போலீஸ் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் கலெக்டரும், பெண் ஒருவரும், நள்ளிரவு நேரம் காரில் சென்று கொண்டிருந்தனர். அரசு காரில் அல்ல; கலெக்டரின் பர்சனல் காரில் பயணம். கலெக்டரின் கெட்ட நேரம், கிராமத்து வழியாக சென்றபோது, டூவீலர் மீது கார் மோதி விட்டது. ஒருவருக்கு பலத்த காயம். சில வினாடிகளிலேயே ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்து விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய கலெக்டரை, கிராமத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. தனக்குத் தெரிந்த கொத்துப் புரோட்டா தமிழில், கலெக்டர் பேசியதை கேட்டதும், கிராமத்தினருக்கு வீரம் வண்டி வண்டியாக வந்து விட்டது.
‛வெளியூர்காரன் சிக்கிவிட்டான், அதுவும் தமிழ் வேறு திக்கித் திக்கி பேசுகிறான். சும்மா விட்டு விட முடியுமா?’ உள்ளூர்காரர்கள், அதிலும் சில ‛குடி’ மக்கள் ரொம்பவும் துள்ளினர். கலெக்டரும் பயந்தபடியே பேசிப்பார்த்தார். பணம் கொடுப்பதாக எல்லாம் பேரம் பேசினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவரது பிரச்னை, விபத்து மட்டுமா? காரில் இருப்பது அவர் மனைவியல்ல; ஊருக்குள், மாவட்டத்தில், ஏன் மாநிலம் முழுவதுமே அறிமுகம் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர். விஷயம் வெளியில் தெரியாமல் சமாளி்த்தாக வேண்டுமே! எப்படி எப்படியோ பேசிப்பார்த்தார். ஆளாளுக்கு அடிக்கத்தான் வந்தனர்.
கடைசியி்ல், வேறு வழியே இல்லாத நிலையில், ‛நாந்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்’ என்றார். கூட்டத்தினர் யாரும் நம்பவில்லை. அதுவும் ‛குடி’மகன் ஒருவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது. ‛‛யோவ் கலெக்டர்னா நம்பீருவமா, ஐடி கார்டு எடுய்யா,’’ என்று ஆவேசப்பட்டார். கூட்டமும் அவரை ஆமோதித்தது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கலெக்டர், எஸ்.பி.,க்கு போன் போட்டு விஷயத்தை சொன்னார். அவரும் பரிதாபப்பட்டு, போலீசை அனுப்பி வைத்தார். வந்த போலீசார், நிலைமையை புரிந்து கொண்டு, கூட்டத்தை கலைத்து, கலெக்டரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகுதான் ஏழரை ஆரம்பித்தது. ஐடி கார்டு கேட்டவனை சும்மா விட முடியுமா? மறுநாள் கலெக்டர் உத்தரவுப்படி, கிராமத்தினர் அனைவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளி வந்தனர் போலீசார். அடையாள அணிவகுப்பு நடத்திய கலெக்டர், ஒரே ஒருவனை மட்டும் கொத்தாக அள்ளிப்பிடித்து அறைந்து தள்ளினார். காரணம் புரியாத எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி.
‛என்ன கேப்ப, என்ன கேப்ப, இப்ப கேளுடா, இப்ப கேளுடா’ என்றபடியே மொத்தினார், கலெக்டர். பாவம், இரவு மப்பில் என்ன பேசினோம் என்றே தெரியாமல் கேட்ட கேள்வியால், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று அந்த ஆசாமி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.
அடித்து கை ஓய்ந்த கலெக்டர், ‛ஓகே, எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணீருங்க’ என்று மகிழ்ச்சியுடன் கூறிச்சென்று விட்டார். எஸ்.பி.,க்கும், டி.எஸ்.பி.,க்கும் தலை சுக்குநுாறாக வெடித்து விடும் போலிருந்தது. அடிவாங்கிய ஆசாமியை தனியாக அழைத்துச் சென்று, விசாரி்த்தனர்.
‛யோவ் என்னய்யா கேட்ட, கலெக்டர்கிட்ட?
‛சாமி, அவுரு அதிகாரின்னு தெரியாம பேசீட்டனுங் சாமி’
‛அதாண்டா, என்ன பேசுன’
‛சாமி, தெரியாம பேசீட்டனுங்’
‛டேய் மரியாதையா சொல்லுடா, என்ன பேசுன’
‛சாமி, ஒண்ணுமே கேக்குலீங்’
‛ஒண்ணுமே கேக்காம ஏண்டா இந்த ஒதை ஒதைக்குறாரு’
‛சாமி, ஏன்னு தெரிலீங் சாமி’
‛அடேய், ஒதை வாங்குனது பத்துலியா, ஒழுங்கா சொல்லுடா’
‛சாமி மயக்கம் வார மாதிரி இருக்குங் சாமி’
ஏற்கெனவே வாங்கிய அடியால் பயந்துபோயிருந்த ஆசாமி, ‘மீண்டும் அதைச் சொன்னால், விபரீதம் வந்து விடும்’ என்று நினைத்தாரோ என்னவோ, அப்படியே விழுந்து விட்டார்.
பயந்துபோன அதிகாரிகள், தண்ணீர் தெளித்து உட்கார வைத்து புரோட்டா வாங்கிக் கொடுத்து, நைசாக பேசி, விஷயத்தை கறந்தே விட்டனர். அப்புறமென்ன, ‘நம்மால் முடியாததை இவனாவது செய்தானே’ என்றெண்ணி, மகிழ்ந்து பாராட்டி, அனுப்பி வைத்தனர்.
ஒப்புதல் வாக்குமூலம்
Posted: 16/03/2014 in கட்டுரை, கவிதை, கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, cbe, coimbatore, kavithai, kovai, poem, poetry, tamil
‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’
அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.
***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.
***
கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?
***