வளைந்த முதுகெலும்பும், வாடிய வியாபாரிகளும்!

Posted: 08/10/2014 in அரசியல், நகைச்சுவை, நையாண்டி
குறிச்சொற்கள்:, , ,

எமலோகத்தின் வாயிலில் ஏதோ சத்தம். உரத்த குரலில், ஒருவரை ஒருவர் வசைபாடுவது, லோகவாசிகள் எல்லோருக்கும் கேட்டது. மதிய உணவுக்குப்பின் குட்டித்துாக்கம் போட்டுக் கொண்டிருந்த எமதர்ம ராஜாவுக்கு, நித்திரை கலைந்து விட்டது. வந்தது கடுங்கோபம். ‘யாரங்கே’ என்றார். பதிலில்லை. வாயிற்காவலர்கள் எல்லோரும் வெளியே, பிரச்னையை டீல் செய்யப் போய் விட்டனர். மீண்டும் மீண்டும், ‘யாரங்கே’ போட்டும் பதில் இல்லாமல் போகவே, எமதர்மர், ஆசனத்தில் இருந்து இறங்கி, வாயிற்கதவை நோக்கி நடந்தார்.
அங்கே, சித்திர குப்தரை சுற்றி ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்றபடி கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை தடுக்கவும், சித்திரகுப்தரை காப்பாற்றவும், வாயிற்காவலர்கள், படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர்.
‘என்ன இங்கே சத்தம்’ என்றார், எமதர்ம ராஜா.
கோஷம் போட்டவர்கள் எல்லோரும், எமதர்மரை நோக்கி ஓடி வந்தனர்.
சித்திர குப்தர் முந்திக் கொண்டார்.
”பிரபு. இவர்கள் அனைவரும் முதுகெலும்பு வியாபாரிகள் சங்கத்தினர் பிரபு. உங்களை சந்தித்து ஏதோ புகார் தெரிவிக்க வந்தனர். நான், முதலில் பிரம்ம தேவர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும்படி வழிகாட்டினேன். அதை ஏற்க மறுத்து தகராறு செய்கின்றனர் பிரபு”
”என்ன முதுகெலும்பு வியாபாரிகளா?”
”ஆம் பிரபு”
”அவர்களுக்கு என்ன பிரச்னை? அதான் போதும் போதும் என்கிற அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பு சப்ளை செய்கிறோமே!”
கோஷம் போட்டவர்களில் ஒருவர் முன்வந்தார்.
”வணங்குகிறேன் மகாபிரபு, நான் தான் எங்கள் சங்கத்தின் தலைவர் பிரபு. தாங்கள் வழங்கும் முதுகெலும்புகளால்தான் எங்கள் குடும்பத்தினர் வயிறு வளர்க்கின்றனர், பிரபு. அதற்கு நாங்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம் பிரபு. சமீபகாலமாக எங்கள் சங்க அங்கத்தினர் சந்திக்கும் பிரச்னைகளை தங்களை சந்தித்து முறையிட வந்தோம் பிரபு. ஆனால், சித்திரகுப்தர் அனுமதி தர மறுக்கிறார் பிரபு”
”சரி, அதுதான் சந்தித்து விட்டீர்களே! விஷயத்துக்கு வாருங்கள். என்ன உங்கள் பிரச்னை?”
”பிரபு. நாங்கள் தங்களிடம் முதுகெலும்புகளை டெண்டர் முறைப்படி மொத்தமாக கொள்முதல் செய்து, பிரம்ம தேவரிடம் பீஸ் ரேட் அடிப்படையில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம் பிரபு. ஆனால், சமீப காலமாக எங்களுக்கு பெரும் பிரச்னை பிரபு”
”என்னய்யா உங்கள் பிரச்னை? சொல்லித்தொலையும்”
எமதர்மருக்கு கோபம் வந்து விட்டது.
சங்கத்தலைவர் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்.
”பிரபு. நாங்கள் விற்கும் முதுகெலும்புகள் எல்லாம், தரம் குறைந்தவையாகவும், வளைவு அதிகம் கொண்டவையாகவும் இருப்பதாக, பிரம்ம தேவர் ஆபீசில் சொல்கிறார்கள் பிரபு. குவாலிட்டி கன்ட்ரோல் என்கிற பெயரில் தாங்கள் வழங்கும் முதுகெலும்பை ஏற்க மறுக்கிறார்கள் பிரபு. சப்ளை செய்த முதுகெலும்புகளுக்கும், பில் செட்டில் செய்யாமல், நிறுத்தி வைத்து விட்டார்கள் பிரபு. இதற்கு தாங்கள்தான் ஒரு பைசல் செய்ய வேண்டும் பிரபு”
”இதற்கு நான் என்னய்யா செய்ய முடியும்? எங்களுக்கு வரும் முதுகெலும்பை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். அதில் குற்றம் குறையிருந்தால், அது மேனுபேக்சரிங் டிபெக்ட் தானே? அதற்கு பிரம்ம தேவர் தானே பொறுப்பு?”
”இல்லை பிரபு. ‘நாங்கள் உற்பத்தி செய்யும்போது, நன்றாகத்தான் செய்தோம். எமலோகத்தில் இருந்து வரும்போதுதான் இப்படி வளைவு நெளிவுடன் இருப்பதாக’ பிரம்ம தேவர் ஆபீசில் சொல்கிறார்கள் பிரபு”

