12/10/2014 க்கான தொகுப்பு

மருத்துவம் என்பது மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை; மனதை வருடும் வார்த்தைகளில்தான் அதிகமிருக்கிறது. இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சிடுசிடுவென எரிந்து விழும் மருத்துவர்களிடம் சென்றால், நோய்க்கொடுமை மேன்மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. இது, நானறிந்த உளவியல்.
நோயாளியிடமோ, உடன் வருபவரிடமோ, கூடுதலாக ஓரிரு வார்த்தைகள் கூடப் பேசாத டாக்டர்களை பார்த்திருக்கிறேன். கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல விரும்பாமல், எரிந்து விழும் டாக்டர்களையும் சந்தித்திருக்கிறேன். நோயாளியை ஏறெடுத்துக்கூட பார்க்காத டாக்டர்களும் உண்டு. இவர்களுக்கு மாறாக, ‘போதும் போதும்’ என்கிற அளவுக்கு நோயாளியிடம் பேசும் டாக்டர்களையும் பார்த்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் டாக்டர், மருத்துவமனையில் இருந்தால், அந்த இடமே கலகலப்பாக இருக்கும். நோயாளியிடம் சத்தமாகத்தான் பேசுவார்; விசாரிப்பார்; கண்டிப்பார். அவர் பேசுவது, அந்த மருத்துவமனையில் இருக்கும் அத்தனை அறைகளுக்கும் கேட்கும். அவர், போனில் பேசினால் கூட அப்படித்தான். அங்கு ரகசியம் என்பதே கிடையாது. அவரிடம் சென்று விட்டால், ஆலோசனை, வைத்தியம் எல்லாமே, முன்பு சொன்னது போலவே, ‘போதும்போதும்’ என்கிற அளவுக்கு இருக்கும்.
அய்யாவுக்கு உடல் நலம் பாதித்தால், ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். அந்த மருத்துவர், வெறும் எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தவர். அய்யாவைப் பார்த்ததும், ‘வாங்க கவுண்டரே… வாங்க…வாங்க…வாங்க…’ என்பார். ‘உங்களுக்கென்ன கவுண்டரே… நீங்கெல்லாம் அந்தக்காலத்துல ஏர் ஓட்டி வெவசாயம் செஞ்சவங்க. உங்களுக்கெல்லாம் 100 வருஷத்துக்கு ஒண்ணும் ஆகாது. ஏதாவது கொஞ்சம் அங்க இங்க வலியாகும். அதுக்கு ஒரு ஊசி போட்டோ சரியாப்போகும்’ என்பார்.
உடலை பரிசோதனை செய்வார். கை காலை நீட்டி மடக்கச்சொல்வார். ‘எங்கே தொந்தரவு’ என்று கேட்பார். ஒரு ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து விடச்சொல்லி, நெஞ்சிலும், முதுகிலும் ஸ்டெத் வைத்து பரிசோதிப்பார். ‘வீட்டில் மரம் பூ பூக்கிறதா, காய்கறி போட்டிருக்கிறீர்களா’ என்றெல்லாம் கேட்பார். நடந்து காட்டச்சொல்வார். கடைசியில், ‘உங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை’ என்று கூறி விடுவார்.
‘நான் பரிசோதனை செஞ்சதில, உங்க ஒடம்புல எந்த பிரச்னையும் இல்லிங்க, மனசுக்குள்ள தான் ஏதோ கொஞ்சம் கவலை இருக்குறாப்புல தெரியுது. என்ன கவலைன்னு எங்கிட்டச் சொல்லுங்க. உங்க மகன்கிட்ட நான் பேசுறேன்’ என்பார். ‘ஒரு கவலையும் இல்லிங்க, பசிதான் ஆக மாட்டேங்குது’ என்பார் அய்யா.
‘அந்தக்காலத்துல ஏர் ஓட்டும்போது, சாப்பிட்ட அளவு இப்ப நீங்க சாப்பிட முடியாது. கொஞ்சம் கொறைவாத்தான் சாப்பிடணும். நல்லா பசியாகுறதுக்கு, ஜீரணம் ஆகுறதுக்கு மாத்திரை தரலாம். வேற எதுவும் வேண்டாம். நீங்க தெனமும் நல்லா கொஞ்ச தூரம் நடந்தாலே போதும்; எல்லாம் செரியாகிடும்’ என்பார்.
