01/10/2014 க்கான தொகுப்பு

அழுகையும், சிரிப்பும் மனிதர்களின் மாபெரும் ஆயுதங்கள். சிரமமான கேள்விகளை எதிர்கொள்ளும் வேளையில் கைகொடுக்கும் தற்காப்பு ஆயுதம் சிரிப்பு மட்டுமே. சிரித்து விட்டால், கேள்வியின் முனை மழுங்கி விடாதா என்ன?
அழுகையும் ஒரு வகையில் அப்படித்தான்.
பதில் சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில், தனித்து நின்று தாக்குதல் நடத்த பலம் இல்லாத வேளைகளில், எதிரியை அடித்து வீழ்த்துவதற்குரிய ஆயுதமாய் மனிதர்கள் கையில் எடுப்பது அழுகையை. இந்த அடிப்படைகளில், ஆண், பெண் வேறுபாடு எதுவும் இல்லை.
கண்ணீர் விட்டு அழுது விட்டால், எதிரில் இருப்பவர் மனதை கரைத்து விட முடிகிறோ இல்லையோ, மேற்கொண்டு தாக்குதல் எதுவும் வராமல் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு நிச்சயம் இருக்கிறது. அவர்களில் பெரும்பகுதியினர் பெண்களாகவும் இருக்கின்றனர் என்று நான், நான்கு நாட்கள் முன்பு வரை முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருந்தேன்.

துக்கம் விசாரிக்க செல்பவர்கள் முகத்தில், ஒரு ரெடிமேடான சோகம் குடிகொண்டிருக்கும். அது துக்கம் விசாரிக்கும்வரை மட்டுமே. ஓரிரு வினாடிகளில், அந்த இன்ஸ்டன்ட் சோகம் முடிவுக்கு வந்து விடும். பக்கத்தில் இருப்பவருடன் சகஜமாக சிரித்து உரையாடும் மனநிலை வந்து விடும். அப்படிப் பல பேர், இப்போது தமிழகத்திலும், பெங்களுருவிலும் திரிவதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன. சரி போகட்டும் விடுங்கள்.
துக்க வீடுகளில், யார் அதிகம் அழுகின்றனர் என்று கவனித்து வைக்கும் உறவினர்கள் சில பேர் இருக்கவே செய்வர். அவள் அழுகவே இல்லை என்றும், கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்ததாக தெரியவில்லை என்றும், அந்தப் பெண்கள் அப்படி கதறிக்கதறி அழுதனர் என்றும், நாள் முழுவதும் பேசிக்கொண்டிருப்பதை நான் கேட்டதுண்டு; நீங்களும் கேட்டிருப்பீர்கள்.
விஷயம் இதுதான். நீங்கள் அழுதாலும், அழுகாவிட்டாலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் கவனிக்கப்படுவீர்கள். அழுவதற்கும், அழுகையின்றி இருப்பதற்கும், ஒரு காரணம், ஊரெங்கும் ஓரிரு நாட்களில் பரவி விடும்.

ஆகவே, அழுகை வராதவர்களும், எப்படியாவது, கத்திக்கதறி, தொண்டையை வறளச்செய்து, மயங்கி விழுந்து, குறைந்தபட்சம், மயங்கியதுபோல் கிடந்து, தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, அழுகைக்காக, அமைச்சர்களை குறை சொல்லித்திரிவது சரியல்ல; அவர்களுக்கு வரலாறு மிகவும் முக்கியமாயிற்றே!

‘இரு சக்கர வாகனம் ஓட்டிப்பழகி விட வேண்டும்’ என்பது, என் மனைவியின் நீண்ட நாள் ஆசை, விருப்பம், கனவு, லட்சியம். அதற்கு முதல் இடையூறாக இருப்பது, நம்மைத்தவிர வேறு யாராக இருந்து விட முடியும்?
‘கொஞ்சம் கையில் பணம் தயார் செய்து வைத்துக் கொள்கிறேன், அப்புறமாய் ஓட்டிப் பழகிக் கொண்டு விடலாம், அதுவரை பொறுத்துக்கொள்’ என்று, நையாண்டி செய்தே காலத்தை ஓட்டினேன். மருத்துவச் செலவுக்கெல்லாம் கையில் பணம் வேண்டும்தானே!
