‘மது விலக்கெல்லாம், தமிழகத்தில் சாத்தியமில்லை’ என்று, ஒரே போடாகப் போட்டு விட்டார், நத்தம் விஸ்வநாதன். அவரைப் பொறுத்தவரை, மது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பதே, படுபயங்கரமானதாகத்தான் இருக்கும். நாம் அப்படியில்லையே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியைப் பிடித்து, அன்புமணி முதலமைச்சராகவும் பதவியேற்று, முதல் நாளே, ‘மதுக்கடைகள் க்ளோஸ்’ என்று, உத்தரவும் போட்டு விட்டால், எப்படியிருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்?
தமிழகத்தின் ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில், 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மதுக்கடை மூடப்பட்டால், அவர்கள் அரசின் வேறு துறைகளுக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அங்கே, இந்தளவுக்கு வருமானம் இருக்காது; அதாவது, சிங்கியடிக்க வேண்டியிருக்கும்.
மதுக்கடைகளும், அவற்றை ஒட்டிய மது குடிக்கும் ‘பார்’களும், பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. மதுக்கடைகளை மூடினால், அவற்றை எல்லாம் காலி செய்ய வேண்டியிருக்கும்.
அதன் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். பிற தொழில்களுக்கு வாடகைக்கு விட்டாலும், இந்தளவுக்கு வாடகை கிடைக்காது.
மதுக்கடை பார் ஒவ்வொன்றிலும், குறைந்தது, நான்கைந்து ஆட்களாவது வேலையில் இருப்பர். அவர்கள் தவிர, பஜ்ஜி, போண்டா, வடை சுடும் பிரிவொன்றும் பாருக்குள் இருக்கும்; அதிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பர்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நாளொன்றுக்கு, 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. கடைகளை மூடி விட்டால், அவர்களெல்லாம், வேறு பாவப்பட்ட தொழில்களுக்குப் போக வேண்டியிருக்கும்; அப்புறம், கஞ்சியோ, கூழோ குடிப்பதே பெரும்பாடாகி விடும்.
மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும், தண்ணீர் பாக்கெட், டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர், காராச்சேவு வினியோகம் செய்வதெற்கென்று, ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது.
மதுக்கடைகளை மூடி விட்டால், தமிழகத்தில் தண்ணீர் பாக்கெட் தயாரிக்கும் தொழிலே அழிந்து போகும் நிலை ஏற்படும். அதை நம்பியிருப்பவர்களை யார் காப்பாற்றுவார்?
டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர் விற்பனை படுத்து விட்டால், அவற்றை குடிசைத் தொழிலாக தயாரித்து விற்போர்பாடு, திண்டாட்டம்தான்.
மது உற்பத்தி ஆலைகள், தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, மதுக்கடைகள் முழு வீச்சில் இயங்க வில்லையெனில் சம்பளம் கிடைக்காது; போனஸ் வராது; அவர்களெல்லாம், பிக்பாக்கெட் வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கும்.
மது குடிப்பவர்களில் பெரும்பகுதியினருக்கு, சிகரெட் உற்ற துணையாக இருப்பது தெரிந்த விஷயம்தான். குவார்ட்டர் பாட்டிலை குடித்து முடிப்பதற்குள், நான்கு சிகரெட் குடிக்கும் ஆசாமிகள் நிறையப்பேர் இருக்கின்றனர்.
ஆக, மதுக்கடை இல்லையெனில், தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை மந்தமாகி விடும். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் ஒட்டுக் குடித்தனக்காரர்கள், குடும்பத்தோடு லாட்டரிச்சீட்டு விற்கத்தான் போவார்கள்.
மது குடித்து விட்டு, வாகனங்களில் செல்வோர் போலீசில் சிக்கி, தண்டம் அழுவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆக, கடையை மூடி விட்டால், போலீஸ் மாமூல் வாழ்க்கை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.
மதுக்கடைகளிலும், பார்களிலும், காலி மது பாட்டில்களை பொறுக்கி விற்று, பிழைப்பு நடத்துவதற்கென்று சில பேர் இருக்கின்றனர். மது விற்பனை இல்லையென்றால், காலி பாட்டில்களுக்கு அவர்கள் எங்கே போவார்கள்?
‘குடி’மகன்கள், எப்போதும் மதுக்கடை செயல்படும் ஏரியாவில்தான் இருப்பர். விளைவு, அப்பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை, மளிகைக்கடைகளில் பீடி, சிகரெட், வாழைப்பழம் என பலப்பலவற்றின் விற்பனை ஜரூராக இருக்கும். மதுவை ஒழித்தால், இந்த விற்பனையும் சேர்ந்தே ஒழிந்து போகும்.
‘பார்’ நடத்துவோர் அனைவரும், ஆளும் கட்சியினரே. நாள் தோறும் போஸ்டர் அச்சிடுவது, பிளக்ஸ் பேனர் தயார் செய்து மூலைக்கு மூலை வைப்பது என எல்லாவற்றுக்கும், தாராளமாகப் பாய்வது, இப்படி ‘பார்’ மூலம் தண்ணீராக பாயும் பணம்தான்.
அந்தப்பணம் வருவது தடைபட்டால், அப்புறம் பிளக்ஸ் பேனர், போஸ்டர் அச்சிடும் தொழில்கள் எல்லாம், மந்த நிலைக்கு சென்று விடவும் வாய்ப்புண்டு.
எல்லாவற்றையும் விட, மதுக்கடைகளால் இன்னொரு முக்கிய சமூக பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது. மாமியார், மருமகள் சண்டையில் இருந்தும், மனைவியின் அன்றாட இம்சைகளில் இருந்தும் தப்பிக்க எண்ணும் ஆண் மக்களுக்கு, ஒரே தீர்வாக இருப்பது மது மட்டுமே.
ஆக, பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும், மதுக்கடைகளுடன் வலைப்பின்னல் போல், இவ்வளவு தொடர்புகள் இருக்கும்போது, மதுவை ஒழித்தே தீர வேண்டும் என்று விடாப்பிடியாகவும், விஷமத்தனமாகவும் வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம்?
……….
டிஸ்கி: சமூகத்துக்கு மதுப்பழக்கம் இல்லை. மேற்கண்ட விவரங்கள் எல்லாம், ‘குடி’மக்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

