பெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்!

Posted: 18/01/2015 in கருத்து, நையாண்டி, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

அனுமார் வால் போல் நாளும் நீளும் பெருமாள் முருகன் விவகாரம், நமக்கு, தமிழ் திரைப்படங்களின் காமெடிக் காட்சிகளை நினைவூட்டுகிறது. அவற்றில் முக்கியமானது, ‘கிணற்றைக் காணோம்’ என்று புகார் தரும் வடிவேலுக்குப் பயந்து, போலீஸ் சீருடையை கழற்றிக் கொடுத்து விட்டு, ‘வேலையே வேண்டாம்’ என்றோடும் போலீஸ் அதிகாரியின் கேரக்டர்.
குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்ட மொக்கச்சாமியின், பூட்டிய வீட்டுக்கு முன் கூடி நின்று, ‘வெளியே வாடா’ என்று கூவல் போடும் கஞ்சா கருப்பு குழுவினரின் காமெடி, எழுத்தாளருக்கு மிரட்டல் விடும் சில்லுண்டிகளின் வீரத்துக்கு நிகரானது.
‘தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் மாதிரி, தயிர் சாதம் திங்குறவங்கள அடிச்சே ரவுடியா டெவலப் ஆகியிருக்கோம்’ என்றொரு விஷால் படத்து டயலாக்கும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது. அட, தமிழாசிரியர் என்பதுகூட, சூழ்நிலைக்கு கச்சிதமாய் பொருந்துகிறதே!
படையெடுத்து வந்த வல்லவராயன், காலில் விழுந்து சரணாகதி அடைந்த புலிகேசியைப் பார்த்து, ‘சே என்னய்யா, இப்படி ஒரேயடியாகக் காலில் விழுந்து விட்டான்’ என்று எரிச்சல் படுவதைப்போல், இவர்களுக்கும் எரிச்சல். ‘அவன் கண்ணை மட்டுமாவது நோண்டி விட்டுப் போவோம்’ என்று ஏற்றி விடும் வல்லவராயனின் படைத்தளபதிபோல், சரணடைந்த எழுத்தாளரின் இன்னொரு நாவலும் நொட்டையென கிளப்பி விடுகின்றனர்.
‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கி விடுதல்’ என்று, கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஒன்றுமில்லாத விஷயம், ஊதிப் பெரிதாக்கப்படுவதற்கு மிகச்சரியான உதாரணம் அதுதான். இப்போது, நடப்பதுவும் அதுவே.
இலக்கியவாதிகளுக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த பெருமாள் முருகன், ‘மாதொருபாகன்’ சர்ச்சையால், உள்ளூர் பத்திரிகை முதல் உலகத்தொலைக்காட்சி வரை, எங்கும் எதிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அதைக்கண்டு, எழுத்தாளர்கள் பலரும் வயிற்றெரிச்சல் அடைவது, அவர்களது எழுத்திலும் பேச்சிலும் நன்றாகவே தெரிகிறது.
எழுத்தாளர் பிரச்னையை இலக்கியவாதிகள் தீர்த்துக்கொள்ளட்டும். விவகாரத்தை, பூதாகரம் ஆக்கியவர்களின் பிரச்னையை பார்ப்போம். ஜாதிக்கட்சிகளும், மத அடிப்படைவாத அமைப்புகளும், கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் ரங்கராட்டினம் போன்றவர்கள். மற்ற நாட்களில் காண முடியாது. தேர்தல்வேறு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறது. ஏதேனும் பிரச்னைகள் இருக்கும்போதுதான், ஜாதி, மதம் சார்ந்த சில்லுண்டிகள் (உபயம்: ஜெயமோகன்) உயிர் பிழைத்திருக்க முடியும்.
இந்தியா போன்ற, படித்த முட்டாள்களும், படிக்காத முட்டாள்களும் மலிந்த நாடுகளில், அரசியல் கட்சியோ, அமைப்போ நடத்துவது அவ்வளவு எளிதன்று.
தலைவரானவர், உள்ளூர் பிரச்னை முதல் உலகப்பிரச்னை வரை, எல்லாம் அறிந்திருக்க வேண்டும். இலங்கைத்தமிழர், இந்திய மீனவர், இத்தாலிய கடற்படை, மாலத்தீவு விவகாரம், பாகிஸ்தான் கலவரம், லிங்கா பட நிலவரம் என எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்ல வேண்டும்.
அவ்வப்போது கட்சிக்கூட்டங்களில், ‘டிவி’ பேட்டிகளில், தொண்டர்கள் வாய் பிளக்கும் வண்ணம் உரை நிகழ்த்தும் கலை அறிந்திருக்க வேண்டும். உருது, சமஸ்கிருத இலக்கியங்கள், கிரேக்க, ரோமானிய இதிகாசங்களை கரைத்துக் குடித்திருந்தால் இன்னும் சிறப்பு. இது தவிர, பெட்ரோல், டீசல், காஸ் விலை, பஸ், ரயில் கட்டணம் எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
பெட்ரோல் விலை குறைத்தால், ‘போதாது’ என்று போராட்டம். குறைக்கவில்லை என்றால், ‘ஏன் இன்னும் குறைக்கவில்லை’ என்று ஆர்ப்பாட்டம். விலை அதிகரித்து விட்டாலோ, பஸ்சை மறித்து, கண்ணாடி உடைத்து, கைதாகி, சரித்திரம் படைக்க வேண்டியிருக்கும்.
இப்படி எந்த வித்தையும் அறிந்திராமல் ‘என் கணவரும் கச்சேரிக்குப் போகின்றார்’ என்பதைப்போல், கட்சி ஆரம்பித்துவிட்ட கொங்குச்சிங்கங்களும், சில அசிங்கங்களும், என்னதான் செய்வார்கள்? அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவேதான், கையில் கிடைத்திருக்கும் பிள்ளைப்பூச்சியை, முட்டுச்சந்தில் முழங்காலிட வைத்து, தண்ணீர் தெளித்துத் தெளித்து அடிப்பதென்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டார்கள். ‘நானும் ரவுடிதான்’ என்று கூவியவுடனே, ஜீப்பில் உட்காரவும் இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, அவர்களுக்கு! அவர்களுக்கெல்லாம், இந்தாண்டு பொங்கல் நிச்சயம் இனித்திருக்கும்.

