குரங்குகளை காணவில்லை!

Posted: 09/11/2014 in அனுபவம், கட்டுரை, தமிழகம்
குறிச்சொற்கள்:, , ,

நண்பர் திருமணத்துக்காக, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தேன். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், வாய்ப்பிருந்தும் போகமுடியாத குறையை போக்கும் வகையில் அமைந்தது நண்பரின் திருமணம்.
முன்பிருந்ததை காட்டிலும், கோவிலில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், மலையிலும், கோவில் வளாகத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரியும். அவற்றின் பாவனைகளை ரசித்து மகிழ்வதற்கென்றே பக்தர்கள் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவர். கோவிலுக்கு செல்லும் சிறுவர், சிறுமியருக்கும், குரங்குக்கூட்டத்தின் சேட்டைகள்தான், நல்ல பொழுதுபோக்கு.
பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை, குரங்குகள் பறித்துச் செல்வதும், அதில் இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு, பையை வீசி எறிவதும், தினமும் பல முறை நடக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்கள். சென்னிமலை கோவிலிலும் இதே நிலை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.
நேற்று சென்றிருந்தபோது, தேடித் தேடிப்பார்த்தேன். ஒரு குரங்கு கூட தென்படவில்லை.
என்ன ஆயிருக்கும் அந்த குரங்குகள்? ஏனோ, மனதுக்குள் நெருடலாகவே இருந்தது.
ஆனால், வேறு ஒரு கூட்டத்தை கோவிலில் காண நேரிட்டது. அது, பணம் பறிக்கும் கூட்டம். சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்களை தேடி வந்து பொட்டு வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி, பணம் பறிக்கிறது. விவரம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பக்தர்கள், புலம்படியபடியே ‘காணிக்கை’ கொடுக்கின்றனர். சென்னிமலையிலும் இப்படி கட்டாய வசூல் நடப்பதை பக்தர்கள் காண முடியும்.
தமிழ்ப்புத்தாண்டில் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரும் வழியில் சென்னிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்தாண்டில் சென்றபோது, குடும்பத்தினர் வருவதற்காக நான் காத்திருந்த வேளை, பூஜைத்தட்டுடன் வந்த ஒருவர், திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டார். நான் கேட்கவே இல்லை. மறுப்பு தெரிவித்தபோது, ‘சாமி பிரசாதம், மறுக்கக்கூடாது’ என்கிறார்.
பொட்டு வைத்தவுடன் நகர்ந்தால், ‘காணிக்கை கொடுக்கணும்’ என்றார். பாக்கெட்டில், நூறும், ஐநூறுமாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘சில்லரை இல்லை’ என்றதற்கு, ‘கொடுங்க, நான் தருகிறேன்’ என்கிறார். சென்னிமலை ஆண்டவருக்காக, அந்த நபரை, சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தாண்டில் சென்றபோது, உஷாராகி விட்டோம்.
எனக்கென்னவோ, மலைக்கோவில்களில் குரங்குக்கூட்டம் குறைவதற்கும், பணம் பறிக்கும் கூட்டம் பெருகுவதற்கும், ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது!

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    பரிமாண வளர்ச்சி தலைக்கீழாக மாறி வருதோ 🙂

    Liked by 1 person

  2. Bagawanjee KA சொல்கிறார்:

    பரிணாம வளர்ச்சி தலைக்கீழாக மாறி வருதோ 🙂
    (இரண்டுமே பொருந்துதே )

    Liked by 1 person

  3. chitrasundar சொல்கிறார்:

    நல்ல அனுபவம்தான். உங்களுக்கு சாமி பிரசாதம் போலவே எங்கள் ஊர் பக்கம் உள்ள ஒரு அம்மன் கோவிலில் என்னிடம், ஒரு பெண் ‘தாலிகயிறு’ , வேறொரு பெண் ‘பூ’ கொடுத்து, வேறு வழியில்லாமல் வாங்க வைத்துவிட்டார்கள்.

    Like

  4. yarlpavanan சொல்கிறார்:

    பணம் பறிக்கும் குரங்குகளா?
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    Like

  5. karanthaijayakumar சொல்கிறார்:

    குரங்குகள் எல்லாம் இப்பொழுது ஊருக்குள் நுழைந்து விட்டன நண்பரே
    காடுகளில் குரங்குகள் இளைத்துப் போய் காணப்படுகின்றன
    போதிய உணவில்லை
    அதனால் உணவு தேடி ஊருக்குள் புகுந்து விட்டன
    எங்கள் தெருவில் மூன்று குரங்குகள் வருக் கணக்கில் தங்கியிருக்கின்றன

    Like

    • உண்மைதான் ஐயா. வனங்களில் உணவுக்கு வழியில்லை; சாலையில் பயணிப்போர் தரும் தின்பண்டங்களுக்காக குரங்குக்கூட்டம் காத்திருக்கும் அவலத்தை, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையிலும், பண்ணாரி-திம்பம் சாலையிலும் காண முடியும். இத்தகைய குரங்குகள், தங்கள் உணவு தேடும் இயல்பை மறந்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சூழலியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர் ஐயா. அப்படியிருக்கையில், சென்னிமலை, சிவன்மலை போன்ற பழமரங்கள் இல்லாத, ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே மழை பெய்கிற, மொட்டை மலைகளில் குரங்குகள் இத்தனை காலம் வாழ்ந்ததே சாதனை தான் ஐயா.

      Like

பின்னூட்டமொன்றை இடுக