ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், சிற்றிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கணிசமான பென்சன், அமெரிக்காவில் வசிக்கும் மகள், மகன் அனுப்பும் பணம் வேறு, செலவழிக்க முடியாமல் கொட்டிக்கிடந்தது.
ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரளமாக பேசவும் எழுதவும் செய்வார். தானே ஆசிரியர், தானே பதிப்பாளர் எனப்போட்டு மாதப்பத்திரிகை ஒன்றை தொடங்கி விட்டார். தனக்கு ஆகாத பிடிக்காத விஷயங்களை போட்டு தாளித்து விடுவார்.
அவரது வீரதீர பிரதாபங்கள் ப ற்றி அறிந்த யாரும், அவரிடம் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. அவர் வருவதைப் பார்த்து விட்டால், போலீஸ் ஸ்டேஷனில், பாரா காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை எல்லோரும் பதுங்கி விடுவர். அப்பேர்ப்பட்டவர், என்னைப் பார்க்க அடிக்கடி அலுவலகம் வருவார்.
என் மீது அவருக்கு பிரியம் அதிகம். வரும்போதும், போகும்போதும், வழியில் சந்திக்கும்போதும், வண்டியை நிறுத்தி, நெடுஞ்சாண் கிடையாக விழாத குறையாக வணக்கம் சொன்னால், பிரியம் வருமா? வராதா? இந்தக்காலத்தில், எந்த நிருபர், செய்தி கொடுக்க வருபவருக்கெல்லாம் எழுந்து நின்று வணக்கம் போடுகிறான்?
ஆகவே, அவருக்கு என் மீதும், என் சமூகம் மீதும், ஏகப்பட்ட அக்கறை. ”நாட்டுல ஜனங்க எவ்வளவு சிரமப்படுறாங்க, இந்த சர்க்கார் அதிகாரிங்க, எம்.எல்.ஏ., எம்.பி.,ங்க யாராச்சும் கவலைப்படுறாங்களா?” என்று ஒரு நாள் பெருமூச்சு விட்டார்.
எனக்கு கலெக்டரின் பிரஸ் மீட் ஞாபகம் வந்தது. கலெக்டர் ஆபீசில் மாதம் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு நடப்பது வழக்கம். கலெக்டரும், வெவ்வேறு துறை அதிகாரிகளும், அந்தந்த மாதம் நடந்த நடக்கக்கூடிய அரசு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிப்பர். எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தால், நாம் இருப்பதில் என்ன அர்த்தம்? ஆகவே, அவரிடம் விஷயத்தை சொன்னேன்.
”சார், திங்கக்கெழம காலைல கலெக்டர் பிரஸ் மீட் இருக்குது. எல்லா டிபார்ட்மெண்ட் அதிகாரிங்களும் வருவாங்க. நீங்களும் பத்திரிகை நடத்துறீங்களே, தாராளமா வாங்க! உங்கள மாதிரி நாலு பேரு, பிரஸ் மீட்டுல நறுக்குனு நாலு கேள்வி கேட்டாத்தான், அதிகாரிங்களுக்கு பயம் இருக்கும்”
சிறிது நேரம் யோசித்தார்.
”என்னிக்கு பிரஸ் மீட்டு”
”வார திங்கக்கெழமெ காத்தால 10 மணிக்கு”
‛‛எல்லா ஆபீசரும் வருவானா?’’
‛‛கலெக்டர் மீட்டிங் சார். கட்டாயம் வருவாங்க‛‛
‘அப்ப ‘நான் வர்ரேன்” என்று கூறி புறப்பட்டார்.
திங்கட்கிழமை வந்தது. நானும் ஆவலோடு கலெக்டர் ஆபீஸ் சென்றேன். நமது நாயகர், ஜோல்னா பை, ஸ்கிரிப்லிங் பேடு, நான்கைந்து பேனாக்கள் சகிதம் பிரஸ் மீட் நடக்கவிருந்த அறையில் வசதியான இடம் பார்த்து அமர்ந்திருந்தார்.
‘ஆகா, இன்று ஆட்டம் களை கட்டப்போகிறது’ என்று ஏதோ அசரீரி ஒலிப்பது போல் இருந்தது.