‘ஏதேனும் நற்செயலோ, அதிசயமோ நிகழ்ந்தால், மழை பெய்யும்’ என்பது, நம்மவர்களின் நீண்ட கால நம்பிக்கை. ரமணன் சொல்லும் அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையும், வெப்பச்சலனமும் தெரிந்திராத அந்தக்காலத்தில், மழை பெய்வதற்கான காரணங்கள் இவையாகத்தான் இருக்கும் என்று, பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இன்றும் சில கிராமப்புறங்களில், கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நம்பிக்கையாக இருக்கிறது. யாகம் செய்தால் மழை பெய்யும் என்று சிலரும், குறிப்பிட்ட ராகத்தை இசைத்தாலே மழை பெய்யும் என்று சிலரும், இன்னும் தீர்க்கமாக நம்புகின்றனர்.
மழை பெய்வதற்கான காரணங்கள் என்று நான் நம்பும் சிலவற்றை வெளியில் சொன்னால், வீட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தன்னலம் கருதி, அவற்றை நான், இப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை.
அலுவலகம் செல்லும்போது, அடையாள அட்டையைப் போலவே, மழைக்கோட்டும் எடுத்துக் கொண்டு போவது பலருக்கும் வாடிக்கை. மழைக்கோட்டு என்பது, மழையில் இருந்து மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்று கருதியிருப்பது, மாபெரும் அறிவீனம்.
இந்த அறிவியல் உண்மை, சட்டை, பேண்ட்டில் சேறுடன் வீட்டுக்குச் சென்று, வாங்கிக் கட்டிக் கொள்ளும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். நாட்டில், மழைக்கோட்டு விற்பனை பன்மடங்கு அதிகரிப்புக்கு காரணமும் இதுவே.
பின்விளைவுகளை கருத்தில் கொண்டும், அதிதீவிர முன்னெச்சரிக்கையாலும், வானத்தை பார்த்து, வானிலை அறிக்கை படித்து, ‘இன்று கட்டாயம் மழை வரும்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மழைக்கோட்டையும் கையோடு கொண்டு செல்வோம் பாருங்கள்; அன்று, நிச்சயம் மழை வராது.
எப்போதாவது ஒரு நாள் மழைக்கோட்டு இல்லாமல் போயிருப்போம்; அன்று பார்த்து, மழை பொத்துக்கொண்டு ஊத்தும். நமக்கும், மழைக்கும் அப்படியொரு பொருத்தம்.
ஆகவே, மழைக்கோட்டு கொண்டு செல்லும்போதெல்லாம், மறக்காமல் வருண பகவானையும் வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்? அப்படி மழைக்கோட்டு கொண்டு சென்று, மழையும் பெய்யும் நாட்களில், நான் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. வீட்டில் கிளம்பும்போது, மழை லேசாக பெய்ய ஆரம்பிக்கும்; நாமும், சந்திர மண்டலத்துக்குப் போகும் விண்வெளி வீரர் கணக்காக, தலை முதல் கால் வரை, மழைக்கோட்டு மாட்டிக் கொண்டு போனால், அரை மைலுக்கு அப்பாலேயே வெயிலாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்படுவோரெல்லாம், ‘என்ன உங்க ஊர்ல, மழை ரொம்ப அதிகமோ’ என்று கவலையோடும் கரிசனத்தோடும் விசாரித்து, மண்டை காய வைப்பர்.
ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கு மகள்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, ‘ரெயின் கோட் எடுத்து வெச்சுருக்கீங்களா’ என்று, கேட்டு வைத்தேன். பள்ளி விடும்போது, மழை பெய்து, அவர்கள் நனைந்து, சளிப்பிடித்து விட்டால், அப்புறம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்குமே?
ஆக, பயங்கர முன்ஜாக்கிரதையாக, நான் அப்படியொரு கேள்வியை கேட்டு வைக்க, அன்றைய சமையலில் ஏதோ ஒரு புதுமையை செய்திருந்த என் மனைவி, ‘நம்மைத்தான் கிண்டல் செய்கிறான் போல’ என்று நினைத்து, சண்டைக்கே வந்து விட்டார். தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம் ஆகி விட்டது. ச்சே… மழை படுத்தும்பாடு!

பதினாறு ஆண்டுகால திருமண வாழ்க்கையில், எடுத்த முடிவில் பின்வாங்காமல், இறுதி வரை ஒரே நிலையில் நானிருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதை உணரும்போது, துக்கம் கொஞ்சம் தொண்டையை அடைக்கவே செய்கிறது. உறவினர், அண்டை, அயலார், அலுவலக நண்பர்கள் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும், மாமூல் வாழ்க்கையில் அப்படியொன்றும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடாதென்பதை நானறிவேன்; ஆனால், கட்டிய மனைவியின் உத்தரவை அப்படி, ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக எடுத்துக் கொள்ள முடியுமா?
அந்த உத்தரவை மீறி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’ என்பதை நீங்கள் அனைவரும் அறிந்தே இருப்பீர்கள். அத்தகைய பேரபாயத்தை சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலை, கடந்த வாரத்தில் எனக்கு ஏற்பட்டு விட்டது. அரசு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை, ‘மகளை அக்கவுண்ட்ஸ் குரூப்பில் சேர்த்து விடலாம்’ என்று பாட்டாகப் படித்துக்கொண்டிருந்த என் மனைவியார், தேர்வு முடிவைப் பார்த்தவுடன், அதுவும் 481 மதிப்பெண்கள் என்றவுடன், ‘கணிதம், உயிரியல் இருக்கும் முதல் குரூப்பில்தான் சேர்த்தாக வேண்டும்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.
உண்மையில், அதைக்கேட்டவுடன் எனக்கு பகீரென்றது. ‘கணிதம் என்றால், எட்டிக்காயாக கசக்கும் மகளை, இந்த கண்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறேனோ’ என்று பீதி தொற்றிக் கொண்டது. ஆனாலும், நமக்குள் இருக்கும் நடிகர் திலகத்தை தட்டியெழுப்பி, நடுக்கம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொண்டேன்.
‘அப்படியெல்லாம் அஞ்சி நடுங்குவதற்கு என்ன இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால், கணித டியூஷனுக்கு மகளை அழைத்துச்சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில், ஒரு மணி நேரம் கால் கடுக்க காத்திருந்ததும், எனக்குத்தானே தெரியும்?
காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு, வகுப்புத்தேர்வு, டியூஷனில் நடத்தப்படும் தேர்வு விடைத்தாள்கள் வீடு வரும்போதெல்லாம், கலவரம் தடுக்கும் பணியில் ஈடுபட்டவனுக்குத்தானே, காயத்தின் வலி தெரியும்? தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து விட்டு காத்திருப்பவன்போல், ‘திக் திக்’ மனநிலையுடன், தேர்வு விடைத்தாள்களை எதிர்கொண்டதெல்லாம் போதாதா? ‘மறுபடியும் முதலில் இருந்தா…’ என்கிற சினிமா வசனம், அந்த சில நாட்களில் மட்டும், பல நூறு முறை என் நினைவுக்கு வந்து விட்டது.
எவ்வளவோ கறாராக பேசியும், என் உறுதி குறையவில்லை என்பதாலோ என்னவோ, என் மனைவி கொஞ்சம் மனம் இரங்கி விட்டார். ஒரு வழியாக, பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பம் வாங்கி, அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டுமென்று பூர்த்தி செய்து கொடுத்தும் விட்டோம். ‘நானும் வருவேன்’ என்று விடாப்பிடியாக என்னுடன் பள்ளிக்கு வந்த மனைவி, ‘பள்ளி முதல்வரை சந்தித்துப் பேசலாம். அவர்கள் நிச்சயம் பர்ஸ்ட் குரூப்பில்தான் சேரச் சொல்வர். அப்போது பார்க்கலாம் உங்கள் ஜம்பத்தை’ என்று, என்னுடன் சவால் விட்டுக்கொண்டு இருந்தார்.
அதற்கு தகுந்தபடி, மதிப்பெண் குறைந்த மாணவிகளுக்கெல்லாம் உடனடியாக அட்மிஷன் கொடுத்த அந்தப்பள்ளி நிர்வாகம், எங்களைப் பார்த்து, ‘இன்று போய் நாளை வா’ என்று கூறி விட்டனர். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. மனைவிக்கோ, அப்படியொரு மகிழ்ச்சி. ‘நமக்கு அக்கவுண்ட்ஸ் குரூப் எல்லாம் தர மாட்டாங்க. பர்ஸ்ட் குரூப்தான். கன்வின்ஸ் பண்ணத்தான் நாளைக்கு வரச்சொல்றாங்க’ என்று கூவிக்கொண்டே வீடு வந்தார்.
நானும் பயந்துகொண்டே மறுநாள் சென்றேன். கூடவே, மனைவியும், மகளும்.
‘அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டாம், முதல் குரூப் எடுங்கள்’ என்று கூறினால், என்ன சொல்லி சமாளிப்பது என்று, ஏகப்பட்ட தயாரிப்புகளோடு சென்றேன். பள்ளி அலுவலக ஊழியரோ, ‘நேத்தே நீங்க பீஸ் கட்டியிருக்க வேண்டியது தானே, பிரின்ஸ்பல் நேத்தே அட்மிஷன் தரச் சொல்லிட்டாங்க’ என்று கூறி, வயிற்றில் பால் வார்த்தார். எனக்கும், மகளுக்கும், அப்படியொரு மகிழ்ச்சி. என் மனைவிக்குத்தான் பெரும் ஏமாற்றம். ஒரு மரியாதைக்கு கூட, ‘ஏன், அக்கவுண்ட்ஸ் செலக்ட் பண்றீங்க; பர்ஸ்ட் குரூப் எடுக்கவில்லையா’ என்று பிரின்ஸ்பல் கேட்கவில்லையாம்! ஆனாலும், இந்த உலகம் ரொம்பவும்தான் மோசம்!

