‘டாஸ்மாக்’ பொருளாதாரம்!

Posted: 22/01/2016 in அரசியல், டாஸ்மாக், தமிழகம், நையாண்டி, பார், மொக்கை

‘மது விலக்கெல்லாம், தமிழகத்தில் சாத்தியமில்லை’ என்று, ஒரே போடாகப் போட்டு விட்டார், நத்தம் விஸ்வநாதன். அவரைப் பொறுத்தவரை, மது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பதே, படுபயங்கரமானதாகத்தான் இருக்கும். நாம் அப்படியில்லையே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியைப் பிடித்து, அன்புமணி முதலமைச்சராகவும் பதவியேற்று, முதல் நாளே, ‘மதுக்கடைகள் க்ளோஸ்’ என்று, உத்தரவும் போட்டு விட்டால், எப்படியிருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்?
தமிழகத்தின் ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில், 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மதுக்கடை மூடப்பட்டால், அவர்கள் அரசின் வேறு துறைகளுக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அங்கே, இந்தளவுக்கு வருமானம் இருக்காது; அதாவது, சிங்கியடிக்க வேண்டியிருக்கும்.
மதுக்கடைகளும், அவற்றை ஒட்டிய மது குடிக்கும் ‘பார்’களும், பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. மதுக்கடைகளை மூடினால், அவற்றை எல்லாம் காலி செய்ய வேண்டியிருக்கும்.
அதன் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். பிற தொழில்களுக்கு வாடகைக்கு விட்டாலும், இந்தளவுக்கு வாடகை கிடைக்காது.
மதுக்கடை பார் ஒவ்வொன்றிலும், குறைந்தது, நான்கைந்து ஆட்களாவது வேலையில் இருப்பர். அவர்கள் தவிர, பஜ்ஜி, போண்டா, வடை சுடும் பிரிவொன்றும் பாருக்குள் இருக்கும்; அதிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பர்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நாளொன்றுக்கு, 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. கடைகளை மூடி விட்டால், அவர்களெல்லாம், வேறு பாவப்பட்ட தொழில்களுக்குப் போக வேண்டியிருக்கும்; அப்புறம், கஞ்சியோ, கூழோ குடிப்பதே பெரும்பாடாகி விடும்.
மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும், தண்ணீர் பாக்கெட், டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர், காராச்சேவு வினியோகம் செய்வதெற்கென்று, ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது.
மதுக்கடைகளை மூடி விட்டால், தமிழகத்தில் தண்ணீர் பாக்கெட் தயாரிக்கும் தொழிலே அழிந்து போகும் நிலை ஏற்படும். அதை நம்பியிருப்பவர்களை யார் காப்பாற்றுவார்?
டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர் விற்பனை படுத்து விட்டால், அவற்றை குடிசைத் தொழிலாக தயாரித்து விற்போர்பாடு, திண்டாட்டம்தான்.
மது உற்பத்தி ஆலைகள், தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, மதுக்கடைகள் முழு வீச்சில் இயங்க வில்லையெனில் சம்பளம் கிடைக்காது; போனஸ் வராது; அவர்களெல்லாம், பிக்பாக்கெட் வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கும்.
மது குடிப்பவர்களில் பெரும்பகுதியினருக்கு, சிகரெட் உற்ற துணையாக இருப்பது தெரிந்த விஷயம்தான். குவார்ட்டர் பாட்டிலை குடித்து முடிப்பதற்குள், நான்கு சிகரெட் குடிக்கும் ஆசாமிகள் நிறையப்பேர் இருக்கின்றனர்.
ஆக, மதுக்கடை இல்லையெனில், தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை மந்தமாகி விடும். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் ஒட்டுக் குடித்தனக்காரர்கள், குடும்பத்தோடு லாட்டரிச்சீட்டு விற்கத்தான் போவார்கள்.
மது குடித்து விட்டு, வாகனங்களில் செல்வோர் போலீசில் சிக்கி, தண்டம் அழுவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆக, கடையை மூடி விட்டால், போலீஸ் மாமூல் வாழ்க்கை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.
மதுக்கடைகளிலும், பார்களிலும், காலி மது பாட்டில்களை பொறுக்கி விற்று, பிழைப்பு நடத்துவதற்கென்று சில பேர் இருக்கின்றனர். மது விற்பனை இல்லையென்றால், காலி பாட்டில்களுக்கு அவர்கள் எங்கே போவார்கள்?
‘குடி’மகன்கள், எப்போதும் மதுக்கடை செயல்படும் ஏரியாவில்தான் இருப்பர். விளைவு, அப்பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை, மளிகைக்கடைகளில் பீடி, சிகரெட், வாழைப்பழம் என பலப்பலவற்றின் விற்பனை ஜரூராக இருக்கும். மதுவை ஒழித்தால், இந்த விற்பனையும் சேர்ந்தே ஒழிந்து போகும்.
‘பார்’ நடத்துவோர் அனைவரும், ஆளும் கட்சியினரே. நாள் தோறும் போஸ்டர் அச்சிடுவது, பிளக்ஸ் பேனர் தயார் செய்து மூலைக்கு மூலை வைப்பது என எல்லாவற்றுக்கும், தாராளமாகப் பாய்வது, இப்படி ‘பார்’ மூலம் தண்ணீராக பாயும் பணம்தான்.
அந்தப்பணம் வருவது தடைபட்டால், அப்புறம் பிளக்ஸ் பேனர், போஸ்டர் அச்சிடும் தொழில்கள் எல்லாம், மந்த நிலைக்கு சென்று விடவும் வாய்ப்புண்டு.
எல்லாவற்றையும் விட, மதுக்கடைகளால் இன்னொரு முக்கிய சமூக பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது. மாமியார், மருமகள் சண்டையில் இருந்தும், மனைவியின் அன்றாட இம்சைகளில் இருந்தும் தப்பிக்க எண்ணும் ஆண் மக்களுக்கு, ஒரே தீர்வாக இருப்பது மது மட்டுமே.
ஆக, பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும், மதுக்கடைகளுடன் வலைப்பின்னல் போல், இவ்வளவு தொடர்புகள் இருக்கும்போது, மதுவை ஒழித்தே தீர வேண்டும் என்று விடாப்பிடியாகவும், விஷமத்தனமாகவும் வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம்?
……….
டிஸ்கி: சமூகத்துக்கு மதுப்பழக்கம் இல்லை. மேற்கண்ட விவரங்கள் எல்லாம், ‘குடி’மக்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

பின்னூட்டங்கள்
  1. vmloganathan சொல்கிறார்:

    ஒருவேளை தங்களுக்கு மதுப்பழக்கம் இருந்திருந்தால் 🙂

    Like

  2. என்ன நண்பரே நீங்கள் வோறு கோணத்தில் அலசுகின்றீர்கள் ?
    இருந்தாலும் இதுவும் சரிதானோ ? என்றே தோன்றுகிறது இந்தக்குழப்பம் தீர உடனே டாஸ்மாக் போகணும்

    Like

  3. 45 ஆயிரம் ஊழியர்களுக்காக…! ம்… என்னத்த சொல்ல…

    Like

  4. T.THAMIZH ELANGO சொல்கிறார்:

    அம்மா ஆட்சியில் அமோகம். வித்தியாசமான பார்வைதான்.
    (முதலில் இந்த WORDPRESS இலிருந்து BLOGGER இற்கு மாறுங்கள்.)

    Like

பின்னூட்டமொன்றை இடுக