‘நட்டு சரியாக இருந்தால், நட்டம் வராது’ என்பது முதுமொழி. நல்ல நட்டுக்கள், நண்பர்களைப் போன்றவை; அவை, நம்மை நட்டாற்றில் விடுவதில்லை. நாட்டுக்கும் சரி, வீட்டுக்கும் சரி, நட்டுக்கள் மிக அவசியமானவை; அவற்றின்மீது நாட்டமின்றி இருப்பது, நன்மை பயக்காதென்பதை நாட்டோர் நன்றாகவே அறிவர்.
நட்டுக்கும், நாட்டுக்கும் நடுவிலே நிற்பது, நல்லதொரு கால் மட்டும்தானே!
‘நாட்’ என்பதை ‘முடிச்சு’ என்பதும் நாட்டோர் வழக்கமே. நட்டு கழன்றுபோன காரணத்தால், பல ‘நாட்’டுகள் கழன்றுபோனது வரலாறு. நட்டுக்களில் ஒரிஜினல்கள் இருக்கின்றன; போலிகளும் பல உண்டு. அதுபோலவே, ‘நாட்’டுகளிலும் நடப்பதை நாடறியும். ‘நட்’டில் ஆரம்பித்து ‘நாட்’ வரை வந்தவர்கள் பலர் உண்டு. ‘நட்’டில் தொடங்கி, ‘நட்’டில் நடந்து, ‘நட்’டாற்றில் மூழ்கியவர்களும் பலருண்டு. ‘நாட்’டுப்போட்டால், நட்டு சரியாகும் என்று, கால் கட்டுப்போட்டது அந்தக்காலம். நன்றாக இருந்த நட்டு போல்ட்டெல்லாம், ‘நாட்’டின் விளைவால், நாசமாய்ப் போவது, இந்தக்காலம்.
சிலபல இயந்திரங்களைப்போல், மனிதர்கள் அணிந்திருக்கும் நட்டுக்கள் வெளியில் தெரிவதில்லை. அப்படித் தெரிவதாயிருந்தால், இறுகும் ‘நாட்’டுகள் எத்தனையிருக்கும்; இளகும் ‘நாட்’டுகள் எத்தனையிருக்கும் என, இரவு முழுவதும் எண்ணிப்பார்த்தேன். நமக்கே கழன்றுவிடும் போலிருந்த காரணத்தால், நட்டு ஆராய்ச்சியை, அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று, சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. ஒரு சில மாதங்கள் வங்கி இருப்பில் பணம் இல்லையென்றாலும், வரவு செலவு இல்லையென்றாலும், அபராதம் விதிக்கக்கூடாது என்பதே ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையின் சாராம்சம்.
இந்த சுற்றறிக்கையெல்லாம், தனியார் வங்கிகளுக்கு தென்பன்படுவதில்லை போலிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், குறைந்தபட்ச இருப்பு, சேமிப்புக் கணக்கென்றால், பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும். மாதாந்திர சராசரியில் தொகை குறைந்திருந்தால், 270 ரூபாய், நமது கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம், குறுஞ்செய்தி கூட அனுப்புவதில்லை. ஆக, நம் கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்ட விவரமே, நமக்குத்தெரிவதில்லை; மாதாந்திர அறிக்கை வரும்போதுதான் தெரியும். இது ஒரு வகையில் நூதன கொள்ளை.
விசாரித்தால், ‘உங்களுக்கு ஏ.டி.எம்., கார்டு, காசோலை புத்தகம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என்று ஏகப்பட்ட வசதிகளை கொடுத்திருக்கிறோம்’ என்று விளங்காத விளக்கம் வேறு! ரிசர்வ் வங்கிகூட, தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் போன்று, தயிர் சாத வகையறாக்களைத்தான் போட்டுத்தாக்கும் போலிருக்கிறது!

Advertisements

indexஇவ்வளவு காலமாக, குஷ்பு இல்லாமல் கலகலத்துப்போயிருந்த தமிழக அரசியல் களம், அவரது மீள்வருகையால் களைகட்டியிருக்கிறது. அது சரி, எத்தனை நாளைக்குத்தான் டிவி விவாதங்களில், மனுஷ்யபுத்திரன்களையும், கோபண்ணாக்களையும், ஞானசேகரன்களையும், ஆவடி குமார்களையும் சகித்துக் கொண்டிருப்பது? அந்த வகையில், அவரது வருகை, மெச்சத்தக்கதே!

கோவில் கட்டிக் கொண்டாடிய தமிழர்களுக்கு எதுனாச்சும் சேவையாற்ற வேண்டிய கடமை, தனக்கு இன்னும் நிறையவே இருப்பதாக குஷ்பு நினைப்பதில் தவறேதும் இல்லை. இப்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை. நாயக வேடம் போடும் நடிகர்களைப்போல், ரசிகர்களை ஏமாற்றிப் பிழைப்பதுமில்லை; மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக்கொண்டு, அதிகாரம் மிகுந்திருக்கும் அரசியல் கட்சியினருக்கு கூழைக்கும்பிடு போடுவதுமில்லை. ஆகவே, குஷ்பு, மீண்டும் அரசியல் களம் இறங்குவது வரவேற்கத்தக்கதே.
அவர் தி.மு.க.,வுக்குப் போனார். அங்கே பிரச்னை. என்ன ஏதென்று நமக்குத்தெரியாது. அவரும், ‘சொல்ல மாட்டேன்’ என்கிறார். இப்போது, ‘வீதி வீதியாகப் போய், காங்கிரஸை பலப்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார். தாராளமாக செய்ய வேண்டியதுதான்.
ஆனால், அவர் தமிழில் பேசாமல் பார்த்துக் கொள்வதற்கு இளங்கோவன்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம், ‘காங்கிரஸை விட பா.ஜ.,தான் அதிக ஊழல் செய்துள்ளது’ என்று குஷ்பு பேசித் தொலைத்துவிட்டால், எதிர்கோஷ்டிக்காரர்கள், இளங்கோவன் மேல் பெட்டிசன் போட்டுவிடுவர்; அவர் பதவிக்கே ஆபத்தாகி விடும்!
எனக்கென்னவோ, குஷ்புவின் மீள்வருகையில் உள்நோக்கம் ஏதோ இருக்கும்போலத் தெரிகிறது. தன்னை விளக்குமாற்றிலும், செருப்பிலும் அடிக்க முற்பட்ட தமிழர்களுக்கு, பாடம் கற்பிக்கும் அவரது திட்டம், அரசியலில் ஒதுங்கி இருந்தால் நிறைவேறாது; கட்சியில் சேர்ந்து, ஊர் ஊராகச் சென்று மேடையேறியும், வேனில் இருந்தபடியும், கலவை சாதம்போல் தமிழ் பேசி, தமிழர்களை ஓட ஓட விரட்டுவது அவரது சபதமாக இருக்கவும்கூடும். ‘அப்படியொரு சூழ்ச்சிக்கு, இளங்கோவனும், சோனியாவும் பலியாகி விட்டார்களோ’ என்று எண்ணவும் தோன்றுகிறது!

தமிழ் மீடியத்தில் படித்த பலருக்கும், ‘ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியவில்லையே’ என்ற வருத்தம், நிச்சயம் இருக்கும்; எனக்கும் பல ஆண்டுகள் அப்படித்தான் இருந்தது. எங்காவது பயணிக்கும்போது, சக பயணிகளான பொட்டு பொடிசுகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கிலத்திலேயே அழுவதைப் பார்க்கும்போது, பேரவமானமாக இருக்கும்.

பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு, லாலு பிரசாத், ராமவிலாஸ் பாஸ்வான் மாதிரியானவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு, நம் ஆங்கிலம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. எங்காவது ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு போயாவது, ஐயம் திரிபற ஆங்கிலம் பேசிப் பழகி விட வேண்டும் என்று தீராத ஆவல். ஒரு நாள் பேச்சுவாக்கில் இருந்தபோது, நண்பரும் அப்படியே சொன்னார். அப்புறமென்ன? துணைக்கு ஆள் கிடைத்து விட்டது; ‘பயிற்சி தரும் ஆள் யாராவது கிடைக்கட்டும்’ என்று காத்திருந்தோம்.