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் அது பற்றி கருத்துச் சொல்லும் வழக்கமுடைய நமக்கு, கடந்த இரண்டு மாதங்களும் மாபெரும் சோதனைக்காலமாக அமைந்து விட்டன. மூத்த மகளை, பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு பொறுப்பேற்றபோது, அது அவ்வளவு சிரமமானதாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

கருத்துச் சொல்வது, உலகின் மிக எளிமையான பணிகளில் முதன்மையானது; சுருக்கமாகச் சொன்னால், செத்துப்போன பாம்புகளை அடிப்பதற்கு ஈடானது. ‘எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும்’ என்பவர்கள்கூட, கருத்துக் கேட்டால், கூடை கூடையாக அள்ளி வீசுவர். தினம் தினம் 24 மணி நேர செய்திச் சேனல்களை பார்த்திருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத்தெரியும்.
ஆனால், இந்த கணக்குப் பாடம் சொல்லித்தருவதெல்லாம், கருத்துச் சொல்லும் வகையறாவில் வருவதில்லை. அதற்கு, நமக்கு முதலில் கணக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலமும், தமிழும் கூட அப்படித்தான்.
‘அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எல்லாம் தெரியும்’ என நினைத்திருக்கும் பிள்ளைகள் முன்னிலையில், ‘எனக்கு இந்தக்கணக்கு தெரியவில்லை, இந்தக்கேள்விக்கெல்லாம் விடை தெரியாது’ என்று கூறிக்கொண்டு, தந்தையும், தாயும் விழி பிதுங்கி நிற்பது எவ்வளவு கொடுமை?
அப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்க விரும்பாமல்தான், பெற்றோர், பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், நம்மைப்போன்றவர்களுக்கு அத்தகைய விவரம் கூட இல்லை.
அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தபிறகே, மண்டையில் விஷயம் உறைத்தது. கணிதப் பாடத்துக்கு மட்டுமே மகள் டியூஷன் சென்று கொண்டிருக்கிறாள்; அதுவும், வகுப்பெல்லாம் இல்லை; தேர்வு எழுதும் பயிற்சி மட்டுமே. யோசித்துப் பார்த்தால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத்தோன்றியது.
‘இப்ப இருந்து படித்தால்கூட நல்ல மார்க் வாங்கி விடலாம்’ என்று வகுப்பாசிரியை கூறினார். அந்த ஒரு வார்த்தையை ஆறுதலாக நம்பித்தான், நானும் மகளை தேர்வுக்கு தயார் செய்யும் பொறுப்பை முழு வீச்சில் ஏற்றுக் கொண்டேன்.
ஏற்றுக்கொண்ட பணி, ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு வந்தபிறகே, மற்ற வீரதீரப் பிரதாபங்களை வெளியிடுவது சிறப்பாக இருக்கும். ஆகவே, அதைப் பிறகு பார்ப்போம். இப்போது தேர்வு முடிந்து விட்டதாகையால், கருத்துச் சொல்லும் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியதாகி விட்டது.
கம்ப்யூட்டரை கையில் தொடாமல் இருந்த இந்த இரண்டு மாதங்களில், ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன.
ஹிலாரி கிளிண்டனுக்கு மீண்டும் தேர்தல் ஆசை வந்திருக்கிறது. இந்தியாவுடன் விரோதம் பாராட்டும் மில்பேண்ட் சகோதரர்கள், பிரிட்டனில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில்
மரம் வெட்டச்சென்ற 20 பேர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பீகாரில், தேர்வெழுதச் சென்ற மகன், மகள்களுக்கு, காப்பியடிக்க வசதியாக, புத்தகங்களை கொடுக்கச்சென்ற பெற்றோர், மாடி ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் முதல் உலகத் தொலைக்காட்சிகள் வரை ஒளிபரப்பாகி மானத்தை வாங்கி விட்டன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மியில் பூசல் வெடித்திருக்கிறது. தமிழகத்தில் ஊருக்கு ஊர் பால் குட ஊர்வலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லஞ்சமும் ஊழலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து விட்டன.
ஒபாமா, காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விட்டார். ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. மோடிக்கு வாய்த்தது, இன்னுமொரு வெளிநாட்டுப் பயணம். கருத்துக்கள் நிறைய இருக்கின்றன; எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஒரு வழியாக, 144 தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. உலகத்தொலைக்காட்சிகள், எங்கள் வீட்டிலும் முழங்க ஆரம்பித்து விட்டன. ‘இரண்டு ஆண்டு காலம், தொலைக்காட்சியில் தொடர் நாடகமும், திரைப்படமும் பார்க்காமல் இருந்தால், தமிழ்க்குடி என்னவாகுமோ’ என்ற என் ஐயத்துக்கு, ‘அதெல்லாம் ஒரு வெங்காயமும் ஆகாது’ என்ற விடை கிடைத்திருக்கிறது.
விஷயம் இதுதான், மக்களே! மூத்த மகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுவதைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்குரிய என் மனைவியார், வீட்டுக்குள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
‘தொலைக்காட்சியில் நாடகமும், திரைப்படமும் பார்ப்பது, மகளின் படிப்புக்கு கேடு’ என்று மிகச்சரியாக கணித்துவிட்ட அவர், ஒரே உத்தரவில், தொலைக்காட்சியின் டி.டி.எச்., இணைப்பை துண்டித்து விட்டார்.
அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பம்சம், மகள் ஒன்பதாம் வகுப்பு சென்றவுடனேயே இந்த நடவடிக்கையை எடுத்து விட்டதுதான்.
அம்மணி உத்தரவு போட்டுவிட்டால், அப்புறம், அம்பானியாவது, கும்பானியாவது? ஆக, பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள், பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் இணைப்பு, ரீசார்ஜ் செய்யாமல் அம்போவென விடப்பட்டது.
‘நீண்ட காலம் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு காலாவதியாகி விடும், அப்புறம் உங்கள் கதி, அதோகதி’ என்ற, அம்பானிகள் கும்பலின் தொடர் அச்சுறுத்தல், அசட்டை செய்யப்பட்டது.
இரண்டாண்டு காலம்! எவ்வளவோ நாடகங்கள், எவ்வளவோ திரைப்படங்கள், பல்லாயிரம் சம்பவங்கள். எல்லாம், பத்திரிகையில் படிப்பதுடன் சரி.
உலகம் உருண்டை என்பதால், இரவும் பகலும் மாறி மாறி வரத்தானே செய்யும்? பொதுத்தேர்வு முடிந்தவுடனேயே, மீண்டும் டி.டி.எச்., ரீசார்ஜ் செய்வதற்கான உத்தரவை, மாண்புமிகு அம்மணி பிறப்பித்தார். அதன்படி, ‘காலாவதியாகி விடும்’ என்று, அம்பானிகள் கும்பல் அச்சுறுத்திய அதே டி.டி.எச்., ஸ்மார்ட் கார்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தொலைக்காட்சியை மீண்டும் இயக்கி வைக்கிற, வரலாற்றுச்சிறப்பு மிக்கதொரு வாய்ப்பு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த விடுமுறை தின மகிழ்ச்சியை, இணையத்தில் பகிர்ந்துகொள்வதில், உள்ளபடியே சமூகம் பெருமிதம் கொள்கிறது.

