Posts Tagged ‘lanjam’

செய்தி வெளியிடுவதற்காக நிருபர்களுக்கு அன்பளிப்பு அள்ளித்தரும் ஆர்வலர்கள் நாட்டில் நிறையப்பேர் உண்டு. டாட்டா, பிர்லா, அம்பானிகள் தொடங்கி, உள்ளூர் தரை டிக்கெட் அரசியல்வாதிகள் வரை எல்லோரும் இதில் அடக்கம். ஆள், இடம், பொருள் தான் மாறுமே தவிர, விஷயம் ஒன்று தான். 

நல்லவற்றை மிகைப்படுத்தி எழுது, நல்லது அல்லாதவற்றை எழுதாதே! இதுதான் அள்ளித் தருபவர்களின் அடிப்படை நோக்கம். அதை பிறகொரு பதிவில் பார்ப்போம். 
இன்றைய மேட்டர் அன்பளிப்பு. சங்க இலக்கியங்களில் இது பற்றி ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. இதற்கு ஊருக்கு ஊர், பெயர்கள் வேறுபடுவதுண்டு. 
சென்னை போன்ற பெருநகரங்களில், கவர், கிப்ட் வவுச்சர், காம்ப்ளிமெண்ட் என பெயர்கள் வேறுபடுகின்றன. கொங்குத்தமிழ் கோலோச்சும் மாவட்டங்களில், ‘குறிப்பு’ என்ற பெயர் உண்டு. இன்னும் சில பகுதிகளில் ‘மீட்டர்’ என்றும் அழைப்பர். 
மெகா வசூல் பேர்வழிகளை ‘பக்கெட் பார்ட்டி’ என்று அன்பொழுக அழைப்பாரும் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரில் நிலவரம் தெரியவில்லை. (தெரிந்தவர்கள் கவனத்துக்கு)

இப்படி அன்பளிப்பு வாங்கிக்கொண்டு செய்தி எழுதும் நிருபர்கள் இரண்டு வகை. வாங்கியதற்கு வஞ்சகம் இல்லாமல் எழுதிவிடுபவர் முதல் வகை. கொடுத்த ஆளையே பதம் பார்த்து விடுபவர் இரண்டாம் வகை. ‘பணம் வாங்கி விட்டு செய்தி இப்படி போட்டு விட்டான்’ என்று புலம்பிக்கொள்ளலாமே தவிர, எங்கும் புகார் செய்ய முடியாது; செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்களே!
 ***
 
 
நிருபர் ஒருவர், ஒரு விழாவில் தரப்பட்ட அன்பளிப்பை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலுவலகம் சென்று விட்டார். எடிட்டர் முன்னிலையில் உட்கார்ந்து செய்தி எழுதிக்கொண்டிருந்தார். திடீரென பாக்கெட்டில் இருந்து அலாரம் ஒலிக்கும் சத்தம் எழத் தொடங்கியது. நிருபருக்கு பீதி கிளம்பிவிட்டது
”என்னய்யா பாக்கெட்ல”
”ஒண்ணும் இல்லீங்க சார், வாட்ச்சுங்க” 
”அத எடுத்து ஆப் பண்ணுய்யா” 
”இதா வரேன் சார்” என்று பாத்ரூமுக்கு ஓட்டம் பிடித்தார் நிருபர். 
விஷயம் இதுதான். நிருபர் அன்று காலை சென்ற விழாவில் அன்பளிப்பாக டைம்பீஸ் கொடுத்துள்ளனர். கொடுத்த ஆசாமி கொஞ்சம் குறும்புக்காரர் போலிருக்கிறது. இரவு 8 மணிக்கு ஒலி எழுப்புவதுபோல் அலாரம் வைத்துக்கொடுத்து விட்டார். இதை அறியாத நிருபரும், எடிட்டர் முன் இருந்தபோது ஒலி எழுப்பி, டைம்பீஸ் மானத்தை வாங்கி விட்டது!