Posts Tagged ‘theft’

அன்று காலை 6 மணிக்கெல்லாம் காவல் நிலையம் பரபரப்பாகி விட்டது. போலீசார் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் கைவிரல் ரேகை எடுக்கும் தடய அறிவியல் நிபுணரை போனில் பிடித்து உடனடியாக வருமாறு வேண்டிக்கொண்டிருந்தார். இன்னொருவர், மோப்பநாய் பிரிவினரை கையோடு அழைத்து வர ஜீப் டிரைவரை விரட்டிக் கொண்டிருந்தார்.
விசாரணைக்காக விரைந்து வரும் மைக் 10, மைக் 11 ஆகியோருக்கு காபி, டிபன் ஏற்பாடு செய்யும்படி எஸ்ஐக்கு உத்தரவுகள் ஏற்கனவே வந்து விட்டன. நகரின் பிரபல ஓட்டலுக்கு ஆள் அனுப்பியாகி விட்டது. குற்றப்பிரிவு போலீசார் பாவம், குற்றவாளிகளைப் போல் பம்மிப் பதுங்கியபடி இருந்தனர். எல்லாவற்றுக்கும் காரணம், முதல் நாள் இரவில் நடந்த திருட்டு சம்பவங்கள் தான். திருட்டென்றால் சாதா திருட்டல்ல; இது ஸ்பெஷல் திருட்டு.
‘நகரில் நான்கு வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் வக்கீல் அலுவலகங்களில் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. பீரோவும் உடைக்கப்பட்டிருக்கிறது. என்னவெல்லாம் திருட்டு போயிருக்கின்றன என்று சம்மந்தப்பட்ட வக்கீல்கள் வந்தால்தான் தெரியும்’ என்றார், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர். குற்றப்பிரிவு போலீஸார் வசமாக சிக்கியிருப்பதை எண்ணியெண்ணி பூரித்துக்கொண்டிருந்தார் அவர்.
எனக்கு பெருத்த சந்தேகம். ”சார்! வக்கீலுங்க ஆபீசுல என்ன பணம், நகையா வெச்சுருக்கப் போறாங்க? இதுக்கு ஏன் சார் இவ்வளவு பரபரப்பு?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.
அவர் வக்கீல்களுடன் அதிக சகவாசம் வைத்திருப்பவர். ”சார்! வக்கீல் ஆபீஸ்ல விலை மதிப்புள்ள பொருள் இருக்காதா? என்ன நடக்கப் போகுதுன்னு வேடிக்கையப் பாருங்க சார் நீங்க”
எனக்கும் அவர் சொல்வதில் விஷயம் இருப்பதுபோல் தோன்றியது. காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே நான்கைந்து வக்கீல்கள் பதட்டத்துடன் ஓடி வந்தனர். பார்த்தால் பேயறைந்தவர்கள் போல் இருந்தனர். கடைசியாக வந்த ஒருவரை நிறுத்தி, ‘என்ன சார், என்ன திருட்டு போச்சு’ என்றேன். அவரோ, ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!’ என்று கூவியபடியே இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடினார்.
சில வினாடிகளிலேயே அவர்கள் சங்க தலைவரும் வந்து விட்டார். அவரிடமும் கேட்டேன். ”நெறய வேல்யபிள் ஐட்டம்ஸ் போயிட்டதா அட்வகேட்ஸ் போன் பண்ணாங்க, இருங்க இன்ஸ்பெக்டர பாத்துட்டு வரேன்,” என்று சொல்லி விட்டுப் போனார். எனக்கு மண்டை காய்ந்தது. வக்கீல் அலுவலகங்களில் அப்படியென்ன விலை மதிப்புள்ள பொருள் இருக்கப் போகிறது?
அதற்குள் எஸ்பி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் வந்து விட்டனர். கை ரேகை நிபுணரும், மோப்ப நாய்ப்படையினரும் வந்து விட்டனர். ‘திருடர்களை உடனடியாக பிடித்தாக வேண்டும்’ என்று எஸ்பி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். வேதனை தோய்ந்த முகத்துடன் இருந்த வக்கீல்கள், அவரை சுற்றிக்கொண்டு முறையிட்டனர்.