இரவு 9 மணிக்கு சுட்டு வைத்த தோசையை, 11 மணிக்கு சாப்பிடுவதென்பது, கொடுமையினும் கொடுமை. அதனினும் பெரும் கொடுமை, அக்கம் பக்கம் எல்லோரும் தூங்கும்போது, தன்னந்தனியராய் சாப்பிடுவது! தன் கையே தனக்குதவி, தேங்காய் சட்னியே தோசைக்குதவி என்பதெல்லாம், அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
அன்றொரு நாள் இரவு, நான் அப்படியொரு கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஏதோ சரசரவென சத்தம். வெளியில் வந்து பார்த்தால், அது ஏதோ ஒரு வகை தெரியாத பாம்பு. கடைசிநேரச் செய்தி தரும் நிருபரின் பரபரப்போடும், ‘கரெக்சன்’ சொல்ல வரும் புரூப் ரீடரின் அவசரத்தோடும், வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. அய்யகோ, இது என்ன சோதனை? கையில் தோசையும், பிளேட்டுமாக, பாதி வயிறுடன் இருக்கும்போது தானா, பாம்பு வர வேண்டும்? அடிப்பதற்கு கூட, கையில் எதுவும் கிடைக்கவில்லை.
முன்னால் இருப்பது, வீடு கூட்டும் துடைப்பம் மட்டுமே. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்றெல்லாம், வாய்க்கு வக்கணையாக சொல்லி வைத்தவனை, துடைப்பத்தை வைத்து பாம்படிக்கச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. அப்போதைக்கு வேறு வழியில்லை. ‘ஆண்டவன் இன்று நமக்களந்தபடி, இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்று கவுண்டமணி லாங்வேஜில் எண்ணிக் கொண்டு, துடைப்பத்துடன் பாம்பைத் துரத்தினேன்.
முதல் அடி படவில்லை. அது இன்னும் வேகவேகமாக ஊர்ந்து, என் படபடப்பை அதிகரித்தது. இரண்டாவது அடி, லேசாக பட்டது. ‘ப்பூ, இவன் இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்றெண்ணியிருக்க வேண்டும். நான் இருக்கும் திசை நோக்கியே வர ஆரம்பித்தது. நல்ல வேளை, அடுத்த அடி, கொஞ்சம் பலமாக பட்டிருக்கிறது; பாம்பு சுருண்டு விழுந்து விட்டது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய ஓட்டப்பந்தய வீரர்கள், எம்பிக்குதித்து, சர்க்கஸ் வித்தை காட்டுவார்களே, நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லாத குறையை, தீர்த்து வைக்கத்தான் பாம்பார் வந்திருக்கிறார் எண்றெண்ணி, மகிழ்ச்சிக்கூத்தாடினேன்.
சரி, பாம்பு அடித்தாகி விட்டது. ‘நேரம் கெட்ட நேரத்தில் வீட்டினரை எழுப்பி, நம் பெருமையை நாமே பீத்திக்கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கும்’ என்று மண்டைக்குள் இருக்கும் பொதுக்குழுவும், செயற்குழுவும், பகுத்தறிவுத்தீர்மானம் வாசித்தன. ஆகவே, அப்போதைக்கு, பாம்பு ‘பாடி’யை டிஸ்போஸ் செய்வது என்றும், மறுநாள் காலை, தூங்கி எழுந்ததுமே, நள்ளிரவு சாகசத்தை ஊருலகத்துக்கு பறைசாற்றுவது என்றும் முடிவு செய்தேன்.
பாம்பை மீண்டும் ஒரு முறை தலையை நசுக்கி, செத்துப்போய் விட்டதை உறுதி செய்து கொண்டு, அப்படியே துடைப்பத்தால் கூட்டி வீட்டுக்கு முன் இருந்த சாக்கடையில், கொண்டு சென்று தள்ளி விட்டேன். வீரதீரச் செயல் புரிந்த காரணமோ, என்னவோ, அன்றிரவு அவ்வளவாக தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை எழுந்ததும், வீட்டில் இருந்தவர்களிடம் சம்பவத்தை கூறினேன்.
அய்யா, அம்மா, குழந்தைகள் ஆர்வமாக கேட்டனர். மனைவி, கண்டுகொள்ளவே இல்லை. அதுகூட வருத்தமில்லை. ‘துடைப்பக்கட்டை வீணாய்ப்போச்சே’ என்று அவருக்கு பெரும் வருத்தம். ‘அடிக்குறதுக்கு வேற எதுமே கிடைக்கலியா’ என்று நொட்டை வேறு.
மகள்கள் இருவரும், ‘அடிச்ச பாம்பு எங்கே’ எனக்கேட்டனர். நான் சாக்கடையில் கொண்டு சென்று காட்டினேன். சத்திய சோதனை, அங்கே பாம்பைக் காணோம்! என் மனைவிக்கு நல்ல பாயிண்ட் கிடைத்துவிட்டது. ‘பாம்பு அடிச்சு, சாகடிச்சது உண்மைன்னா, இந்நேரம் அது டிச்சுக்குள்ள இருக்கணும், அப்டின்னா உங்கப்பா சும்மா கதை விடுது’ என்று, அடித்துக்கூறி விட்டார். ஊக்க மருந்தைக் காரணம் காட்டி, ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பறிக்கப்படும் வீரனைப்போல் ஆகிவிட்டது என் நிலைமை!
