செப்ரெம்பர், 2014 க்கான தொகுப்பு

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து, அவர் துரத்தி விடப்பட்ட நிலையில், ‛சின்ன எம்.ஜி.ஆர்.,’ என்று அடைமொழி போட்டுக்கொண்டு, ஊர் ஊராய் கூட்டம் நடத்தியும், கோவில் கோவிலாய் பால்குடம் எடுத்தும், அலப்பறை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
‛கொல்லிமலையில், ரகசிய இடத்தில் சுதாகரன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று, எங்கள் தலைமை அலுவலகத்தில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டு விட்டார். விளைவு, அன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் எனக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. ‛உடனே போட்டோகிராபருடன் கொல்லிமலைக்கு கிளம்புங்கள், சுதாகரன் யாகம் பற்றி சிறப்புச் செய்தி தர வேண்டும்’ என்று உத்தரவு.
நாங்கள் இருவருமே, கொல்லிமலைக்கு சென்றதில்லை. ‛எப்படியாவது விசாரித்து பாேய்விடலாம்’ என்றால், நாங்கள் தங்கியிருந்த நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு நினைத்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. எங்களிடம் இருப்பதோ ஓட்டை உடைசலான டூவீலர்கள். உள்ளூர் டிவி நிருபர் ஒருவரிடம், ஏதோ ஒரு இடத்துக்குப் போவதாக சொல்லி, பைக் வாங்கி வந்தார் போட்டோகிராபர்.
இருவரும் புறப்பட்டோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. கொல்லிமலை என்பது, ஒரே ஊர் அல்ல; அதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருப்பதும், ஆங்காங்கே வனத்துக்குள் வீடுகள், பங்களாக்கள், கோவில்கள் இருப்பதும். எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‛எங்காவது, கோவிலில் யாகம் நடக்கிறதா’ என்று மொட்டையாக, வழியில் தென்படுவோரிடம் விசாரித்தோம். யாருக்கும் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
‛எட்டுக்கை காளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே சென்று விசாரியுங்கள்’ என்றார், ஒருவர். சரியென்று, அவர் காட்டிய வழியில் புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் சாமி சிலைகள். எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான சிகப்புத்துணி, குங்குமப்பொட்டு. ஆங்காங்கே வேலாயுதம், சூலாயுதம், அவற்றில் எலுமிச்சம் பழம் குத்தி, குங்குமம் வேறு தடவி விட்டிருந்தனர்.
பார்க்கும்போதே, அடி வயிற்றில் கிலி பரவுவது போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. எல்லாம், மரம், செடி, கொடிகளாகவே இருந்தன. ஆனால், விட்டலாச்சார்யா படம்போல, மூலைக்கு மூலை, வேல் கம்பும், ஏதோ ஒரு சிலையும், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமும். எனக்கு திரும்பிப் போய் விடலாம் போல் இருந்தது. தொண்டையும் வறண்டு விட்டது.
தேடிக் கொண்டே சென்றபோது, ஆற்றங்கரையில் ஒரு கோவில் இருந்தது. அங்கே ஐந்தாறு பேர் இருந்தனர். எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்திக் கொண்டனர். என்ன ஏதென்று விசாரணை வேறு. கேமரா பையை பார்த்து, அவர்களுக்கு பலத்த சந்தேகம். நாங்கள், ஏதோ ஒரு ஆள் பேரைச்சொல்லி, ‛அவர் வந்தாரா, அவர் தான் எங்களை வரச்சொன்னார்’ என்றோம்.
‛அப்படி யாரும் இல்லை’ என்றனர். ‛இங்கு ஏதும் விஷேசமா’ என்று கேட்டதற்கு, ‛இல்லையே’ என்றனர்.
