11/10/2014 க்கான தொகுப்பு

அரசு கல்லூரியில் பேராசிரியரான ஒருவர், வேலையில்லாத வேளைகளில், ஜோதிடம், ஜாதகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என்று இருப்பார். சகுனம், நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் இன்ன பிறவற்றின் மேல் அவருக்கு அசாத்திய நம்பிக்கை.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் கல்லூரிக்கு புறப்படும்போதுகூட, நல்ல நேரம் பார்த்துத்தான் கிளம்புவார். கல்லூரி துவங்கும் நேரத்துக்கு ராகு காலம் இருந்தால், முன்கூட்டியே கிளம்பி விடுவார். வெளியில் வேறு எங்காவது செல்வதாக இருந்தாலும் அப்படித்தான். வீட்டில் இருந்து வெளியில் வரும்போது, ‘எதிரில் யார் வருகின்றனர்’ என்று பார்த்து, அவரது ராசியால், தனக்கு ஏதும் பாதிப்பு இருக்காது என்று மனக்கணக்கில் உறுதி செய்தகொண்ட பிறகே கிளம்புவார்.
இன்றைய கிழமைக்கு, தன் ராசிக்கு, நட்சத்திரத்துக்கு, என்ன நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று முந்தைய நாளே தெளிந்து தீர்மானித்து விடுவது அவருக்கு வழக்கம். எந்த திசையில் செல்வது நல்ல பயனைத்தரும் என்று பார்த்து, அதற்குத்தகுந்தபடி செல்வார். அப்படி செல்வதனால், தான் செல்ல வேண்டிய இடத்துக்கு சில பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தாலும் கவலைப்பட மாட்டார்.
எதிரில் வருபவர்கள், ஏதாவது அமங்கலமான வார்த்தைகளையோ, துக்க காரியம், கெட்ட சம்பவம் பற்றி பேசுவதையோ கேட்டு விட்டாலே, ‘ஐயோ போச்சு’ என்று மனம் புழுங்குவார். பரிகாரத்தை தேடிப்பிடிக்க ஓடுவார். இதையெல்லாம் புரிந்து கொண்டதாலோ என்னவோ, அக்கம் பக்கத்து குசும்பர்கள் சில பேர், அவர் கிளம்பும் நேரம் பார்த்து, குறுக்கே வந்து தொலைப்பதையும், அவரது காதில் விழும்படியாக ஏடாகூடமாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
அவர்களிடம் மோதும் அளவுக்கு உடல் வலு இல்லாத நம்மவர், தான் புறப்படும்போது, தன் மனைவி, குழந்தைகளை எதிரில் வர வைப்பதை வழக்கமாக்கினார். தன் திட்டமிடுதலுக்கு சிறிது மாறுதல் ஏற்பட்டாலும், அதற்குரிய பரிகாரங்கள் என்னவென்பதையும் அறிந்து வைத்திருப்பார்; அவ்வப்போது செயல்படுத்தியும் விடுவார்.
உடைகளில் மட்டுமில்லை; கையில் கட்டும் வண்ணக்கயிறு முதல், நெற்றியிடும் இடும் சந்தனம், சிகப்பு, திருநீறு என எல்லாவற்றிலும் தினம்தோறும் மாறுதல் காட்டுவார். அவரது நம்பிக்கையை கிண்டல் செய்வோர் உண்டு. ‘இதுவெல்லாம் நம்பிக்கையே அல்ல; தன் மீது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு’ என்போரும் உண்டு.
‘அவரது நேரம் நன்றாக இருக்கிறது. அதனால் சகுனம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், அவருக்கு எந்த பிரச்னையும் வராது’ என்பர் சிலர். பேராசிரியரை பார்த்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. ‘இப்போதும் அப்படித்தான் இருக்கிறாரா’ என்று தெரியவில்லை. ஆனால், அவரிடம் ஆலோசனை கேட்டு, கம்பெனிக்கு பெயர் வைத்து, திறப்பதற்கு நாள், நேரம் குறித்த நண்பர், பாவம் இப்போது நட்டப்பட்டு, கம்பெனியை மூடி விட்டார். பெயர் வைத்த பேராசிரியருக்கு, என்ன கிடைத்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

எனது டூவீலர் திருட்டுப் போய் திரும்பக்கிடைத்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமே! அதன்பிறகு நடந்த சம்பவம் எல்லோரும் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அந்த மொபட்டின் அதிகபட்ச மார்க்கெட் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். அதை திருடனிடம் இருந்து ‘ரெக்கவரி’ செய்த போலீசார், ‘சார், எப்.ஐ.ஆர்., போட்டு விடுவோமே’ என்றனர். விஷயம் தெரியாத நானும், ‘சரி போடுங்கள்’ என்று கூறி விட்டேன்.
கடைசியில்தான் தெரிந்தது, ‘எப்.ஐ.ஆர்., போட்டு விட்டால், கோர்ட் மூலம் தான் வண்டியை எடுக்க முடியும்’ என்பது. ‘சரி, கோர்ட்டுக்கு போய் எடுத்து விட்டால் போகிறது’ என்று முடிவுக்கும் வந்து விட்டேன். அங்கே வக்கீல் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால்தான், வண்டியை தருவார்களாம்.
‘என்னடா இது, தலைவலியாய் இருக்கிறதே’ என்று எண்ணிக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்தேன். குற்றப்பிரிவு போலீஸ்காரர் சொன்னார். ‘சார், நமக்குன்னு ஒரு வக்கீல் இருக்கார், அவரப்போய் பாருங்க. ஏற்பாடு செய்வார்’ என்றார். நானும் அவரைப்போய் பார்த்தேன். அவர், ‘பீஸ் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்’ என்றார். ‘வண்டியின் மதிப்பே இரண்டாயிரம் தான் இருக்கும். அதை எடுப்பதற்கு இரண்டாயிரத்து ஐநூறு செலவு செய்வதெல்லாம் டூ மச்’ என்றேன். வக்கீல் உதட்டைப்பிதுக்கி விட்டார். அப்புறம் அங்கு வேலையில்லை.
‘சார் எப்.ஐ.ஆர்., போட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. உங்கள் வண்டியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம். அதை வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் பாடு’ என்றார், போலீஸ்காரர். எனக்கு ஆத்திரம் பொங்கியது.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். வேறு ஒரு வக்கீலிடம் அழைத்துப் போனார், நண்பர். விஷயத்தை புரிந்து கொண்ட வக்கீல், ‘சார், கோர்ட்டுல மாஜிஸ்திரேட் வரும்போது, யார் வேண்டுமானாலும் மனு தரலாம். நீங்கள் உங்கள் வண்டி வேண்டுமென்று, ஒரு மனு தாக்கல் செய்யுங்கள். மாஜிஸ்திரேட் ஒப்புக்கொள்வார்’ என்றார். அதற்குரிய ஆவணத்தையும் தயார் செய்து கொடுத்தார். ‘நான் உதவியது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்றும் கூறி விட்டார். இப்படி செய்வது தெரிந்தால், சக வக்கீல்கள் சண்டைக்கு வருவர் என்பது அவரது கவலை.
சரியென்று, நானும் அவர் தயார் செய்து கொடுத்த மனுவை, மாஜிஸ்திரேட் வரும்போது காத்திருந்து கொடுத்தேன். அவர் வண்டியைக் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இரண்டு. போலீஸ்காரர்கள் எதைச்செய்தாலும், அதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கும் என்பது ஒன்று. ஆகவே அவர்கள் எதைச்சொன்னாலும், அதற்கு எதிரான செயல்தான் நமக்கு நன்மை தரும் என்பது மற்றொன்று.