இது நடந்து, ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும். அதிகாலை 4 மணிக்கு பாத்ரூம் போவதற்காக எழுந்து சென்றேன். திரும்பி வந்து, வாசல் விளக்கு ஸ்விட்ச் ஆப் செய்ய கை நீட்டியபோது, ஏதோ அனிச்சைச் செயலாக ஸ்விட்ச் பாக்ஸ் கண்ணில் பட்டது. அங்கே ஒரு பாம்பு, அட்டென்ஷனில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அது, என்னையும், ஸ்விட்ச் ஆப் செய்யச் சென்ற என் கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. ‘ஜஸ்ட் மிஸ்’ என்பார்களே, அந்த வார்த்தைக்கு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது. நல்ல வேளை, அப்படியே கையை பின்னால் இழுத்துக் கொண்டேன். ஓரிரு வினாடிகள், கைகால் ஓடவில்லை. சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பிறகு… இவ்வளவு குளோஸ்அப்பில் பாம்பைப் பார்ப்பது அது தான் முதல் முறை.
சுதாரித்துக் கொண்டு, ‘அடிப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா’ என்று தேடினால், வழக்கம்போல, துடைப்பம்தான் முன்னால் இருக்கிறது. வேறெதுவும் கண்ணில் சிக்கவே இல்லை. பாம்பு வேறு, ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து இறங்க எத்தனிக்கிறது. இறங்கி விட்டால், வீட்டுக்குள் சென்று விடும். வேறு வழியில்லை. ஆகவே, துடைப்பம் மீண்டும் என் கைக்கு வந்தது. திருப்பி பிடித்து, ஸ்விட்ச் பாக்ஸ் உடன் சேர்ந்து அடித்தேன். ச்சே, பதட்டத்தில் குறி தவறி விட்டது.
சிக்ஸர் அடிக்கும் கட்டாயத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு, கடைசி பந்து வீசும் பவுலர் போல் என் நிலைமை. அதுவும், நோ பால் வீசினால் எப்படியிருக்கும்?
இப்போது, பாம்பு ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குலதெய்வத்தை கும்பிட்டு, அடுத்த அடி. துடைப்பத்தின் தாக்குதலில் நிலை குலைந்த பாம்பு, திண்ணையில் விழுந்தது. அதற்குள் மூன்றாவது அடியும் சேர்ந்து விழுந்ததில், தலைநசுங்கி விட்டது.
உண்மையில், அந்த வினாடியில் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வர்ணிக்க, ஓராயிரம் வைரமுத்துக்கள் சேர்ந்து வரவேண்டும். அப்படியொரு மகிழ்ச்சி. பாம்படித்த மகிழ்ச்சியா அது? இல்லவே இல்லை.
‘அடித்த பாம்பைக்காணோம்’ என்றதும், ‘பாம்பே அடிக்கவில்லை’ என்று அடித்துக்கூறியவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆகவே, இம்முறை, நான் தயவு தாட்சண்யம் எதுவும் பார்க்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த எல்லோரையும், எழுப்பி விட்டேன். எல்லோரும் பதட்டத்துடன் எழுந்து வந்தனர்.
திண்ணையில் செத்துக்கிடக்கும் பாம்பைக் கண்டதும், என் மனைவிக்கு பேரதிர்ச்சி. வெற்றிப் பெருமிதத்தில் நான்.
‘எங்க இருந்து வந்துச்சு’ என்றனர், குழந்தைகள்.
‘ஸ்விட்ச் பாக்ஸ் மேல இருந்துச்சு’
‘அன்னிக்கு உங்கப்பா அடிச்சேன்னு சொல்லிச்சே, அந்தப்பாம்பாத்தான் இருக்கும்’ என்றார், மனைவி.
சும்மா இருந்தால், அவரது கருத்தை ஒப்புக்கொண்டதாகி விடுமே!
‘இல்ல, அந்தப்பாம்பு பெருசா இருந்துச்சு. இது கொஞ்சம் சின்னது’
‘இது பெரியது, அது சிறியது’ என்றால், ‘அது தான் வளர்ந்துவிட்டது’ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறதே! ஆகவே, சர்வஜாக்கிரதையாகப் பேசினேன். ‘அப்டியா, சரி போகட்டும்’ என்று கூறி, ஒரு வழியாக, என் சாதனையை அங்கீகரிக்க முன்வந்திருந்த மனைவியாரின் கண்களில், பாம்பு ரத்தம் தோய்ந்திருந்த துடைப்பக்கட்டை பட்டுத்தொலைத்து விட்டது.
‘‘போச்சு போச்சு, இந்த சீமாறும் போச்சா? அம்பது ரூபா சீமாறு போச்சு,’’ என்று, ஆரம்பித்து விட்டார்.
‘செத்துப்போன பாம்பு, சாபம் விட்டிருக்குமோ’ என்று தோன்றியது எனக்கு.