கூலியாட்கள் போல் இருந்தது, அவர்கள் தாேற்றம். சுதாகரன் கோஷ்டியினர் போல் யாரும் தெரியவில்லை. அப்புறமாய் தைரியம் வந்து, ‛இந்த கோவிலில் ஏதாவது யாகம் நடக்கிறதா’ என்று கேட்டோம். ‛இன்று இல்லை, ஒரு வாரத்துக்கு முன் யாரோ நடத்தியதாக பேசிக்கொண்டார்கள், எங்களுக்கு தெரியாது’ என்றனர்.
ஒரு வழியாக, அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பி வரும் வழியிலும் ஆங்காங்கே விசாரணை. போலீசில் கேட்டும், உருப்படியான தகவல் எதுவும் இல்லை. கடைசிவரை, சுதாகரன் யாகம் நடத்தினாரா, இல்லையா என்பதை உறுதி செய்வார் யாருமில்லை. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னபோது, ‛சரி, விட்டுத் தொலையுங்கள் என்று கூறி விட்டனர். சுதாகரன் பற்றிய வழக்கு செய்திகள் கண்ணில் படும்போதெல்லாம், கொல்லிமலைக்கு தேடிக் கொண்டு சென்றது நினைவுக்கு வரும். அப்படி வந்ததுதான், இந்தப்பதிவு.

கிராமங்களில், ஓடியாடித்திரியும் நாய்க்கூட்டம், நகரத்து வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு, வீதியை வேடிக்கை பார்த்துக் குரைக்கும் பரிதாபம் உருவாகி விட்டது. நகரத்து வாழ்க்கையில், நாய்களுக்கான வசிப்பிடம் மிகவும் சுருங்கிப்போய்விட்டதைத் தான், மொட்டை மாடியில் உலாவும் நாய்கள், நமக்கு உணர்த்துகின்றன.
நகரமும், கிராமமும் அல்லாத எங்கள் ஊரிலேயே நாய்களை பராமரிப்பது சிரமம் என்கிற நிலையில், நகரத்து வீடுகளில், நாய்களை வைத்திருப்போர் நிலையெல்லாம் பெரும் திண்டாட்டம்தான்.
சரி, அதை விடுங்கள். எங்கள் வீட்டில் ‛சீனு’வை வளர்க்க ஆரம்பித்தபிறகு, எனக்கு வந்து சேர்ந்திருக்கும் வேலைப்பளு இருக்கிறதே, சொல்லி மாளாது. நாய்க்கு ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் அழைத்துச் செல்வது, குளிக்க வைப்பது எல்லாம் என் பொறுப்பில் சேர்ந்து விட்டது.
நாய்க்குட்டிக்கான சோப்பு விலை 60 ரூபாய். 30 ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்து, எனக்கோ, குடும்பத்துக்கோ, நான் சோப்பு வாங்கியதாக வரலாறே இல்லை என்பது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.
நாய்களுக்கான பொருட்கள் விற்கின்ற கடை, அலுவலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது. அங்கே ஒரு பெண் இருந்தார். விற்பனையாளரும், உரிமையாளரும் அவர்தான் போலிருக்கிறது. ‘நாய் பெல்ட் வேண்டும்’ என்றேன். ‘என்ன வகை நாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் தயங்கித்தயங்கி, ‛நாட்டு நாய் தாங்க’ என்று தமிழில் கூறினேன். ‘கன்ட்ரி டாக். இட்ஸ் ஓகே’ என்றவர், பெல்ட் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்தடுத்த கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார். அதற்குப்பிறகு, எனக்கு சந்தேகமே வரவில்லை. கைஜாடையில் பாதியும், பட்லர் ஆங்கிலத்தில் பாதியுமாக பேசி, பெல்ட்டை வாங்கி வந்து விட்டேன். அதே பெண், வேறு ஒருவருடன் தமிழில் சரளமாக பேசிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தபோது, எனக்கு வந்த ஆத்திரம் இருக்கிறதே…! எல்லாம் எங்கள் வீட்டு நாய்க்காக பொறுத்துக் கொண்டேன்.
இப்படியாக வளர்ந்த நாய்க்குட்டிக்கு, சில வாரங்களுக்கு முன் உடல் நலம் குறைந்து விட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கு என ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து இரு வாரங்கள் எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது.
டாக்டர், கம்பவுண்டர், டாக்டர் என மூன்று வெவ்வேறு குழுவினர், நாய்க்கு ஊசி போடுகிறேன் பேர்வழி என ஆயிரம் ரூபாயை அடித்துக்கொண்டு போனதுதான் கண்ட பலன். நாய்க்குட்டியின் வயிற்றுப்போக்கு என்னவோ சரியாகவில்லை. அய்யாவுக்கு, பெரும் கவலை. அவருக்கு இருக்கும் உடல் பாதிப்புகள் குறித்துக்கூட, அவர் அவ்வளவு கவலைப்பட்டு நான் கண்டதில்லை.
நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் இரண்டு பேர் வேண்டும். ஒருவர் மட்டும் சென்றால், அந்த கம்பவுண்டரும், டாக்டரும், நாயை விட பயங்கரமாக குரைக்கின்றனர். ஆகவே, மூன்று பேர் அல்லது நான்கு பேராக செல்ல ஆரம்பித்தோம்.
என் மனைவி, கையில் சாட்டையுடன் எதிரில் நின்று மிரட்டினால்தான், நாய் அமைதியாக இருக்கும். மூத்த மகள் இருந்தால், வாயை மாஸ்க் போட்டு, கட்டி விடுவாள். நானும், இளைய மகளும், ஒப்புக்கு நின்று கொண்டிருப்போம். எங்களைப் போலவே, நாயும் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும். டாக்டரும், கம்பவுண்டரும் வந்து, ஊசி போடுவார்கள். அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஊசி, மருந்துகள் அல்ல.
இப்படியே 15 நாட்கள் ஓடி விட்டன. நாய்க்குட்டி, தண்ணீரை குடித்துக் கொண்டே, சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தது. ஊரெங்கும், அந்த நாய்க்கு வயிற்றுப் போக்கு, இந்த நாய் செய்துப் போய் விட்டது என்று பீதி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. அய்யாவுக்கு கவலை அதிகமாகி விட்டது.
நாயை உள்நோயாளியாக அட்மிட் செய்து, குளுக்கோஸ் ஏற்றி குணப்படுத்தும் அளவுக்கெல்லாம், எங்கள் ஊர் கால்நடை மருத்துவமனை டாக்டர்களுக்கு ஞானம் போதாது. வேறு வழி? மாரியம்மன் கோவிலுக்கு போன ,அய்யா, நாய்க்கு குணம் ஆனால், நாய் உருவம் செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். கோவிலில் இருந்து திருநீறு, தீர்த்தம் கொண்டு வந்து வேறு போட்டு, அம்மன் மேல் பாரத்தைப்போட்டார். அதன்பிறகுதான், சீனு சாப்பிட ஆரம்பித்தான். குரலிலும் பழைய கம்பீரம் வந்து விட்டது.
அன்று இரவே, நான் வாங்கி டேபிள் மேல் வைத்திருந்த நாய் மருந்து, சிரிஞ்ச் எல்லாம் கடித்துக்குதறி நாசம் செய்து விட்டான். டேபிளில் இருந்த என்னுடைய குல்லா ஒன்றையும் நார் நாராக கிழித்து வைத்திருக்கிறான்.
நான் கொடைக்கானலில் இருந்து ஆசையாக வாங்கி வந்த குல்லாவை நாய் விழுங்கி விட்டது என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எல்லோரும், நாய் பழைய நிலைக்கு வந்து விட்டது என்றே மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முன்பொரு முறை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன், ‘நாய் வாயைக் கட்டுங்கள்’ என்றார், கம்பவுண்டர். ஏதோ ஒரு ராமராஜன் –கவுண்டமணி நடித்த படத்தில், நாய் வாயைக்கட்டுவார்கள் என்பது நினைவுக்கு வந்தது. இது அப்படியில்லை. ஊசி போடுபவர் மீது, நாய் பாய்ந்து விடக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாம்.
