Posts Tagged ‘nick name’

நாட்டில் அடைமொழி இல்லாத அரசியல்வாதிகள் அரிதாகி விட்டனர். சாமியார்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கூட அந்நிலைக்கு வந்து விட்டதுதான் வேதனை!
அடைமொழி மீது தீராத காதல் இருக்கும் அத்தகையவர் நலம் காக்கும் கம்பெனிகளும் ஊருக்குள் உண்டு. பணம் படைத்த நபர்களை அணுகி  பேரம் பேசுவர். ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘மக்கள் தொண்டன்’, ‘உத்தமர் காந்தி’, ‘ஜூவல் ஆப் இந்தியா’ என்பது போன்ற பட்டங்கள் இருக்கின்றன. உங்களுக்கு என்ன பெயரில் தேவையோ, அந்த பட்டம் தருகிறோம். அதுவும் பிரம்மாண்ட விழா நடத்தி. விழாவுக்கு உங்கள் உறவினர், நண்பர்கள் என 50 பேரை அழைத்து வாருங்கள். அதற்குரிய டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்,” என்பர்.
ஒரு டிக்கெட் 200 ரூபாய் இருக்கும். சரி, ஓசியில் விருது கிடைக்கிறதே! ஆசாமியும் 50 பேருக்கு டிக்கெட் வாங்கி விடுவார். அவர் சார்பில்10 பேர் வந்தாலே ஆச்சரியம்தான். விழா நாளில் தான் தெரியும்; இப்படி ஊரெல்லாம்     வசூல் செய்திருப்பதும், நூற்றுக்கணக்கான  பேர்  விருது பெறுவதும்.
‘எப்படியோ, நமக்கு விருது கொடுத்தால்  போதும்’ என்று வாங்கி வந்து விடுவார். வசதி இருப்பவர், உறவினர், நண்பர் பேரைப்போட்டு பேப்பரில் வாழ்த்து விளம்பரம் வெளியிடுவார்; வசதி குறைந்தவர், வால் போஸ்டர் அச்சிட்டு ஒட்டி திருப்தி அடைவார். பாராட்டு விழா நடத்தி பெருமைப்பட்டுக்கொள்பவரும் உண்டு. 
‘இந்தப்பட்டங்கள் பிடிக்கவில்லை என்றால், எங்காவது ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கித்தருகிறோம்’ என்பர், கம்பெனியார். என்ன, கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான். டாக்டர் பட்டம் என்றால் சும்மாவா! 
எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர், திடீரென இலங்கையில் ஒரு டுபாக்கூர் பல்கலையில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து, ஊர் மக்களையெல்லாம் பீதிக்குள்ளாக்கி விட்டார். விசாரித்தால், வெறும் 30 ஆயிரமும், கொழும்பு போக வர ஆன செலவும் தான். 
ஏதோ ஒரு ஷீல்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டு, ‘நானும் டாக்டர் தான்’ என்று பெருமை  அடித்துக் கொண்டார்.பெயருக்குப்பின்னால் ‘பி ஹெச்டி’ என்று வேறு போட்டுக்கொண்டார். தன் சமூக சேவையை மெச்சி, இலங்கைக்காரன் டாக்டர் பட்டம் கொடுத்ததாக தம்பட்டம் வேறு. 
ஒரு வாரமாய் ஊருக்குள் பாராட்டு விழா, பார்ட்டி என்றெல்லாம் ஆட்டம் களை கட்டியது. நமக்குத்தான் அநியாயம், அக்கிரமம்  எங்கு நடந்தாலும் மூக்கு விடைத்துக் கொண்டு விடுமே! சும்மா இருக்க முடியுமா? 
‘பணம் கொடுத்து பட்டம் வாங்கி விட்டு, படம் காட்டும் பந்தா பேர்வழிகள்’ என்று யார் பெயரையும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக செய்தி கொடுத்து  விட, அதுவும் அப்படியே வெளியாகி விட்டது. 
பெயர் இல்லாவிட்டால் என்ன? வக்கீலுக்கு தெரிந்து விட்டது, ‘நம்மைத்தான் நக்கல் செய்கிறார்கள்’ என்று. போன் செய்து குமுறி விட்டார். ‘நாட்டில் எத்தனையோ அயோக்கியத்தனம் நடக்கிறது. நான் பட்டம் வாங்கியதை பொறுக்க முடியவில்லையா’ என்பது அவர் வாதம் .
அதோடு விட்டாரா? ஜூனியரை விட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார். ‘மறுப்பு வெளியிட வேண்டும்’ என்றார், ஜூனியர். 
‘நாங்க தான் பேர் போடலியே’ என்றேன், நான். 
‘பேர் போடாட்டியும்,  நீங்க யாரை சொல்றீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால குறிப்பிட்ட இந்த செய்தி எங்க சீனியரை குறித்து வெளியாகவில்லைனு போடுங்க’ என்றார்.
 
”அப்புடிப்போட்டா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு  சொல்ற மாதிரி இருக்குமே. யாரப்பத்தின செய்தினு தெரியாதவங்களுக்கு கூட தெரிய வச்ச மாதிரி இருக்குமே”
 
 
”அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு மறுப்பு வந்தாகனும்” கறாராக பேசினார் ஜூனியர். 
 
அதற்கு மேல் என்னாலும் முடியவில்லை. அப்புறமென்ன, மான் கராத்தே தான்! 
 *
இப்படி தேடித்தேடி பட்டம் கொடுத்து கல்லா கட்டும்  கும்பல் பற்றி அறிந்து, மூக்கு விடைத்து, நக்கல் நையாண்டிகளுடன், செய்தி போட்டபோது, அந்த நபர் ஆவேசமாக ஆபீசுக்கு போன் செய்தார். 
”என்ன சார் நியூஸ் போடுறீங்க? பேரில்ல, போன் நெம்பரில்ல, படிக்கிறவன் எப்புடி தெரிஞ்சுக்குவான்? எத்தன கஷ்டப்பட்டு ஊர் ஊரா அலைஞ்சு, ரோட்டுல போறவனுக்கெல்லாம் விழா நடத்தி விருது கொடுத்தென், நல்லதாவோ, கெட்டதாவோ செய்தி போட்டிங்க! அத எம்பேரோட போட்டா கொறஞ்சா போய்டுவீங்க” என்று ரொம்பவும் தான்  வருத்தப்பட்டார்.
கடைசியில் ஒரு வாசகம் சொன்னார்.
”சார்… தப்புத்தண்டா செய்றவுனுக்கெல்லாம் வெளம்பரம் முக்கியம் சார்…!”