Posts Tagged ‘cholar’

மனிதர்கள் தாங்கி நிற்கும் பட்டப்பெயர்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. அவற்றின் உருவாக்கத்திலும் பயன்பாட்டிலும் மிகுதியான அன்பும், மிதமிஞ்சிய வெறுப்பும் முக்கிய பங்காற்றுகின்றன. 
உடல், மொழி, ஊர், தொழில் சார்ந்த பட்டப்பெயர்களை காட்டிலும், குணம் சார்ந்த பட்டப்பெயர்களே நிலை பெறுகின்றன. அவற்றின் மீதான தமிழர்களின் ஆர்வம், நூற்றாண்டுகளை கடந்தது.
கங்கை கொண்டான், கடாரம் வென்றான், வாதாபி கொண்டான் என்பதெல்லாம் காலத்தால் அழியாப்புகழ் பெற்ற தமிழர்களின் பட்டப்பெயர்கள்.
சிலரது  பட்டப்பெயர்கள் கல்வெட்டில் எழுதியது போல் அனைவரது மனதிலும் நிலை கொண்டு விடும். கடைசியில் வெறும் பெயரை சொன்னால், உறவினர்களுக்கு கூட தெரியாது; பட்டத்தையும் சேர்த்துச்சொன்னால் தான் தெரியும். 
தலை சொட்டையாக இருப்பவர்களுக்கு இயற்கையாகவே பெயர் அமைந்து விடும். அறுவைக்குப் புகழ் பெற்ற என் நண்பர் ஒருவருக்கு ‘அறுப்பான்’ எனப்பெயர் சூட்டியது நண்பர் கூட்டம். 

எந்நேரமும் பெண்களிடம் வழிந்து பேசும் அன்பர்களுக்கும், சிடுசிடுக்கும் நண்பர்களுக்கும், தானாகவே பெயர்கள் தேடி வரும். 
பள்ளியில் படித்தபோது ‘கரண்டி’ என்று அழைக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் இருந்தார். ‘எதனால் அவருக்கு அப்பெயர் நிலைத்தது’ என்ற வரலாற்றுத்தகவலை அறிந்து கொள்ள, நானும், நண்பர்கள் பலரும் முயன்றதுண்டு. ‘காலம் காலமாக அவர் அப்படியே அழைக்கப்பெறுவதாகவும், காரணம் சரிவரத் தெரியவில்லை’ என்றும், எங்களுக்கு முன் படித்தவர்கள் கைவிரித்து விட்டனர்.
முற்காலத்தில் அவர் ஏதோ ஒரு மாணவரை கரண்டியால் அடித்து விட்டபடியால் அப்பெயர் நிலைபெற்றதாக சிலர் கூறியதுண்டு. பாத்திரத்தில் இருப்பதை துளி கூட  மீதமின்றி எடுத்து ஊற்றுவதைப்போல, பாடத்தை மிச்சம் மீதமின்றி வழித்து மாணவர் மூளைக்குள் ஊற்றி விடும் திறன் கொண்டவர் என்பதால் அவர் அப்படி அழைக்கப்பெறுவதாகவும் செவிவழிச்செய்திகள் புழக்கத்தில் இருந்தன.
எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவரை, சக போலீசாரும், அதிகாரிகளும் ‘மன்னர்’ என்று பெயரிட்டு  பேசிக்கொள்வது வழக்கம். அதே ஊரில் அமைச்சரும் இருந்தார்; அரசவைப்புலவரும் இருந்தார். எல்லாம் போலீஸ் அதிகாரிகள் தான்! 
பட்டப்பெயர் குறித்து, ‘புலவர்’ என்றழைக்கப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன். அவர்  கூறிய பதில், ”இங்கு மன்னர் இருக்கின்றார். மந்திரி பிரதானிகளும் இருக்கின்றனர். மாடமாளிகைகளும் கூட உண்டு. பாடல் இயற்றப்புலவர் பெருமானும் உண்டு. அந்தப்புரம் தான் எங்கேயெனத் தெரியவில்லை,” என்று போட்டாரே ஒரு போடு!
கல்லூரியில் படிக்கும்போது தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேலே பார்த்துக்கொண்டு தான் பேசுவார். மறந்தும் கூட அவர் மாணவர்களையோ, மாணவியரையோ பார்த்து பாடம் நடத்தியதில்லை. அவருக்கு ‘அட்டாலி’ என்ற பட்டப்பெயர்  சூட்டியிருந்தனர், மாணவர்கள். 
இன்னொரு ஆசிரியர் கொழு கொழுவென குண்டாக இருப்பார். அவருக்கு ‘போண்டா’ என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது. இந்தப்பெயர்கள் நான் படிக்கும்போது சூட்டியவையல்ல; அதற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்பாகவே நிலை பெற்று விட்ட பெயர்கள் அவை. பல மாணவர்களுக்கு இந்த ஆசிரியர்களின் உண்மையான பெயரே மறந்து போகும் அளவுக்கு பட்டப்பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன.
சிறு வயதில் சோளச்சோறு வயிறு முட்ட உண்பதில் ஆர்வம் காட்டிய ஒருவருக்கு, ‘சோளச்சோத்தார்’ என்று பட்டப்பெயர். அவரது பரம்பரைக்கே அந்தப்பெயர் வந்து விட்டது. அவர்களது குடும்பத்தினர் அனைவரும், அந்தப்பட்டத்தை பயன்படுத்தி பெருமிதம் கொள்வது தனிக்கதை. வருங்காலத்தில், சோளத்தை ‘சோழம்’ என மாற்றி, ‘நாங்களும் ராஜராஜ சோழர் பரம்பரை தான் என்று சொல்லிக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை’ என்று உறவினர்களும் ஊராரும் கிண்டல் செய்வதுண்டு.
முன்பு நான் வேலை பார்த்த ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவருக்கு ‘பூச்சி’ என்றொரு பெயர் உண்டு. மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ‘விஷப்பூச்சி’ என்பர்.
‘இந்தியன் தாத்தா’ என்ற பெயரில் கூட ஓரு போலீஸ் அதிகாரி இருந்தார். நேர்மைக்குப் பேர் போன அவர், இப்போது ஓய்வு பெற்று விட்டார். ‘சவுக்கடி’ என்ற பட்டம் சூடிய போலீஸ் அதிகாரி, ஒரு காலத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பிரபலமாக இருந்தார். சவுக்கில் விளாசியே பெயர் வாங்கியவர். 
இப்படி பட்டப்பெயர் சூட்டியவர்களுக்கும், சூடியவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவு இருக்கும். நண்பர், பகைவர், ஆசிரியர், மாணவர், ஊழியர், அதிகாரி என ஏதாவது ஒரு உறவு இருக்கும்; இருந்து தொலைக்கும். மிகுதியான அன்பும், மிதமிஞ்சிய வெறுப்பும் தான் இதற்கெல்லாம் காரணம்!