அப்படி இருந்த நாட்களில்தான், அலுவலகத்துக்கு பக்கத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆங்கில பேச்சுப்பயிற்சி சொல்லித்தருவதாக போர்டு மாட்டினார். அவர் பெரும்பாலான நேரங்களில் பயிற்சிக்கு ஆளில்லாமல், ரோட்டில் போகும் வரும் வாகனங்களை கணக்கெடுப்பதாக ஆபீஸ் பையன் தகவல் சொன்னான்.
ஆகவே, அந்த ஆசிரியையிடம் சென்று நானும் நண்பரும் விசாரித்தோம். ‘இரண்டு மாதம் வகுப்பு, மூவாயிரம் கட்டணம்’ என்று கறாராகப் பேசினார், ஆசிரியை. நாங்கள் இருவரும் பத்திரிகை செய்தியாளர்கள் என்று தெரிந்தவுடன், முன்கூட்டியே பணத்தை வைத்தால் தான் வகுப்பென்று (!) சொல்லி விட்டார். அவருக்கு என்ன பயமோ?
வேறு வழியின்றி மொத்தமாக முன்பணம் கொடுத்து வகுப்பில் சேர்ந்தோம். இருவருக்கு மட்டும் தனி வகுப்பு. இருவரது ஆங்கிலத் திறனையும் சோதித்த ஆசிரியை, இரண்டே மாதத்தில் இருவரையும் ஆங்கிலத்தில் பேச வைத்து விடுவதாக உறுதியாகச் சொன்னார். ஆக, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அமர்க்களமாக தொடங்கியது.
ஒரு குயர் நீளவாக்கு நோட்டுடனும், பேனா, பென்சில், அழிக்கும் ரப்பருடனும் நாங்கள் வகுப்புக்குச் செல்வது கண்டு, அக்கம் பக்கத்து அலுவலகத்தார் வாயைப்பிளந்தனர். கூடவே இருக்கும் சில பேரோ, கும்பல் கூடி பேசிச்சிரிப்பதும், குதூகலப்படுவதுமாக இருந்தனர். ‘காலம் போன கடைசில…’ என்பதாக, காதுபடப் பேசும் கருத்துக்கள் எல்லாம், நம்மைக் குறி வைத்து ஏவப்பட்டதாகவே எனக்குப் புலப்பட்டன. ‘நீங்க குடிங்க யுவர் ஹானர்’ என்ற லொடுக்குப்பாண்டி சினிமா டயலாக்போல, ‘அவங்க கெடக்குறாங்க சார்’ என்பான் ஆபீஸ் பையன்.
ஆரம்பத்தில் வகுப்பெல்லாம் ஜோராகத்தான் இருந்தது. வகுப்பில் மிகத்தீவிரமாக கவனித்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வீட்டில் எழுதிப்பார்க்கும் போதும், வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார்ப்பது போல கனவு காணும்போதும், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
கனவெல்லாம் நனவாகி விடுகிறதா என்ன? நண்பர் கொஞ்சம் விளையாட்டுப் பேர்வழி. ஆசிரியை, மிகத்தீவிரமாக ஆங்கில இலக்கணம் பற்றி வகுப்பெடுக்கும் வேளையில், ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்பார். ஆசிரியைக்கே தெரியாத ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் விசாரிப்பார். வெளியில் வேடிக்கையும் பார்ப்பார். திடீரென கெக்கே பிக்கேவென்று சிரித்தும் தொலைப்பார். அவருக்கு அடிக்கடி போன் வேறு வந்து விடும். ஆசிரியைக்கு சங்கடமாக இருக்கும்; எனக்கோ, தர்ம சங்கடமாக இருக்கும்.
நாட்கள் செல்லச்செல்ல, வகுப்புக்கு மட்டம் போடவும் ஆரம்பித்தார் நண்பர். அவர் வராமல் விடுவதுடன், ‘நாளைக்குப் போலாம் விடுங்க சார்’ என்று நமக்கும் வேறு சொல்லி விடுவார். ‘தனியாகப் போகத்தான் வேண்டுமா’ என்று நமக்கும் தோன்றும். இப்படியே, இன்று, நாளை என்று தள்ளிப் போடப்பட்ட வகுப்புக்கு, பிறகு போகவே இல்லை.
ஆசிரியை, நான்கைந்து முறை, ஆபீஸ் பையனிடம் சொல்லி விட்டார். வழியில் எதிர்ப்பட்டபோது, என்னிடமே ஒரு முறை விசாரித்தார். ‘ஒர்க் கொஞ்சம் அதிகமாய்டுச்சு பாத்திக்கிடுங்க’ என்று, நண்பரின் மொழியில் சொல்லி சமாளித்தேன். யார் விட்ட சாபமோ, மீதமிருந்த ஒரு மாத வகுப்புக்கு போக முடியவே இல்லை.
அதிர்ஷ்டவசமாகவும், தெய்வாதீனமாகவும், ஆங்கிலம் மயிரிழையில் உயிர் தப்பித்து விட்டதாக, அக்கம் பக்கத்து, அலுவலக வட்டாரங்களில், அவ்வப்போது கருத்து தெரிவிக்கப்படுவது, வழக்கமாகியிருந்தது. ஆள் இல்லாத நேரங்களில் உரக்கவும், இருக்கும் நேரங்களில் முணுமுணுப்பாகவும், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நமக்கு கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தன.
‘‘விடுங்க சார், பொறாமைக்காரப் பசங்க, எங்க இவுங்கல்லாம் இங்லீஷ் படிச்சுருவாங்ளோன்னு கடுப்புல கெடந்து அலையுதாணுக,’’ என்று, ஒரே வாக்கியத்தில், விமர்சனத்தை புறக்கணித்துவிட்டார் நண்பர். ஆண்டுகள் பல கடந்தாலும், ஆங்கிலம் பேசுவது என்னவோ, இன்னும் மாயமான் வேட்டையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது!

கீறல் விழுந்த பழைய ரெக்கார்டுகளை கேட்ட அனுபவம், வாட்ஸப், பேஸ்புக் தலைமுறைகளுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு அந்த அனுபவத்தை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார், ரஜினி. பாவம், எவ்வளவோ அடிவாங்கியும், அவருக்கு இன்னும் புத்தி வரவில்லை போலிருக்கிறது.
‘கடவுள் விரும்பினால், அரசியலுக்கு வருவேன்’ என்பதாக, மீண்டும் ஒரு முறை அவரது திருவாய் மலர்ந்திருக்கிறது. அவர், ஏழு கடல் ஏழு மலை கடந்து கை ஊன்றிக்கரணம் போட்டு, அரசியல் களம் புகுந்துதான், ஏழரைக்கோடி தமிழர்களை உய்விக்க வேண்டும் என்றெல்லாம், கட்டாயம் எதுவுமில்லை.
ஏற்கனவே இங்கு, புரட்சியாளர்களும், இனமானத் தமிழர்களும், இன்னும் சில கத்தரி, தக்காளி, வெங்காயங்களும், அரசியலை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, கடும் இட நெருக்கடி நிலவிக் கொண்டிருப்பதாலும், இருக்கின்றவர்கள் இம்சையே சகிக்க முடியாத சாக்கடையாக ஓடிக் கொண்டிருப்பதாலும், மேலும் ஒரு சாக்கடை இங்கு யாருக்கும் தேவையில்லை என்பதை, அவர் மண்டையில் உறைக்கும்படி யார்தான் சொல்லப் போகிறார்களோ?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, ஒரு முறை அவர் ஏதோ உளறி வைக்கப்போய், ஆட்சி மாறிய கதை தமிழகத்தில் நடந்து விட்டது. அவரது உளறலுக்கு, அடுத்த தேர்தலிலேயே மார்க்கெட் போன கதை நாடறியும். ஆகவே, வண்டி ஓட வேண்டுமெனில், வாலைச் சுருட்டிக் கொண்டு வாழ்த்துப்பா பாடுவதே உசிதமென, அவர் காலத்தை ஓட்டுவதை கலையுலகம் அறியும்; கண்மணிகளாம் ரசிகர்களும் அறிவர்.