‘கட்டிய மனைவி என்ற முறையில் உனக்கு செலவழிப்பது நியாயம். நீ விபத்து ஏற்படுத்தி விட்டாய் என்பதற்காக, ரோட்டில் செல்பவருக்கெல்லாம் நான் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே, அதற்குத்தான் யோசிக்கிறேன்’ என்றெல்லாம் என்னால் கடுப்பேற்றப்பட்டதாலோ, என்னவோ, என் மனைவிக்கு, லட்சிய தாகம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.
பல்லாண்டு காலம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் ஓடி ஓடி, ஓடாய்த் தேய்ந்த டிவிஎஸ் 50, வீட்டில் தனியறையில், ஓய்வில் இருந்தது. அதற்கொரு வாழ்வு கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, என் மனைவியும், மகள்களும், அதை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்ட ஆரம்பித்தனர்.
கிளட்ச், பிரேக் இரண்டையும் பிடித்துக்கொண்டே ஸ்டார்ட் செய்து, அப்படியே ஆக்சிலரேட்டரையும் முறுக்கி, நகர்த்தி, வாசலில் ஓட்ட ஆரம்பித்தனர். ‘சரி, எப்படியோ, ஓட்டிப்பழகினால் சரி’ என்று, நானும் விட்டு விட்டேன். எனக்காக பொறுத்துக் கொண்டதோ என்னவோ, அந்த டிவிஎஸ் 50யும் சில வாரம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு வாசலில் ஓடியது. இல்லையில்லை, நகர்ந்தது; ஊறியபடியே சென்றது.
அப்புறம் பாவம், கார்ப்பரேட்டரில் குபுக் குபுக்கென புகை வர ஆரம்பித்து விட்டது. ஸ்டார்ட் செய்தபிறகும், எங்கேயும் நகராமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்தது. ‘இதுவும் அப்பாவைப்போலவே இம்சிப்பதாக’ புகார் கூறிக்கொண்டே, மீண்டும் அதே அறையில் கொண்டுபோய் போட்டு விட்டனர். அப்படியும், டூவீலர் ஓட்டும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.
யாராவது ரோட்டில் பெண்கள் டூவீலர் ஓட்டிச்செல்வதை பார்த்து விட்டால் போதும், நமக்கு ‘வாழ்த்து’ மழை பொழிய ஆரம்பித்து விடும். ஓட்டிப்பழக்கி விடாதது குற்றமாம். என்ன கொடுமை சாமி!
‘ஏன் திருமணத்துக்கு முன்பே ஓட்டிப் பழகியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டிருக்கலாம்தான். கேட்டால் என்ன பதில் வருமென்று தெரியாதா என்ன? ‘பைக் ஓட்டிப் பழகியிருந்தால், நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்திருப்போமே’ என்று பதில் வரும். இதுபோன்ற கேள்வி பதில்களில், நிறைய முன் அனுபவம் உண்டென்பதால், அப்படி கேட்டுவிட வேண்டுமென்று, இப்போதெல்லாம் நமக்கும் தோன்றுவதே இல்லை.
இப்படியே காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ‘இந்த நிலை மாறும்’ என்பது மாறாத விதியல்லவா? அப்படியொரு மாற்றம், உறவுக்காரப் பெண்கள் இருவரால் வந்து விட்டது. ‘நாங்கள் டூவீலர் ஓட்டிப் பழகப் போகிறோம். லைசென்ஸ் உடன் சேர்ந்து 3500 ரூபாய் தான்’ என்று வீடு தேடி வந்து கொளுத்திப் போட, எங்கள் வீட்டில் ஊசிப்பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க விட்டது. ‘நானும் பழகப் போகிறேன்’ என்று, மறுநாளே கிளம்பிவிட்டார், மனைவி. மகள்களும், மாமியாரும் (எங்க அம்மாதான்) உசுப்பேற்றி விட, இப்போது பயிற்சி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு தினமும் கொண்டுபோய் விடுவது, நமக்கு பெரும் உத்யோகமாக மாறி விட்டிருக்கிறது. முன்பெல்லாம், மகள்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது என்ற அளவில் மட்டுமே இருந்த நமது, வீட்டுக்கடமைகளின் எல்லை, இப்போது ‘டிரைவிங்’ பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வரை, விரிவடைந்து விட்டது.
எப்படியும், இன்னும் ஒரு சில நாட்களில் பயிற்சி முடிந்து விடும். அதன்பிறகு, வீட்டு வாசலிலும், வீதியிலும்தான் டூவீலர் ஓட்டியாக வேண்டும். என்ன நடக்குமோ என்பதை நினைத்தால்தான், வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் இருக்கிறது.
‘முன்பெல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு, ஆண்களை மட்டுமே பெண்கள் நம்பியிருந்தனர். பைக் ஓட்டிப் பழகிய பிறகுதான், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெண்ணடிமைத் தனத்துக்கு உண்மையான முடிவு, பைக் ஓட்டிப்பழகியதில் தான் இருக்கிறது’ என்ற அர்த்தம் வரக்கூடிய கட்டுரையொன்றை, ஆங்கில பத்திரிகையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுவேறு, நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தேன். தோட்டத்துடன் அமைந்திருக்கிறது, அவர்கள் வீடு. நான் கடைசியாக அங்கு சென்று 30 ஆண்டுகள் இருக்கும். பள்ளிச்சிறுவனாக இருந்த காலம். அப்போது நான் பார்த்த தோட்டத்துக்கும், இப்போது இருக்கும் தோட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள்.
வளமான மண் கொண்ட, நெல் உட்பட அனைத்து பயிர்களும் விளையும் நஞ்சை நிலம் அது. ஓரடி நிலம் கூட, வீணாக்காமல், பயிர் விளைவிக்கப்பட்ட பூமி. இப்போது, தலைகீழாக மாறியிருந்தது. தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. தென்னை இல்லாத இடங்களில் எல்லாம், பார்த்தீனியம் செடிகள்.
குறிப்பிட்ட அந்த தோட்டம் தான் என்றில்லை. அக்கம் பக்கத்தில், எங்கு பார்த்தாலும், பார்த்தீனியம் செடிகளே வியாபித்திருந்தன. எல்லாம் ஒரு காலத்தில், உணவுப்பயிர் உற்பத்தியான நிலங்கள்.
‘விவசாயம் செய்வதில் பயனில்லை’ என்று முடிவு கட்டி நிலத்தை விற்றவர்கள் பாதிப்பேர். மீதிப்பேரில் பெரும்பகுதியினர், ‘உணவுப்பயிர்களை விளைவிப்பதில் பயனில்லை’ என்று தென்னைக்கு மாறி விட்டனர். கோவை மாவட்டத்தில், இப்படித்தான், விவசாயம் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.
…….
கோவை மாநகருக்கு வெளியே, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லும் சாலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது குறிச்சி குளம். 330 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பினால், சுற்றியிருக்கும் 30 சதுர கிலோமீட்டர் பரப்பில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
சிறுவனாக இருந்த காலத்தில், இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததை பார்த்திருக்கிறேன். குளத்தில் அலையடிக்கும்போது, தண்ணீர் பொள்ளாச்சி சாலை மீதேறி வந்து விடும் கண்கொள்ளாக் காட்சியை கண்டு நடுங்கியதெல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. சமீப காலங்களில் அந்தளவுக்கு குளத்தில் தண்ணீர் நிரம்பியதே இல்லை.
அதற்கான காரணங்கள் பல. குளக்கரையில் குடிசை அமைத்து வசிப்பவர்கள், தண்ணீர் நிரம்ப விடுவதில்லை. கரையை மட்டமாக்கி விட்டனர். பல்லாண்டுகளாக சேர்ந்த மண் காரணமாக, குளத்தில் பல இடங்கள் மேடாக காட்சியளிக்கின்றன. கொஞ்சநஞ்சம் இருக்கும் தண்ணீரையும், ஆகாயத்தாமரைகள் கபளீகரம் செய்கின்றன.
குளத்தின் பரிதாப நிலைக்கு இதுமட்டும்தான் காரணம் என்று, பலரைப்போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாகத்தான், இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது.
நொய்யல் ஆற்றின் வழியோரத்தில் இருக்கும் குளங்களால் பயன்பெறும் விவசாயிகளில் சிலர், தங்கள் பகுதி குளங்கள் முழுவதும் நிரம்பியபிறகே, மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கின்றனர். அதற்குள் மழை நின்று விடுகிறது. கடந்த மூன்றாண்டாக குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராததற்கு, இதுவே காரணம் என்று, இப்போது தான் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் இறங்கியதால், இப்போது குளத்துக்கு கொஞ்சம் தண்ணீராகவது வந்திருக்கிறது. ‘பக்கத்து ஊர் குளத்துக்கு தண்ணீர் போகக்கூடாது’ என்று நினைக்கும் நம்மவர்கள் தான், தண்ணீர் பிரச்னையில் கேரளாவையும், கர்நாடகாவையும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
……