Posts Tagged ‘tamil articles’

தீதும் நன்றும்…!

Posted: 06/06/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , ,

இன்பமும் துன்பமும் நாமாக தேடிக்கொள்பவையே என்று நான் நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன், அந்த சம்பவம் நடக்கும் வரை. அது நடந்து விட்ட பிறகுதான், ‛நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்கள் நம்மைத்தேடி வந்தே தீரும்’ என்பது, எனக்கு தீர்மானமாகப் புலப்பட்டது.
வாழ்க்கை தத்துவத்தை, கத்தியின்றி ரத்தமின்றி எனக்கு உணர்த்திய சம்பவம் அது. ஏறக்குறைய, போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதற்கு இணையான சம்பவமாக அதைக்கூறி விடலாம். பணி நிமித்தமாக அரசு பேருந்தில் சேலம் நோக்கி பயணித்தபோது நடந்த சம்பவம் அது.
இப்படி, சம்பவம், சம்பவம் என்று வாக்கியத்துக்கு வாக்கியம் நான் வேதனையோடு குறிப்பிடுகிற அந்த சம்பவத்தின் நாயகனுக்கு ஒரு 45 வயதிருக்கும். எப்போதும் பளிச்சென உடை அணிந்து, கூடவே ரே பன் கண்ணாடியும் அணிந்திருப்பார். தலை வழுக்கையாதலால், அவரை பார்த்தாலே ஏதோ ஒரு அறிவுஜீவிக்களை இருப்பதுபோல் தோன்றும்.
சரி போகட்டும். சமூக அவலங்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது அவருக்கு வழக்கம். எங்கும் எப்போதும், நீதி, நேர்மை, நியாயம், சத்தியம், தர்மம், இன்னபிறவெல்லாம் நிலைபெற வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். அப்பேர்ப்பட்டவர் ஒரு நாள் நான் பயணித்த அதே பேருந்தில் ஏறினார். அவரிடம் பேசியவகையில், எனக்கு முன் அனுபவம் கொஞ்சம் உண்டு. கேட்பவர் காதில் ரத்தமே வடிந்தாலும், சத்தியத்தின் தத்துவத்தை உரத்துச் சொல்லும் பண்பு நலன்களை நிறையவே கொண்டிருப்பவர் அவர்.
ஆகவே, அவர் பேருந்தில் ஏறியதுமே, எனக்குள் ஏதோ பட்சி சொல்வதைப் போல் இருந்தபடியால், இருக்கையில் கொஞ்சம் பதுங்கினாற்போல் அமர்ந்து கொண்டேன். அதிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, போனையும் எடுத்து காதருகே வைத்துக் கொண்டேன்
ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. நம்மவர் கடைசி சீட்டில் அமர்ந்தபடி பக்கத்தில் இருந்த பயணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ‛தப்பித்து விட்டோம்’ எனத்தோன்றியது. பேருந்து புறப்பட்டதும் கொஞ்சம் நிம்மதி வந்தது. பேருந்து சிறிது தூரம் சென்றிருக்கும். பின் சீட்டில் இருப்பவர் என் முதுகில் தட்டினார்.
‛‛சார், உங்கள அவுரு கூப்புடுறாரு’’
எனக்கு பகீரென்றது. திரும்பிப் பார்த்தேன். நம்மவர் அட்டகாசமாய் சிரித்தபடி கையைக் காட்டினார்.
‛‛ரிப்போர்ட்டர் சார்! வாங்க, இங்க எடம் இருக்கு, பேசீட்டே போலாம் வாங்க’’
எனக்கு உதறலாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவரை காட்டி, ‛சார் பிரண்டு இருக்காப்ல சார்’ என்றேன்.
‛‛உங்ககிட்ட நெறய பேசணும் ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் வரட்டுமா’’
‛‛தாராளமா வாங்க சார்! ஒரு போன் பண்ணீட்டு வாங்க’’
அத்துடன் உரையாடல் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, ‛நண்பர்’ என நான் குறிப்பிட்ட பக்கத்து சீட் ஆசாமி, என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு தர்மசங்கடம் தான். ஆனால் தப்பிக்க வேறு
வழியில்லையே!
பேருந்து வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. வீடியோவில் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கர்ணகடூரமாக இருந்த ஒலி அமைப்பு, படம் பார்க்கவும், பாடல் கேட்கவும் சகிக்க முடியாததாக இருந்தது. மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை கொண்ட எனக்கே, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தர்மம் நியாயத்தை இரு கண்களாக பாவிக்கும் நம்மவர் சும்மா இருப்பாரா?
‛‛கண்டக்டர்! என்ன பாட்டு இது? காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்குது. நல்ல கேசட் இருந்தா போடுங்க, இல்லன்னா ஆஃப் பண்ணுங்க! சகிக்க முடியல,’’ என்றார்.