அரசியல் அதிகாரத்தை அடைவதுபோல் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நிச்சயமாக, ரஜினிக்கும் உண்டு. ஆனால், அவருக்காக காத்திருந்த ரயில் புறப்பட்டுப் போய், 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் டிக்கெட்டை காட்டி விற்க முயற்சிப்பது, குள்ளநரித்தனமேயன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?
இப்படி அவ்வப்போது பேசுவதன் மூலம், அவர் சம்பாதிக்கப்போவது, நக்கல், நய்யாண்டிகளை மட்டுமே. கிணற்றில் குதியென்றால், கேள்வி கேட்காமல் குதிக்கும் ரசிகர் கூட்டம், தமிழகத்தில் அவருக்கிருந்த காலம் மாறி, பல்லாண்டுகள் கடந்து விட்டன.
முதல் ஷோ டிக்கெட், அணிவதற்கு டிஷர்ட், தொப்பி, தோளில் மாட்டும் பை, தோரணம், கொடிக்கெல்லாம் கொள்ளை விலை வைத்து, வகை தொகையாய் வசூலித்து, முடிந்தமட்டும் சுரண்டிக் கொழுத்த ரஜினியின் குடும்ப வரலாறு, ரசிகக்கண்மணிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சொந்தக்காசு செலவழித்து கட்சி நடத்துவதற்கெல்லாம், அவருக்கு வீட்டனுமதி கிடைக்காது என்பதை, ரசிகர்கள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டார்கள்.
‘அவர் அரசியலுக்கு வருவார்; ஆட்சியைப் பிடிப்பார்; நாமும், ஒன்றியம், நகரம், வட்டம், கவுன்சிலராகி காசு பார்க்கலாம்’ என்ற கனவில் திரிந்த ரசிகர்கள், கிழடு தட்டிப்போய், மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம், இப்போதைய ரஜினியின் பேச்சு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத்தான் இருக்கும்.
கடவுள் விட்ட வழியென்றும், எல்லாம் அவர் விருப்பம் என்றும் ஏதாவது பேசிக்கொண்டு திரிந்தால், பா.ஜ.,காரர்கள் மனம் இளகி, ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் கூட, ரஜினியின் பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்.
‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்றார் அப்துல் கலாம். ரஜினியையும் சில கனவுகள், தூங்க விடாமல் செய்கின்றனபோலும். ஊமையர் கனவு கண்டதுபோல், அவரால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

டூவீலர் வாங்கச் செல்லும்போது, விவரமான ஆட்களை உடன் அழைத்துச் செல்வது எல்லோருக்கும் வழக்கம்தான். மற்றவர் அழைத்துச் செல்வதற்கு காரணம் என்னவோ, எனக்குத்தெரியாது. ஆனால், நான் அழைத்துச் சென்றதற்கு ஒரே காரணம், ‘எனக்கு அதை ஓட்டத்தெரியாது’ என்பது தான். வாங்கும் வண்டியை வீடு வரை ஓட்டி வருவதற்கு ஆள் வேண்டுமல்லவா? ஆகவே, நன்கு வண்டி ஓட்டத் தெரிந்த ஆட்களை அழைத்துச் சென்று விடுவேன். முதல் முறை, மொபட் வாங்கியபோது அப்படித்தான்.
ஷோரூமில் இருந்து அலுவலகம் வரை, ஆபத்பாந்தவன் ஒருவர் வண்டியை ஓட்டி வந்தார். அதன்பிறகு வீடு செல்வதற்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. ‘இனி நான் வர முடியாது. நீயே ஓட்டிச்சென்று விடு’ என்று வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து விட்டார். நானும் அப்படியே ஆக்ஸிலரேட்டரை முறுக்கியபடி வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் வண்டியை ஸ்டார்ட் செய்வது எப்படியென்று தெரியாமல், மணிக்கணக்கில் போராடி, அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியதெல்லாம் தனிக்கதை.
அந்த மொபெட் அடிக்கடி கழுத்தறுத்த காரணத்தால், ‘பைக் வாங்கித் தொலையுங்கள்’ என்று, எல்லாம் வல்ல பொதுக்குழுவும், செயற்கரிய செய்யும் செயற்குழுவும் ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில், அதிகாரமே இல்லாத அவைத்தலைவராகிய நான், பணத்துடனும், பக்கபலமாக பைக் ஓட்டத்தெரிந்த இருவருடனும், ஷோரூமுக்கு போனேன். அவர்கள் பைக் ஒன்றை கொடுத்து விட்டனர்.
கூட வந்த நண்பர் கேட்டார்.
‘சார் ஒங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா’
‘தெரியாதே’
‘தெரியாம எப்படி சார்? அதுவும் பெரிய வண்டி எடுக்குறீங்க’
‘அதெல்லாம் ஓட்டலாங்க’
‘சார், பைக் ரெகுலரா ஓட்டறவுங்களே, இந்த வண்டி ஓட்டுறதுக்கு கொஞ்சம் தயங்குவாங்க’
‘அதெல்லாம் பாத்துக்குலாங்க, நீங்க இன்னிக்குமட்டும் வீட்டு வரைக்கு வண்டிய கொண்டு வந்து விட்டுருங்க’
அப்போதைக்கு அவர் வாயை மூடி விட்டேன். நண்பர் மனதுக்குள் சிரித்திருக்கக்கூடும்.
சரி, ஒரு வழியாக, நண்பரின் புண்ணியத்தில், பைக் வீடு வந்து விட்டது.
மனைவிக்கும், குழந்தைகளுக்கும், புது பைக்கில் சவாரி செய்ய ஆசை. ஆனால், நமக்குத்தான் பைக் ஓட்டத் தெரியாதே! ‘நல்லபடியாக பைக் ஓட்டிப் பழகியபிறகு கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறி விட்டேன். ‘இவுரு எப்ப பைக் ஓட்டிப் பழகுறது, நாம எப்ப சவாரி போறது’ என்று, யாரோ இழுப்பதுபோல் காதில் விழுந்தது. மானம் அவமானம் பார்த்தால் முடியுமா?
புது பைக் வீட்டுக்கு வந்து விட்ட காரணமோ என்னவோ, நாட்கள் வெகுவேகமாக நகரத் தொடங்கின. ஒரு வாரம் ஆனது, பத்து நாட்கள் ஆகின, 15 நாட்களும் வந்து விட்டன. அதிதீவிர முன்னெச்சரிக்கை உணர்வு தடுத்துக் கொண்டிருந்தபடியால், நான் பைக் ஓட்டவே இல்லை. அலுவலகத்திலும், வீட்டிலும், நக்கல், நையாண்டிகளுடன் பொழுதுகள் கடந்து கொண்டிருந்தன. நேரடியாக யாரிடமும் போய், ‘உங்கள் வண்டியில் ஓட்டிப்பழக்கி விடுங்கள்’ என்று கேட்பதற்கு கூச்சம்.
நண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்பேன். ஆலோசனை மட்டும்தான்; செய்முறைப் பயிற்சி எதுவும் இல்லை. ஆகவே, வீட்டில் நிறுத்தியிருந்த வண்டியில் தூசு படிய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச்செல்ல மனைவியின் சவுண்ட் வால்யூம் வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது.
‘இப்பிடி ஊட்டுக்குள்ள நிறுத்தி வெக்குறதுக்கா, அறுபதாயிரம் குடுத்து பைக் வாங்குச்சு’ என்று, காலையில் வீட்டுக்குள் கேட்ட கேள்வி, இரவு வரை, காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அன்று, இரவு முழுவதும் ஒரே யோசனை.
