மழை படுத்தும் பாடு!

Posted: 15/11/2015 in கவிதை, கருத்து, இதழியல், நகைச்சுவை, நையாண்டி
குறிச்சொற்கள்:, , , ,

‘ஏதேனும் நற்செயலோ, அதிசயமோ நிகழ்ந்தால், மழை பெய்யும்’ என்பது, நம்மவர்களின் நீண்ட கால நம்பிக்கை. ரமணன் சொல்லும் அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையும், வெப்பச்சலனமும் தெரிந்திராத அந்தக்காலத்தில், மழை பெய்வதற்கான காரணங்கள் இவையாகத்தான் இருக்கும் என்று, பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இன்றும் சில கிராமப்புறங்களில், கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நம்பிக்கையாக இருக்கிறது. யாகம் செய்தால் மழை பெய்யும் என்று சிலரும், குறிப்பிட்ட ராகத்தை இசைத்தாலே மழை பெய்யும் என்று சிலரும், இன்னும் தீர்க்கமாக நம்புகின்றனர்.
மழை பெய்வதற்கான காரணங்கள் என்று நான் நம்பும் சிலவற்றை வெளியில் சொன்னால், வீட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தன்னலம் கருதி, அவற்றை நான், இப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை.
அலுவலகம் செல்லும்போது, அடையாள அட்டையைப் போலவே, மழைக்கோட்டும் எடுத்துக் கொண்டு போவது பலருக்கும் வாடிக்கை. மழைக்கோட்டு என்பது, மழையில் இருந்து மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்று கருதியிருப்பது, மாபெரும் அறிவீனம்.
இந்த அறிவியல் உண்மை, சட்டை, பேண்ட்டில் சேறுடன் வீட்டுக்குச் சென்று, வாங்கிக் கட்டிக் கொள்ளும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். நாட்டில், மழைக்கோட்டு விற்பனை பன்மடங்கு அதிகரிப்புக்கு காரணமும் இதுவே.
பின்விளைவுகளை கருத்தில் கொண்டும், அதிதீவிர முன்னெச்சரிக்கையாலும், வானத்தை பார்த்து, வானிலை அறிக்கை படித்து, ‘இன்று கட்டாயம் மழை வரும்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மழைக்கோட்டையும் கையோடு கொண்டு செல்வோம் பாருங்கள்; அன்று, நிச்சயம் மழை வராது.
எப்போதாவது ஒரு நாள் மழைக்கோட்டு இல்லாமல் போயிருப்போம்; அன்று பார்த்து, மழை பொத்துக்கொண்டு ஊத்தும். நமக்கும், மழைக்கும் அப்படியொரு பொருத்தம்.
ஆகவே, மழைக்கோட்டு கொண்டு செல்லும்போதெல்லாம், மறக்காமல் வருண பகவானையும் வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்? அப்படி மழைக்கோட்டு கொண்டு சென்று, மழையும் பெய்யும் நாட்களில், நான் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. வீட்டில் கிளம்பும்போது, மழை லேசாக பெய்ய ஆரம்பிக்கும்; நாமும், சந்திர மண்டலத்துக்குப் போகும் விண்வெளி வீரர் கணக்காக, தலை முதல் கால் வரை, மழைக்கோட்டு மாட்டிக் கொண்டு போனால், அரை மைலுக்கு அப்பாலேயே வெயிலாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்படுவோரெல்லாம், ‘என்ன உங்க ஊர்ல, மழை ரொம்ப அதிகமோ’ என்று கவலையோடும் கரிசனத்தோடும் விசாரித்து, மண்டை காய வைப்பர்.
ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கு மகள்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, ‘ரெயின் கோட் எடுத்து வெச்சுருக்கீங்களா’ என்று, கேட்டு வைத்தேன். பள்ளி விடும்போது, மழை பெய்து, அவர்கள் நனைந்து, சளிப்பிடித்து விட்டால், அப்புறம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்குமே?
ஆக, பயங்கர முன்ஜாக்கிரதையாக, நான் அப்படியொரு கேள்வியை கேட்டு வைக்க, அன்றைய சமையலில் ஏதோ ஒரு புதுமையை செய்திருந்த என் மனைவி, ‘நம்மைத்தான் கிண்டல் செய்கிறான் போல’ என்று நினைத்து, சண்டைக்கே வந்து விட்டார். தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம் ஆகி விட்டது. ச்சே… மழை படுத்தும்பாடு!

பின்னூட்டங்கள்
  1. Nagendra Bharathi சொல்கிறார்:

    மழை படுத்தும் பாடு உண்மைதான்

    Like

  2. karanthaijayakumar சொல்கிறார்:

    தங்களை வலைப்பூவில் சந்தித்து வெகுநாட்களாகி விட்டன நண்பரே
    மழையால் ஒரு பதிவு
    மழையினை வாழ்த்துவோம்

    Like

    • வாருங்கள் ஐயா. தாங்கள் சொல்வது உண்மைதான். பல முனைகளிலும் கத்தி வீசும் துர்ப்பாக்கிய நிலையும், அதனால் ஏற்படும் சோர்வும்தான் இணையத்தில் வர முடியாமல் போவதற்கு காரணம். முடிந்தவரை, அவ்வாறு இல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன். நன்றி ஐயா

      Like

  3. எதற்கும் புறப்படும் பொழுது ரமணன் அவர்களுக்கு ஒரு போண் செய்து கேட்டு விடுவது நல்லலது நண்பரே…

    Like

    • வாருங்கள் கில்லர்ஜி சார். புயல் மழை காலத்தில் ரமணன் சொல்வது குத்து மதிப்பாக நடக்கிறது. மற்ற நாட்களில், பெரும்பாலும் நடப்பதில்லையே! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Like

  4. நம்மளால் ஆனது தான் அந்தப் பொருத்தம்…!

    Like

  5. mahalakshmivijayan சொல்கிறார்:

    ஹா ஹா ஹா..

    Liked by 1 person

  6. yarlpavanan சொல்கிறார்:

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக