Posts Tagged ‘doctor’

கிராமங்களில், ஓடியாடித்திரியும் நாய்க்கூட்டம், நகரத்து வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு, வீதியை வேடிக்கை பார்த்துக் குரைக்கும் பரிதாபம் உருவாகி விட்டது. நகரத்து வாழ்க்கையில், நாய்களுக்கான வசிப்பிடம் மிகவும் சுருங்கிப்போய்விட்டதைத் தான், மொட்டை மாடியில் உலாவும் நாய்கள், நமக்கு உணர்த்துகின்றன.
நகரமும், கிராமமும் அல்லாத எங்கள் ஊரிலேயே நாய்களை பராமரிப்பது சிரமம் என்கிற நிலையில், நகரத்து வீடுகளில், நாய்களை வைத்திருப்போர் நிலையெல்லாம் பெரும் திண்டாட்டம்தான்.
சரி, அதை விடுங்கள். எங்கள் வீட்டில் ‛சீனு’வை வளர்க்க ஆரம்பித்தபிறகு, எனக்கு வந்து சேர்ந்திருக்கும் வேலைப்பளு இருக்கிறதே, சொல்லி மாளாது. நாய்க்கு ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் அழைத்துச் செல்வது, குளிக்க வைப்பது எல்லாம் என் பொறுப்பில் சேர்ந்து விட்டது.
நாய்க்குட்டிக்கான சோப்பு விலை 60 ரூபாய். 30 ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்து, எனக்கோ, குடும்பத்துக்கோ, நான் சோப்பு வாங்கியதாக வரலாறே இல்லை என்பது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.
நாய்களுக்கான பொருட்கள் விற்கின்ற கடை, அலுவலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது. அங்கே ஒரு பெண் இருந்தார். விற்பனையாளரும், உரிமையாளரும் அவர்தான் போலிருக்கிறது. ‘நாய் பெல்ட் வேண்டும்’ என்றேன். ‘என்ன வகை நாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் தயங்கித்தயங்கி, ‛நாட்டு நாய் தாங்க’ என்று தமிழில் கூறினேன். ‘கன்ட்ரி டாக். இட்ஸ் ஓகே’ என்றவர், பெல்ட் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்தடுத்த கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார். அதற்குப்பிறகு, எனக்கு சந்தேகமே வரவில்லை. கைஜாடையில் பாதியும், பட்லர் ஆங்கிலத்தில் பாதியுமாக பேசி, பெல்ட்டை வாங்கி வந்து விட்டேன். அதே பெண், வேறு ஒருவருடன் தமிழில் சரளமாக பேசிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தபோது, எனக்கு வந்த ஆத்திரம் இருக்கிறதே…! எல்லாம் எங்கள் வீட்டு நாய்க்காக பொறுத்துக் கொண்டேன்.
இப்படியாக வளர்ந்த நாய்க்குட்டிக்கு, சில வாரங்களுக்கு முன் உடல் நலம் குறைந்து விட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கு என ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து இரு வாரங்கள் எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது.
டாக்டர், கம்பவுண்டர், டாக்டர் என மூன்று வெவ்வேறு குழுவினர், நாய்க்கு ஊசி போடுகிறேன் பேர்வழி என ஆயிரம் ரூபாயை அடித்துக்கொண்டு போனதுதான் கண்ட பலன். நாய்க்குட்டியின் வயிற்றுப்போக்கு என்னவோ சரியாகவில்லை. அய்யாவுக்கு, பெரும் கவலை. அவருக்கு இருக்கும் உடல் பாதிப்புகள் குறித்துக்கூட, அவர் அவ்வளவு கவலைப்பட்டு நான் கண்டதில்லை.
நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் இரண்டு பேர் வேண்டும். ஒருவர் மட்டும் சென்றால், அந்த கம்பவுண்டரும், டாக்டரும், நாயை விட பயங்கரமாக குரைக்கின்றனர். ஆகவே, மூன்று பேர் அல்லது நான்கு பேராக செல்ல ஆரம்பித்தோம்.
என் மனைவி, கையில் சாட்டையுடன் எதிரில் நின்று மிரட்டினால்தான், நாய் அமைதியாக இருக்கும். மூத்த மகள் இருந்தால், வாயை மாஸ்க் போட்டு, கட்டி விடுவாள். நானும், இளைய மகளும், ஒப்புக்கு நின்று கொண்டிருப்போம். எங்களைப் போலவே, நாயும் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும். டாக்டரும், கம்பவுண்டரும் வந்து, ஊசி போடுவார்கள். அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஊசி, மருந்துகள் அல்ல.
இப்படியே 15 நாட்கள் ஓடி விட்டன. நாய்க்குட்டி, தண்ணீரை குடித்துக் கொண்டே, சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தது. ஊரெங்கும், அந்த நாய்க்கு வயிற்றுப் போக்கு, இந்த நாய் செய்துப் போய் விட்டது என்று பீதி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. அய்யாவுக்கு கவலை அதிகமாகி விட்டது.
நாயை உள்நோயாளியாக அட்மிட் செய்து, குளுக்கோஸ் ஏற்றி குணப்படுத்தும் அளவுக்கெல்லாம், எங்கள் ஊர் கால்நடை மருத்துவமனை டாக்டர்களுக்கு ஞானம் போதாது. வேறு வழி? மாரியம்மன் கோவிலுக்கு போன ,அய்யா, நாய்க்கு குணம் ஆனால், நாய் உருவம் செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். கோவிலில் இருந்து திருநீறு, தீர்த்தம் கொண்டு வந்து வேறு போட்டு, அம்மன் மேல் பாரத்தைப்போட்டார். அதன்பிறகுதான், சீனு சாப்பிட ஆரம்பித்தான். குரலிலும் பழைய கம்பீரம் வந்து விட்டது.
அன்று இரவே, நான் வாங்கி டேபிள் மேல் வைத்திருந்த நாய் மருந்து, சிரிஞ்ச் எல்லாம் கடித்துக்குதறி நாசம் செய்து விட்டான். டேபிளில் இருந்த என்னுடைய குல்லா ஒன்றையும் நார் நாராக கிழித்து வைத்திருக்கிறான்.
நான் கொடைக்கானலில் இருந்து ஆசையாக வாங்கி வந்த குல்லாவை நாய் விழுங்கி விட்டது என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எல்லோரும், நாய் பழைய நிலைக்கு வந்து விட்டது என்றே மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முன்பொரு முறை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன், ‘நாய் வாயைக் கட்டுங்கள்’ என்றார், கம்பவுண்டர். ஏதோ ஒரு ராமராஜன் –கவுண்டமணி நடித்த படத்தில், நாய் வாயைக்கட்டுவார்கள் என்பது நினைவுக்கு வந்தது. இது அப்படியில்லை. ஊசி போடுபவர் மீது, நாய் பாய்ந்து விடக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாம்.
சணல் கயிறை கொடுத்து கட்டச்சொன்னார்கள். எப்படிக்கட்டுவது? எனக்குத் தெரியவில்லை. மனைவிக்கும் தெரியவில்லை. மகள்களுக்கும் தெரியவில்லை. கம்பவுண்டர் பொறுமை இழந்து, கயிறில் சுருக்கு முடி போட்டுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தபடி, ஒரு வழியாக, நாய் வாயைக்கட்டினோம்.
அப்படியும், நான்கு பேரும் ஆளுக்கு ஒரு காலாக பிடித்துக் கொண்டு, கெஞ்சியும், மிரட்டியும், நாயை அசையாமல் பார்த்துக் கொண்டோம். கம்பவுண்டர், நாய் பின்புறமாக நின்று கொண்டு, நாய்க்கு ஊசி போட்டார். அப்போதுகூட, அவரது கை, நாய் மீது படவில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம். ஊசி போட்டு கிளம்பும்போது, கம்பவுண்டர் சொல்லி விட்டார்.
‘கடைகளில், நாய் மாஸ்க் விற்கிறது. வாங்கி வந்து விட்டால், கயிறில் வாயைக்கட்டும் அவசியம் இருக்காது’ என்றார். மாஸ்க், அதுதான் முகமூடி, 60 ரூபாய். வாங்கியாகி விட்டது. அது மிகவும் பயனுள்ள மாஸ்க். போட்டு விட்டால், வாயை திறக்கவே முடியாது. அப்புறம் எங்கேபோய் கடிப்பது? மாஸ்க் கண்ணில் படும்போதெல்லாம், வாய் நீளம்
கொ ண்ட மனிதர்கள் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றே எனக்குத்தோன்றும்.