அவர் கூறியதை கண்டக்டர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை, முறைத்து விட்டுப் போய்விட்டார். வீடியோ பிளேயர் அதே நாராச ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. ‛தான் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றபோது நம்மவருக்கு கோபம் வந்து விட்டது.
‛‛என்ன கண்டக்டர்! சொல்லீட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க, இந்த பாட்டு போடலீன்னு யார் அழுதா’’
அதைக்கேட்டதும், கண்டக்டருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‛‛யோவ் நீ என்ன பெரிய இவனா? இஷ்டம் இருந்தா வா, இல்லீனா பஸ்ச நிறுத்தறேன், எறங்கி நடையக்கட்டு, சும்ம நய் நய்னு நொட்ட சொல்லீட்டு’’
அவ்வளவுதான். பயணிகள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நம்மவர் விடவில்லை.
‛‛சார், நான் என்ன கேட்டேன்னு இப்டி மரியாதையில்லாம பேசுறீங்க? ஆர்டிஓகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணீருவேன் தெரீமா? சவுண்ட் சிஸ்டம் சகிக்கலன்னு சொன்னா தப்பா?’’
‛‛யோவ், கெவுர்மென்ட் பஸ்சுனு தெரிஞ்சுதானே ஏர்னே? பெரீய ஆர்டிஓகிட்ட சொல்லுவன், ஆட்டுக்குட்டிகிட்ட சொல்லுவேங்கிற? சொல்லுய்யா! எவன் கேக்குறான்னு பாப்போம்’’
கண்டக்டரின் தாறுமாறான பேச்சில் பேஜாரான நம்மவர், உதவிக்கு ஆள் தேட ஆரம்பித்தார்.
‛‛ஏப்பா, இந்தாளு பண்றது சரியா, கேளுங்கப்பா,’’ என்று வேண்டுகோள் வைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த பயணிகள் கூட, அவரிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டனர். அப்போதுதான் நம்மவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.
‛‛சார், ரிப்போட்டர் சார்! இந்த அயோக்கியத்தனத்தப் பத்தி உங்க பத்திரிகைல எழுதுங்க சார். நீங்கதான் சார் இதெல்லா தட்டிக்கேக்கணும்’’
அவ்வளவுதான்! கண்டக்டரின் கோபப்பார்வை என் மீது திரும்பியது.
‛‛யாருய்யா அவன் தட்டிக்கேக்குறவன்,’’ என்றபடி வேகவேகமாக என் அருகில் வந்தார்.
‛‛யோவ்! நீ என்ன அந்த சொட்டையனுக்கு சப்போட்டா? நீயே ஓசி கிராக்கி! மொதல்ல நீங்கெல்லா காசு குடுத்து டிக்கெட் வாங்கி பஸ்சுல போங்க! அப்புறம் நாயதர்மம் பேசுலாம்,’’ என்று ஆரம்பித்தார்.
நம்மவரோ, ‛‛சார், நீங்க பத்திரிகைல இந்த அராஜகத்தப்பத்தி, எழுதுங்க சார், அப்பத்தான், இவனுங்களுக்கு புத்தி வரும்,’’ என்று, எடுத்துக் கொடுத்தார். ‛எங்கண்ணன வந்து அடிடா பாக்குலாம்’ என்று உசுப்பி விட்டு வடிவேலுவை ரவுடிகளிடம் உதை வாங்க வைக்கும் அள்ளக்கை அரசியல்வாதிகள்போல இருந்தது அவரது பேச்சு.
பத்திரிகை செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்க்கு, கண்டக்டர்கள் மத்தியில் இருக்கும் ‛மரியாதையை’ பற்றி எனக்கு முன்பே தெரியும்தான். ஆனால் இப்படி பலர் முன்னிலையில் மானம் கப்பலேறும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
கண்டக்டரின் வசவுகள் எல்லையற்றதாக இருந்தன. எங்கள் இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விடுவதே அவரது லட்சியமாக இருந்தது. விஷயம் புரியாத நம்மவரோ, ‛‛நீ முடிந்தால் இறக்கி விடு,’’ என்று சவால் வேறு விட்டார். இதற்காகவே காத்திருந்த கண்டக்டரும், விசில் அடித்து பேருந்தை நிறுத்தி விட்டார்.
அப்புறமென்ன, அவர் இறங்க, பின்தொடர்ந்து நானும் இறங்க, அடுத்த பேருந்து பிடித்து அலுவலகம் போய்ச்சேரும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது அவர் பேசினார் பாருங்கள் ஒரு வசனம், அது சினிமா காமெடி காட்சி வசனங்களுக்கு ஒப்பானது.
‛‛சார், என்னால உங்களுக்கு வீண் சிரமம். ஆனாலும் உங்கள மாதிரி ஒர்த்தரால தான், இந்த அநியாயத்த தட்டிக்கேக்க முடியும்னு உறுதியா நம்புறேன் சார். அவன் எனக்கு சவால் விட்டதா நெனக்கல சார், ஒரு நியாயத்துக்கு பாடுபடுற ரிப்போர்ட்டருக்கு சவால் விட்டதா தான் நெனைக்குறன் சார்,’’ என்றார்.
அவர் பேசப்பேச, ‛நல்ல வேளையாக உடம்பு புண்ணாகாமல் தப்பித்து விட்டோம் போலிருக்கிறதே’ என்று எனக்கு, அந்த துன்பத்துக்கு மத்தியிலும், பெருமகிழ்ச்சி வந்துவிட்டது.
அந்த சம்பவத்துக்குப் பிறகும், அவரை சில முறை வழியில் பார்க்க நேரிட்டது. மாட்டிக்கொள்வதற்கு எனக்கென்ன பைத்தியமா?

நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி, மது குடிப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும், நம்மைப் போன்றவர்களுக்கு காதில் புகை வரச்செய்வதாகவே இருக்கிறது. காரணம், இது குடிகாரனை கொண்டாடும் உலகம். ஊருக்கு ஊர் இலக்கு நிர்ணயித்து, மது விற்கும் தேசம்.
இங்கு குடிப்பழக்கம் இல்லாதவன், அம்மணமாக அனைவரும் திரியும் ஊரில் கோவணத்துடன் திரிந்து கோமாளிப்பட்டம் வாங்கி விட்டவன். அவன் மீது எல்லோரும் கல் எறியும் கொடுமை, எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. அப்படிக் குறுகி நிற்பவரை பார்த்து, நண்டு சிண்டுகள் எல்லாம் ஏளனப் பார்வையோடும் எக்காளக்கூச்சலோடும் ஏகடியம் பேசுவதும் நடக்கிறது. என்ன கொடுமையடா சாமி…!

குடிப்பழக்கம் இல்லாத மனிதர்கள் அருகி விட்டார்கள். அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அலுவலகமோ, வீடோ, அவர்களுக்கு மரியாதை சற்று குறைவாகவே இருக்கும். அவர்களிடம் நட்பு நாடி வருபவர்கள் மிகக்குறைவு. அம்மாஞ்சி, சாமியார், புத்தர், புனிதர், மஞ்ச மாக்கான் என்பதாக அவர்களுக்கு ஆங்காங்கே பெயர்கள் நிலைத்திருக்கும். ஆனால், மது குடிப்பவர்களை பாருங்கள்! நட்பு நாடுதல், அவர்களது சர்வதேச கொள்கை. ஆகவே, மது குடிப்பவர்களின் நண்பர் வட்டம், பெரிதாகவே இருக்கும்.

