Posts Tagged ‘kavithai’

‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’ 

அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.

***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.

 ***

கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?

 ***

தேர்தல் தேவதைக்கு
தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!

தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!

 
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!

கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!  
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?

எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!

தூயவர் யாருமில்லை;
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?

மழை வானில் மின்னல் ஒரு கவிதை!
மடை திறந்த வெள்ளம் ஒரு கவிதை!
மயிலொன்று நின்றாலே கவிதை!
மான் கூட்டம் நடந்தாலும் கவிதை!

புல்வெளியில் பனிப்போர்வை கவிதை!
பனி பொழியும் அதிகாலை கவிதை!
காலைத்துயில் எழுப்பும்
கதிரொளியும் கவிதை!

மண்ணில் மறைந்திருக்கும்
மரக்கூட்டம் கவிதை!
கண்ணில் ஒளிந்திருக்கும்
காதல் ஒரு கவிதை!

நல்ல காதலுக்காய் நாளும் காத்திருத்தல் கவிதை!
சொல்லத்தவித்திருக்கும் காதல் ஒரு கவிதை!
வெல்லமாய் இனித்திருக்கும் வாழ்வும் ஒரு கவிதை!
செல்லமாய் வந்து போகும் ஊடல் ஒரு கவிதை!
இரவு நிலவொளியில் உண்மை உரைத்திருத்தல் கவிதை!
உறவுக்கொட்டடியில் உண்டு களித்திருத்தல் கவிதை!

கூவும் குயிலோசை கவிதை!
கோவில் மணியோசை கவிதை!
காலைப்பனிப்பொழிவில் காலாற நடந்தபடி
கற்பனையில் மிதப்பதுவும் கவிதை!

கள்ளச்சிரிப்புடன்
பிள்ளை அடிப்பது கவிதை!
கண்களில் பாசம்; கருத்தினில் நேசம்
அன்னை அணைப்பதுவும் கவிதை!

பூச்சூடும் மழலை ஒரு கவிதை!
பொக்கை வாய் திறந்த சிரிப்பதுவும் கவிதை!
பூப்பூத்த மரமும் ஒரு கவிதை!
மணம் இல்லாப்பூவும் தான் கவிதை!

தனிமை ஒரு கவிதை!
தாயன்பும் கவிதை!
அழியாத நினைவுகளும் கவிதை!
அழுதழுத பிரிவுகளும் கவிதை!

மாலையும் கவிதை!
காலையும் கவிதை!
கண்ணில் காண்பதுவும் கவிதை!
காதில் கேட்பதுவும் கவிதை!

கை வலிக்க எழுதுவதா கவிதை?
கற்பனைக்கும் எட்டாத சித்திரத்தை
கண் கொண்டு எழுதுவதே கவிதை!

அடைமழையாய் பொழிந்தது மோனை!
அணை கடந்த வெள்ளமென எதுகை!
அடடா, எனக்கும் தான் வந்து விட்டதோ கவிதை!
அடைந்து விட்டேன் நானும், ஆனந்தம், பேருவகை!