Posts Tagged ‘tn election’

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.

தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?

கடந்த பொதுத்தேர்தல் நடந்தபோது, சேலத்தில் வசித்தோம். வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு ஓட்டு கணக்குப்போட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர், ஒரு கட்சியினர். நான் பத்திரிகைக்காரன் என்பதால், என் வீட்டில் கொடுப்பதற்கு அவர்களுக்கு தயக்கம். ‛கொடுத்தால், வாங்கிக் கொள்வார்களா, வாங்கினால், பத்திரிகையில் செய்தி போட்டு விடுவார்களோ’ என்றெல்லாம் கட்சியினருக்கு சந்தேகம்.
அக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ என்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.
‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.
ஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு!

தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத வார்த்தைப் பிரயோகமாக மாறி விட்டது, ‘டுபாக்கூர்’. ஆள் முதல் பொருள் வரையிலும், இயற்கை, செயற்கை, தன்மை, முன்னிலை, படர்க்கை என அனைத்து சூழ்நிலைகளிலும், பயன்படுத்தும் வகையில் சேர்ந்து விட்ட அற்புதம். அதை மக்கள் மத்தியில் புழங்கச்செய்த பெருமை, கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு ஆகியோரையே சாரும். இத்தகு பெருமை வாய்ந்த டுபாக்கூரில் பல வகை உண்டு. இது தேர்தல் காலம் என்பதால், நாம் அரசியலுடன் இணைந்த டுபாக்கூர்களை பற்றி விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.
ஒரு மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் கட்சி, அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுவது வாடிக்கை. அதன் அண்டை மாநிலங்களில் போட்டியிடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். தங்கள் மாநில மக்கள், பிழைப்புக்காக சென்ற இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தால், அங்கு போட்டியிடுவதைக்கூட சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பிலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும், பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் சார்பிலும் தமிழகத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கினால் என்ன அர்த்தம்? இவர்கள், டுபாக்கூர் வேட்பாளர்கள், போட்டியிடுவதே ஏதோ டுபாக்கூர் வேலை செய்வதற்கு மட்டுமே என்று அர்த்தம்.
இத்தகைய டுபாக்கூர்கள், பெரும்பாலும் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். தாங்கள் ஏழை எளியோரை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முப்பதாண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதாகவும், ஓட்டை பைக்கும், பழைய கறுப்பு வெள்ளை டிவி மட்டுமே சொத்துக்களாக இருப்பதாகவும் பீலா விடுவர்.
முக்கியமான மேட்டரை கடைசியில் எடுத்து விடுவர். ‘எனக்காக பிரசாரம் செய்வதற்காக எங்கள் கட்சி தலைவர் சிபு சோரன் தமிழகம் வரப்போகிறார்’ என்பர். மம்தா பானர்ஜி, அஜீத் சிங் கட்சிக்காரர்களும் அப்படியே அள்ளி விடுவர். முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் செய்தி போடாமல் இருக்க முடியுமா? எப்படியும் எல்லா பேப்பர்களிலும் செய்தி வந்து விடும். அப்புறமென்ன, டுபாக்கூர் வேட்பாளர் காட்டில் மழை தான்.
அவர் தேர்வு செய்திருக்கும் சின்னம், முன்னணி கட்சியின் சின்னம் போலவே இருந்து விட்டால், ஜாக்பாட் அடித்தது போலாகி விடும். வாபஸ் பெற ஒரு தொகை, வாபஸ் பெறாமல் இருக்க ஒரு தொகை, இவற்றில் எது அதிகமோ அதற்கு ஓகே சொல்லி விடுவார், டுபாக்கூர்.
சரி, இப்படி டுபாக்கூர் வேலை செய்வதற்கு, சுயேச்சையாக மனு தாக்கல் செய்வது தானே? ஏன் பிற மாநில கட்சிகளின் பெயரில் நிற்க வேண்டும்? அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்தால், ‘தனி நபர் தானே’ என்று, பிற கட்சிகளின் குண்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவர். வாபஸ் பெறவில்லையெனில் நையப்புடைக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால், இப்படி பிற மாநிலக் கட்சிகளின் பெயரில் நிற்கும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது. ‘கட்சி தலைமைல முடிவு பண்ணீட்டாங்க’ என்று எங்கேயோ இருக்கும் சிபு சோரனையும், மம்தா பானர்ஜியையும் காட்டி பேரம் பேசலாம். ‘நம்ம மேல கைய வெச்சா, ஜார்க்கண்ட் சீப் மினிஸ்டரே போன் பண்ணிப் பேசுவாருல்ல’ என்று, ஏப்பை சாப்பைகளிடம் பீலாவும் விடலாம்.
வாபஸ் பேரம் படியவில்லை என்றாலும், பூத் ஏஜண்ட் போடுதல், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு ஏஜண்ட் போடுதல் ஆகியவற்றுக்கு, பெரிய கட்சிகளுக்கு உதவி புரிந்தும் பணம் பார்க்கலாம்.
எப்படியோ தேர்தல் முடிவதற்குள், ஒரு லம்ப் ஆன தொகையை தேற்றி விடுவர். தேர்தலில் கரை கண்ட டுபாக்கூர்கள், எப்படியும் பணம் சம்பாதிப்பர். தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஏற்படும் அறிமுகத்தை வைத்து, தேர்தலுக்குப் பிறகும் பணம் பார்க்கும் டுபாக்கூர் வேட்பாளர்களும் உண்டு.
தொடரும்…

முன் ஜென்ம வினை!