நாட்டில் அடைமொழி இல்லாத அரசியல்வாதிகள் அரிதாகி விட்டனர். சாமியார்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கூட அந்நிலைக்கு வந்து விட்டதுதான் வேதனை!
அடைமொழி மீது தீராத காதல் இருக்கும் அத்தகையவர் நலம் காக்கும் கம்பெனிகளும் ஊருக்குள் உண்டு. பணம் படைத்த நபர்களை அணுகி  பேரம் பேசுவர். ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘மக்கள் தொண்டன்’, ‘உத்தமர் காந்தி’, ‘ஜூவல் ஆப் இந்தியா’ என்பது போன்ற பட்டங்கள் இருக்கின்றன. உங்களுக்கு என்ன பெயரில் தேவையோ, அந்த பட்டம் தருகிறோம். அதுவும் பிரம்மாண்ட விழா நடத்தி. விழாவுக்கு உங்கள் உறவினர், நண்பர்கள் என 50 பேரை அழைத்து வாருங்கள். அதற்குரிய டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்,” என்பர்.
ஒரு டிக்கெட் 200 ரூபாய் இருக்கும். சரி, ஓசியில் விருது கிடைக்கிறதே! ஆசாமியும் 50 பேருக்கு டிக்கெட் வாங்கி விடுவார். அவர் சார்பில்10 பேர் வந்தாலே ஆச்சரியம்தான். விழா நாளில் தான் தெரியும்; இப்படி ஊரெல்லாம்     வசூல் செய்திருப்பதும், நூற்றுக்கணக்கான  பேர்  விருது பெறுவதும்.
‘எப்படியோ, நமக்கு விருது கொடுத்தால்  போதும்’ என்று வாங்கி வந்து விடுவார். வசதி இருப்பவர், உறவினர், நண்பர் பேரைப்போட்டு பேப்பரில் வாழ்த்து விளம்பரம் வெளியிடுவார்; வசதி குறைந்தவர், வால் போஸ்டர் அச்சிட்டு ஒட்டி திருப்தி அடைவார். பாராட்டு விழா நடத்தி பெருமைப்பட்டுக்கொள்பவரும் உண்டு. 
‘இந்தப்பட்டங்கள் பிடிக்கவில்லை என்றால், எங்காவது ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கித்தருகிறோம்’ என்பர், கம்பெனியார். என்ன, கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான். டாக்டர் பட்டம் என்றால் சும்மாவா! 
எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர், திடீரென இலங்கையில் ஒரு டுபாக்கூர் பல்கலையில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து, ஊர் மக்களையெல்லாம் பீதிக்குள்ளாக்கி விட்டார். விசாரித்தால், வெறும் 30 ஆயிரமும், கொழும்பு போக வர ஆன செலவும் தான். 
ஏதோ ஒரு ஷீல்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டு, ‘நானும் டாக்டர் தான்’ என்று பெருமை  அடித்துக் கொண்டார்.பெயருக்குப்பின்னால் ‘பி ஹெச்டி’ என்று வேறு போட்டுக்கொண்டார். தன் சமூக சேவையை மெச்சி, இலங்கைக்காரன் டாக்டர் பட்டம் கொடுத்ததாக தம்பட்டம் வேறு. 
ஒரு வாரமாய் ஊருக்குள் பாராட்டு விழா, பார்ட்டி என்றெல்லாம் ஆட்டம் களை கட்டியது. நமக்குத்தான் அநியாயம், அக்கிரமம்  எங்கு நடந்தாலும் மூக்கு விடைத்துக் கொண்டு விடுமே! சும்மா இருக்க முடியுமா? 
‘பணம் கொடுத்து பட்டம் வாங்கி விட்டு, படம் காட்டும் பந்தா பேர்வழிகள்’ என்று யார் பெயரையும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக செய்தி கொடுத்து  விட, அதுவும் அப்படியே வெளியாகி விட்டது. 
பெயர் இல்லாவிட்டால் என்ன? வக்கீலுக்கு தெரிந்து விட்டது, ‘நம்மைத்தான் நக்கல் செய்கிறார்கள்’ என்று. போன் செய்து குமுறி விட்டார். ‘நாட்டில் எத்தனையோ அயோக்கியத்தனம் நடக்கிறது. நான் பட்டம் வாங்கியதை பொறுக்க முடியவில்லையா’ என்பது அவர் வாதம் .
அதோடு விட்டாரா? ஜூனியரை விட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார். ‘மறுப்பு வெளியிட வேண்டும்’ என்றார், ஜூனியர். 
‘நாங்க தான் பேர் போடலியே’ என்றேன், நான். 
‘பேர் போடாட்டியும்,  நீங்க யாரை சொல்றீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால குறிப்பிட்ட இந்த செய்தி எங்க சீனியரை குறித்து வெளியாகவில்லைனு போடுங்க’ என்றார்.
 
