17/01/2014 க்கான தொகுப்பு

பண்டிகை நாட்களில், மாட்டுச்சாணத்துக்கு வரும் கிராக்கி இருக்கிறதே! அப்பப்பா…! கொஞ்சம் நீள அகலமாய் வீடு வாசலும், நீட்டி முழக்குபவராய் வீட்டில் மனைவியும்  வாய்த்தவர்பாடு திண்டாட்டம் தான்! 
‘எப்படியாவது சாணம் கொண்டு வந்தே தீர வேண்டும்’ என்று மனைவி போடும் உத்தரவை உச்சநீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவாகக் கருதி, கணவன்மார் கையில் பக்கெட் உடன் கிளம்புவர். ஆனால் கிடைக்க வேண்டுமே! 
ஊருக்குள் மாடு வைத்திருப்பவர் வீடுகளில் எல்லாம், ரேஷன் கடையில் சீமை எண்ணெய் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் போல், வரிசையில் குண்டாக்களும், பக்கெட்டுகளும் காத்திருக்கின்றன. 
‘இந்த முறை சீனியாரிட்டி முறையை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக பாலோ அப் செய்வதாகவும், நம் வரிசைக்கு நாளை மறுநாள் சாயந்திரம் மாடு சாணம் போடும்போது தான் கிடைக்குமாம்’ என்றும், தயங்கித் தயங்கி சொன்னால், எந்த வீட்டில் மனைவி ‘சரி போகட்டும்’ என்று சொல்வார்? 
‘எனக்குத்தெரியாது, சாணியோட தான் வரணும்’ என்று சொல்லும் மனைவியரே  நாட்டில் அதிகம். விளைவு, கால்நடை வைத்திருக்கும் சிலர், மாட்டுச்சாணத்தை தராசு எடைக்கல் வைத்து எடை போட்டுப்பார்க்காத குறையாக, விற்க ஆரம்பித்து விட்டனர். 
‘குட்டு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலை வைத்து விற்றாலும் வாங்கத்தயார்’ என்கின்றனர், மக்கள். கால்நடைகள் குறைந்து விட்டன. ‘சாணம் தானே, போனால் போகட்டும்’ என்று இலவசமாக விட்டவர்களும் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர் என்பது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், சாணத்தை இலவசமாக தருபவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே தீர வேண்டும். ‘அவர்களுக்காகவாவது ஆண்டுக்கொருமழை அதிகமாகப் பெய்யட்டும்’ என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே! 
ஒரு காலத்தில், ரோட்டிலும், மேய்ச்சல் நிலங்களிலும் கிடக்கும் சாணத்தை எடுத்து வந்து, எரு வரட்டி தட்டி விற்று குடும்பத்தை வளர்த்தவர்கள் உண்டு. அப்படியெல்லாம் கூட நடந்தது என்று யாரேனும் சொன்னால் எதிர்கால தலைமுறைகள் நம்ப மறுக்கவும் கூடும். என்ன செய்வது? 
*
குறிப்பு: இது சொந்த அனுபவம் என்று யாரும் நினைத்திருந்தால், அது சரியல்ல! ‘இரவல் அனுபவமோ’ என்று எண்ணியிருந்தால், அது தவறுமல்ல!
அலுவலகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது காய்கறி விற்பனை பற்றி பேச்சு வந்தது. ‘காய்கறிகளை வீட்டுக்கு வாங்கிச் சென்று சுத்தம் செய்து, நறுக்கி, சமையல் செய்யும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்களுக்கு வசதியாக, நறுக்கிய காய்கறி, நம் ஊரில் விற்கின்றனர்.அதையும், நம்மாட்கள் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்’ என்றார்,  நண்பர். 
‘சென்னையில் குழம்பு மட்டும் தயார் செய்து விற்கின்றனர். அதுவும் நம் ஊருக்கு விரைவில் வந்து விடும்’ என்றார். ‘இது அவசர உலகம். ரெடிமேட் ஆக எது கிடைத்தாலும் மக்கள் வாங்கத் தயார் ஆகி விட்டனர்’ என்றார், நண்பர். அது, உண்மை தான். 
பொங்கலுக்கு முதல் நாள் காப்பு கட்டுதல் தமிழர் மரபு. மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றைக் கொண்டு காப்பு கட்டினால், துஷ்ட சக்திகள் வீட்டை நெருங்காது என்பது ஐதீகம்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை காப்பு கட்டுவதற்குரிய இலை, தழைகளை விலை கொடுத்து வாங்குவோர் எவரும் இல்லை. விற்கும் எண்ணமும் எவருக்கும் வரவில்லை. தோட்டம், காடு, பள்ளம், படுகையில் தேடி காப்பு கட்டுவதற்கான இலை தழைகளை,ஆண்கள் சேகரித்து வருவர்.
ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு, உறவுக்காரர்கள் வந்து காப்பு கட்டி விடுவர். இதுதான் அப்போதைய நடைமுறை. ஆனால், இப்போது நடப்பதென்ன? காப்பு கட்டும் நாளில்  இலை,தழைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. வீதிக்கு வீதி, பொது இடங்களில், காடு மேடுகளில் எல்லாம் இருக்கும் வேப்ப மரத்துக்கு அவ்வளவு கிராக்கி.
‘வேப்பிலை கொத்து ஐந்து ரூபாய்’ என்பதை மறு பேச்சு பேசாமல் வாங்கிச்செல்கின்றனர், மக்கள். இலவசமாகவே ஊருக்குள் கிடைத்தாலும், அதை தேடிச்சென்று சேகரிக்கவோ, மரம் ஏறி பறிக்கவோ யாரும் தயாரில்லை. கேட்கும் காசைக் கொடுத்து வியாபாரியிடம் வாங்கிச் செல்லவே பலரும் விரும்புகின்றனர். இந்த அவசரத்தை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் நாட்டில் ஆயிரமாயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனரே!
காப்பு கட்டும் தினமான திங்கட்கிழமை அதிகாலை முதலே ஆரம்பமாகி விட்டது, சூப்பர் வியாபாரம்! சாலையோரங்களில் எல்லாம் சைக்கிள்களிலும், கூடைகளிலும் வைத்து விற்பனை கனஜோராக நடந்தது. வேப்பிலைக்கொத்து ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை,ஆவாரம் பூ, பூளைப்பூ, மாவிலை எல்லாம் சேர்ந்த கட்டு, பத்து, இருபது, முப்பது என்று கொத்துக்கு தகுந்தபடி விலை.
வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, பொது இடங்களில் கூட வளர்ந்து நிற்கும் வேப்ப மரத்தின் இலையைப் பறித்து, கட்டுக்கட்டினால், அதையும் விற்று காசாக்க முடியும் என்று காட்டி விட்டனர், தமிழர்கள்! என்ன செய்வது? அவசரஉலகம்; ஐயோ பாவம்!