‘மதுவை தொடுவதில்லை’ என்ற என் மன உறுதியின்மீது, அசாத்திய பெருமையும், கர்வமும் எனக்குண்டு. அதை அவ்வப்போது சொல்லி, என்னை நானே பாராட்டிக் கொள்வதும் வழக்கம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும் கலவரமே வெடிக்கும்.
”இவுரு பெரிய மகாத்மா காந்தி. குடிக்கல குடிக்கலன்னு பெரும பீத்திக்குறது. ஊருக்குள்ள இவுரு மட்டுந்தான் குடிக்காம இருக்குற மாதிரி பேசுறது. எங்கு மச்சான் குடிக்குறதில்ல, எங்கு மாமன் குடிக்குறதில்ல, அவிய எல்லா இப்புடித்தான் பீத்திக்குறாங்களா,” என்பார், எனதருமை மனைவி.

ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம் என்பதாக, இக்காலத்தவர் மனதில் விதைக்கப் பட்டு விட்டது. சரக்கடித்து வாந்தி எடுத்த சக ஊழியர், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் தங்கப்பதக்கம் தவற விட்டதைப் போல புலம்பியதை, ஒருமுறை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. தன் பொது வாழ்வில் தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, வாந்தியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார், அவர்.
வாந்தி வராத நண்பர்களோ, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாகச்செயல்படும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விஞ்ஞானிகளைப்போல, தமக்குத்தாமே மெச்சிக் கொள்வதும், தட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் அந்தக்காட்சி, அடடா… என்ன கொடுமையடா சாமி…!

மது குடிப்பவர்கள் மூன்று வகை. பொழுதுபோக்குக்கும், பெருமைக்கும் குடிப்பவர்கள் முதல் வகையினர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில், மது விற்பனை இலக்குகளை விஞ்சச்செய்வது இவர்கள் தான்.
குடும்ப பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வழி தெரியாமல் குடிப்பவர்கள் அடுத்த வகையினர். காலை முதல் மாலை வரை உழைத்த களைப்பில் குடிப்பவர்கள், இன்னொரு வகையினர். இம்மூன்று பிரிவிலும் சேராத ‛நோட்டா’ ஓட்டாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.

மது குடிக்காதவர்கள் இரண்டு வகை. மனைவிக்கு பயந்து குடிக்காதவர்கள் ஒரு வகை. நாட்டில் மெஜாரிட்டியாக இருப்பது இவர்களே. மனசாட்சிக்கு பயந்து குடிக்காதவர்கள் மற்றொரு வகை. இவர்கள், ஊருக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். இப்படி மிக மிகச்சிறுபான்மையரில் ஒருவனாக, மனசாட்சிக்கு பயந்து மது குடிக்காத நமக்கு, நாளும் கிழமையும் தவறாமல் கிடைப்பதெல்லாம், அவமரியாதை மட்டுமே.

குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, ‛இது எங்கள் நாடு, நீயெல்லாம் வேறு எங்காவது ஓடிப்போ’ என்பதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்லும் செயலும். வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.

காந்திய கொள்கைகளை முன்னெடுப்பதில், மகாத்மா காந்தியும் சரி, அவரது தொண்டர்களும் சரி, தவறி விட்டார்கள் என்றே நான் சொல்வேன். மது குடிக்காதவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது, கவுரவிப்பது, சால்வை போடுவது, பாராட்டுவது, குடிக்காதவர் மனைவியை கண்டறிந்து பாராட்டுவது, விருது கொடுப்பது, மது குடிக்காத மகனை, நல்வழியில் வளர்த்த பெற்றோரை பாராட்டுவது என ஏதாவது செய்யும் பட்சத்தில்தான், குடிக்காதவர்களுக்கும் சமூகத்தில் கொஞ்சமாவது மரியாதை இருக்கும். எத்தனை காலத்துக்குத்தான், எனக்கு நானே, ‛வாழ்க’ கோஷம் போட்டுக் கொண்டிருப்பது…!