புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Posted: 12/04/2015 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, , , ,

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் அது பற்றி கருத்துச் சொல்லும் வழக்கமுடைய நமக்கு, கடந்த இரண்டு மாதங்களும் மாபெரும் சோதனைக்காலமாக அமைந்து விட்டன. மூத்த மகளை, பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு பொறுப்பேற்றபோது, அது அவ்வளவு சிரமமானதாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

கருத்துச் சொல்வது, உலகின் மிக எளிமையான பணிகளில் முதன்மையானது; சுருக்கமாகச் சொன்னால், செத்துப்போன பாம்புகளை அடிப்பதற்கு ஈடானது. ‘எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும்’ என்பவர்கள்கூட, கருத்துக் கேட்டால், கூடை கூடையாக அள்ளி வீசுவர். தினம் தினம் 24 மணி நேர செய்திச் சேனல்களை பார்த்திருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத்தெரியும்.
ஆனால், இந்த கணக்குப் பாடம் சொல்லித்தருவதெல்லாம், கருத்துச் சொல்லும் வகையறாவில் வருவதில்லை. அதற்கு, நமக்கு முதலில் கணக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலமும், தமிழும் கூட அப்படித்தான்.
‘அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எல்லாம் தெரியும்’ என நினைத்திருக்கும் பிள்ளைகள் முன்னிலையில், ‘எனக்கு இந்தக்கணக்கு தெரியவில்லை, இந்தக்கேள்விக்கெல்லாம் விடை தெரியாது’ என்று கூறிக்கொண்டு, தந்தையும், தாயும் விழி பிதுங்கி நிற்பது எவ்வளவு கொடுமை?
அப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்க விரும்பாமல்தான், பெற்றோர், பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், நம்மைப்போன்றவர்களுக்கு அத்தகைய விவரம் கூட இல்லை.
அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தபிறகே, மண்டையில் விஷயம் உறைத்தது. கணிதப் பாடத்துக்கு மட்டுமே மகள் டியூஷன் சென்று கொண்டிருக்கிறாள்; அதுவும், வகுப்பெல்லாம் இல்லை; தேர்வு எழுதும் பயிற்சி மட்டுமே. யோசித்துப் பார்த்தால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத்தோன்றியது.
‘இப்ப இருந்து படித்தால்கூட நல்ல மார்க் வாங்கி விடலாம்’ என்று வகுப்பாசிரியை கூறினார். அந்த ஒரு வார்த்தையை ஆறுதலாக நம்பித்தான், நானும் மகளை தேர்வுக்கு தயார் செய்யும் பொறுப்பை முழு வீச்சில் ஏற்றுக் கொண்டேன்.
ஏற்றுக்கொண்ட பணி, ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு வந்தபிறகே, மற்ற வீரதீரப் பிரதாபங்களை வெளியிடுவது சிறப்பாக இருக்கும். ஆகவே, அதைப் பிறகு பார்ப்போம். இப்போது தேர்வு முடிந்து விட்டதாகையால், கருத்துச் சொல்லும் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியதாகி விட்டது.
கம்ப்யூட்டரை கையில் தொடாமல் இருந்த இந்த இரண்டு மாதங்களில், ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன.
ஹிலாரி கிளிண்டனுக்கு மீண்டும் தேர்தல் ஆசை வந்திருக்கிறது. இந்தியாவுடன் விரோதம் பாராட்டும் மில்பேண்ட் சகோதரர்கள், பிரிட்டனில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில்
மரம் வெட்டச்சென்ற 20 பேர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பீகாரில், தேர்வெழுதச் சென்ற மகன், மகள்களுக்கு, காப்பியடிக்க வசதியாக, புத்தகங்களை கொடுக்கச்சென்ற பெற்றோர், மாடி ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் முதல் உலகத் தொலைக்காட்சிகள் வரை ஒளிபரப்பாகி மானத்தை வாங்கி விட்டன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மியில் பூசல் வெடித்திருக்கிறது. தமிழகத்தில் ஊருக்கு ஊர் பால் குட ஊர்வலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லஞ்சமும் ஊழலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து விட்டன.
ஒபாமா, காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விட்டார். ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. மோடிக்கு வாய்த்தது, இன்னுமொரு வெளிநாட்டுப் பயணம். கருத்துக்கள் நிறைய இருக்கின்றன; எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    தங்கள் மகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றிபெற
    இந்த பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியரின் அன்பான வாழ்த்துக்கள் நண்பரே

    Like

  2. புத்தாண்டு + உங்களின் ‘பணி’ சிறக்கவும் வாழ்த்துக்கள்…

    Like

  3. இனி தொடர்ந்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்…

    Liked by 1 person

  4. chitrasundar சொல்கிறார்:

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    Liked by 1 person

  5. துளசிதரன், கீதா சொல்கிறார்:

    தங்களுக்கும் தங்கள் குடுமப்த்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! மகள் நல்ல மறையில் மதிப்பெண்கள் எடுக்க வாழ்த்துகள்

    Like

  6. ranjani135 சொல்கிறார்:

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    Like

பின்னூட்டமொன்றை இடுக