Posts Tagged ‘poet’

 கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை என்பதும், ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதும், ‘சோம்பேறிக்கழுதை’ என்பதும், சமகால தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கும்  வசவுகளில் சில. 

இத்தகைய ‘சிறப்பு’க்குரிய கழுதைகள், இன்று ஏறக்குறைய காணாமலே போய் விட்டன. அவற்றைப்பார்த்தே இராத, எப்படியிருக்கும் என்றே அறியாத தலைமுறையும் கூட வந்து விட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரிடம், ‘கழுதையை பார்த்ததுண்டா’ என்று கேட்டுப்பாருங்கள். ‘ஆம்’ என்பவர் சதவீதம் குறைவாகவே இருக்கும்.புறத்தோற்றமே மதிக்கப்பெறும் இன்றைய உலகில், கழுதைகள் காணாமல் போனதில் ஆச்சர்யமில்லை தான்.                                                                                                           
நாட்டில் நிறையப்பேர் கவிதை எழுத ஆரம்பித்து விட்டதை துப்புத்துலக்கி அறிந்து கொண்ட கழுதைகள், ‘இனியும் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்றெண்ணி தப்பித்து தூர தேசத்துக்கு ஓடி விட்டவிட்டனவோ  என்று கூட எனக்கு சந்தேகம்.
ஒரு காலத்தில், அங்கிங்கெனாதபடி நகரம், கிராமம், காடு மேடுகளில் எல்லாம் சுற்றித்திரிந்த கழுதைக்கூட்டம், இப்போது  மொத்தமாய் காணாமல் போயிருப்பதை பார்த்தால், உப்புமா கவிஞரின் சந்தேகத்தில் உள்ளபடியே நியாயம் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
எங்கள் ஊரில், என் பள்ளிப்பருவத்தில்  கழுதைகள், கூட்டம் கூட்டமாக திரிவதை கண்டிருக்கிறேன். துணி மூட்டைகளை முதுகில் ஏற்றி ஆற்றுக்கு அழைத்துச்செல்வர். ஒவ்வொரு டோபியின் குடும்பத்துக்கும் நான்கைந்து கழுதைகளாவது இருக்கும்.
இப்போதும் அந்த டோபி குடும்பத்தினர் ஊரில் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கழுதைகள் இல்லை. என்ன ஆயின, எங்கே போயின, சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க மனம் ஒப்பவில்லை.
விசாரித்தவரையில், கழுதைகளின் உரிமையாளர்களே அவற்றை சாகடித்து விட்டனர் அல்லது சாக விட்டு விட்டனர். 
விளைவு, சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்குமே கழுதைகளைக் காணாத நிலை ஏற்பட்டு விட்டது. கழுதைகளையும் மிருகக்காட்சி சாலையில் சென்று பார்த்துத்தான் எதிர்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளுமோ என்னவோ?
உணவுச்சங்கிலியில் கழுதைகளுக்கும் பங்கு இருக்கிறதா  எனத்தெரியவில்லை.அவை கவனிப்பாரின்றி போனதற்கு, அழகியல் அம்சங்கள் பொருந்தி வராததே முக்கியக்காரணம். 
கழுதைகள் சலியா உழைப்பாளிகள். பராமரிப்பு அவசியமில்லை. பாலைவனத்திலும், கரடு முரடான மலைப்பகுதிகளிலும் பல மணி நேரம் பாரம் சுமக்கும் திறன் கொண்டவை. அவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. ‘ஈக்கஸ் அசினஸ்’ என்ற விலங்கியல் பெயர் கொண்ட கழுதைகள், பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களால் இந்திய நிலப்பரப்புக்கு வந்திருக்கக்கூடும் என்பது கூகுளார் தேடி வழங்கிய கருத்து. 
தானாக இறந்தவை, விஷம் வைத்து கொல்லப்பட்டவை போக, மிச்சம் மீதியாக இருக்கும் கழுதைகளும் பால் உற்பத்திக்கு பழகி  விட்டன. 
‘வயிற்று வலி, தலை வலி, சளி, காய்ச்சல் சரும நோய்கள், அல்சர், கேன்சர், எய்ட்ஸ் எல்லாம் தீர்க்கும்’ என்று ஊருக்குள் கூவிக்கூவி விற்கின்றனர், கழுதைப்பால் வியாபாரிகள். இப்போதைய மார்க்கெட் விவரம் படி 100 ரூபாய்.
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று  தேடி அலைவோர், வாராது வந்த மாமணியாய், யாருக்கும் கிடைக்காத தேவலோகத்து அமிர்தம் கிடைத்து விட்டதாய், எண்ணி கழுதைப்பால் குடித்து பூரிக்கின்றனர். 
நிருபராக குப்பை கொட்டிய காலத்தில், எனக்கும் இது பற்றி சந்தேகம் வந்தது. குழந்தைவேல் என்ற பிரபல டாக்டரிடம் (நாமக்கல்)  கேட்டேன். அவர், ‘கழுதைப்பாலுக்கு நோய் நீக்கும் சக்தியெல்லாம் இல்லை. குடித்தால் வயிற்றுப்போக்கு தான் ஏற்படும்’ என்று அடித்துக்கூறி விட்டார்.
பாவம் தான்   எனத்தோன்றியது. யார் பாவம்?  பால் சுரக்கும் கழுதைகளா? கறக்கும் கழுதைகளா? குடிக்கும் கழுதைகளா? 
ஜம்மு காஷ்மீரில் லடாக் பிரதேசத்தில் கழுதைகள் காப்பகம் கூட இருக்கிறதாம்.
 ‘பாவப்பட்ட கழுதைகளை பரிதாபப்பட்டு பாதுகாக்கிறோம் ஸ்பான்சர் செய்யுங்கள்’ என கேட்கின்றனர். அதிகமில்லை. ஒரு கழுதைக்கு ஆண்டுக்கு 200 டாலர் தான் கட்டணமாம். காலம் காலமாக கல்லடியும் சொல்லடியும் பட்டாலும், கழுதைகள் தம்மை நம்பி இருப்பவரை வாழ்விக்கவே செய்கின்றன என்றுதான் தோன்றியது.
எனவே, வழியில் எங்கேனும் கழுதைகளைப் பார்க்க நேரிட்டால், பரிதாபம் காட்டுங்கள்! அது, உங்கள் ஊரின் கடைசி கழுதையாகவும் இருக்கக்கூடும்.