அனுமார் வால் போல் நாளும் நீளும் பெருமாள் முருகன் விவகாரம், நமக்கு, தமிழ் திரைப்படங்களின் காமெடிக் காட்சிகளை நினைவூட்டுகிறது. அவற்றில் முக்கியமானது, ‘கிணற்றைக் காணோம்’ என்று புகார் தரும் வடிவேலுக்குப் பயந்து, போலீஸ் சீருடையை கழற்றிக் கொடுத்து விட்டு, ‘வேலையே வேண்டாம்’ என்றோடும் போலீஸ் அதிகாரியின் கேரக்டர்.
குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்ட மொக்கச்சாமியின், பூட்டிய வீட்டுக்கு முன் கூடி நின்று, ‘வெளியே வாடா’ என்று கூவல் போடும் கஞ்சா கருப்பு குழுவினரின் காமெடி, எழுத்தாளருக்கு மிரட்டல் விடும் சில்லுண்டிகளின் வீரத்துக்கு நிகரானது.
‘தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் மாதிரி, தயிர் சாதம் திங்குறவங்கள அடிச்சே ரவுடியா டெவலப் ஆகியிருக்கோம்’ என்றொரு விஷால் படத்து டயலாக்கும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது. அட, தமிழாசிரியர் என்பதுகூட, சூழ்நிலைக்கு கச்சிதமாய் பொருந்துகிறதே!
படையெடுத்து வந்த வல்லவராயன், காலில் விழுந்து சரணாகதி அடைந்த புலிகேசியைப் பார்த்து, ‘சே என்னய்யா, இப்படி ஒரேயடியாகக் காலில் விழுந்து விட்டான்’ என்று எரிச்சல் படுவதைப்போல், இவர்களுக்கும் எரிச்சல். ‘அவன் கண்ணை மட்டுமாவது நோண்டி விட்டுப் போவோம்’ என்று ஏற்றி விடும் வல்லவராயனின் படைத்தளபதிபோல், சரணடைந்த எழுத்தாளரின் இன்னொரு நாவலும் நொட்டையென கிளப்பி விடுகின்றனர்.
‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கி விடுதல்’ என்று, கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஒன்றுமில்லாத விஷயம், ஊதிப் பெரிதாக்கப்படுவதற்கு மிகச்சரியான உதாரணம் அதுதான். இப்போது, நடப்பதுவும் அதுவே.
இலக்கியவாதிகளுக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த பெருமாள் முருகன், ‘மாதொருபாகன்’ சர்ச்சையால், உள்ளூர் பத்திரிகை முதல் உலகத்தொலைக்காட்சி வரை, எங்கும் எதிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அதைக்கண்டு, எழுத்தாளர்கள் பலரும் வயிற்றெரிச்சல் அடைவது, அவர்களது எழுத்திலும் பேச்சிலும் நன்றாகவே தெரிகிறது.
எழுத்தாளர் பிரச்னையை இலக்கியவாதிகள் தீர்த்துக்கொள்ளட்டும். விவகாரத்தை, பூதாகரம் ஆக்கியவர்களின் பிரச்னையை பார்ப்போம். ஜாதிக்கட்சிகளும், மத அடிப்படைவாத அமைப்புகளும், கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் ரங்கராட்டினம் போன்றவர்கள். மற்ற நாட்களில் காண முடியாது. தேர்தல்வேறு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறது. ஏதேனும் பிரச்னைகள் இருக்கும்போதுதான், ஜாதி, மதம் சார்ந்த சில்லுண்டிகள் (உபயம்: ஜெயமோகன்) உயிர் பிழைத்திருக்க முடியும்.
இந்தியா போன்ற, படித்த முட்டாள்களும், படிக்காத முட்டாள்களும் மலிந்த நாடுகளில், அரசியல் கட்சியோ, அமைப்போ நடத்துவது அவ்வளவு எளிதன்று.
தலைவரானவர், உள்ளூர் பிரச்னை முதல் உலகப்பிரச்னை வரை, எல்லாம் அறிந்திருக்க வேண்டும். இலங்கைத்தமிழர், இந்திய மீனவர், இத்தாலிய கடற்படை, மாலத்தீவு விவகாரம், பாகிஸ்தான் கலவரம், லிங்கா பட நிலவரம் என எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்ல வேண்டும்.
அவ்வப்போது கட்சிக்கூட்டங்களில், ‘டிவி’ பேட்டிகளில், தொண்டர்கள் வாய் பிளக்கும் வண்ணம் உரை நிகழ்த்தும் கலை அறிந்திருக்க வேண்டும். உருது, சமஸ்கிருத இலக்கியங்கள், கிரேக்க, ரோமானிய இதிகாசங்களை கரைத்துக் குடித்திருந்தால் இன்னும் சிறப்பு. இது தவிர, பெட்ரோல், டீசல், காஸ் விலை, பஸ், ரயில் கட்டணம் எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
பெட்ரோல் விலை குறைத்தால், ‘போதாது’ என்று போராட்டம். குறைக்கவில்லை என்றால், ‘ஏன் இன்னும் குறைக்கவில்லை’ என்று ஆர்ப்பாட்டம். விலை அதிகரித்து விட்டாலோ, பஸ்சை மறித்து, கண்ணாடி உடைத்து, கைதாகி, சரித்திரம் படைக்க வேண்டியிருக்கும்.
இப்படி எந்த வித்தையும் அறிந்திராமல் ‘என் கணவரும் கச்சேரிக்குப் போகின்றார்’ என்பதைப்போல், கட்சி ஆரம்பித்துவிட்ட கொங்குச்சிங்கங்களும், சில அசிங்கங்களும், என்னதான் செய்வார்கள்? அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவேதான், கையில் கிடைத்திருக்கும் பிள்ளைப்பூச்சியை, முட்டுச்சந்தில் முழங்காலிட வைத்து, தண்ணீர் தெளித்துத் தெளித்து அடிப்பதென்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டார்கள். ‘நானும் ரவுடிதான்’ என்று கூவியவுடனே, ஜீப்பில் உட்காரவும் இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, அவர்களுக்கு! அவர்களுக்கெல்லாம், இந்தாண்டு பொங்கல் நிச்சயம் இனித்திருக்கும்.

