எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.
தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.
அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.
இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?