அங்கிருந்த நிருபர்கள் அத்தனை பேருக்கும் நாயகரை தெரியும். ‘நமக்கெதற்கு வில்லங்கம்’ என்று நமட்டுச்சிரிப்புடன் காத்திருந்தனர்.
பிரஸ் மீட் ஆரம்பமானது. அதிகாரிகள் தங்கள் துறையில் நடக்கும் பணிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர்.
முதல் கால் மணி நேரம் அமைதி காத்தவர், மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி பேசிக் கொண்டிருந்தபோது, களம் இறங்கினார்.
”அய்யா ஒரு நிமிஷம்”
கணீர் குரலைக் கேட்டு அதிகாரி நிறுத்தினார்.
”மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டச்சொல்றீங்களே, எப்புடி கட்றான்னு பாத்தீங்களா? எத்தனை வீட்டுல நேர்ல பாத்தீங்க?
சர்க்கார் சொன்னபடி, சரியா கட்டாதவங்களுக்கு என்ன தண்டனை? அபராதம் போட்டீங்களா? தொட்டி கட்டாம, கட்டுனமாதிரி போட்டோ’ மட்டும் எடுத்து தாராங்களே தெரியுமா?’
பி.ஆர்.ஓ.,வுக்கு (செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, பிரஸ் மீட் பொறுப்பாளர் அவர் தான்) சந்தேகம் வந்து விட்டது.
”யோவ் யாருய்யா அந்தாளு? பார்லிமெண்டுல கேக்குற மாதிரி, கேள்வி மேல கேள்வி கேட்கறான். கலெக்டர் டென்ஷன் ஆகப்போறார்யா!”
‛‛அண்ணே, அந்தாளு ரிப்போர்ட்டர்னு தெர்லண்ணே! யாரோ ஆபீசர்னு இருந்தண்ணே,’’ என்றார், உதவி பி.ஆ.ஓ.,
‛‛விசாரிய்யா… விசாரிய்யா’’ விரட்டினார் பி.ஆர்.ஓ.,
நம்மவரின் அடுக்கடுக்கான கேள்விகளால் பம்மி, பதறிப்போயிருந்த அதிகாரி, ”சார் ப்ராஜக்ட் இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு. நாங்களும் இன்ஸ்பெக்சன் போகணும். இன்னும் போகாதது தப்பு தான். நெக்ஸ்ட் மன்த் மீட்டிங்ல கம்ப்ளீட் பிகர் கொடுத்துடுறேன்” என்று சாஷ்டாங்கமாக சரண்டர் ஆகி விட்டார்.
இதைக்கேட்ட கலெக்டரும், ‛‛பாருங்க! ரிப்போர்ட்டர்லாம் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க, அதுனால பிரஸ் மீட் வரும்போது கம்ப்ளீட் டீட்டைல் கொண்டு வரணும். கேக்குற கேள்விக்கு டக் டக்குனு பதில் தரணும்,’’ என்றார். பதிலையும் கலெக்டர் அறிவுறுத்தலையும் கேட்ட நம்மவருக்கு பயங்கர குஷியாகி விட்டது.
அடுத்தது, கால்நடை பராமரிப்புத்துறை.
மாவட்டத்தில் நடந்த கால்நடை கணக்கெடுப்பு பற்றி அதிகாரி விளக்கியபோது, நம்மவர் ஆரம்பித்தார். ”சார், ஒரு நிமிஷம்”
அதிகாரி நிறுத்தி விட்டார். நம்மவர் தொடர்ந்தார்.
”சார், இத்தன ஆடு மாடுங்க கன்னுக இருக்குதே, இதுங்கெல்லாம் எங்க மேயுது? மேய்ச்சல் புறம்போக்குன்னு இருந்த நெலமெல்லாம் என்ன ஆச்சு? சொந்தமா நெலம் வெச்சுருக்குறவன் அதுல மேய்ப்பான், நெலம் இல்லாதவங்க எங்க கொண்டுபோய் மேய்ப்பாங்க? அவங்களுக்கு நீங்க என்ன உபகாரம் பண்ண முடியும்? என்ன பண்ணீருக்றீங்க?
இவ்வளவுதான் கேள்வி.
அதிகாரிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஒரு மிடக்கு தண்ணீர் குடித்தார்.
கலெக்டரை பார்த்து, ”சார்… சார்…” என்றார்.
‘எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்’ என்பதுபோல் பரிதாபமாக இருந்தது, அவரது குரல். கால்நடைத்துறையில் வேலைக்கு சேர்ந்ததற்காக அன்று அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கக்கூடும்.
கடைசியில் கலெக்டர் தான் தலையிட்டார், ‛‛சார், நீங்க கேக்குறது ஜென்ரல் பிகரு. அது பெரிய சப்ஜெக்டு. நீங்க அவரு குடுக்குற விவரத்துல டவுட் இருந்தா மட்டும் கேளுங்க,’’ என்ற கலெக்டருக்கு, சந்தேகம் வந்து விட்டது.
‛‛அவரு எந்த பேப்பர்?’’ என்றார், பி.ஆ.ஓ.,விடம்.
அவரோ, தன் ‛உதவி’யை பார்த்தார். ஓடி வந்த உதவி பிஆர்ஓ, ”அண்ணே… அந்தாளு ஏதோ சொந்தமா பத்திரிகை நடத்துறாராம்னே! எப்புடி உள்ள வந்தான்னு தெர்லன்னே,” என்றார்.
பிஆர்ஓ மண்டையை பிடித்துக்கொண்டிருந்தபோதே அசம்பாவிதம் நடந்து விட்டது.
ஏதோ திட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த கலெக்டரை இடைமறித்து, ‘சாரி டூ டிஸ்டர்ப் யூ’ என ஆரம்பித்தார் நாயகர்.
பேச்சை நிறுத்திய கலெக்டர், பிஆர்ஓவை முறைத்தார். சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருந்த பிஆர்ஓ, ”சார்… சார்…” என்றார். பாவம் அவருக்கு பேச்சே வரவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் துப்பறிந்து, ‘அவர் ரிப்போர்ட்டரே இல்லை, ஏதோ நுகர்வோர் சங்க தலைவர்’ என்று கலெக்டரிடம் கூறி விட, அவருக்கு கோபம் தலைக்கேறியது.
”வாட் நான்சென்ஸ் பிஆர்ஓ! இதுதான் நீங்க வேலை செய்ற லட்சணமா?” என ஆரம்பித்து சராமாரியாக டோஸ் விட்டார்.
”சார்…ப்ளீஸ்… ப்ளீஸ்… இப்ப ஒரு நிமிஷத்துல வெளிய அனுப்புறேன் சார்,” என்றவர், நாயகரை நோக்கிச்சென்றார்.
”அய்யா, இது பேப்பர்காரங்களுக்கான பிரஸ் மீட்டு. ரிப்போர்ட்டர் மட்டும்தான் வரணும். பப்ளிக் நாட் அலொவ்டு, கொஞ்சம் வெளிய வந்திடுங்க,” என்று கையைப்பிடித்து இழுக்க ஆரம்பித்தார்.
பதிலுக்கு அவரோ, ”நோ நோ…! ஐ ஆம் ஆல்சோ ஏ ஜர்னலிஸ்ட். நாட் ஜஸ்ட் ஏ ரிப்போர்ட்டர். ஐ ஆம் ஆன் எடிட்டர் பார் திஸ் மேகஸின்,” என்று தான் கொண்டு வந்திருந்த பத்திரிகையை உயர்த்திப்பிடித்து எல்லோருக்கும் பெருமையுடன் காட்ட ஆரம்பித்தார்.
கையை பிடித்த பிஆர்ஓவை பார்த்து, ”என்னை வெளிய போகச்சொல்ல ஹூ ஆர் யூ மேன்?’’
‛‛சார், நாந்தான் சார் பிஆர்ஓ! கொஞ்சம் வெளியவந்திடுங்க சார்”
”பிஆர்ஓங்கிறது நீங்கதானா? அந்த பொருட்காட்சி நடத்துனா பணம் வசூல் பண்றது நீங்கதானா?”