சணல் கயிறை கொடுத்து கட்டச்சொன்னார்கள். எப்படிக்கட்டுவது? எனக்குத் தெரியவில்லை. மனைவிக்கும் தெரியவில்லை. மகள்களுக்கும் தெரியவில்லை. கம்பவுண்டர் பொறுமை இழந்து, கயிறில் சுருக்கு முடி போட்டுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தபடி, ஒரு வழியாக, நாய் வாயைக்கட்டினோம்.
அப்படியும், நான்கு பேரும் ஆளுக்கு ஒரு காலாக பிடித்துக் கொண்டு, கெஞ்சியும், மிரட்டியும், நாயை அசையாமல் பார்த்துக் கொண்டோம். கம்பவுண்டர், நாய் பின்புறமாக நின்று கொண்டு, நாய்க்கு ஊசி போட்டார். அப்போதுகூட, அவரது கை, நாய் மீது படவில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம். ஊசி போட்டு கிளம்பும்போது, கம்பவுண்டர் சொல்லி விட்டார்.
‘கடைகளில், நாய் மாஸ்க் விற்கிறது. வாங்கி வந்து விட்டால், கயிறில் வாயைக்கட்டும் அவசியம் இருக்காது’ என்றார். மாஸ்க், அதுதான் முகமூடி, 60 ரூபாய். வாங்கியாகி விட்டது. அது மிகவும் பயனுள்ள மாஸ்க். போட்டு விட்டால், வாயை திறக்கவே முடியாது. அப்புறம் எங்கேபோய் கடிப்பது? மாஸ்க் கண்ணில் படும்போதெல்லாம், வாய் நீளம்
கொ ண்ட மனிதர்கள் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றே எனக்குத்தோன்றும்.

ஆர்.டி.ஓ., ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீஸ் என்பார்களே, வட்டார போக்குவரத்து அலுவலகம்… அங்கே சென்றிருந்தேன். வேறெதற்கு? லைசென்ஸ் எடுப்பதற்குத்தான்! ‘இத்தனை நாளாக லைசென்ஸ் எடுக்கவில்லையா’ என்றெல்லாம், ‘இந்தியன்’ படத்தில் வரும் செந்தில் கேரக்டர் போல் கேள்வி கேட்கக்கூடாது. எடுக்கவில்லை. அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள். ‘சரி, இப்போது எடுப்பது ஏன்’ என்று கேட்கிறீர்களா? அதற்கும் காரணம் இருக்கிறது. அதெல்லாம், வெளியில் சொல்ல முடியாது.
விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொரு முறையும் எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுநர் உரிமம் எடுக்கும்போதெல்லாம், என் கெட்ட நேரம் அதிகமாகி, வேலைப்பளுவோ, வேறு ஏதாவது கிரக தோஷமோ வந்து விடும்; அப்படியே எல்.எல்.ஆர்., உரிமமும் காலாவதியாகி விடும். இப்படியே 18 ஆண்டு இடைவெளியில், மூன்று எல்.எல்.ஆர்.,களை தொலைத்தாகி விட்டது.
நான்காவாது முறையாக எல்.எல்.ஆர்., எடுத்தபோதே, ‘இந்தமுறை எப்படியாவது லைசென்ஸ் எடுத்தே தீர வேண்டும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். தினமும் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம், இந்த வாரத்துக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்று மனதுக்குள் தோன்றும்.
இப்படியே நாட்கள் ஓடின. வாரங்கள் நகர்ந்தன. மாதங்களும் ஒவ்வொன்றாய் போய்க் கொண்டே இருந்தன. நான்காவது எல்.எல்.ஆர்., காலாவதி ஆவதற்கு கொஞ்சம் நாட்கள் இருக்கும்போது, பீதி பற்றிக் கொண்டது.
சரி, இனியும் தாமதித்தால், இந்த எல்.எல்.ஆரும்., காலாவதியாகிவிடும் என்றெண்ணி, ஒரு நாள், வண்டியுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை அணுகி, என்னென்ன ஆவணங்கள் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.
