தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத வார்த்தைப் பிரயோகமாக மாறி விட்டது, ‘டுபாக்கூர்’. ஆள் முதல் பொருள் வரையிலும், இயற்கை, செயற்கை, தன்மை, முன்னிலை, படர்க்கை என அனைத்து சூழ்நிலைகளிலும், பயன்படுத்தும் வகையில் சேர்ந்து விட்ட அற்புதம். அதை மக்கள் மத்தியில் புழங்கச்செய்த பெருமை, கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு ஆகியோரையே சாரும். இத்தகு பெருமை வாய்ந்த டுபாக்கூரில் பல வகை உண்டு. இது தேர்தல் காலம் என்பதால், நாம் அரசியலுடன் இணைந்த டுபாக்கூர்களை பற்றி விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.
ஒரு மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் கட்சி, அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுவது வாடிக்கை. அதன் அண்டை மாநிலங்களில் போட்டியிடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். தங்கள் மாநில மக்கள், பிழைப்புக்காக சென்ற இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தால், அங்கு போட்டியிடுவதைக்கூட சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பிலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும், பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் சார்பிலும் தமிழகத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கினால் என்ன அர்த்தம்? இவர்கள், டுபாக்கூர் வேட்பாளர்கள், போட்டியிடுவதே ஏதோ டுபாக்கூர் வேலை செய்வதற்கு மட்டுமே என்று அர்த்தம்.
இத்தகைய டுபாக்கூர்கள், பெரும்பாலும் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். தாங்கள் ஏழை எளியோரை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முப்பதாண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதாகவும், ஓட்டை பைக்கும், பழைய கறுப்பு வெள்ளை டிவி மட்டுமே சொத்துக்களாக இருப்பதாகவும் பீலா விடுவர்.
முக்கியமான மேட்டரை கடைசியில் எடுத்து விடுவர். ‘எனக்காக பிரசாரம் செய்வதற்காக எங்கள் கட்சி தலைவர் சிபு சோரன் தமிழகம் வரப்போகிறார்’ என்பர். மம்தா பானர்ஜி, அஜீத் சிங் கட்சிக்காரர்களும் அப்படியே அள்ளி விடுவர். முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் செய்தி போடாமல் இருக்க முடியுமா? எப்படியும் எல்லா பேப்பர்களிலும் செய்தி வந்து விடும். அப்புறமென்ன, டுபாக்கூர் வேட்பாளர் காட்டில் மழை தான்.
அவர் தேர்வு செய்திருக்கும் சின்னம், முன்னணி கட்சியின் சின்னம் போலவே இருந்து விட்டால், ஜாக்பாட் அடித்தது போலாகி விடும். வாபஸ் பெற ஒரு தொகை, வாபஸ் பெறாமல் இருக்க ஒரு தொகை, இவற்றில் எது அதிகமோ அதற்கு ஓகே சொல்லி விடுவார், டுபாக்கூர்.
சரி, இப்படி டுபாக்கூர் வேலை செய்வதற்கு, சுயேச்சையாக மனு தாக்கல் செய்வது தானே? ஏன் பிற மாநில கட்சிகளின் பெயரில் நிற்க வேண்டும்? அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்தால், ‘தனி நபர் தானே’ என்று, பிற கட்சிகளின் குண்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவர். வாபஸ் பெறவில்லையெனில் நையப்புடைக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால், இப்படி பிற மாநிலக் கட்சிகளின் பெயரில் நிற்கும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது. ‘கட்சி தலைமைல முடிவு பண்ணீட்டாங்க’ என்று எங்கேயோ இருக்கும் சிபு சோரனையும், மம்தா பானர்ஜியையும் காட்டி பேரம் பேசலாம். ‘நம்ம மேல கைய வெச்சா, ஜார்க்கண்ட் சீப் மினிஸ்டரே போன் பண்ணிப் பேசுவாருல்ல’ என்று, ஏப்பை சாப்பைகளிடம் பீலாவும் விடலாம்.
வாபஸ் பேரம் படியவில்லை என்றாலும், பூத் ஏஜண்ட் போடுதல், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு ஏஜண்ட் போடுதல் ஆகியவற்றுக்கு, பெரிய கட்சிகளுக்கு உதவி புரிந்தும் பணம் பார்க்கலாம்.
எப்படியோ தேர்தல் முடிவதற்குள், ஒரு லம்ப் ஆன தொகையை தேற்றி விடுவர். தேர்தலில் கரை கண்ட டுபாக்கூர்கள், எப்படியும் பணம் சம்பாதிப்பர். தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஏற்படும் அறிமுகத்தை வைத்து, தேர்தலுக்குப் பிறகும் பணம் பார்க்கும் டுபாக்கூர் வேட்பாளர்களும் உண்டு.
தொடரும்…
Posts Tagged ‘politics’
தேர்தலில் சில டுபாக்கூர்கள்
Posted: 27/04/2014 in இதழியல், கவிதை, கருத்து, இதழியல், தேர்தல்குறிச்சொற்கள்:aitc, cheating, dubakkur, jmm, politics, rld, tn election
திருப்பணியை தொடர்கின்றேன்!
Posted: 19/04/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:இதழியல், coimbatore, election, politics, reporter, tamilnadu
வணக்கம், பதிவுலக சொந்தங்களே!
தேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்து, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி!
குறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.
நடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.