மறுநாள் காலை 6 மணியிருக்கும். வண்டியை கஷ்டப்பட்டு ஸ்டாண்டில் இருந்து நகர்த்தி, ஸ்டார்ட் செய்தேன். பட்டன் ஸ்டார்ட்டர் தானே, அதில் ஒன்றும் சிரமம் இல்லை. நாம் கொஞ்சம் உயரமாக வேறு இருப்பதால், இரு புறமும் கால்களை ஊன்றிக் கொண்டே செல்லவும் வசதியாக இருந்தது. மெதுமெதுவாக, ஒவ்வொரு கீராக மாற்றி, ஆக்ஸிலரேட்டரை முடுக்க, வண்டி நகர ஆரம்பித்தது. ‘எப்படி ஓட்டுகிறானோ’ என்ற கவலையிலும் பயத்திலுமாக, வீட்டில் எல்லோரும் பின்தொடர்ந்து பார்ப்பது தெரிந்தது. இந்த அற்புதக்காட்சியை, இவ்வளவு விரைவில் பார்க்க நேரிடும் என்று அவர்கள் கனவிலும் எண்ணியிருக்க வாய்ப்பில்லைதான்.
ஆரம்ப வினாடிகளில் இருந்த தடுமாற்றம், வண்டி நகரத் தொடங்கியதும், போயே விட்டது. அப்பா…! ஒரு வழியாக, பைக் ஓட்டியாகி விட்டது. ஓரிரு கிலோமீட்டர் சென்றபிறகு, வண்டியை திருப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். என் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதம், என் கண்களுக்கே தெரிவது போலிருந்தது. உலகத்தை வெற்றி கொண்ட மிதப்பு என்பார்களே, அன்று எனக்குள் வந்தது, அதையெல்லாம் கடந்த ஒன்று. பிறர் உதவியின்றி, பைக் ஓட்டிப்பழகியவர்களுக்குத் தெரியும், அது எப்படிப்பட்டதென்று!

கொரியப்போர் குறித்த பிரபல நகைச்சுவை ஒன்றுண்டு. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் களம் இறங்கிய போர் அது. கொரிய வீரர்கள் முன்னிலையில், போர் உத்திகள் குறித்து அமெரிக்க ராணுவ தளபதி, உரை நிகழ்த்தினார்.

அவரது உரையை, கொரிய தளபதி ஒருவர், உள்ளூர் மொழியில், மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்க தளபதி, தன் பேச்சின் இடையே, ஆங்கிலத்தில் நகைச்சுவை துணுக்கு ஒன்றை குறிப்பிட்டார். பத்து நிமிடங்களுக்கு மேலாக, அவர் நீட்டி முழக்கிய நகைச்சுவையை, மொழி பெயர்க்க வேண்டிய கொரிய தளபதியோ, ஒரே வினாடியில் கூறி விட்டார். அதைக்கேட்டதும், கூடியிருந்த ராணுவ வீரர்கள் குபீர் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தனர்.
அமெரிக்க தளபதிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘நாம் பத்து நிமிடங்களுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டு கூறிய நகைச்சுவையை, இவன் ஓரிரு வினாடிகளில் கூறி விட்டானே’ என்ற திகைப்பு. அதைவிட ஆச்சர்யம், கொரியத் தளபதி ஒரே வினாடியில் சொன்ன நகைச்சுவைக்கு, வீரர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பதுதான்.
கொரிய தளபதியிடம், அமெரிக்க தளபதி, விசாரித்தார்.
‘‘நான் பத்து நிமிடம் சொன்னதை, நீ ஒரே வினாடியில் சொல்லி விட்டாயே, பாராட்டுக்கள்’’
‘‘இல்லையில்லை, நீங்கள் பேசியதை நான் மொழிபெயர்க்கவும் இல்லை, நகைச்சுவை சொல்லவும் இல்லை’’
இது கொரிய தளபதியின் மறுப்பு.
‘‘வேறு என்னதான் சொன்னாய்’’
ஆவல் தாங்க முடியாமல் விசாரித்தார் அமெரிக்கர்.
‘‘அமெரிக்க தளபதி ஜோக் சொல்லியிருக்கிறார். எல்லோரும் சிரியுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன்’’ என்றார், கொரியத்தளபதி.
‘பலம் பொருந்தியவர்கள் செய்யக்கூடியது, எதுவாக இருந்தாலும், அதற்கொரு ஆமாம் போட்டு வைப்போமே’ என்கிற மனித எண்ணம்தான், இத்தகைய மனநிலைக்கு முக்கிய காரணம். இப்படி பல சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்றன. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, பலப்பல உதாரணங்களை கூறிவிட முடியும்.
எங்கள் வீட்டில் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றை சொல்லியே தீர வேண்டும். சமையல் முடிந்து, சாப்பிட ஆரம்பித்தவுடன், என் மனைவி, ‘குழம்பு எப்படி’, ‘ரசம் எப்படி’, ‘பொரியல் எப்படி’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார். மகள்கள் இருவரும், அடுத்த வினாடியே, ‘சூப்பர்ம்மா’ என்று சொல்லி விடுவர். வேறு ஏதாவது சொன்னால், விளைவுகள் என்னவாக இருக்குமென்று, அவர்களுக்குத் தெரியாதா?
ஆகவே, சாப்பிட ஆரம்பிக்கும்முன்னரே, ‘குழம்பு சூப்பர்ம்மா’ என்று மகள்கள் இருவரும் சொல்லி விடுவதெல்லாம், எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக நடந்தேறியிருக்கிறது. தேங்காய் சட்னி, புதினா சட்னி முதல் கொத்தமல்லிச் சட்னி வரை, சாதாரண சாம்பார் முதல் சிக்கன், மட்டன் வரை எல்லாவற்றுக்கும், இதே கேள்வி; இதே பதில்தான் வரும். பல வீடுகளில் கணவன்மார்களும், தங்கள் நலன் கருதி, இதேபோன்று ‘மேட்ச் பிக்ஸிங்’ பதில்களை சொல்லிக் கொண்டிருப்பதாகவும் காதுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம், ‘கொரியத்தளபதியின் நகைச்சுவையை அவர்களும் படித்திருக்கக்கூடுமோ’ என்று, நான் எண்ணிக்கொள்வதுண்டு.

நண்பர் திருமணத்துக்காக, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தேன். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், வாய்ப்பிருந்தும் போகமுடியாத குறையை போக்கும் வகையில் அமைந்தது நண்பரின் திருமணம்.
முன்பிருந்ததை காட்டிலும், கோவிலில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், மலையிலும், கோவில் வளாகத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரியும். அவற்றின் பாவனைகளை ரசித்து மகிழ்வதற்கென்றே பக்தர்கள் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவர். கோவிலுக்கு செல்லும் சிறுவர், சிறுமியருக்கும், குரங்குக்கூட்டத்தின் சேட்டைகள்தான், நல்ல பொழுதுபோக்கு.
பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை, குரங்குகள் பறித்துச் செல்வதும், அதில் இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு, பையை வீசி எறிவதும், தினமும் பல முறை நடக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்கள். சென்னிமலை கோவிலிலும் இதே நிலை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.
நேற்று சென்றிருந்தபோது, தேடித் தேடிப்பார்த்தேன். ஒரு குரங்கு கூட தென்படவில்லை.
என்ன ஆயிருக்கும் அந்த குரங்குகள்? ஏனோ, மனதுக்குள் நெருடலாகவே இருந்தது.
ஆனால், வேறு ஒரு கூட்டத்தை கோவிலில் காண நேரிட்டது. அது, பணம் பறிக்கும் கூட்டம். சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்களை தேடி வந்து பொட்டு வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி, பணம் பறிக்கிறது. விவரம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பக்தர்கள், புலம்படியபடியே ‘காணிக்கை’ கொடுக்கின்றனர். சென்னிமலையிலும் இப்படி கட்டாய வசூல் நடப்பதை பக்தர்கள் காண முடியும்.
தமிழ்ப்புத்தாண்டில் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரும் வழியில் சென்னிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்தாண்டில் சென்றபோது, குடும்பத்தினர் வருவதற்காக நான் காத்திருந்த வேளை, பூஜைத்தட்டுடன் வந்த ஒருவர், திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டார். நான் கேட்கவே இல்லை. மறுப்பு தெரிவித்தபோது, ‘சாமி பிரசாதம், மறுக்கக்கூடாது’ என்கிறார்.
பொட்டு வைத்தவுடன் நகர்ந்தால், ‘காணிக்கை கொடுக்கணும்’ என்றார். பாக்கெட்டில், நூறும், ஐநூறுமாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘சில்லரை இல்லை’ என்றதற்கு, ‘கொடுங்க, நான் தருகிறேன்’ என்கிறார். சென்னிமலை ஆண்டவருக்காக, அந்த நபரை, சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தாண்டில் சென்றபோது, உஷாராகி விட்டோம்.
எனக்கென்னவோ, மலைக்கோவில்களில் குரங்குக்கூட்டம் குறைவதற்கும், பணம் பறிக்கும் கூட்டம் பெருகுவதற்கும், ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது!

இருப்பதில் சிறந்தவழி இதுவேயென்று, அரைமனது, கால் மனதுடன் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்ட அரசியல் கட்சிகள், கொண்டாட்ட மனநிலையில் இருப்பதற்கு, காரணம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்து விட்டன.
கேம்பஸ் இன்டர்வியூவில், இரண்டு மூன்று நிறுவனங்களின் அப்பாயின்மெண்ட் ஆர்டர் பெற்றுவிட்டு, எதில் சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மாணவர்களைப் போல், இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லிக்காய் மூட்டை போலிருந்த தமிழக பா.ஜ., கூட்டணி, இப்போது சந்தையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தே.மு.தி.க.,-ம.தி.மு.க.,-பா.ம.க., ஆகியவை நல்ல வியாபாரியை எதிர்பார்த்து நிற்கின்றன.
சந்தைக்கு இன்னும் கொஞ்சம் சரக்கு வரக்கூடும் போலிருக்கிறது. இருக்கும் சரக்குகளுக்கு, தி.மு.க., முதல் விலையைக் கூறி விட்டது. அவசரப்பட்டு விலைபோக சரக்குகள் தயாரில்லை.
தமிழக காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை பிளவுபடுகிறது. குட்டிகளை விட்டு குளத்தின் ஆழம் பார்க்கும் குரங்குகளை எதிர்கொள்ள, ஓரணியில் இருந்த வாசனும், இளங்கோவனும், நேருக்கு நேர் மோதும் சூழல்.
பாவம் இளங்கோவன்! தலைக்கு மேல் வெள்ளம்போனபிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. முந்தைய முறையைப்போல் அல்லாமல், இப்போது அவரிடம் சத்தியமூர்த்தி பவன் இருக்கிறது; காங்கிரஸ் மைதானமும் இருக்கிறது; கட்சியும் பணம் தரக்கூடும். ஆகவே, வீடுகளை விற்கும் அவசியம் அவருக்கு இம்முறை வர வாய்ப்பில்லை.
தன்னை கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யாமல் விட்ட கோபத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை, ‘கோமாளின் கூட்டம்’ என்றார், மொகிந்தர் அமர்நாத். இன்றோ, நாளையோ வாசனும் அப்படிச் சொல்லக்கூடும்.
பதவி, பணம் இழந்து, மானம் இழந்து, தந்தைக்கிருந்த மரியாதையும் இழந்து நிற்கும் வாசன், மிஞ்சியிருக்கும் தொண்டர்களையும், ஜால்ராக்களையும், கரையேற்றி விடுவாரா, கால ஓட்டத்தில், காங்கிரஸ் வெள்ளத்தில் கரைந்து விடுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும்.

காட்சி 1
………….
இடம்: வெள்ளை மாளிகை டைனிங் ஹால், அமெரிக்கா
………………………………………………….
மிசேல்: சேச்சே, மானமே போவுது, ஏந்தான் நீங்க பிரெசிடென்ட் ஆனீங்களோ, என் பிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் பதிலே சொல்ல முடியலே, வெளில தலைகாட்ட முடியல!
ஷாஸா: எனக்குந்தாம்மா, என் பிரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாரும் கேலி பண்றாங்க. காலேஜ் போகவே புடிக்கலை!
ஒபாமா: என்ன ரெண்டு பேரும் நை நைன்னு பேசீட்டே இருக்கீங்க, எனக்கு இருக்க பிரச்னைல நீங்க வேற, ஒரே தொணதொணப்பு!
மிசேல்: பின்ன என்ன? ஒரு ராக்கெட் ஒழுங்கா விடறாங்களா? தப்பித்தவறி ஒண்ணு விட்டா, பத்து ராக்கெட் வெடிக்குது, இந்த நாசாக்காரங்கள எல்லாம், கழுத மேய்க்க விட்டாத்தான் புத்தி வரும்!
ஒபாமா: ச்சே… என்ன பண்றதுன்னே தெரியலை. கேட்டா, அது இதுன்னு காரணம் வேற சொல்றாங்க…!
மிசேல்: இந்த இந்தியாக்காரங்கள பாருங்க, செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாங்க, இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போறாங்களோ, பேசாமா உங்காளுங்க எல்லாரையும், இந்தியாவுக்கு டிரெய்னிங் அனுப்பிடுங்க. இல்லைன்னா, நாசா காண்ட்ராக்ட் எல்லாத்தையும் இந்தியாக்காரங்களுக்கு கொடுத்திடுங்க, வெடிச்சாக்கூட, பழியை அவங்க மேல போட்டுடலாம்.
ஒபாமா: ஸ்டுப்பிட் மாதிரி பேசக்கூடாது மிசேல். ஏதாச்சும் நல்ல உருப்படியா ஐடியா இருந்தா சொல்லு!
மிசேல்: ஒரே ஐடியாதான். நேரா இன்டியன் பி.எம்., மோடி கிட்ட பேசுங்க. அவுங்க ராக்கெட் விடறக்கு என்னவெல்லாம் டெக்னாலஜி பாலோ பண்றாங்கன்னு கேளுங்க, கொஞ்சம் நாசாக்காரங்களுக்கு ஹெல்ப் பண்ணச்சொல்லுங்க. அந்தாளு நல்ல மனுசன். நீங்க கேட்டா நிச்சயம் ஹெல்ப் பண்ணுவாரு.
ஒபாமா: நல்ல யோசனைதான். இன்னைக்கே மோடி கிட்ட பேசுறேன்!
………..
காட்சி 2
…………
இடம்: வெள்ளை மாளிகை, அதிபர் அலுவலக அறை, அமெரிக்கா
…………………………………………………………….
ஒபாமா: செக்ரட்ரி, இன்டியன் பி.எம்., மோடி லைன் வாங்கிக் கொடுங்க…
செக்ரட்டரி: ஒன் செகண்ட் சார்…
(சற்று நேரத்தில்)
செக்ரட்டரி: சார், ரிங் போகுது, நீங்களே பேசுங்க…!
மோடி: நமஸ்தே, மே பிரதான்மந்த்ரி போல் ரஹா ஹூன்!
ஒபாமா: நமஸ்தே நமஸ்தே மிஸ்டர் மோடிஜி, மே ஒபாமா ஸ்பீக்கிங்!
மோடி: குட்மார்னிங் குட்மார்னிங் ஒபாமாஜி, எப்டி இருக்கீங்க? ஹிந்திகூட கத்துக்கிட்டீங்க போல?
ஒபாமா: ஹாஹாஹா… நல்ல இருக்கேன் மோடிஜி! எப்டி என்னோட ஹிந்தி?
மோடி: கேக்கவே ப்ளசன்ட்டா இருக்கு ஒபாமாஜி. வீட்டுல தங்கச்சி மிசேல், குழந்தைங்க எல்லாம் எப்டி இருக்காங்க. பெரிய பாப்பா காலேஜ் போறாங்களா… எப்படி பீல் பண்றாங்க?
ஒபாமா: எல்லாம் நல்லா போய்ட்டிருக்காங்க, மிசேல் இன்னைக்கக்கூட உங்களப்பத்தித்தான் பேசுனாங்க, அது மட்டுமில்ல மிஸ்டர் மோடி, நீங்க அமெரிக்கா வந்துட்டுப் போனதுல இருந்து, எங்க எம்.பி.,ஸ், செக்ரட்ரீஸ், கவர்னர்ஸ், பிசினஸ் பீப்பிள்னு நான் பாக்குற எல்லோரும் உங்களப் பத்தித்தான் பேசுறாங்க…!
மோடி: அப்டியா, ரொம்ப ஹேப்பியா இருக்கு ஒபாமாஜி.
ஒபாமா: அப்புறம், இப்பக்கூட, ரெண்டு ஸ்டேட் எலக்ஷன்ல வின் பண்ணீட்டீங்களாமே, கங்ராஜூலேசன்ஸ், கங்ராஜூலேசன்ஸ்!
மோடி: அது ஒரு பெரிய விஷயம் இல்ல ஒபாமாஜி, எல்லாம் நம்மாளு, அமித்னு ஒர்த்தர் இருக்காரு. அவரை அனுப்புனாப் போதும், ஆளே இல்லாத அன்டார்டிக் கண்டத்துலகூட, ஆட்சியைப்புடிச்சுக் காட்டீருவாரு, ஹாஹாஹா…!
ஒபாமா: அப்டியா, அவரை மாதிரி ஒரு ஆளு நமக்குத்தேவை மிஸ்டர் மோடி. இங்ககூட மிட்டேம் எலக்ஷன்ஸ்ல, ரிபப்ளிக்கன்ஸ் ரொம்ப தண்ணீ காட்றாங்க…!
மோடி: ஓ ஐ ஸீ…, எனி திங் ஸ்பெஷல் ஒபாமாஜி, காலங்காத்தால போன் பண்ணீருக்கீங்க, பிரேக்ஃபஸ்ட் எல்லாம் ஆச்சா?
ஒபாமா: ஒரு வழியா இப்பத்தான் ஆச்சு மிஸ்டர் மோடி! சாப்பிட உக்காந்தா, ஒரே போன் மேல போனா இருக்குது. நச்சு நச்சுன்னு எத்தனை பிரச்னையத்தான் நான் தீக்க முடியும்? ஒரு நாலு மணி நேரம் நிம்மதியா தூங்கக்கூட முடியலைன்னா பாத்துக்குங்களேன்!
மோடி: அடடா, இப்டி வேலை வேலைன்னு இருந்தா மட்டும் ஆகாது ஒபாமாஜி, உங்க ஹெல்த் கொஞ்சம் பாத்துக்குங்க!
ஒபாமா: வெரி தேங்ஸ் மிஸ்டர் மோடி! பை த பை மிஸ்டர் மோடி, ஐ ஹேவ் ஏன் இம்பார்ட்டன்ட் மேட்டர். இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் உங்க டைம் எடுத்துக்குலாமா?
மோடி: நோ ப்ராப்ளம் ஒபாமாஜி, சொல்லுங்க வாட் இஸ் த ப்ராப்ளம்?
ஒபாமா: இல்ல, எங்க நாசாக்காரங்க, ஏதோ ராக்கெட் அனுப்புறதுல சில டெக்னிக்கல் டிஃபிகல்டீஸ் ஃபீல் பண்றாங்க, உங்க இஸ்ரோகாரங்கள விட்டு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணச் சொல்ல முடியுமா?
மோடி: அதுக்கென்ன ஒபாமாஜி, வித் பிளஷர், தாராளமா செய்யச் சொல்றேனே!
ஒபாமா: அதான் நீங்ககூட கேள்விப்பட்டிருப்பீங்களே, ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ராக்கெட்கூட வெடிச்சுருச்சு!
மோடி: ஆமாமா, நாங்கூட டிவில பாத்தேன். அப்பவே பேசணும்னு நெனச்சேன், எனக்கு சில இம்பார்ட்டன்ட் என்கேஜ்மெண்ட்ஸ் இருந்ததால முடியலே!
ஒபாமா: எப்டி மோடிஜி, உங்காளுங்க, இவ்வளவு கொறஞ்ச செலவுல ராக்கெட் அதிகமா பெய்லியர் இல்லாம விடறாங்கன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம் மோடிஜி!
மோடி: ஒபாமாஜி, யூ நோ ஒன் திங், ராக்கெட் டெக்னாலஜி ஈஸ் இன் அவர் ஏன்ஷியன்ட் டிரெடிஷன். ஈவன் இன் வேதிக் டைம்ஸ், அவர் கிங்ஸ் டெவலப்டு லாட் ஆப் ராக்கெட்ஸ் அண்ட் ஏரோபிளேன்ஸ். பட் த இன்டியன்ஸ் டிடின்ட் யூடிலைஸ் திஸ் டெக்னாலஜி டூ கான்கர் அதர் கிங்டம்ஸ்.
ஒபாமா: வெரி இன்ட்ரஸ்டிங், மோடிஜி!
மோடி: ஒபாமாஜி, ராக்கெட் டெக்னாலஜி ஈஸ் இன் அவர் ஜீன்ஸ், இட் ஈஸ் இன் அவர் பிளட் வெசல்ஸ், யூ நோ? சம் டூ ஹன்ட்ரட் அண்ட் பிப்டி இயர்ஸ் எகோ, ஏ சவுத் இன்டியன் கிங் நேம்டு திப்பு சுல்தான், ஹூ வாஸ் கில்டு பை த பிரிட்டீஷ், டெவலப்டு ஏ ராக்கெட் ஃபார் கன்வென்ஷனல் வார்ஃபேர். இட் வாஸ் இன் ஹிஸ்ட்ரி, யூ மே செக் வித் த பிரிட்டீஷ் பீப்பிள்.
ஒபாமா: நோ நோ ஐ ஹேவ் நோ டவுட் அபவுட் த இன்டியன் கேப்பபிளிட்டி. தட்ஸ் வை ஐஆம் ஆஸ்கிங் யூ டூ ஹெல்ப் த நாசா பீப்பிள்!
மோடி: எஸ் ஒபாமாஜி, வித் பிளஷர், நான் எங்காளுங்கள இப்பவே நாசா பீப்பிள்கூட பேசச்சொல்றேன். நீங்க டோண்ட் ஒர்ரி!
ஒபாமா: தேங்ஸ் மிஸ்டர் மோடிஜி. எப்டி கேக்குறது தயங்கிட்டே இருந்தேன்.
மோடி: நோ நோ ஒபாமாஜி, இட் ஈஸ் அவர் டூட்டி டூ ஹெல்ப் யூ, சரி நான் வெச்சுரட்டுமா? தங்கச்சி மிசேல், குழந்தைகளையும் கேட்டதாச்சொல்லுங்க!
………
காட்சி 3
……………
இடம்: நாசா தலைமையகம், வாஷிங்டன்
……………………………………………………
நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன்: யாருப்பா அது, ஏதோ இன்டியாலர்ந்து கால் வரும்னு ஒபாமா சொன்னாராம், ரெடியா இருங்கப்பா!
உதவியாளர்: சார், கரெட்டா நீங்க சொன்ன ஒடனே இண்டியாலர்ந்து கால் வருது!
போல்டன்: கொண்டா கொண்டா, அதுக்குத்தான் வெயிட் பண்றேன்… ஹலோ, நாசா அட்மினிஸ்ட்ரேட்டர் ஹியர்…
மோடி: ஹலோ, ‘இஸ்ரோ’ தலைவர் பேசுறேன். எங்க பி.எம்., உங்ககிட்ட பேசச்சொன்னாரு!
போல்டன்: ஆமாமா, எங்க பிரெசிடெண்டும் சொன்னாரு, நீங்க பேசுவீங்கன்னு. வெரிகுட், வெரிகுட். எப்புடி போகுது உங்க ப்ராஜக்ட் எல்லாம்…?
இஸ்ரோ தலைவர்: எப்படியோ, ஏழுமலையான் புண்ணியத்துல நல்லபடியா போய்ட்டிருக்கு!
போல்டன்: அப்டியா, பரவால்ல, இங்கதான் ஒரே பிரச்னையா இருக்குது. விடற ராக்கெட்லாம், ஒவ்வொண்ணா காலை வாரிட்டே போகுது. என்ன பண்றதுன்னே தெரியலை!
இஸ்ரோ தலைவர்: அடடா, சரி பரவால்ல, அதுக்குத்தான் எங்க பி.எம்., உங்ககிட்ட பேசச்சொன்னாரு!
