Posts Tagged ‘congress’

indexஇவ்வளவு காலமாக, குஷ்பு இல்லாமல் கலகலத்துப்போயிருந்த தமிழக அரசியல் களம், அவரது மீள்வருகையால் களைகட்டியிருக்கிறது. அது சரி, எத்தனை நாளைக்குத்தான் டிவி விவாதங்களில், மனுஷ்யபுத்திரன்களையும், கோபண்ணாக்களையும், ஞானசேகரன்களையும், ஆவடி குமார்களையும் சகித்துக் கொண்டிருப்பது? அந்த வகையில், அவரது வருகை, மெச்சத்தக்கதே!

கோவில் கட்டிக் கொண்டாடிய தமிழர்களுக்கு எதுனாச்சும் சேவையாற்ற வேண்டிய கடமை, தனக்கு இன்னும் நிறையவே இருப்பதாக குஷ்பு நினைப்பதில் தவறேதும் இல்லை. இப்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை. நாயக வேடம் போடும் நடிகர்களைப்போல், ரசிகர்களை ஏமாற்றிப் பிழைப்பதுமில்லை; மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக்கொண்டு, அதிகாரம் மிகுந்திருக்கும் அரசியல் கட்சியினருக்கு கூழைக்கும்பிடு போடுவதுமில்லை. ஆகவே, குஷ்பு, மீண்டும் அரசியல் களம் இறங்குவது வரவேற்கத்தக்கதே.
அவர் தி.மு.க.,வுக்குப் போனார். அங்கே பிரச்னை. என்ன ஏதென்று நமக்குத்தெரியாது. அவரும், ‘சொல்ல மாட்டேன்’ என்கிறார். இப்போது, ‘வீதி வீதியாகப் போய், காங்கிரஸை பலப்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார். தாராளமாக செய்ய வேண்டியதுதான்.
ஆனால், அவர் தமிழில் பேசாமல் பார்த்துக் கொள்வதற்கு இளங்கோவன்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம், ‘காங்கிரஸை விட பா.ஜ.,தான் அதிக ஊழல் செய்துள்ளது’ என்று குஷ்பு பேசித் தொலைத்துவிட்டால், எதிர்கோஷ்டிக்காரர்கள், இளங்கோவன் மேல் பெட்டிசன் போட்டுவிடுவர்; அவர் பதவிக்கே ஆபத்தாகி விடும்!
எனக்கென்னவோ, குஷ்புவின் மீள்வருகையில் உள்நோக்கம் ஏதோ இருக்கும்போலத் தெரிகிறது. தன்னை விளக்குமாற்றிலும், செருப்பிலும் அடிக்க முற்பட்ட தமிழர்களுக்கு, பாடம் கற்பிக்கும் அவரது திட்டம், அரசியலில் ஒதுங்கி இருந்தால் நிறைவேறாது; கட்சியில் சேர்ந்து, ஊர் ஊராகச் சென்று மேடையேறியும், வேனில் இருந்தபடியும், கலவை சாதம்போல் தமிழ் பேசி, தமிழர்களை ஓட ஓட விரட்டுவது அவரது சபதமாக இருக்கவும்கூடும். ‘அப்படியொரு சூழ்ச்சிக்கு, இளங்கோவனும், சோனியாவும் பலியாகி விட்டார்களோ’ என்று எண்ணவும் தோன்றுகிறது!

Advertisements

காட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்!

தேர்தல் 1 

Posted: 21/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , , , , ,
 
 

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு. 

நான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.  
வழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல். 
பாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை. 
அதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான். 
ரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.