பிஆர்ஓவுக்கு வியர்த்து விட்டது. மயக்கம் மட்டும் தான் வரவில்லை. அரங்கில் இருந்த பல துறை அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம். ஏதோ காமெடி சினிமா பார்ப்பது போல் ரசித்துக் கொண்டிருந்தனர். இதற்குள் டென்ஷன் ஆகியிருந்த கலெக்டர், ‘போலீஸை கூப்பிடலாமா’ என டிஆர்ஓவிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்குள் நாயகரை அறிந்த ஒரு அதிகாரி, கலெக்டரிடம் வந்தார். ”சார், அவுரு அடிசனல் எஸ்பியா இருந்து ரிடையர் ஆனவரு சார். பெரிய வில்லங்கம் சார். பிரச்னை இல்லாம சமாளிச்சு அனுப்பப்பாருங்க,” என ஆலோசனை கூறினார்.
அருகில் இருந்த டி.ஆர்.ஓ., தன்னிடம் சிக்கிய உதவி பி.ஆர்.ஓ.,வை திட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கும், போட்டோக்காரருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரே கல்லில் கொத்துக் கொத்தாய் மாங்காய் விழுகிறதே!
ஒரு வழியாக கெஞ்சி கேட்டு நாயகரை வெளியில் அனுப்பி வைத்த பிஆர்ஓ, கலெக்டரிடம் வந்து, ”சார்… யாரோ நம்ம பிரஸ்காரங்கதான், ராங் இன்பர்மேஷன் குடுத்து அவரை இங்க வரவெச்சுட்டாங்க சார்,” என்றார்.
கலெக்டர் சொன்னார், ”எனக்கு அப்பவே சந்தேகம். என்னடா, நம்ம பிரஸ்காரங்க கேள்வியே கேக்க மாட்டாங்களே, இந்தாளு கேள்வி மேல கேள்வி கேக்குறானேன்னு”
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ”சார், அந்தாளு அவருக்குத்தான் பிரண்டு. விடாதீங்க,’’ என்று நண்பர்கள்
என் பக்கம் கையைக் காட்டி விட்டனர்
பிஆர்ஓ கேட்டார், ”சார், இன்னிக்கு நாந்தான் கெடச்சனா உங்களுக்கு,”
கூட்டத்தில் நடந்த களேபரத்தை கேள்விப்பட்டு வந்த அலுவலக உதவியாளர், ‛‛சார், அந்தாளு பத்து மணி மீட்டிங்க்கு 9 மணிக்கே வந்தான், எப்ப மீட்டிங்னு ரெண்டுவாட்டி கேட்டான், எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு,’’ என்றார்.
நொந்து போயிருந்த பி.ஆர்.ஓ., ‛‛ஆமா இப்ப வந்து சொல்லு,’’ என்றவர், ‛‛ஏன் சார்? ஏம்மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்? இப்படி மாட்டி விட்டுட்டீங்க” என்றார், என்னிடம்.
நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிஆர்ஓவை ஓட்டுவர்
”சார்… அடுத்த பிரஸ் மீட் எப்போன்னு அந்த எடிட்டர் கேட்டாரு” என்பர்.
ஒருமுறை பஸ்ஸ்டாண்டில் தன் உறவினர் இருவரோடு நின்று கொண்டிருந்த நாயகர், என்னைப் பார்த்து விட்டார். வழக்கம்போல் வணக்கம்போட்டு, நலம் விசாரித்தபின் கேட்டார்.
”ஏப்பா, கலெக்டர் ஆபீஸ்ல எல்லாம் ஒழுங்கா வேலை பாக்குறானுகளா?. ஏதாவது தப்பு தண்டானு காதுல கேட்டா வந்துருவன்னு சொல்லி வெய்யி அவனுககிட்ட! கண்ணுல வெரலுட்டு ஆட்டீரமாட்டமா ஆட்டி!” என்றொரு பெருஞ்சிரிப்பு சிரித்தார்.
இப்படியும் சில பேர் இருந்தால்தான் நமக்கும் பொழுதுபோகும் என நினைத்துக்கொண்டேன்.
0.000000
0.000000