”சரி, மொத்தமாக கொண்டு செல்லும் வழியில், ஏதாவது சேதாரம் ஏற்படுவது இயற்கை தானே! அப்படி ஏதாவது வளைவு நெளிவு இருந்தால், டிங்கரிங், பெயிண்டிங் வேலை பார்த்து சரி செய்ய வேண்டியது தானே. அதற்காக முதுகெலும்பை வாங்கவே மாட்டேன் என்பதா? என்ன ஒரு ஆணவம்?”
எமதர்மருக்கு கோபம் கொப்பளித்தது.
”இல்லை பிரபு, ஏதோ எமலோகத்தில் போலி முதுகெலும்பு ஆலை வைத்திருப்பதாகவும், சீனா முதுகெலும்பை சப்ளை செய்து எல்லோரையும் ஏமாற்றுவதாகவும், பிரம்மதேவர் ஆபீசில் தங்கள் மீது புகார் சொல்கிறார்கள் பிரபு”
இது சங்கத்தலைவர்.
”என்ன? சீனா முதுகெலும்பா? போலியாக தயாரிக்கிறோமா?”
எமதர்மருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சங்கத் தலைவர் மேலும் விவரம் சொன்னார்.
”ஆம் பிரபு. மனிதர்கள் சஞ்சரிக்கும் லோகத்தில், தரம் இல்லாத பொருட்கள் எல்லாம் சீனாவில் தான் தயாரிப்பதாக சொல்வார்களாம் பிரபு. அத்தகைய சீனா தயாரிப்பு முதுகெலும்புகள் எல்லாம், பார்வைக்கு முதுகெலும்பு போல் இருக்குமாம்; ஆனால் வேலையே செய்யாதாம். 25 வயது கடந்து விட்டாலே, முதுகு வளைந்து விடுமாம். அப்படி டுபுக் முதுகெலும்பு சப்ளை செய்து ஏமாற்றுவதாக, நிறைய பெட்டிசன்கள் பிரம்ம தேவருக்கு வந்திருக்கிறதாம் பிரபு. எங்களை எப்படியாவது நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் பிரபு”
”சித்திரகுப்தா என்ன இது பிரச்னை?”
”பிரபு. இதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது பிரபு. இது முழுக்க முழுக்க மகாவிஷ்ணு சப்ஜெக்ட் பிரபு. அவர்தானே காத்தல் கடவுள். காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று எல்லோரையும் முதுகை வளைத்து கும்பிடு போட வைத்து, முதுகெலும்பு வளைவுக்கு காரணமாக இருக்கிறார். இதை விளக்கி, பிரம்ம தேவருக்கு கடிதம் எழுதலாம் பிரபு”
இதுதானே சித்திரகுப்தருக்கு தெரிந்த வழி!
”பிரபு, கடிதம் எழுதினால் காரியம் ஆகாது பிரபு. சித்திரகுப்தரை எங்களுடன் அனுப்பி வைத்து, பிரம்ம தேவர் அலுவலகத்தில் வந்து பேசி, பழைய பாக்கியை வாங்கித் தரச் சொல்லுங்கள் பிரபு”
வியாபாரிகள் விடுவதாக இல்லை.
”சரி, நான் பிரம்ம தேவருக்கு கடிதம் அனுப்பி, உங்கள் பிரச்னையை தீர்க்கிறேன்”
”பிரபு, எங்கள் பிழைப்பே தங்களை நம்பித்தான் இருக்கிறது பிரபு!”