Posted: 19/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , ,

பல தமிழ் சினிமாக்களில் கண்ட காட்சி தான் இது. ஹீரோ, எப்போதோ செய்த தவறுக்காக, திருந்தி நல்லவனாக வாழும் காலத்தில் போலீசாரால் கைது செய்யப்படுவான். செல்வகணபதி விவகாரத்தில் அதுதான் நடந்திருக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்த செல்வகணபதி, கட்சித்தலைமையின் புறக்கணிப்பால் மனம் உடைந்து தி.மு.க.,வில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. கோஷ்டிப்பூசல்களை கடந்து தலைமையிடம் நற்பெயர் பெற்று எம்.பி., பதவியும் பெற்றார். என்ன பயன்? முன் ஜென்ம வினை, பதவியை காலி செய்து விட்டது.

dir=”ltr”><divநாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கருத்துக்கணிப்புகளும் சரமாரியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி பாதிக்கப்பட்ட பலரும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். பலன் பெறுவோர் மகிழ்ச்சியில் திரிகின்றனர். உண்மையில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடப்பது என்ன?

டிவி நிறுவனங்கள் எதுவும் தாங்களாக முன்னின்று கருத்து கணிப்பு நடத்துவதில்லை; நடத்தப்போவதும் இல்லை. அவர்கள், யாரோ ஒரு ஏஜென்சியினரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.
கருத்து கணிப்பு எடுக்கும் ஏஜென்சிகள், எண்ணிக்கையில் மிகக்குறைவு. அவர்களுக்கு தேர்தல் என்பது தீபாவளி பண்டிகையைப்போல. அவர்கள், ஒரே ஒரு டிவிக்கு மட்டும் தங்கள் கணிப்பை விற்பதில்லை. நாட்டில் இருக்கும் அனைத்து டிவிக்கும் சேர்த்தே தங்கள் கணிப்பை விற்கின்றனர். அந்தந்த டிவி நிறுவனங்களின் விருப்பு, வெறுப்பை பொறுத்தே, அவர்களது கணிப்பு இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
இவ்வாறு பெறப்படும் கணிப்புகள், டிவிக்களின் டிஆர்பி தேவையை பொறுத்து, மசாலா தடவி, எண்ணெயில் பொரித்து நேயர்களுக்கு படையல் வைக்கப்படுகின்றன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கணிப்பு எடுக்கும் யாரும் வீடு வீடாக சென்று மக்களிடம் கருத்து கேட்பதில்லை என்பது தான். அலுவலக அறையில் அமர்ந்தபடி, வெவ்வேறு பெயர்களில் படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற எளிதான வசதி இருக்கையில் யாராவது அப்படி அலைவார்களா என்ன? இந்த மோசடியைத்தான், ‛கணித்து விட்டோம்’ என்றும், ‛நாடி பிடித்து பார்த்து விட்டோம்’ என்றும், பீலா விட்டுத்திரிகின்றனர், சில டிவி தொகுப்பாளர்கள்.
பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில், உண்மையாகவே நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் கூட பொய்த்தது உண்டு. ‛தோல்வி அடைவார்’ என்று அனைத்து கணிப்புகளும் கூறிய ஜான் மேஜர் ஆட்சியை பிடித்தபோது கணிப்பாளர்கள் வாய் பொத்திக் கொண்டது வரலாறு. அப்படி இருக்கையில், வாய்க்கு வந்தபடியும், மனதுக்கு தோன்றியபடியும் அடித்து விடப்படும் நமது நாட்டு கருத்து கணிப்புகள், எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
சரி, ஓரிரு மாதங்களில் வேஷம் கலைந்து போகுமெனில், இந்த கணிப்புகள் எல்லாம் எதற்காக?
‛வெற்றி பெறப்போகும் கட்சிக்கு ஓட்டுப் போடலாம்’ என்று ஒரு வீணாய்ப்போன கூட்டம், இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள், தங்கள் முடிவை எடுப்பதற்குத்தான் இந்த கணிப்புகள் பயன்படும். எனவே தான், அரசியல் கட்சிகள், தங்களுக்கு சாதகமான கணிப்புகளை ஆதரிக்கின்றன. பாதகமான கணிப்புகளை திட்டித் தீர்க்கின்றன.
டிவிக்களைப் பொறுத்தவரை, கணிப்புகள் அனைத்தும் இருட்டுக்குள் எறியப்படும் கற்கள் போன்றவை. அதில் காயோ, பழமோ விழுந்தால், ‛நம்ம குறி அப்படி’ என்று பீலா விடலாம். காயும் இல்லை, பழமும் இல்லை என்றாலும், தங்களை சார்ந்திருக்கும் அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு உதவி செய்தது போலிருக்கும். அவர்கள் தயவில், ஏதாவது விளம்பரங்கள் வாங்கி காசு பார்க்கலாம். இது தான், கருத்து கணிப்புகளின் பின்னணி.