திருச்செங்கோடு, கொங்கு மண்டலத்தின் முதன்மையான நகரங்களில் ஒன்று. அங்குள்ள மலைக்கோவில், தேவாரப்பாடல்களில் பாடப்பெற்றது; கொங்கெழு சிவத்தலங்களில் முதன்மையானது. ‘சிவனும், சக்தியும் ஒன்றுதான்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, மாதொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில், இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், சிவபெருமான்.

மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என மூன்றையும் கொண்டது இக்கோவில். சிவத்தலமும், வைணவத்தலமும் ஒன்றாக இருப்பதுவும் இதன் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட மலைக்கோவிலை சார்ந்தே, நகரமும், அதன் பொருளாதாரமும் உருவாகி வந்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புகளையும் கொண்டிருக்கும் திருச்செங்கோடு, தொழில் துறையில் கூட முன்னணி நகரம்தான். விசைத்தறி தொழிலும், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தொழிலும், லாரித் தொழிலும், திருச்செங்கோட்டின் பிரதான தொழில்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

கல்விச்சேவையை கை நிறைய, பை நிறைய லாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டிய தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய இருக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், அவரது அப்பா மோகன் குமாரமங்கலம், ரங்கராஜனின் தாத்தாவும், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தவருமான சுப்பராயன் ஆகியோரின் பூர்வீகம், திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற சிற்றூர். (பெருமாள் முருகன்கூட, இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்பது கூடுதல் தகவல்)

நாட்டின் முதலாவது காந்தி ஆசிரமம், திருச்செங்கோட்டில்தான் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது. இங்கிருந்துதான், ராஜாஜி மதுவிலக்கு மற்றும் கதர் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இப்படியெல்லாம், சிறப்புகளை கொண்டிருக்கும் திருச்செங்கோடு, ஏதோ மனிதக்கறி தின்னும் காட்டுமிராண்டிகள் வசிக்கும் வனமாக பலராலும் உருவகப்படுத்தப்படுவதை காணச்சகிக்காமல் எழுதப்பட்டதே இந்தப்பதிவு.

சர்ச்சைத்தீயை பற்ற வைத்தவர்களும் சரி, அதை அணைய விடாமல் பாதுகாப்பவர்களும் சரி, திருச்செங்கோட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் சேதம் விளைவிக்கின்றனர் என்பதே உண்மை. மிரட்டுவோருக்கு மட்டுமல்ல; மிரட்டலுக்கு அஞ்சி புறமுதுகிடுபவருக்கும், இதில் பங்குண்டு.
***
குறிப்பு 1: பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை;
ஆனால், அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு நிச்சயம் இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
***
குறிப்பு 2: திருச்செங்கோட்டில், பெருமாள் முருகனை கண்டித்து முழுமையாக கடையடைப்பு நடந்திருக்கிறது. ஜாதிய மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு, அங்கு அந்தளவுக்கு செல்வாக்கில்லை. மார்கழி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்லும் காலத்தில், திட்டமிட்டு கிளப்பிவிட்டதே, பிரச்னை காட்டுத்தீயாக பரவ, முக்கிய காரணமாகி விட்டது.

ஊருக்குள் யாரைப் பார்த்தாலும், சமையல் காஸ், ஆதார் அட்டை, மானியம் என்றே பேசிக்கொள்கின்றனர். நமக்கு, மனைவி, குழந்தைகள், அம்மா, அய்யா, ஆடு, மருத்துவமனை என்றே பொழுது கழிகிறது. வீட்டுப்பாடம் சொல்லித்தருவதற்கும், வீட்டுக்கு சுண்ணாம்படிப்பதற்கும் நேரமின்றி நான் தடுமாறுவது, வானத்தில் சஞ்சரிக்கும் தேவர்களுக்கும், தேவதூதர்களுக்கும் தெரியாதா என்ன? ஆகவே, நானும், யாரேனும் தேவதூதர்கள், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குப்போட்டு, இந்த அயோக்கியத்தனத்துக்கு முடிவு கட்டுவார்கள் என்று, ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.
ஆனால், அந்த தேவதூதர்களுக்கும், நம்மைப்போலவே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்திருக்க வேண்டும். யாருமே வழக்குப்போடவில்லை. அந்தோ பரிதாபம்! கடைசியில், நானும், அந்த வரிசையில் போய் நிற்க வேண்டிய அவலம் வந்து விட்டது. ஆனால், ஒரு விஷயம் பாருங்கள்! நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ, என்னவோ, என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. பணம் பைசா இல்லாவிட்டாலும், திசைக்கொன்றாக நான்கு வங்கி கணக்குகளும் இருக்கின்றன. எல்.பி.ஜி., அடையாள எண்ணும் வாங்கி விட்டேன். கடைசியாக காஸ் வாங்கிய ரசீது கூட, கையில் இருக்கிறது.
எல்லாவற்றையும், நகல் எடுத்துக் கொண்டு, வங்கிக்கும், சமையல் காஸ் ஏஜென்சிக்கும் போவது தான் பாக்கி. ஆனால், நமக்குத்தான் ஆயிரம் வேலைகள் இருக்கின்றனவே? நாட்கள் தள்ளிக்கொண்டே போகின்றன. நம்மைப்போன்று, பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்காகத் தானே, கடைசி நாள் என்று ஒன்றையும், கருணைக்காலம் என்று ஒன்றையும் முடிவு செய்கின்றனர்?
ஆகவே, நான் டிச.,31ம் தேதியன்று, வங்கிக்கும், காஸ் ஏஜென்சிக்கும் போகலாம் என்று இருக்கிறேன். அன்று வங்கியிலும், காஸ் ஏஜென்சியிலும் என்னதான் நடக்கிறது என்று, காத்திருந்து வேடிக்கை பார்த்து விட வேண்டியது என்று, இப்போதே முடிவு செய்து விட்டேன்.
என்ன, வீட்டுப்பக்கம் இருந்து கிளம்பி வரும் தொணதொணப்பை சமாளித்தாக வேண்டும். தினமும் ஆயிரமாயிரம் அம்புகளையும், கம்புகளையும் சமாளிக்கும் நமக்கு, இதுவெல்லாம் எம்மாத்திரம்?
சரி, போகட்டும் விடுங்கள். இந்த எண்ணெய் நிறுவனத்தினர் இருக்கின்றனரே, அமெரிக்க தூதரகம் முன் விசாவுக்கு காத்திருப்பதற்குக்கூட கூச்சப்படும் ஆசாமிகளையும், தங்கள் காஸ் ஏஜென்சி முன் கால் கடுக்க நிற்க வைத்த சதிகாரக்கூட்டம்! ஏதாவது குழப்படி செய்து, நம்மைப் போன்ற நல்லவர்களுக்கும், இம்சையை ஏற்படுத்த திட்டம் தீட்டி இருப்பர். ஆகவே, அவர்களை எப்போதும் நான் நம்புவதே இல்லை. இப்போதைக்கு அவர்களை சமாளிக்கவும் என்னிடம் ஒரு பெரும் ஆயுதம் இருக்கிறது. ஆம், எங்கள் வீட்டில் இன்னும் பயன்படுத்தப்படாத முழு சிலிண்டர் இருக்கிறது. அது தீரும்போதுதானே, மானியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

ஆடு!