‘எல்லாம் எடுத்துக் கொண்டு, ஓரிரு நாட்களில் வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு வந்தேன். அப்படியும் ஒரு வாரம் வீட்டை விட்டும், ஆபீசை விட்டும் நகர முடியவில்லை. கடைசியில், சந்தேகத்தில் எல்.எல்.ஆர்., உரிமத்தை எடுத்துப்பார்த்தபோது, காலாவதியாவதற்கு ஒரு நாள் மட்டுமே இருப்பது தெரிந்தது. அய்யகோ! என்ன ஒரு நெருக்கடி?
பதறியடித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்து, புறப்பட்டேன், கோவை புதுாருக்கு. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் அது. பணியில் இருந்த ஊழியர், எனது எல்.எல்.ஆர்., படிவத்தை வாங்கிப்பார்த்தார்.
‘எடுத்து ஆறு மாசம் ஆச்சு போலருக்குதே’ என்றவர், ‘சார், இன்னிக்குத்தான் கடைசி நாளு. என் லைப்லயே கடைசி நாள்ல வந்து லைசென்ஸ்க்கு அப்ளை பண்ணுற மொத ஆளு நீங்கதான்’ என்றார். எனக்கு பெருமிதம் தாங்கவில்லை. ‘இதைத்தானே எதிர்பார்த்தேன்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்.
‘சரி, பணம் கட்டீட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்தார்.
வரிசையில் காத்திருந்தபோது, அருகேயிருந்த ஒருவர் குசலம் விசாரித்தார்.
‘‘என்ன சார், ஆயிரம் ரூபா நோட்டா’’
‘‘ஆமா’’
‘‘இங்க இங்க ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா நோட்டெல்லாம் செல்லாது, தெரியாதா’’
‘‘எனக்குத் தெரியாதே’’
‘‘தெரிஞ்சு வெச்சுருக்கணும் சார். அங்க பாருங்க’’
அவர் கைகாட்டிய திசையில் பார்த்தால், ‘கள்ள நோட்டு கண்டறிவது எப்படி’ என்று பத்திரிகையில் வந்த செய்தியை, ‘ஜெராக்ஸ்’ செய்து ஒட்டியிருந்தனர்.
‘‘ஆயிரம், ஐநுாறுல நெறய கள்ளநோட்டு வாரதால, அதயெல்லாம் வாங்க மாட்டோம்னு சொல்வாங்க. சில்லரை வெச்சுக்குறது நல்லது’’
‘‘கள்ள நோட்டுன்னு சந்தேகம் இருந்தா, செக் பண்ணி வாங்கட்டும். அதுக்கு, ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா வாங்க மாட்டாங்கன்னா எப்புடி’’
‘‘அது அப்புடித்தான். ரொம்ப சந்தேகம்னா, கவுன்ட்டர்ல கேட்டுப்பாருங்க’’
நாமென்ன அந்தளவுக்கு விவரம் இல்லாதவர்களா என்ன? உடனடியாக, பக்கத்தில் இருந்த கடையில், சில்லரை மாற்றிக்கொண்டு வந்து, மீண்டும் வரிசையில் நின்று கொண்டேன்.
லைசென்ஸ் எடுக்க 350 ரூபாய் கட்டணம். செலுத்த வரும் ஒவ்வொருவரிடமும் 350 ரூபாய் சரியாக சில்லரை இருந்தால் மட்டுமே படிவத்தை வாங்கினார், கவுன்ட்டரில் இருந்த ஆசாமி. யாராவது, தப்பித்தவறி, 400 ரூபாய் கொடுத்தால்கூட, திருப்பி அனுப்பினார். கூடவே தாறுமாறாக திட்டவும் செய்தார். அவரது உருட்டல் மிரட்டலுக்கு பயந்தே, அனைவரும் சில்லரை வாங்கிக் கொண்டு வந்தனர். நான் பார்த்தவரை, அவர் யாருக்கும் சில்லரை கொடுக்கவே இல்லை.
