல ஏர் ஓட்டி வெவசாயம் செஞ்சவங்க. உங்களுக்கெல்லாம் 100 வருஷத்துக்கு ஒண்ணும் ஆகாது. ஏதாவது கொஞ்சம் அங்க இங்க வலியாகும். அதுக்கு ஒரு ஊசி போட்டோ சரியாப்போகும்’ என்பார்.
உடலை பரிசோதனை செய்வார். கை காலை நீட்டி மடக்கச்சொல்வார். ‘எங்கே தொந்தரவு’ என்று கேட்பார். ஒரு ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து விடச்சொல்லி, நெஞ்சிலும், முதுகிலும் ஸ்டெத் வைத்து பரிசோதிப்பார். ‘வீட்டில் மரம் பூ பூக்கிறதா, காய்கறி போட்டிருக்கிறீர்களா’ என்றெல்லாம் கேட்பார். நடந்து காட்டச்சொல்வார். கடைசியில், ‘உங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை’ என்று கூறி விடுவார்.
‘நான் பரிசோதனை செஞ்சதில, உங்க ஒடம்புல எந்த பிரச்னையும் இல்லிங்க, மனசுக்குள்ள தான் ஏதோ கொஞ்சம் கவலை இருக்குறாப்புல தெரியுது. என்ன கவலைன்னு எங்கிட்டச் சொல்லுங்க. உங்க மகன்கிட்ட நான் பேசுறேன்’ என்பார். ‘ஒரு கவலையும் இல்லிங்க, பசிதான் ஆக மாட்டேங்குது’ என்பார் அய்யா.
‘அந்தக்காலத்துல ஏர் ஓட்டும்போது, சாப்பிட்ட அளவு இப்ப நீங்க சாப்பிட முடியாது. கொஞ்சம் கொறைவாத்தான் சாப்பிடணும். நல்லா பசியாகுறதுக்கு, ஜீரணம் ஆகுறதுக்கு மாத்திரை தரலாம். வேற எதுவும் வேண்டாம். நீங்க தெனமும் நல்லா கொஞ்ச தூரம் நடந்தாலே போதும்; எல்லாம் செரியாகிடும்’ என்பார்.
மருத்துவரின் பேச்சிலேயே அய்யாவின் உபாதைகளில் பெரும்பகுதி குணமாகி விடும். அப்புறம், பெயரளவில் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக் இஞ்செக்சன் போட்டு விடுவார். இப்படித்தான் பல பேருக்கு சிகிச்சை அளிக்கிறார், அந்த மருத்துவர்.
பெரிய அளவில் பணம் பறிப்பதாகவும் அவர் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால் கூட்டம் மட்டும் குறைவதில்லை. வெறும் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களுக்கு மதிப்பில்லாத இந்தக்காலத்திலும், அந்த மருத்துவமனைக்கு அவ்வளவு கூட்டம் வருவதற்கு மருத்துவரின் பேச்சு சாமர்த்தியமே காரணம்.
கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சென்றால், உயர்தரமான சிகிச்சை கிடைக்கும், மூட்டை மூட்டையாக மருந்து, மாத்திரைகளும் கிடைக்கும். அங்கிருக்கும் மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும், நம் உடல் உபாதைகளைப் பற்றி அறிந்த அளவுக்கு, மன உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தெரிந்திருக்காது. ஆகவே, மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை மருத்துவம் என்பதை உணர்ந்து கொண்ட மருத்துவரை தேடிச்சென்றால், நோயும் குணமாகும்; நோய் கண்ட மனமும் குணமாகும்.

பின்னூட்டங்கள்
 1. Bagawanjee KA சொல்கிறார்:

  வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னால் நோய் பறந்து போகும் தன்னால் என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது .பல போலி டாக்டர்களும் இப்படித்தான் வாயிலேயே அல்வா கிண்டி மக்களிடம் கைராசி டாக்டர் என்று பெயர் வாங்கி விடுகிறார்கள் )

  Like

 2. துளசி கோபால் சொல்கிறார்:

  உண்மைதான். உடம்பு சரி இல்லைன்னா…டாக்டரைப் பார்த்தவுடன் பாதி நோய் சரி ஆகிருது. மனுச மனம் அன்புக்கும், அன்பான பேச்சுக்கும் உள்ளூற ஏங்குதுன்னு நினைக்கறேன். அதான்…இன்சொல் சொல்றவங்களை ரொம்பபிடிச்சுப்போகுது.

  Like

  • சரியாகச்சொன்னீர்கள் மேடம். ஆதரவான வார்த்தைகளுக்காகத்தான் ஒவ்வொரு மனிதனும் ஏங்கித்தவிக்கிறான். தான் துயர் அடையும் வேளையில் ஆறுதல் சொல்லும் யாரையும், கடவுளாகவே பார்க்கிறான் மனிதன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

   Like

 3. karanthaijayakumar சொல்கிறார்:

  உண்மைதான் நண்பரே
  ஆனால் இதுபோன்ற மருத்துவர்களை இன்று காண்பது அரிது

  Like

  • ஆம் ஐயா. ஆறுதல் வார்த்தைகள் பேசும் மருத்துவர்கள் குறைந்து போய் விட்டார்கள். அச்சுறுத்தி பணம் பறிக்கும் மருத்துவர்களே அதிகம் பேர் இருக்கின்றனர். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s