Posted: 28/12/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, ,

வீட்டில், அம்மா ஆடு வளர்த்தார்; மாடு வளர்த்தார்; கோழி வளர்த்தார்; நாயும் வளர்த்தார். உலகம் உருண்டை அல்லவா? அந்த அடிப்படையிலும், வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தில் இருக்கும் பிடிப்பின்பேரிலும், மீண்டும் ஆட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும்.

திடீரென்று ஒரு நாள், ‘ஆடு எங்காவது இருந்தால், விலைக்கு வாங்கிக்கொள்ளலாம், பிடித்துக்கொண்டு வா’ என்று, பக்கத்து வீட்டுப் பையனுக்கு உத்தரவு கொடுத்து விட்டார். இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட, நானும், அய்யாவும், ‘எப்படியாவது, ஆடு வாங்கும் திட்டத்தை பணால் ஆக்க வேண்டும்’ என்று கங்கணம் கட்டி களம் இறங்கினோம்.
ஆடு வாங்க புறப்பட்ட நபரை, கடுமையாக எச்சரித்தோம். ‘ஆடு எங்குமே கிடைக்கவில்லை என்று சொல்லி சமாளித்தே ஆக வேண்டும்’ என்று எங்களால் கொலை மிரட்டல் விடப்பட்ட அந்த ஆசாமி, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல், வீதியெங்கும் விஷயத்தை உளறிக் கொட்டி விட்டான். ஆக, நமது ராஜதந்திர முயற்சிகள் எல்லாம், வீணாகி, வீதி மண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
அடுத்த முறை, அம்மா சர்வ ஜாக்கிரதையாக காரியத்தை மேற்கொண்டார். வீட்டு ஜன்னலில் கட்டப்பட்ட ஆடு, ‘மே, மே’ என்று கத்தியபோது தான், ஆடு வாங்கப்பட்டு விட்ட மேட்டரே, எனக்கும், அய்யாவுக்கும் தெரியவந்தது. ஆடு வாங்கிய நாளன்று, என்னைப்போலவே, அய்யாவும், தன் வன்மையான கண்டனத்தை அம்மாவிடம் பதிவு செய்தார். மறுநாள் என்ன நினைத்தாரோ, சல்லைக்கொக்கியுடன், ஆட்டுக்கு தீவனம் கொண்டு வரக்கிளம்பி விட்டார். ‘இவனுடன் கூட்டணி சேர்ந்தால், வீண் பிரச்னை’ என்று ஒரு வேளை நினைத்திருக்கலாம்.
முதல் நாள் எங்களுடன் சேர்ந்து, ஆடு வாங்கியதை நையாண்டி செய்து கொண்டிருந்த, எனதருமை மனைவியோ, மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம், ‘நான்தான் ஆட்டில் பால் கறப்பேன்’ என்று கிளம்பி விட்டார். அரை லிட்டருக்கும் மேலாக பால் கறந்தாகி விட்டது. அன்று முதல் என் மகள்கள் இருவரும் சுடச்சுட ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தனர். நான் மட்டும் விரோதியாக இருந்து என்ன பயன்? ஆகவே, நானும் ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தேன்.
இப்படியே, மூன்று மாதங்கள், வீட்டில் எல்லோரும் ஆட்டுப்பால் குடித்தோம். அய்யாவும், அம்மாவும், ஆட்டுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும், தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது, கொசு கடித்தால், புகை மூட்டம் போடுவது என்று பரபரப்பாகி விட்டனர். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மட்டும், அம்மாவே வைத்துக் கொண்டார்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள், ஆட்டுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஒரே இடத்தில் அசையாமலும், அசை போடாமலும், நின்று கொண்டிருந்தது. அய்யாவும், அம்மாவும், தங்களுக்குத் தெரிந்த வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர்.
ஒரு மடியில் பால் கட்டிக் கொண்டு இருப்பது மறுநாள் தான் தெரிந்தது. கடுமையான வீக்கம். ஆட்டுக்கு, நிற்கவும் முடியவில்லை; படுக்கவும் முடியவில்லை. அம்மாவுக்கு பயம் கண்டு விட்டது. அய்யாவுக்கு வேறு, ஒரு வாரமாக காய்ச்சல். நான் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று, வந்து கொண்டிருந்தேன்.
கால்நடை மருத்துவமனைக்கு ஆட்டை அழைத்துச் செல்வதற்கெல்லாம் அம்மாவால் முடியாது. இதெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான், ‘ஆடெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று நானும், அய்யாவும் சொன்னோம். அப்போது ஏற்க மறுத்த அம்மா, ஆடு நோய்வாய்ப்பட்டதும், வருத்தப்பட்டார். அவரது இப்போதைய கவலை, ‘ஆடு செத்துப் போய் விட்டால், ஆறாயிரம் ரூபாய் போய்விடுமே’ என்பதுதான்.
இதை நினைத்தே, அவருக்கு ரத்த அழுத்தம் வேறு அதிகரித்து விட்டது. திடீரென ஒரு நாள் காலை, ‘எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை. சிரமமாக இருக்கிறது’ என்றார். எனக்கு திடுக்கென்றது. ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாமல் இருந்து விட்டாரோ என்று பயம் வேறு. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ வந்து விட்டது. மருத்துவமனைக்கு சென்று விட்டோம். உடனுக்குடன் சிகிச்சை. ரத்த அழுத்தம் 220 என்ற அளவில் இருந்தது. மருத்துவர், ‘நல்ல வேளை, உடனே வந்தீர்கள்’ என்றார்.
ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தைக் கேட்ட மருத்துவர், குபீரென சிரித்தார். ‘ஆறாயிரம் ரூபாய் ஆட்டுக்கு கவலைப்பட்டு, அதைப்போல் இரு மடங்கு மருத்துவச் செலவு செய்கிறார்களே’ என்பது, அவருக்கு சிரிப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மூன்று நாட்கள், குளுக்கோஸ், மருந்து, மாத்திரை என்று சிகிச்சை பெற்றபின், வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அம்மா.
அதற்குள் நானும், கால்நடை மருத்துவரை, கெஞ்சிக்கூத்தாடி, வீட்டுக்கு அழைத்து வந்து, ஆட்டுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்தேன். அவரும், தொடர்ந்து ஒரு வாரம் ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் போட்டு, ஆட்டை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.
தினமும் அவர் ஆட்டுக்கு சிகிச்சை அளித்துச் செல்லும் போதெல்லாம், நான் 100 ரூபாய் கொடுத்தனுப்புவது வழக்கம். அவர், பணம் வாங்குவதற்கு சங்கடப்படுவார். ‘பரவாயில்லை, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று, கட்டாயப்படுத்தி கொடுத்தனுப்புவேன். ‘அவர் ஆட்டை மட்டும் காப்பாற்றவில்லை’ என்பது, எனக்குத்தானே தெரியும்!