சரி, அவரையும் கடந்தாகி விட்டது. அடுத்தது, வேறு ஒரு கவுன்ட்டர். அங்கேயிருந்தபோது, மொபைல்போன் அழைப்பு. ஒரு அரசு அதிகாரி கூப்பிட்டார். லைசென்ஸ் எடுக்க காத்திருப்பதாக கூறியதும், கெக்கேபிக்கேவெனச் சிரித்தார்.
‘‘சார், நெஜமாத்தான் சொல்றீங்களா’’
‘‘ஆமா சார், இப்பத்தான் வந்துருக்கேன்’’
‘‘சரி சார். அப்ப நேரா, ஆர்டிஓவை போய் பாருங்க, வேணும்னா போன் பண்ணிச்சொல்றேன்’’
‘‘விடுங்க சார், ஆர்.டி.ஓ.,வைப்போய் பாக்குறது சரியாக இருக்காது. வரிசைல நின்னே வாங்கிடறனே’’
இப்படி நான் பேசிக் கொண்டிருந்ததும், அங்கிருந்த பெண் ஊழியருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‘‘அலோ யாரு நீங்க. மொதல்ல வெளிய போங்க… என்ன ஆர்.டி.ஓ., ஆர்.டி.ஓ.,னு போன்ல பேச்சு?’’
அதற்குமேல், மரியாதையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உடனடியாக போன் அழைப்பை துண்டித்துக் கொண்டு, வரிசையில் அமைதியாக நின்று கொண்டேன்.
அங்கிருந்த ஊழியர் கேட்டார்.
‘‘யாரு உங்களுக்கு பார்ம் பில்லப் பண்ணாங்க’’
‘‘ஏன் ஏதாச்சும் தப்பாருக்குதா’’
‘‘இல்ல சரியாருக்குது. அதான் யாருன்னு கேக்குறேன்’’
‘‘எங்க ஆபீஸ்ல பில்லப் பண்ணிக் கொடுத்தாங்க’’
‘‘எந்த ஆபீஸ்’’
‘‘சுந்தராபுரம் ஆபீஸ்’’
‘‘என்ன வேலை பாக்குறீங்க’’
‘‘ஆபீஸ் ஸ்டாப்’’
‛‛அதாங்க, என்ன வேலை’’
‛‛எழுதுற வேலை’’
அதற்குமேல், அவர் கேள்வி கேட்கவில்லை. முகம் மட்டும், இஞ்சி தின்ற குரங்கு போலாகி விட்டது, பாவம்! இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை பெண் ஊழியர், என்னை முன்பே எச்சரிக்கை செய்திருந்தது, எத்தகைய தீர்க்க தரிசனம் என்பது அப்போதுதான் புரிந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று முட்டுக்கட்டைகளை கடந்து வாங்கிய எனது டிரைவிங் லைசென்ஸை, பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் பெருமிதம் இருக்கிறதே! அப்பப்பா…அதெல்லாம் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் புரியும், மக்களே!

சிறுவனாக இருக்கும்போது, யாராவது நாயை அழைத்துக் கொண்டு ‘வாக்கிங்’ போவதைப்பார்த்தால், சிரிப்பாக இருக்கும். ‘வீட்டில் வேலை எதுவுமின்றி, நாய் மேய்க்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்வேன். ‘ஊரார் உறவுகள் மத்தியில் பெருமை பேசவும், பந்தா காண்பிக்கவும் நாய் மேய்க்கின்றனர்’ என்பதே, அவர்களைப்பற்றிய என் எண்ணமாக இருந்தது. அப்படி நினைப்பதற்கு காரணங்கள் இருந்தன. எங்கள் வீட்டிலும் நாய் வளர்த்தோம். ஆனாலும், நாங்கள் ஒரு நாளும், வீதி வீதியாக நாயை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றதில்லை.