மருத்துவரின் பேச்சிலேயே அய்யாவின் உபாதைகளில் பெரும்பகுதி குணமாகி விடும். அப்புறம், பெயரளவில் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக் இஞ்செக்சன் போட்டு விடுவார். இப்படித்தான் பல பேருக்கு சிகிச்சை அளிக்கிறார், அந்த மருத்துவர்.
பெரிய அளவில் பணம் பறிப்பதாகவும் அவர் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால் கூட்டம் மட்டும் குறைவதில்லை. வெறும் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களுக்கு மதிப்பில்லாத இந்தக்காலத்திலும், அந்த மருத்துவமனைக்கு அவ்வளவு கூட்டம் வருவதற்கு மருத்துவரின் பேச்சு சாமர்த்தியமே காரணம்.
கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சென்றால், உயர்தரமான சிகிச்சை கிடைக்கும், மூட்டை மூட்டையாக மருந்து, மாத்திரைகளும் கிடைக்கும். அங்கிருக்கும் மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும், நம் உடல் உபாதைகளைப் பற்றி அறிந்த அளவுக்கு, மன உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தெரிந்திருக்காது. ஆகவே, மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை மருத்துவம் என்பதை உணர்ந்து கொண்ட மருத்துவரை தேடிச்சென்றால், நோயும் குணமாகும்; நோய் கண்ட மனமும் குணமாகும்.

நாட்டில் இப்போது ஜாமின் பெறுவதுதான் தலைபோகிற பிரச்னையாக இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த, ஆனானப்பட்ட சகாரா கம்பெனி அதிபரே, ஜாமின் கிடைக்காமல் மாதக்கணக்கில் சிங்கியடித்த கதை நாடறியும்; நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் எல்லாம், ஜாமின் பெறுவது அவ்வளவு சுலபமா என்ன?
ஆகவே, வீட்டுக்கும், கோர்ட்டுக்கும், வக்கீல் ஆபீசுக்குமாய் அலைந்து திரிந்து, பாவப்பட்ட, பரிதாபப்பட்டவர்களுக்கு, உள்ளபடியே உதவும் நோக்கத்துடன், ‘எப்படியெல்லாம் ஜாமின் பெறலாம்’ என்று இரவு முழுவதும் யோசித்ததன் விளைவுதான், இந்தப்பதிவு.
இப்போது அமெரிக்க அதிபரே பயப்படும் ஒரே விஷயம் ‘எபோலா’ தான். ‘இந்த கைதிக்கு எபோலா வைரஸ் பாதிப்பு வந்து விட்டது போலிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றன’ என்று ஏதேனும் ஒரு டாக்டரை வைத்து சொல்ல வைத்து விட்டால் போதும். எபோலா பாதிப்பு என்னவென்றே நம்மூர் டாக்டர்களுக்கு தெரியாது; அப்புறம் எங்கே சிகிச்சை அளிப்பது? அவ்வளவுதான். ‘அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுவதற்கு நீதிபதி ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று ஸ்ட்ராங் ஆக ராம் ஜெத்மலானியை வைத்து வாதிடலாம்.
‘எங்கள் வீட்டு தோட்டக்காரரின் ஒன்று விட்ட சித்தியின் மாமனார் காலமாகி விட்டார், அவருக்கு நான் தான் காரியம் செய்ய வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை, அவருக்கு சொத்துபத்து எதுவும் இல்லாவிட்டாலும், என்னைத்தான் வாரிசாக அறிவித்திருந்தார், அவருக்கு இறுதிக் காரியங்கள் நான்தான் முன்னின்று செய்தாக வேண்டும், ஆகவே அதற்கு ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று, கருமாதிக்காரிய பத்திரிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். ஜாமின் கிடைத்தாலும் கிடைத்து விடும்.
அரசியல் கட்சி போராட்டம் அறிவித்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ஒருவரை கைது செய்து விட்டனர். ஏதோ திருமண காரியம் நடப்பதாக, பத்திரிக்கை ஒன்றை அவரது உறவினர்கள் தயார் செய்து, கோர்ட்டில் தாக்கல் செய்து, ‘அவர் இல்லாமல் திருமணம் நடக்காது. அவசியம் ஜாமினில் விட வேண்டும்’ என்று கேட்க, நீதிபதியும் மனம் இரங்கி ஜாமின் கொடுத்து விட்டார். ஆகவே, அப்படி ஏதாவது வாய்ப்பு இருந்தாலும் முயற்சிக்கலாம். இம்மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்று, நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரர்கள் அறிவார்களாக!

