ரஜினியின் ஆசை: ஊமை கண்ட கனவு!

Posted: 17/11/2014 in அரசியல், தமிழகம், நையாண்டி
குறிச்சொற்கள்:, ,

கீறல் விழுந்த பழைய ரெக்கார்டுகளை கேட்ட அனுபவம், வாட்ஸப், பேஸ்புக் தலைமுறைகளுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு அந்த அனுபவத்தை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார், ரஜினி. பாவம், எவ்வளவோ அடிவாங்கியும், அவருக்கு இன்னும் புத்தி வரவில்லை போலிருக்கிறது.
‘கடவுள் விரும்பினால், அரசியலுக்கு வருவேன்’ என்பதாக, மீண்டும் ஒரு முறை அவரது திருவாய் மலர்ந்திருக்கிறது. அவர், ஏழு கடல் ஏழு மலை கடந்து கை ஊன்றிக்கரணம் போட்டு, அரசியல் களம் புகுந்துதான், ஏழரைக்கோடி தமிழர்களை உய்விக்க வேண்டும் என்றெல்லாம், கட்டாயம் எதுவுமில்லை.
ஏற்கனவே இங்கு, புரட்சியாளர்களும், இனமானத் தமிழர்களும், இன்னும் சில கத்தரி, தக்காளி, வெங்காயங்களும், அரசியலை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, கடும் இட நெருக்கடி நிலவிக் கொண்டிருப்பதாலும், இருக்கின்றவர்கள் இம்சையே சகிக்க முடியாத சாக்கடையாக ஓடிக் கொண்டிருப்பதாலும், மேலும் ஒரு சாக்கடை இங்கு யாருக்கும் தேவையில்லை என்பதை, அவர் மண்டையில் உறைக்கும்படி யார்தான் சொல்லப் போகிறார்களோ?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, ஒரு முறை அவர் ஏதோ உளறி வைக்கப்போய், ஆட்சி மாறிய கதை தமிழகத்தில் நடந்து விட்டது. அவரது உளறலுக்கு, அடுத்த தேர்தலிலேயே மார்க்கெட் போன கதை நாடறியும். ஆகவே, வண்டி ஓட வேண்டுமெனில், வாலைச் சுருட்டிக் கொண்டு வாழ்த்துப்பா பாடுவதே உசிதமென, அவர் காலத்தை ஓட்டுவதை கலையுலகம் அறியும்; கண்மணிகளாம் ரசிகர்களும் அறிவர்.
அரசியல் அதிகாரத்தை அடைவதுபோல் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நிச்சயமாக, ரஜினிக்கும் உண்டு. ஆனால், அவருக்காக காத்திருந்த ரயில் புறப்பட்டுப் போய், 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் டிக்கெட்டை காட்டி விற்க முயற்சிப்பது, குள்ளநரித்தனமேயன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?
இப்படி அவ்வப்போது பேசுவதன் மூலம், அவர் சம்பாதிக்கப்போவது, நக்கல், நய்யாண்டிகளை மட்டுமே. கிணற்றில் குதியென்றால், கேள்வி கேட்காமல் குதிக்கும் ரசிகர் கூட்டம், தமிழகத்தில் அவருக்கிருந்த காலம் மாறி, பல்லாண்டுகள் கடந்து விட்டன.
முதல் ஷோ டிக்கெட், அணிவதற்கு டிஷர்ட், தொப்பி, தோளில் மாட்டும் பை, தோரணம், கொடிக்கெல்லாம் கொள்ளை விலை வைத்து, வகை தொகையாய் வசூலித்து, முடிந்தமட்டும் சுரண்டிக் கொழுத்த ரஜினியின் குடும்ப வரலாறு, ரசிகக்கண்மணிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சொந்தக்காசு செலவழித்து கட்சி நடத்துவதற்கெல்லாம், அவருக்கு வீட்டனுமதி கிடைக்காது என்பதை, ரசிகர்கள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டார்கள்.
‘அவர் அரசியலுக்கு வருவார்; ஆட்சியைப் பிடிப்பார்; நாமும், ஒன்றியம், நகரம், வட்டம், கவுன்சிலராகி காசு பார்க்கலாம்’ என்ற கனவில் திரிந்த ரசிகர்கள், கிழடு தட்டிப்போய், மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம், இப்போதைய ரஜினியின் பேச்சு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத்தான் இருக்கும்.
கடவுள் விட்ட வழியென்றும், எல்லாம் அவர் விருப்பம் என்றும் ஏதாவது பேசிக்கொண்டு திரிந்தால், பா.ஜ.,காரர்கள் மனம் இளகி, ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் கூட, ரஜினியின் பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்.
‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்றார் அப்துல் கலாம். ரஜினியையும் சில கனவுகள், தூங்க விடாமல் செய்கின்றனபோலும். ஊமையர் கனவு கண்டதுபோல், அவரால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

பின்னூட்டங்கள்
  1. வேகநரி சொல்கிறார்:

    நல்ல பதிவு.

    Like

  2. albert சொல்கிறார்:

    அக்னி எழுத்து. அதகளம். ரஜினியை நம்பும் மூடர்கள் இருக்கும் வரை இது தொடரவே செய்யும்.

    Like

  3. Bagawanjee KA சொல்கிறார்:

    அவர் படம் வெளியே வருகிறது என்றால் ,இப்படி உளறுவது அவர் பழக்கம் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே ?

    Like

  4. Palanisamy R சொல்கிறார்:

    ஐயா, ரஜினியை விடுங்கள்… அது ஒருபுறம் இருக்கட்டும்… இதே தமிழ் சினிமா உலகில் விஜயகாந்த் வந்தார். பத்ரிக்கைகள், டிவிக்கள், இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்அப் என பல ஊடகவாயிலாக அவரை வைத்து படுத்தி எடுத்தார்கள். அவரும் தமிழ்நாட்டை படுத்தி எடுத்துவிட்டார். அவரின் ரசிகர்கள், அரசியல்வாதி, எம்.எல்.ஏ.,க்கள் என பரினாமங்கள் எடுத்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டார்கள். இனி ரஜினி, விஜய், என பட்டியல்கள் நீண்டு கொண்டே இருக்கும்… தமிழனும் வேடிக்கை பார்த்து, என்னைப்போல கமெண்ட் அடித்துக் கொண்டுதான் இருப்பான்…

    Like

  5. karanthaijayakumar சொல்கிறார்:

    நல்ல பதிவு நண்பரே

    Like

  6. B Jambulingam சொல்கிறார்:

    மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். வேறு என்ன சொல்வது?

    Like

  7. chitrasundar சொல்கிறார்:

    தலைமைப் பண்பு, ஆளுமை என்பதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் ஆரம்பித்து படிப்படியாக வளர்வதுதான். ஆனால் நம் ஊரில்தான் சினிமாவில் ஜெயித்தால் தலைவனாகிவிடலாம் என்பதெல்லாம்.

    Like

  8. chollukireen சொல்கிறார்:

    எல்லோருக்கும் புரியும்படி நன்றாகச் சொன்னீர்கள். எவ்வளவோ நபர்களில் நச்சென்று மனதில்ப் படும்படி சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கருத்து. அன்புடன்

    Like

  9. srinivasan சொல்கிறார்:

    இன்னும் 10 படங்கள் கதாநாயகனாக வெளிவந்த பின்பு இந்த மாதிரி பேட்டியெல்லாம் கொடுக்க மாட்டார்.அரசியல் லாபம் கருதி பாதிபேர் விசய்க்கும் , அசீத்துக்கும் தாவி பல ஆண்டுகளாகி விட்டன.

    Like

  10. தங்கராஜ் சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நிதர்சனமான உண்மை.

    Like

பின்னூட்டமொன்றை இடுக