ஆகவே, நாயை பிடித்துக் கொண்டு செல்பவர்கள் எல்லாம், பந்தா பேர்வழிகள் என்பதாகவே, என் மனதில் வெகு காலமாய் பதிந்து விட்டது. சரி, தலைவலியும், பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே, அப்படியொரு பிரச்னை எனக்கும் வந்தது.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ‘டாமி’யை கருணைக்கொலை செய்தபின், ‘நாயெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று, வீட்டுச் செயற்குழு தீர்மானம் நிறைவேறியிருந்தது.
ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகள், தன் பள்ளித்தோழி வீட்டில் இருந்து, நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டாள். பொதுக்குழு தலைவர் என்ற முறையில், நாயெல்லாம் வேண்டாம் என்று, என் கருத்தை தெரிவித்தேன். அய்யாவும் அப்படியே சொன்னார். அம்மா மட்டும், பேத்திகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அம்மா வரட்டும் என்றனர், மகள்கள் இருவரும். அம்மாவின் அதிகாரம் அறிந்த பிள்ளைகள்.
‘நாய் வீட்டில் அசுத்தம் செய்யும், நம் வீடென்றால் சுத்தம் செய்து விடலாம். பக்கத்து வீட்டின் முன் செய்துவிட்டால், அவர்கள் சண்டைக்கு வருவர்’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். ‘அம்மா வந்தவுடன் காட்டிவிட்டு, அப்புறம் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றனர், மகள்கள் இருவரும்.
அம்மா வந்தார். நாய்க்குட்டியை பார்த்தவுடன், ‘சீனு’ என்று பெயர் சூட்டி விட்டார். ஆக, வழக்கு, வாதம், எதிர்வாதம், தீர்ப்பு என எதற்குமே இடமில்லாத வகையில், அன்றே நாய்க்குட்டி வீட்டில் குடியேறி விட்டது. சொன்னபடியே, சில நாட்கள் நாய்க்குட்டியை பார்த்துப் பார்த்து பராமரித்த அக்காவும், தங்கையும், அதன்பிறகு எங்கள் பக்கம் தள்ளி விட்டனர்.
என்னைப்போலவே, முதலில் நாய்க்குட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்த அய்யாவும், நாளடைவில் சமாதானம் ஆகி விட்டார். அதன் உணவு, பராமரிப்பு எல்லாம் அவர் சார்ந்த துறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. உடன் விளையாடுவது மட்டுமே, பேத்திகள் வேலையாக இருந்தது.
நாய்க்குட்டி ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால்கூட, அய்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நாய்க்குட்டி சோறே திங்கவில்லை’ என்று, வழியில் செல்வோர், வருவோரிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார். இரவுப்பணி முடிந்து, 2 மணிக்கு வீட்டுக்குப்போனால், விழித்திருந்து, ‘நாய்க்குட்டி சாப்பிடவே இல்லை. ஊசி போடறவுனை வரச்சொல்லப்பா’ என்பார்.
இப்படியாக, நாய்க்குட்டி வளர ஆரம்பித்தது. அதை குறித்த நேரத்துக்கு வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். அக்காவும், தங்கையும், சில நாட்கள் அழைத்துச் சென்றனர்.
அக்கா வளர்ந்த பெண் என்பதால், நாய் இழுத்தாலும் பிடித்துக் கொள்வாள். தங்கை அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், உள்ளுக்குள் பயமாக இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்கள் மீது இழுத்துச் சென்று தள்ளி விடுமே என்பதுதான் பயத்துக்கு காரணம்.
ஆதலால், இப்போதெல்லாம், தினமும் நான்கு வேளைக்கு குறையாமல், நாயை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை, நம்மிடம் வந்து சேர்ந்து விட்டது. நாம் இல்லையென்றால், வீட்டம்மா அழைத்துச் செல்ல வேண்டும். நம்மை நாயுடன் தெருவில் பார்க்கும் பல பேர் விசாரித்து விட்டார்கள். என்ன நாய் மேய்க்கிறாப்புலயா என்று. நமக்குத்தெரியாதா, கேள்வியின் நோக்கம் என்னவென்று?

ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்கினால், தொலைக்காட்சியில் காட்டுகின்றனர், பத்திரிகையில் செய்தி வெளியிடுகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். கால்நடைத்துறையினரும் பரபரக்கின்றனர்.
வன விலங்குகளுக்கு நோய் தாக்கினாலோ, யாரேனும் அடித்துக் கொன்று விட்டாலோ கூட, அப்படித்தான் உலகமே பதைபதைக்கிறது.
ஆனால், நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அப்படியொன்றும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்வதில்லை. பாசத்துடன் நாய் வளர்ப்பவர்களை தவிர, வேறு யாரும் நாய்களுக்கு வரும் நோயைப் பற்றியெல்லாம் கவலைப்படவே தயாரில்லை.
எங்கள் வீட்டில் கடந்த இரு வாரங்களாக நாய்க்குட்டிக்கு உடல்நலம் கெட்டு விட்டது. மூன்று வெவ்வேறு டாக்டர்கள், கம்பவுண்டர்களிடம் காட்டி, ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்து, எதுவும் கேட்கவில்லை. கடைசியில், மாரியம்மன், தீர்த்தம், திருநீறு தான், நாய்க்குட்டியை காப்பாற்றியது.
அய்யா வேண்டிக் கொண்டபடி, மாரியம்மனுக்கு நாய் பொம்மை செய்து வைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். எங்கள் வீடு மட்டுமில்லை. ஊரில் பல இடங்களில் நாய்கள் நோய்வாய்ப்பட்டு விட்டன. எல்லாம் வயிற்றுப்போக்கு, வாந்தி தான். கவனிப்பில்லாத நாய்கள் செத்துப்போனதும் நடந்திருக்கிறது.
விசாரித்தால், இங்கு மட்டுமில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் இப்போது ஏதோ ஒரு வகை நோய் பரவுவதாக கூறுகின்றனர். ஆனாலும், கால்நடைத்துறையினர் யாரும், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, ஆடு, மாடு, எருமை இறந்துபோனால், பிரச்னை. விவசாயிகள் போர்க்கொடி உயர்த்துவர், சட்டசபையில், பார்லிமெண்டில் கூட பேசுவர், கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டியிருக்கும். கால்நடைகள், நாட்டின் வளம் என்பர். நாய்களுக்கு அப்படியில்லை தானே?.
ஒரு வகையில், கால்நடைகளுக்கு இருக்கும் பொருளாதார முக்கியத்துவம் நாய்களுக்கு இல்லை என்பதும் உண்மையே. ஆனால், நாய்களால் தான், குடும்பத்தினரின் பொருளாதாரம் காப்பாற்றப்படுகிறது என்பதை, பாதிக்கப்படும் வரை, யாரும் ஒப்புக் கொள்வதே இல்லை.
நாய் இல்லாத வீடுகள், எந்தவித பாதுகாப்பும் இல்லாத வீடுகள். அங்கு திருடர்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட முடியும். நாய் இருக்கும் வீடுகளில் அப்படி நுழைந்து விட முடியுமா? அப்படியெனில், வீட்டின் செல்வத்தை காக்கும் நாய்களும் இந்த நாட்டின் செல்வம் தானே? ஆக, நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அது நாட்டுப்பிரச்னை என்றல்லவா ஆகிறது?
நாய்கள் இல்லாத உலகத்தை எண்ணிப்பாருங்கள்… முடியுமா என்ன? அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்? எந்த வீட்டிலும், பணம், பொருள் பாதுகாப்பாக இருக்க முடியாது. கொள்ளையர் கொட்டம் அதிகரித்து விடும். ஆகவே மக்களே, நாய் நன்றியுள்ள விலங்கு என்று பாடப்புத்தகங்களில் எழுதி, பள்ளிக்குழந்தைகள் சொல்லிக்கிழித்ததெல்லாம் போதும்; நாய்க்கு நோயென்றால், நடவடிக்கை உடனே எடுங்கள். அது, நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.