அப்போதும், ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்’ என்று அந்த வக்கீல் புலம்புவது காதில் விழுந்தது. ”எங்க இத்தனை வருஷ உழைப்பெல்லாம் வீணாப்போச்சுங்க சார்! எப்புடியாச்சும் கண்டுபுடிங்க சார்!” என்றொரு வக்கீல் நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தார். ”புடிச்சுர்லாம் விடுங்க,” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றார் எஸ்பி. போகவே மனம் இல்லாமல் புறப்பட்டனர்.
போகும்போதும் கூட அந்த வக்கீல் என்னைப் பார்த்து, ‘ஹெவி லாஸ், ஹெவி லாஸ்’ என்று கூவிக்கொண்டே போனார். என்னால் அந்த சஸ்பென்ஸை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நேராக எஸ்பியிடம் போனேன்.
”சார்! என்ன ஹெவி லாஸ், ஹெவி லாஸ்னு சொல்லிட்டுப் போறாங்க?” ”அதுவா? ஆமாமா, அது உண்மையாவே ஹெவி லாஸ் தானே!”
”சார், காத்தால இருந்து ஹெவி லாஸ் புராணம் கேட்டாச்சு, விஷயத்தச் சொல்லுங்க சார்”
”சார் கிரிமினல் கேஸ் நடத்துற வக்கீலுங்க சிலர் ஜாமீன் எடுக்குறதுக்காக பர்மனன்ட்டா பத்து பதினைஞ்சு ரேஷன் கார்டு வெச்சுருப்பாங்க. தேவைக்குத் தகுந்த மாரி ரேஷன் கார்ட யூஸ் பண்ணுவாங்க. இந்த நாலு வக்கீலு ஆபீஸ்லயும் சேந்து மொத்தமா 27 ரேஷன் கார்ட எவனே திருடீட்டுப் போயிட்டான். இப்ப கார்டு இல்லீனா, ஜாமீன் எடுக்க முடியாது. பொழப்பு சுத்தமா ஓடாது. கார்டுக்காரனுக்கு மாசமாசம் பணம் தரணும். திருட்டு போயிடுச்சுன்னு சொல்லவும் முடியாது. இவ்வளவு பிரச்னை வரும்னா அப்றம் அது ஹெவி லாஸ் தானே,” என்றார் எஸ்பி.
எனக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. ஸ்டேஷனை விட்டு புறப்பட்டேன். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து சிரித்தார்.
”வக்கீல் ஆபீஸ்ல என்ன இருக்கப் போகுதுன்னு கேட்டீங்ளே சார்! இப்ப புரிஞ்சுதா என்ன மேட்டர்னு”
”ஆமாமா சார்! ஹெவி லாஸ் தான்,” என்றேன் நானும்.
காவல் நிலையத்தை கடந்து வந்தபோது பாதிக்கப்பட்ட வக்கீல்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ”எவனோ விஷயம் தெரிஞ்ச ஒர்த்தன் தான் இத செஞ்சிருக்கனும்,” என்றார் ஒருவர். ”ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!” என மீண்டும் அதே குரலில், அதே புலம்பல்! ‘ஐயோ பாவம்’ என நினைத்துக்கொண்டேன்.

பெட்ரோல் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியும், எனக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. காரணம், பெட்ரோல் செலவுத்தொகையை அலுவலகத்தில் கொடுத்து விடுவது தான்.  எல்லோருக்கும் நம்மைப்போலவே அலுவலும், அலுவலகமும் அமையுமா என்ன? அப்படி அமையாத சில பேர், நாங்கள் வசித்த காலனியில் இருந்தனர். பெரும்பகுதியினர் கல்லூரி மாணவர்கள்; மிகச்சிலர் வெட்டி ஆசாமிகள். அவர்களிடம் நல்ல விலை உயர்ந்த வாகனங்கள் இருந்தன; பெட்ரோல் போடத்தான் பணமில்லை போலும்!

அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் எங்கள் வீடு. தரை தளத்தில் டூவீலரை நிறுத்த வேண்டும். இரவு நிறுத்திச்செல்லும் டூவீலரை, காலையில் ஸ்டார்ட் செய்ய முடியாது. பெட்ரோல் இருந்தால் தானே! சொட்டு கூட விடாமல் மொத்தமாக பிடித்துச்சென்று விடுவர்.
ஓரிரு நாட்கள் தொடர்ந்தபோது தான், யாரோ திருடுவது உறைத்தது. ஊர்ப்பிரச்னைகளுக்கு எல்லாம் செய்தி போட்டு தீர்வு  காண முயன்ற எனக்கு, என் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பதென தெரியவில்லை. டூவீலரை இரண்டாவது மாடிக்கு கொண்டு செல்ல முடியாது. ‘இரவானால் வண்டியில் இருக்கும் பெட்ரோலை ஒரு பாட்டிலில் நாமே பிடித்துக்கொண்டு, மறுநாள் காலை வண்டியில் ஊற்றி விடலாம்’ என்றார், நண்பர். 
அவர் சொல்கிற ஐடியா கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செயல்முறையில் நிறைய சிரமங்கள் இருக்கும் எனத்தோன்றியது. முதல் பிரச்னை, எனக்கு பெட்ரோல் ட்யூபை கழற்றி மாட்டும் அனுபவம் கிடையாது. அதுவுமின்றி, ‘ரொம்பத்தான் அல்பமாக இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் கிண்டல் செய்வார்களே’ என்கிற தன்மானப் பிரச்னை வேறு.
நாங்கள் வசித்தது, அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாம், நல்ல சம்பளமும், அதை விடப் பல மடங்கு கிம்பளமும் பெறுபவர்கள். அவர்களுக்கு 50 ரூபாய் பெட்ரோல் களவு போவதைக் காட்டிலும் பெரிய பெரிய விஷயங்கள் பேசவும் கவலைப்படவும் இருந்தன.
அலுவலகத்தில் என் புலம்பலைக்கேட்ட ஆபீஸ் பையன், ‘சார்…இதெல்லாம் சப்பை மேட்டரு, வண்டியக் குடுங்க’ என்று வாங்கிப்போனான். ‘லாக் போட்டுட்டா யாரும் பெட்ரோல் எடுக்க முடியாது’ என்பது அவன் எண்ணம். ‘சரி, எப்படியோ பிரச்னை ஒழிந்தால் சரி’ என்று தோன்றியது. பையன் ஓட்டி வந்த வண்டியை பார்த்தபோது தான் நம்பிக்கை வந்தது. 
பெட்ரோல் டேங்குக்கு கீழே ஒரு சாவியுடன் பூட்டு இருந்தது. ‘சாவியை திறந்தால் தான், ட்யூபுக்கே பெட்ரோல் வரும். இனிமே யாரும் பெட்ரோல் திருட முடியாது. நீங்க தைரியமா போங்க சார்’ என்று வழியனுப்பினான் ஆபீஸ் பையன்.
ஏதோ, கைவிரலில் மலையை தூக்கி மக்களுக்கு குடை பிடித்து அபயம் தந்த கிருஷ்ண பரமாத்மா போலவே தெரிந்தான். நான்கைந்து நாளாக மண்டையை குடைந்த பிரச்னைக்கு தீர்வு  கண்டிருக்கிறான் அல்லவா! 
அன்று இரவு நம்பிக்கையோடு உறங்கச்சென்றேன். மறுநாள் அதிகாலை, பால் வாங்கச்சென்ற என் மனைவி, ‘உங்க வண்டி பெட்ரோல் டேங்க் மூடி தனியாக்கெடக்குது, போய்ப்பாருங்க’ என்று கூறியதும், எனக்கு பகீரென்றது. டேங்க் மூடியை கழற்றி விட்டு, டியூபை உள்ளே விட்டு பெட்ரோலை உறிஞ்சியிருப்பது புரிந்தது. 
வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர், ‘சார்…என்ன தான் நாம சேப்டி பண்ணாலும், திட்டம் போட்டு திருடுறவன ஒண்ணும் பண்ண முடியாது’ என்று கிண்டலாக சொன்னார். எனக்கு ஆத்திரமாக வந்தது. ‘பெட்ரோல் திருடு போகிறது’ என்பதைக் காட்டிலும், ‘நம்மை ஒருத்தன் முட்டாளாக்குகிறானே’ என்கிற வேதனை அதிகமாக இருந்தது. 
யோசித்தபடியே ஆபீஸ் போனேன். ஆபீஸ் பையன் ஆவலோடு கேட்டான். ”சார், இன்னிக்குப் பெட்ரோல் எடுத்திருக்க மாட்டாங்களே!” 
முதல் நாள் கிருஷ்ண பரமாத்மாவாக தெரிந்த அவனது உருவம், இப்போது ரொம்ப சாதாரணமாகத் தெரிந்தது. 
”அடப்போப்பா, இன்னிக்கும் திருடிட்டானுக” 
”எப்புடி சார்”
தன் மூளையில் உதித்த தொழில்நுட்பம், ஒரே ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காத அதிர்ச்சியை அவனால் நம்பவே முடியவில்லை. 
அன்று பகல் முழுவதும் மண்டை காய்ந்தது. செய்தியில் கவனமே இல்லை. வந்தவர் எல்லாம், ‘ஏன் சார் உம்முனு இருக்கீங்க’  என்று கேட்டு சோகத்தைக் கிளறினர். விஷயத்தைச் சொன்னால், ‘இவ்வளவு தானா’  என்று வருத்தம் வேறு. 
நாட்கள் கடந்தன; திருட்டும் தொடர்ந்தது. ‘பெட்ரோல் திருட்டு தடுப்பது எப்படி’ என்று, எனக்காகவே 24 மணி நேரமும் அதே சிந்தனையாக திரிந்தான், ஆபீஸ் பையன். 
”பேசாம, வண்டில பெட்ரோல் போடாம விட்டுருங்க, எப்புடி திருடுறானுகன்னு பாத்துருவோம்” என்றார், அலுவலக நண்பர். அவர் செய்வது நக்கல் தான் என்றாலும், அதுதான் சரியெனப்பட்டது. அன்று முதல், லிட்டர் கணக்கில் பெட்ரோல் அடிப்பதை விட்டேன். 10 ரூபாய், 20  ரூபாய், செல்லும் தொலைவுக்கு தகுந்தபடி என பெட்ரோல் போட ஆரம்பித்தேன். 
இரவு வீடு செல்லும்போது, வண்டியில் கொஞ்சூண்டு பெட்ரோல் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. ஆத்திரம் அவசரத்துக்கு, அருகே பங்க் போகுமளவு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு. 
இந்த திட்டத்தை அமல் செய்தபிறகும், பெட்ரோல் திருட்டு தொடர்ந்தது. ஆனால் எனக்கொன்றும் கவலையில்லை. நம்ம வண்டியில் மிஞ்சி மிஞ்சி போனால், 50 மில்லியோ, 100 மில்லியோ தான் பெட்ரோல் இருந்திருக்கும். 
இப்படியே ஒரு மாதம் வரை வண்டியும், வாழ்க்கையும் ஓடின. அப்புறம் நம்ம வண்டி பக்கத்திலேயே திருடர்கள் வருவதில்லை. எனக்கு  பூனைக்குட்டி பால் குடிக்காமல் ஓடிய கதை நினைவுக்கு வந்தது.
நான் செயல்படுத்திய ஐடியாவுக்கு காப்பிரைட்ஸ் உரிமைகளை நானே வைத்துக்கொண்டபடியால், அதுபற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. 
சில மாதம் கழித்து ஆபீசில் இது பற்றி பேச்சு வந்தபோது, ‘இப்போதெல்லாம் திருட்டே நடப்பதில்லை என்ன நடந்துச்சுன்னே தெரியலை’ என்றேன்.  
‘ஒண்ணு, தானா திருந்தீருக்கணும். இல்லைன்னா, படிப்பு முடிஞ்சி, ஊரப்பாத்து போயிருக்கணும்’ என்றான், ஆபீஸ் பையன். ‘நாம் இன்னும் நிறைய வளர வேண்டியிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன்.