”அதுதான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேனே, நீங்கள் கிளம்புங்கள்”
”நன்றி மகாபிரபு”
முதுகெலும்பு வியாபாரிகள், எமதர்மருக்கும், சித்திரகுப்தருக்கும் கும்பிடு
போட்டபடி, அரை மனதோடு புறப்பட்டனர்.
……………….
எமதர்மருக்கு பெரும் கவலை.
”சித்திரகுப்தா, என்ன இந்த முதுகெலும்பு விவகாரம், நம் நேர்மைக்கு சோதனையாக இருக்கும் போலிருக்கிறதே!”
”பிரபு. மனிதர்கள் நிலை முன்பு போல் இல்லை பிரபு. இப்போது அவர்கள் யாருமே முதுகெலும்பை பயன்படுத்துவதில்லை. அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு, யாரைப்பார்த்தாலும் கும்பிடு போட வேண்டியிருக்கிறது. குனிந்தபடியே நடக்கிறார்கள், நிற்கிறார்கள், ஓடுகிறார்கள். ஆகவே, அவர்களில் பலரது முதுகெலும்பு, நிமிர்ந்து நிற்கும் திறன் இழந்து விட்டது. சொந்த தொழில் நடத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், சங்கத்தினர் என எல்லோருமே, ஏதோ ஒரு வகையில் யாருக்காவது பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் ஆளும் கட்சியினர் என்று இருந்து விட்டால், அவர்களுக்கு நிச்சயம் பயந்தே தீர வேண்டும். எல்லோரும், தங்களையும், தங்கள் பிழைப்பையும் காத்துக் கொள்வதற்காக, முதுகெலும்பு இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் இந்த பள்ளி, கல்லுாரி நடத்துவோர் நிலைமைதான் மகா பரிதாபம் பிரபு. இல்லாத முதுகெலும்பை இருப்பது போல் காட்டிக் கொள்ள அவர்கள் படும்பாடு பெரும்பாடு பிரபு!”
”அப்படியா?”
”ஆம் பிரபு. நல்ல முதுகெலும்பாக நாம் கொடுத்தாலும், பிரம்ம தேவர் கொடுத்தாலும், அது மனிதர்களிடம் சென்று சேர்ந்தவுடனே செயல் இழந்து விடுவதுதான் பிரச்னைக்கு காரணம்”
தனக்குத்தெரிந்த விவரங்களை சொல்லி முடித்தார் சித்திரகுப்தர்.
”மனிதர்களுக்கு இந்தளவுக்கு பிரச்னை இருக்கிறதா? இதற்கு அவர்கள் புறப்பட்டு நரகத்துக்கு வந்து விடலாமே?”
ஆச்சர்யப்பட்டு கேட்டார் எமதர்மர்.
”சரி, மனிதர்கள் எப்படியோ ஒழியட்டும். இந்த முதுகெலும்பு விவகாரத்தில் இருந்து நாம் தப்பிப்பது எப்படி என்று யோசித்து நல்ல வழியாகச் சொல், சித்திரகுப்தா”
”ஆகட்டும் பிரபு”
கவலையோடு புறப்பட்டார் எமதர்மர்.

பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    அருமை அருமை நண்பரே நன்றி

    Like

பின்னூட்டமொன்றை இடுக