போல்டன்: ஆமாமா, கேள்விப்பட்டிருப்பீங்களே, ரெண்டுநாள் முன்னாடி கூட, ஒரு ராக்கெட் வெடிச்சுருச்சு. நீங்க யாராச்சும் ஒரு சீனியர் சயின்ஸ்டிஸ்ட் டீம் ஒண்ணு அனுப்பி, எங்களுக்குக் கொஞ்சம் அசிஸ்ட் பண்ணச்சொல்ல முடியுமா?
இஸ்ரோ தலைவர்: டெப்னட்லி டெப்னட்லி, அதுக்கு முன்னாடி, எனக்கு சில டீட்டெய்ஸ் தர முடியுமா?
போல்டன்: ஓ தரலாமே, என்ன மாதிரியான டீட்டெய்ஸ் வேணும்?
இஸ்ரோ தலைவர்: மொதல்ல, ராக்கெட் விடறதுக்கு முன்னாடி, ரிலீஜியஸா சில ஸ்டெப்ஸ்லாம் நாங்க பாலோ பண்றோம், அதெல்லாம் நீங்க பண்றதில்லேன்னு கேள்விப்பட்டோம், அதெல்லாம் உண்மையா?
போல்டன்: உண்மைதான், நாங்க ரிலீஜியஸா எதும் பண்றதில்லை! நீங்க என்ன பண்ணுவீங்கன்னு மொதல்ல சொல்லுங்களேன்?
இஸ்ரோ தலைவர்: மொதல்ல, ராக்கெட் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி, டீம் லீடர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் போய், வேண்டிக்குவாரு. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனா, டீம் லீடர், போய் அதே கோவில்ல மொட்டை போட்டுக்குவாரு! சம் பீப்பிள் அடிஷனலா 48 டேஸ், விரதம் கூட இருப்பாங்க!
போல்டன்: ஃபார்ட்டி எய்ட் டேஸ் பாஸ்ட்? அதெப்டி சாப்டாமயே இருப்பீங்ளா?
இஸ்ரோ தலைவர்: நோ நோ, விரதம்னா, ஒரு வேளை மட்டும் சாப்பிடுறது, இல்லீன்னா நான்வெஜ் சாப்பிடாம இருக்குறது, நமக்கு ரொம்பப்பிடிச்ச ஏதாச்சும் ஒண்ண செய்யாம இருக்குறது, இந்த மாதிரி!
போல்டன்: அப்டியா, வெரி இன்ட்ரஸ்டிங்! அப்புறம் வேறென்ன பண்ணுவீங்க?
இஸ்ரோ: அப்புறம், டைமிங் ரொம்ப முக்கியம். நல்ல நேரத்துல தான் ராக்கெட் விடணும். ராகு காலம், எமகண்டம் எல்லாம் பாத்து, அதை தவிர்த்துட்டு, நல்ல நேரத்துல ராக்கெட் விடணும். ப்ராஜக்ட் ஆரம்பத்துல இருந்து, கடைசி வரைக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் இப்டி நல்ல நேரம் பாத்துத்தான் செய்வோம்.
போல்டன்: அப்டியா, சயின்டிபிக்கா அது சரியா வருமா? நம்பவே முடியலையே!
இஸ்ரோ: அதெல்லாம் சரியா வரும். நாங்க செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் இப்டித்தானே விட்டோம். நீங்க இந்த மாதிரி டைமிங், சர்ச்சுல கும்புடுறது ஏதாச்சும் உண்டா?
போல்டன்: நோ… நோ…அப்டி செஞ்சா எங்க நாட்டுல ஏத்துக்க மாட்டாங்களே!
இஸ்ரோ: ஏன், ராக்கெட் பறக்கணுமா வேண்டாமா? நாங்கெல்லாம் பப்ளிக்காத்தானே செய்றோம், எங்க நாட்டுல ஏத்துக்குறாங்களே!
போல்டன்: சரி, நான் பிரசிடெண்ட்கிட்ட கேட்டுக்கிறேன், அப்புறம் சொல்லுங்க, வேற என்னவெல்லாம் பண்ணுவீங்க?
இஸ்ரோ: ராக்கெட் இன்ஸ்டால் பண்ற எடத்துல முகூர்த்தக்கால் பூஜை போடுவோம், அதுக்கும் நல்ல நேரம் எல்லாம் முக்கியம். அப்புறம் முக்கியமான விஷயம், ராக்கெட்ல எலுமிச்சம்பழம் கட்டித்தான் பறக்க விடுவோம். அது இருந்தாத்தான் ராக்கெட் கடைசி வரைக்கும் கரெக்டா வேலை செய்யும்?
போல்டன்: வாட், லெமன் ப்ரூட்?
இஸ்ரோ: தட் இஸ் ரைட், இட் ஈஸ் வெரி பவர்புல் யூ நோ?
போல்டன்: இல்ல, அதுக்கெல்லாம் எங்க சயின்டிஸ்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்களே, ஏதாச்சும் பே லோட் பிரச்னை வருமே!
இஸ்ரோ: நோ நோ, எங்க ராக்கெட் எல்லாமே, எலுமிச்சம் பழம் கட்டித்தான் பறக்க விட்டோமே, எல்லாமே நல்லாத்தானே போச்சு, பேலோட் பிரச்னை எதும் வரலையே?
போல்டன்: இட்ஸ் அன்பீலீவபிள்! அன்பிலீவபிள்!
இஸ்ரோ: இதுக்கே இப்டிச் சொன்னா எப்டி, சைனீஸ், இதவிட நெறைய மந்திர தந்திரம் எல்லாம் பண்ணித்தானே ராக்கெட் விடறாங்க!
போல்டன்: அப்டியா, இதெல்லாம் எங்களுக்கு யாருமே சொல்லலியே!
இஸ்ரோ: சரி, இப்ப நான் சொன்னதையெல்லாம் மொதல்ல பண்ணுங்க, அப்புறம் உங்க ராக்கெட், தானாப் பறக்கும் பாருங்க!
போல்டன்: சரி ஓகே, நான் பிரசிடெண்ட்கிட்ட பேசிப் பாக்குறேன். வச்சிரட்டுமா? உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்
இஸ்ரோ: ஓகே டோண்ட் மென்ஷன், வேற ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க, ஹேவ் ஏ நைஸ் டே!
…………
காட்சி 4
………….
இடம்: வெள்ளை மாளிகை அதிபர் அறை
……………………………………
உதவியாளர்: சார், நாசா அட்மினிஸ்ட்ரேட்டர் போல்டன், சீப் சயின்டிஸ்ட் ஸ்டாஃபன் ரெண்டு பேரும் ஒங்களப் பாக்க வந்துருக்காங்க சார்!
ஒபாமா: காத்தாலயே வந்துட்டாங்களா? ஒரு ராக்கெட் விடத் துப்பில்ல, பங்ச்சுவாலிட்டிக்கெல்லாம் ஒண்ணும் கொறச்சல் இல்லை!
போல்டன்: வெரிகுட்மார்னிங் சார்
ஒபாமா: குட்மார்னிங், என்ன இன்டியாலர்ந்து பேசுனாங்ளா?
போல்டன்: எஸ் சார் பேசுனாங்க, அவங்க சில ஐடியாஸ்லாம் சொல்லிர்க்காங்க!
ஒபாமா: அப்படியா, அதெல்லாம் ஏற்கனவே உங்களுக்குத் தெரியாதா, நீங்க ஏதோ ஒலகத்துலேயே பெஸ்ட் சயின்ஸ் ஏஜென்சின்னு சொல்லீட்டுத் திரிஞ்சீங்க, அதெல்லாம் பொய்யா?
போல்டன்: சார்…!
ஒபாமா: சரி சொல்லுங்க, என்ன ஐடியாஸ் சொன்னாங்க?
போல்டன்: சார், மொதல்ல, ராக்கெட்ல எலுமிச்சம்பழம் கட்டணும்.
ஒபாமா: வாட், எலுமிச்சம் பழமா?
போல்டன்: எஸ் சார், இன்டியன் ஸ்பேஸ் ஏஜென்சி பிரெசிªண்ட்தான் சொன்னாரு!
ஒபாமா: ஈஸ் இட் ட்ரூ? என்ன அவங்களுக்கு பைத்தியமா? ராக்கெட்ல எலுமிச்சம் பழமா?
