நாளைய தலைமுறை நம்ப மறுக்கும்!

Posted: 17/01/2014 in கட்டுரை
பண்டிகை நாட்களில், மாட்டுச்சாணத்துக்கு வரும் கிராக்கி இருக்கிறதே! அப்பப்பா…! கொஞ்சம் நீள அகலமாய் வீடு வாசலும், நீட்டி முழக்குபவராய் வீட்டில் மனைவியும்  வாய்த்தவர்பாடு திண்டாட்டம் தான்! 
‘எப்படியாவது சாணம் கொண்டு வந்தே தீர வேண்டும்’ என்று மனைவி போடும் உத்தரவை உச்சநீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவாகக் கருதி, கணவன்மார் கையில் பக்கெட் உடன் கிளம்புவர். ஆனால் கிடைக்க வேண்டுமே! 
ஊருக்குள் மாடு வைத்திருப்பவர் வீடுகளில் எல்லாம், ரேஷன் கடையில் சீமை எண்ணெய் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் போல், வரிசையில் குண்டாக்களும், பக்கெட்டுகளும் காத்திருக்கின்றன. 
‘இந்த முறை சீனியாரிட்டி முறையை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக பாலோ அப் செய்வதாகவும், நம் வரிசைக்கு நாளை மறுநாள் சாயந்திரம் மாடு சாணம் போடும்போது தான் கிடைக்குமாம்’ என்றும், தயங்கித் தயங்கி சொன்னால், எந்த வீட்டில் மனைவி ‘சரி போகட்டும்’ என்று சொல்வார்? 
‘எனக்குத்தெரியாது, சாணியோட தான் வரணும்’ என்று சொல்லும் மனைவியரே  நாட்டில் அதிகம். விளைவு, கால்நடை வைத்திருக்கும் சிலர், மாட்டுச்சாணத்தை தராசு எடைக்கல் வைத்து எடை போட்டுப்பார்க்காத குறையாக, விற்க ஆரம்பித்து விட்டனர். 
‘குட்டு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலை வைத்து விற்றாலும் வாங்கத்தயார்’ என்கின்றனர், மக்கள். கால்நடைகள் குறைந்து விட்டன. ‘சாணம் தானே, போனால் போகட்டும்’ என்று இலவசமாக விட்டவர்களும் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர் என்பது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், சாணத்தை இலவசமாக தருபவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே தீர வேண்டும். ‘அவர்களுக்காகவாவது ஆண்டுக்கொருமழை அதிகமாகப் பெய்யட்டும்’ என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே! 
ஒரு காலத்தில், ரோட்டிலும், மேய்ச்சல் நிலங்களிலும் கிடக்கும் சாணத்தை எடுத்து வந்து, எரு வரட்டி தட்டி விற்று குடும்பத்தை வளர்த்தவர்கள் உண்டு. அப்படியெல்லாம் கூட நடந்தது என்று யாரேனும் சொன்னால் எதிர்கால தலைமுறைகள் நம்ப மறுக்கவும் கூடும். என்ன செய்வது? 
*
குறிப்பு: இது சொந்த அனுபவம் என்று யாரும் நினைத்திருந்தால், அது சரியல்ல! ‘இரவல் அனுபவமோ’ என்று எண்ணியிருந்தால், அது தவறுமல்ல!
பின்னூட்டங்கள்
  1. மழையா…? வருங்காலத்தை நினைத்தால்… ம்…

    Like

    • aarumugamayyasamy சொல்கிறார்:

      வாங்க தனபாலன் சார். மாட்டுச்சாணத்தை சும்மா குடுக்குற நல்லோர் ஒருவருக்காக மழை கட்டாயம் பெய்யனும் தான். ஆனா எங்க பெய்யுது?

      Like

  2. chitrasundars blog சொல்கிறார்:

    இங்கும் என் கருத்து மாறுபாடுடையது. தவறாக இருந்தால் ‘ஸாரி’ங்க‌.

    மாடுகளை கஷ்டப்பட்டு வளர்த்து, அதற்குத் தேவையான புல், தீவணம் எல்லாம் வாங்கிப்போட்டு, சாணத்தை இலவசமாகக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பரவாயில்லையே, இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

    Like

    • aarumugamayyasamy சொல்கிறார்:

      வாங்க மேடம். ஸாரி எதுக்குங்க மேடம். நம்ம நாட்டில் இப்படியெல்லாம் சம்பவம் நடக்க ஆரம்பிச்சிருக்குதுன்னு சொல்றதுக்குத்தானே தவிர, விக்குறவுங்கள குறை சொல்றது நோக்கம் இல்ல. நம்ம மாடு கன்னு வெச்சுருந்த காலத்துல இப்புடியா நடந்துச்சுங்குற ஆதங்கம் தான். வருகைக்கு நன்றி மேடம்

      Like

  3. வணக்கம்
    ஐயா.

    நீங்கள் சொல்வது உண்மைதான்… எதிர்கால தலைமுறையினர் ஏற்க மாட்டார்கள்…காலம் மாறிப்போச்சி…ஐயா. தங்களின் தளம் எனக்கு புதியவை இனி என்வருகை தொடரும்.. மேலும் சிறந்த படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்.
    தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டி நடைபெறுகிறது… வாருங்கள் வந்து விதிமுறைகளை பாருங்கள்….என்னுடைய வலைப்பக்கம் எழுதுங்கள் கட்டுரைகளை.. பரிசு அள்ளிச்செல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  4. rajalakshmi சொல்கிறார்:

    மாட்டு சாணத்தை கையால் தொடுவீர்களா? என்று கேட்டு அருவெறுப்பாய் முகம் சுளிக்கும் இளையத் தலைமுறை. கண்டிப்பாய் நம்ப மறுக்கும். ஆனால் இதையே வெளிநாட்டினர் சொன்னால் உடனே கோடி ருபாய் கொடுத்தாவது வாங்கிக் கொள்வார்கள். வேப்பிலை விஷயத்தில் அப்படித்தானே நடக்கிறது. நம் நாட்டு பொக்கிஷங்கள் அருமை நம் இளைய தலை முறைக்கு எப்படியாவது யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் தான். வேடிக்கையாய், நகைச்சுவையாய் சொன்னாலும், மிகப்பெரிய கருத்தை உள்ளடக்கிய பதிவு. வாழ்த்துக்கள் …..

    Like

    • வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மேடம். மார்பிள் தரையிலும், மொசைக் தரையிலும் வளரும் நம்ம ஊர் பிள்ளைகளுக்கு மாட்டுச்சாணத்தின் அருமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான். கருத்துக்கு நன்றி மேடம்.

      Like

  5. vmloganathan சொல்கிறார்:

    கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளின் இதுவும் ஓன்று ஆகா போகிறது..

    Like

பின்னூட்டமொன்றை இடுக