தன் பொறுப்புக்கான வேலையை செவ்வனே தொடங்கி விட்டார், புது முதல்வர். நதி நீர் பிரச்னைகள், மீனவர் மீதான தாக்குதல், மின் வெட்டு விவகாரங்களுக்கு கடிதம் எழுதுவதோடு, நீதிமன்றங்களில் இருக்கும் எல்லா வழக்கையும் சரிவர நடத்தியாக வேண்டும். எல்லாவற்றையும் விட, எதிர்க்கட்சியினர் வாயடைக்கும் வகையில், ஆட்சியும் நடத்தியாக வேண்டும். பாவம், அவர் கஷ்டம் அவருக்கு!
சக கட்சியினர் இருக்கின்றனரே, அதில் அவ்வளவு விவரமான ஆட்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், புகழ்பாடும் போஸ்டர் அச்சிட்டு ஒட்டியும், சக நிர்வாகியின் மீது பெட்டிசன்களை தட்டி விட்டும், பொது வாழ்க்கையை முடித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்கள்.
ஆனால் இந்த எதிர்க்கட்சியினர் இருக்கின்றனரே, குசும்பர்கள். அவர்களை நம்ப முடியாது, ஏதாவது வில்லங்கம், விவகாரத்தை கிளறி விட்டாலும் விடுவர். சட்டம் இல்லை, ஒழுங்கு இல்லை, வன்முறை நடக்கிறது, வாழைப்பழம் வெடிக்கிறது என்று இல்லாத பொல்லாத புகார்களை, ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிவர். ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் பெட்டிசன் போட்டுக் கொண்டே இருப்பார்களே!
ஆனால், அப்படியெல்லாம் நடக்கும்வரை, புது முதல்வரை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்பதுதானே உண்மை. ‘புது முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்’ என்று கூறினால்தான், ஏழரை ஆரம்பித்து விடும் என்பது எதிர்க்கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, இப்போதைக்கு, ‘அது சரியில்லை’, ‘இது சரியில்லை’ என்று ஆரம்பிக்கும் எதிர்க்கட்சியினர், ஓரிரு மாதங்களில், தங்கள் குள்ள நரித்தனத்தை காட்டப் போகின்றனர்.
ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி, புது முதல்வருக்கு, வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவதெல்லாம், அவர்களது சதித்திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கக்கூடும். அப்படி நடக்கும்போதுதான், கற்றுத்தேர்ந்த ராஜதந்திர வித்தைகளை எல்லாம், புது முதல்வர் முழு வீச்சில் காட்ட வேண்டியிருக்கும். என்ன செய்யப்போகிறாரோ?
நாளைக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே வரும் எதிர்க்கட்சியினர், புது முதல்வரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது வாழ்த்துச் சொல்லாமல் விடுவார்களா? ஆக, அங்கும் ஒரு இக்கட்டு காத்திருக்கிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரப்போகும் தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது.
‘நான் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். எனக்கு எதிர்க்கட்சியினர் யாரும், நேரிலோ, அறிக்கை வாயிலாகவோ, கடிதத்திலோ வாழ்த்து தெரிவித்து, வேதனையை கிளற வேண்டாம். அப்படி செய்தாலும், அந்த வாழ்த்து என்னைச் சேராது; எனக்கு மிகுந்த துன்பத்தையும், வருத்தத்தையும்தான் ஏற்படுத்தும். இந்த எச்சரிக்கைக்கு பிறகும், விஷக்கிருமிகள் யாரேனும் வாழ்த்துக்கூறினாலோ, பாராட்டினாலோ, அவர்கள் மீது ஏதாவது பொருத்தமான பிரிவுகளில் வழக்கு தொடர நடவடிக்கை எடுப்போம்’ என்று அறிக்கை வெளியிட்டு விட்டால்போதும்; எதிர்க்கட்சியினரின் குள்ள நரித்தனத்தை எதிர்கொண்டு சமாளித்து விடலாம். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று!