ஸ்டாஃபன்: அது மட்டுமில்லாம, சில ரிலீஜியஸ் புரொசீஜர்லாம் பாலோ அப் பண்ணச்சொல்றாங்க சார்?
ஒபாமா: என்ன புரொசீஜராம்?
நாசா: சார், டீம் லீடர் சர்ச்ல பிரேயர் பண்ணி, புல் ஹேர்கட் பண்ணணுமாம் சார், அதுல்லாம, ப்ராஜக்ட் சக்சஸ் ஆனாலும் அதேமாதிரி, புல் ஹேர்கட் பண்ணணுமாம் சார், நான்வெஜ் சாப்பிடாம விரதம் இருக்கணுமாம்.
ஒபாமா: இப்டியெல்லாமா இந்தியால செய்ராங்க!
நாசா: அப்டித்தான் சார் சொல்றாங்க. அது மட்டுமில்லாம, அவங்க ஏதோ, ராகு டைம்னு சொல்றாங்க சார், அந்த நேரத்துல ராக்கெட் விடக்கூடாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி நாம விட்ட ராக்கெட், ராகு டைம்ல போயிருக்குது, அது வெடிக்கும்னு எங்களுக்கு முன்னமே தெரியும்னு சொல்றாங்க சார்
ஒபாமா: ஈஸ் இட்? ஈஸ் இட் சயின்டிபிக் ஆர் ஜஸ்ட் தெயர் பிலீப்?
ஸ்டாஃபன்: ஐ திங்க், இட் ஈஸ் தெயர் பிலீப் ஒன்லி சார்!
ஒபாமா: அன்பிலீவபிள்!
போல்டன்: சார், சைனீஸ்கூட, இந்த சிஸ்டம் பாலோ அப் பண்ணித்தான் ராக்கெட் விடறாங்ளாம் சார்!
ஒபாமா: ரியல்லி? இதுக்கு ஏதாச்சும் சயின்டிபிக் தியரி இருக்குதான்னு உங்களாலே செக் பண்ண முடியுமா?
ஸ்டாஃபன்: டெப்னட்லி சார், அதை செக் பண்றதுக்கு, நம்ம இண்டியன், சைனீஸ் எம்பஸீஸ்ல சொல்லி ஏற்பாடு பண்ணீருக்குது சார்!
ஒபாமா: ஓகே, அதை தரவா செக் பண்ணீட்டு, உண்மைன்னா அதை அப்டியே பாலோஅப் பண்ணி, நெக்ஸ்ட் ராக்கெட் சக்சஸ்புல்லா விடறதுக்கு பாருங்க. ஆனா ஒரு விஷயம், நீங்க எலுமிச்சம்பழம் கட்டுவீங்களோ, மொட்டை அடிப்பீங்களோ அது உங்க பாடு, நமக்கு ராக்கெட் பறக்கணும் அவ்வளவுதான், பாத்துக்குங்க!
………….
தொடரும்

ஈராக், சிரியா, லிபியா, நைஜீரியா என உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், பெட்ரோலிய விலை குறைந்து கொண்டிருக்கிறது.
ஜூன் மாதம் இருந்ததை காட்டிலும், சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை
25 சதவீதம் சரிந்திருக்கிறது. இது, நான்கு ஆண்டுகளில் இல்லாத விலைக்குறைவு.
கடந்த நான்கு ஆண்டுகளாக பீப்பாய் 100 முதல் 105 டாலர் என்ற அளவில் இருந்த பெட்ரோலிய விலை, இப்போது 80 டாலருக்கும் கீழே வந்து விட்டது. வரும் மாதங்களில், இது 70 டாலராக குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இப்படி தாறுமாறாக சரியும் விலையானது, ரஷ்யா, வெனிசுலா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, கத்தார் போன்ற எண்ணெய் வளத்தை பின்னணியாகக் கொண்ட நாடுகளை பாதிக்கிறது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம், சவுதி அரேபியா தலைமையில் சங்கம் வைத்திருக்கின்றன. இவர்களது வேலை, ‘அங்கே சண்டை, இங்கே தகராறு, அவன் என்னைக் கிள்ளினான், இவன் என்னை அடித்தான்’ என்பதுபோல, ஏதாவது சிறுபிள்ளைத் தனமான காரணம் கூறி, விலையை உயர்த்துவது.
பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, உலக நாடுகளில் பெட்ரோலிய தேவை சரிந்தால், மார்க்கெட்டில் விலையும் சரிந்து விடும். ஆகவே, இவர்கள் உற்பத்தியை குறைத்து, விலையை நிலைநிறுத்திக் கொள்வர். நம்மைப் போன்ற ஏழை எளிய நாடுகளுக்கு அயோக்கியத்தனமாக தெரிந்தாலும், காலம் காலமாக இதுவே நடைமுறை.
இந்த தில்லாலங்கடி வேலையில், முன்னணியில் இருப்பது சவுதி அரேபியா.
ஒவ்வொரு முறையும், பெட்ரோலிய விலை சரியும்போதெல்லாம், சவுதி அரேபியா உற்பத்தியை குறைத்து, விலையை மீண்டும் மேலே கொண்டு வந்து விடும்.
இந்தமுறை, விலை சரிந்தும், சவுதி அரேபியா, தன் வேலையைக் காட்டாமல் இருக்கிறது. சர்வதேச அரசியலில் தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைக்கும் இரு நாடுகளின் எண்ணம்தான் இதற்கு காரணம். ஒன்று, சவுதி அரேபியா; சரி மற்றொன்று? வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் அமெரிக்கா தான்.
மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கா நேரடியாக சிரியா மீது போர் தொடுப்பதை, கடைசி நிமிடத்தில் நிறுத்தக் காரணமாக இருந்தது ரஷ்யா.
ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில், சிரியாவின் உற்ற நண்பனாக ரஷ்யா இன்றளவும் இருந்து வருகிறது. இது, ஆசாத்தை வீழ்த்துவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சவுதி அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
ஆகவே, உற்ற நண்பன் அமெரிக்காவின் ஆலோசனைப்படி, ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக, இடையூறு செய்யும் நோக்கத்துடன், பெட்ரோலிய விலைச்சரிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது சவுதி அரசு.
உக்ரைன் உள்ளிட்ட ஒவ்வொரு சர்வதேச விவகாரத்திலும் தனக்கு சவால் விடும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பாடம் கற்பிக்க, சவுதி அரேபியாவை, ஒபாமா பயன்படுத்திக் கொள்கிறார். தன் சொல் பேச்சுக் கேட்காத பிற பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள், வீணாய்ப்போனாலும், அமெரிக்காவுக்கு லாபம்தான்.
ஆகவே, ‘எண்ணெய் உற்பத்தி, அப்படியே தொடரட்டும்; விலைச்சரிவு வந்து, ரஷ்யா, வெனிசுலா, ஈரான் நாடுகள் நாசமாகட்டும்’ என்று, அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது.
சவுதியின் நடவடிக்கைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. முன்பெல்லாம் வளைகுடா நாடுகளுக்கு சவுதி தான் தலைமை வகித்துக் கொண்டிருந்தது. சர்வதேச விவகாரங்களில், சவுதியின் குரல்தான் வளைகுடாவின் குரலாக, இஸ்லாமிய நாடுகளின் குரலாக, எண்ணெய் வள நாடுகளின் குரலாக இருந்தது.
இப்போது, நிலைமை மாறி விட்டது. கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் போன்ற எண்ணெய் வள நாடுகள், சவுதியை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ‘அவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்ததுபோலிருக்கும்’ என்று சவுதி அரேபியோ பெட்ரோலிய விலைச்சரிவை அனுமதித்திருக்கிறது.
எதுவுமே செய்யாமல், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சவுதியின் செயலால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், குறைந்த விலையில், பெட்ரோலிய இறக்குமதி செய்கின்றன.
ஆகவே, ‘பெட்ரோல், டீசல் விலையை, அருண் ஜெட்லி குறைத்தார்’ என்று படித்து மகிழும் நிலை வரும்போது, ‘ஒபாமா-புதின் சண்டை என்றென்றும் தொடரட்டும்’ என்று, வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள், மக்களே!