பின்னூட்டங்கள்
  1. mahalakshmivijayan சொல்கிறார்:

    ஹா ஹா.. நன்றாக சொன்னீர்கள் ஆறுமுகம் சார்! எல்லாம் சனி பெயர்ச்சியின் விளைவு! அவரை பாடாய் படுத்தி , யார் இந்த பெருமாள் முருகன் என்று வியக்குமளவு பிரபலம் ஆகி விட்டார் 😀

    Liked by 1 person

  2. karanthaijayakumar சொல்கிறார்:

    பெருமாள் முருகன் சொன்ன கதையில் பலருக்கும் மாறுபாடு இருக்கலாம்
    எனக்கும் அக் கதையில் உடன்பாடில்லைதான்
    ஆனாலும் எழுத்துச் சுதந்திரத்தை, எழுத்துச் சுதந்திரத்தால் மட்டுமே
    எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன்
    பெருமாள் முருகனுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது

    Like

    • வாருங்கள் ஐயா. எழுத்தாளருக்கு எழுத்தில்தான் பதில் தர வேண்டுமே தவிர, சட்டவிரோதமான போராட்டங்கள் மூலமும், அரசு அதிகாரத்தை பிரயோகிப்பதன் மூலமும் பதிலடி தர நினைப்பது தவறு. பெருமாள் முருகன், ஊர், கோவில் பெயரை குறிப்பிட்டு எழுதியது தவறு என்பதே என் கருத்து

      Like

  3. பலவாறான பதிவுகள் பதியப்படும்போது அவை வரலாறாகின்றன. இருப்பதை இருப்பது என்று சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இல்லை என்பதே உண்மை. உரிய வகையில் எதிர்க்க வேண்டும். தவிரவும் வரலாற்றை மறைக்கமுடியாது.