”அப்புடிப்போட்டா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு  சொல்ற மாதிரி இருக்குமே. யாரப்பத்தின செய்தினு தெரியாதவங்களுக்கு கூட தெரிய வச்ச மாதிரி இருக்குமே”
 
 
”அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு மறுப்பு வந்தாகனும்” கறாராக பேசினார் ஜூனியர். 
 
அதற்கு மேல் என்னாலும் முடியவில்லை. அப்புறமென்ன, மான் கராத்தே தான்! 
 *
இப்படி தேடித்தேடி பட்டம் கொடுத்து கல்லா கட்டும்  கும்பல் பற்றி அறிந்து, மூக்கு விடைத்து, நக்கல் நையாண்டிகளுடன், செய்தி போட்டபோது, அந்த நபர் ஆவேசமாக ஆபீசுக்கு போன் செய்தார். 
”என்ன சார் நியூஸ் போடுறீங்க? பேரில்ல, போன் நெம்பரில்ல, படிக்கிறவன் எப்புடி தெரிஞ்சுக்குவான்? எத்தன கஷ்டப்பட்டு ஊர் ஊரா அலைஞ்சு, ரோட்டுல போறவனுக்கெல்லாம் விழா நடத்தி விருது கொடுத்தென், நல்லதாவோ, கெட்டதாவோ செய்தி போட்டிங்க! அத எம்பேரோட போட்டா கொறஞ்சா போய்டுவீங்க” என்று ரொம்பவும் தான்  வருத்தப்பட்டார்.
கடைசியில் ஒரு வாசகம் சொன்னார்.
”சார்… தப்புத்தண்டா செய்றவுனுக்கெல்லாம் வெளம்பரம் முக்கியம் சார்…!”