    Like

    • வாருங்கள் ஐயா. ஐயா நான் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பத்தாண்டுகள் பத்திரிகை செய்தியாளராக பணியாற்றியிருக்கிறேன். திருச்செங்கோடு கோவிலைப் பற்றி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் வெளியாவதற்கு காரணமாக இருந்திருக்கிறேன். கோவிலைப் பற்றி இப்படியொரு தகவல் இருப்பதாக தெரியவில்லை. உள்ளூரில் பல தலைமுறைகளாக நிருபர்களாக பணியாற்றுவோரிடமும் பேசினேன். அவர்களும், அப்படியெதுவும் நடந்ததாக தகவல் இல்லை என்கின்றனர். ஆகவே, பெருமாள் முருகன், ‘வரலாறு, ஆய்வு செய்தேன்’ என்றெழுதியது முழுவதும் உண்மைக்குப் புறம்பானது என்பதே என் முடிவு. உண்மையான தகவலையே ஏற்க மறுக்கும் நம்மாட்கள், பொய்யான ஒன்றை வரலாறு என எழுதியிருந்தால் விட்டு விடுவார்களா? எனக்கென்னவோ, பெருமாள் முருகன் பிரச்னை, இப்போதைக்கு தீராது என்றே தோன்றுகிறது.

      Like

  4. துளசி கோபால் சொல்கிறார்:

    பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க!!!!

    இனிய பாராட்டுகள்.

    Like

    • வாங்க வாங்க மேடம்! எழுத்தாளருக்கு ஒரு பிரச்னைன்னு வந்தா, அதை அவ்வளவு சீக்கிரம் விட்டுட முடியுமா? அதான் கொஞ்சம் ஓவரா கூவிட்டேன் போலிருக்கு! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்!

      Like

  5. KILLERGEE Devakottai சொல்கிறார்:

    அருமை நண்பரே…

    Like

  6. balachandar சொல்கிறார்:

    Super Sir

    Like

  7. thulasithillaiakathu சொல்கிறார்:

    இலக்கியவாதிகளுக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த பெருமாள் முருகன், ‘மாதொருபாகன்’ சர்ச்சையால், உள்ளூர் பத்திரிகை முதல் உலகத்தொலைக்காட்சி வரை, எங்கும் எதிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அதைக்கண்டு, எழுத்தாளர்கள் பலரும் வயிற்றெரிச்சல் அடைவது, அவர்களது எழுத்திலும் பேச்சிலும் நன்றாகவே தெரிகிறது.// மிகச் சரியே! அது போன்று சாதி மதவாதிகள் ஊதிப் பெரிதாக்கி அரசியல் லாபம் அடைவதே அவர்கள் குறிக்கோளாகி உள்ளது . இத்தனைப் பிரச்சினையாக்க வேண்டுமா இதை ? எத்தனையோ பிரச்சினைகள் நம் கண் முன் நடப்பவற்றிற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிகாமல் இலக்கியவாதியைச் சாடுவது சிரிப்புத்தான் வருகின்றது.

    அருமையான ஒரு பதிவு நண்பரே!

    Like

  8. வாங்க துளசிதரன் சார், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    Like

  9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அதுவும் அரசியல்வியாதிகளின் ஜாதகத்தை நன்றாகக் கணித்துள்ளீர்கள். பாடாவதிப் படத்தை, பிரச்சனை எழுப்பி ஓடவைத்துவிடுவதைப் போல, மிகச் சுமாரான ஒரு நாவலைக் கலாச்சாரக் கா(வள்)வலர்கள், பூதாகரமாக்கிவிட்டார்கள். இருந்தபோதிலும், இத்தகைய நாவல்கள், ஐம்பது வருடங்கள் கழித்து வாசிக்கும்போதோ அல்லது ரெஃபெர் பண்ணப்படும்போதோ, வரலாறு திரிவுபடுவதற்கு வாய்ப்பு அதிகம். இதனை நாவலாசிரியர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும்.

    Like

  10. yarlpavanan சொல்கிறார்:

    நன்றாக அலசி உள்ளீர்கள்
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    Like

ஆறுமுகம் அய்யாசாமி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி