Posts Tagged ‘tamil stories’

அன்று காலை 6 மணிக்கெல்லாம் காவல் நிலையம் பரபரப்பாகி விட்டது. போலீசார் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் கைவிரல் ரேகை எடுக்கும் தடய அறிவியல் நிபுணரை போனில் பிடித்து உடனடியாக வருமாறு வேண்டிக்கொண்டிருந்தார். இன்னொருவர், மோப்பநாய் பிரிவினரை கையோடு அழைத்து வர ஜீப் டிரைவரை விரட்டிக் கொண்டிருந்தார்.
விசாரணைக்காக விரைந்து வரும் மைக் 10, மைக் 11 ஆகியோருக்கு காபி, டிபன் ஏற்பாடு செய்யும்படி எஸ்ஐக்கு உத்தரவுகள் ஏற்கனவே வந்து விட்டன. நகரின் பிரபல ஓட்டலுக்கு ஆள் அனுப்பியாகி விட்டது. குற்றப்பிரிவு போலீசார் பாவம், குற்றவாளிகளைப் போல் பம்மிப் பதுங்கியபடி இருந்தனர். எல்லாவற்றுக்கும் காரணம், முதல் நாள் இரவில் நடந்த திருட்டு சம்பவங்கள் தான். திருட்டென்றால் சாதா திருட்டல்ல; இது ஸ்பெஷல் திருட்டு.
‘நகரில் நான்கு வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் வக்கீல் அலுவலகங்களில் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. பீரோவும் உடைக்கப்பட்டிருக்கிறது. என்னவெல்லாம் திருட்டு போயிருக்கின்றன என்று சம்மந்தப்பட்ட வக்கீல்கள் வந்தால்தான் தெரியும்’ என்றார், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர். குற்றப்பிரிவு போலீஸார் வசமாக சிக்கியிருப்பதை எண்ணியெண்ணி பூரித்துக்கொண்டிருந்தார் அவர்.
எனக்கு பெருத்த சந்தேகம். ”சார்! வக்கீலுங்க ஆபீசுல என்ன பணம், நகையா வெச்சுருக்கப் போறாங்க? இதுக்கு ஏன் சார் இவ்வளவு பரபரப்பு?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.
அவர் வக்கீல்களுடன் அதிக சகவாசம் வைத்திருப்பவர். ”சார்! வக்கீல் ஆபீஸ்ல விலை மதிப்புள்ள பொருள் இருக்காதா? என்ன நடக்கப் போகுதுன்னு வேடிக்கையப் பாருங்க சார் நீங்க”
எனக்கும் அவர் சொல்வதில் விஷயம் இருப்பதுபோல் தோன்றியது. காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே நான்கைந்து வக்கீல்கள் பதட்டத்துடன் ஓடி வந்தனர். பார்த்தால் பேயறைந்தவர்கள் போல் இருந்தனர். கடைசியாக வந்த ஒருவரை நிறுத்தி, ‘என்ன சார், என்ன திருட்டு போச்சு’ என்றேன். அவரோ, ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!’ என்று கூவியபடியே இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடினார்.
சில வினாடிகளிலேயே அவர்கள் சங்க தலைவரும் வந்து விட்டார். அவரிடமும் கேட்டேன். ”நெறய வேல்யபிள் ஐட்டம்ஸ் போயிட்டதா அட்வகேட்ஸ் போன் பண்ணாங்க, இருங்க இன்ஸ்பெக்டர பாத்துட்டு வரேன்,” என்று சொல்லி விட்டுப் போனார். எனக்கு மண்டை காய்ந்தது. வக்கீல் அலுவலகங்களில் அப்படியென்ன விலை மதிப்புள்ள பொருள் இருக்கப் போகிறது?
அதற்குள் எஸ்பி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் வந்து விட்டனர். கை ரேகை நிபுணரும், மோப்ப நாய்ப்படையினரும் வந்து விட்டனர். ‘திருடர்களை உடனடியாக பிடித்தாக வேண்டும்’ என்று எஸ்பி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். வேதனை தோய்ந்த முகத்துடன் இருந்த வக்கீல்கள், அவரை சுற்றிக்கொண்டு முறையிட்டனர்.
அப்போதும், ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்’ என்று அந்த வக்கீல் புலம்புவது காதில் விழுந்தது. ”எங்க இத்தனை வருஷ உழைப்பெல்லாம் வீணாப்போச்சுங்க சார்! எப்புடியாச்சும் கண்டுபுடிங்க சார்!” என்றொரு வக்கீல் நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தார். ”புடிச்சுர்லாம் விடுங்க,” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றார் எஸ்பி. போகவே மனம் இல்லாமல் புறப்பட்டனர்.
போகும்போதும் கூட அந்த வக்கீல் என்னைப் பார்த்து, ‘ஹெவி லாஸ், ஹெவி லாஸ்’ என்று கூவிக்கொண்டே போனார். என்னால் அந்த சஸ்பென்ஸை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நேராக எஸ்பியிடம் போனேன்.
”சார்! என்ன ஹெவி லாஸ், ஹெவி லாஸ்னு சொல்லிட்டுப் போறாங்க?” ”அதுவா? ஆமாமா, அது உண்மையாவே ஹெவி லாஸ் தானே!”
”சார், காத்தால இருந்து ஹெவி லாஸ் புராணம் கேட்டாச்சு, விஷயத்தச் சொல்லுங்க சார்”
”சார் கிரிமினல் கேஸ் நடத்துற வக்கீலுங்க சிலர் ஜாமீன் எடுக்குறதுக்காக பர்மனன்ட்டா பத்து பதினைஞ்சு ரேஷன் கார்டு வெச்சுருப்பாங்க. தேவைக்குத் தகுந்த மாரி ரேஷன் கார்ட யூஸ் பண்ணுவாங்க. இந்த நாலு வக்கீலு ஆபீஸ்லயும் சேந்து மொத்தமா 27 ரேஷன் கார்ட எவனே திருடீட்டுப் போயிட்டான். இப்ப கார்டு இல்லீனா, ஜாமீன் எடுக்க முடியாது. பொழப்பு சுத்தமா ஓடாது. கார்டுக்காரனுக்கு மாசமாசம் பணம் தரணும். திருட்டு போயிடுச்சுன்னு சொல்லவும் முடியாது. இவ்வளவு பிரச்னை வரும்னா அப்றம் அது ஹெவி லாஸ் தானே,” என்றார் எஸ்பி.
எனக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. ஸ்டேஷனை விட்டு புறப்பட்டேன். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து சிரித்தார்.
”வக்கீல் ஆபீஸ்ல என்ன இருக்கப் போகுதுன்னு கேட்டீங்ளே சார்! இப்ப புரிஞ்சுதா என்ன மேட்டர்னு”
”ஆமாமா சார்! ஹெவி லாஸ் தான்,” என்றேன் நானும்.
காவல் நிலையத்தை கடந்து வந்தபோது பாதிக்கப்பட்ட வக்கீல்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ”எவனோ விஷயம் தெரிஞ்ச ஒர்த்தன் தான் இத செஞ்சிருக்கனும்,” என்றார் ஒருவர். ”ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!” என மீண்டும் அதே குரலில், அதே புலம்பல்! ‘ஐயோ பாவம்’ என நினைத்துக்கொண்டேன்.

Advertisements

தமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆங்கில மீடியத்தில் கல்லூரிப் படிப்பை தொடர்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், ஒன்றா… இரண்டா…? எனக்கும் அந்த அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் கந்தசாமியைப் போலில்லை. சூது வாது தெரியாமல் எதார்த்தமாக பேசுபவர்களை, எங்கள் ஊர்ப்பக்கம் வெள்ளைச்சோளம் என்பர். அதிலும் அக்மார்க் வெள்ளைச்சோளமாக இருப்பான் கந்தசாமி. 

சொந்த ஊர் சின்னத்தாராபுரம் பக்கத்தில் கன்னிவாடி. அப்பா, மேட்டுக்காட்டில் முருங்கைக்காய் சாகுபடி செய்கிறார். மகனாவது படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்பது அவர் ஆசை. தெரிந்தவர் கையை காலைப்பிடித்து, கேட்ட அளவுக்கு நன்கொடையும் கொடுத்து மகனுக்கு கோயமுத்தூர் கல்லூயில் சீட் வாங்கி சேர்த்து விட்டார்.
கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், கந்தசாமிக்கு வகுப்பறை என்றாலே வேப்பங்காயாகத்தான் இருந்தது. காரணம், வாத்தியார்கள் மட்டுமல்ல; பெஞ்சில் பக்கத்தில் உட்காரும் மாணவர்களும் தான். கந்தசாமி வாயைத்திறந்தாலே இந்தப்பக்கம் இருவர், அந்தப்பக்கம் இருவர் என ஒரு கூட்டமே குபீர் சிரிப்பில் மூழ்கியது.
‘நாம் தமிழில் பேசும் அழகை வியந்து ரசிக்கிறார்கள் போலும்’ என்றுதான் நீண்ட காலம் அவனும் நினைத்திருந்தான். காலப்போக்கில்தான், தான் கிண்டல் செய்யப்படுவதை உணர்ந்து கொண்டான் கந்தசாமி.
கிராமிய மணம் வீசும் அவன் பேச்சுக்கும், நவநாகரிகம் உச்சத்தில் இருக்கும் வகுப்பறை சூழலுக்கும் சம்மந்தமே இல்லை. ஆங்கில வார்த்தைகள் அறவே வர மறுத்தன. அதிலும் குறிப்பாக, டிரிக்னாமெட்ரி, வெக்டார் கேல்குலஸ் போன்றவற்றை நாளொன்றுக்கு சில முறையாவது சொல்லித்தொலைக்க வேண்டியிருந்தது.
ஆங்கிலப்பாடத்தில் வந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வேறு, அவன் தூக்கத்தைக் கெடுத்தன. ஒருநாள் பகல் பொழுதில் கேட்டான், ”ராசு… எவன்டா, இதையெல்லா வேலப் பொழப்பில்லாம உக்காந்து எழுதறது”
”இல்ல மாப்ழ… அவன் ஒர்த்தன் இர்க்கான்டா, ஷேக்ஸ்பியர்னு பேரு, குன்னூர்காரன்தாண்டா. ஆனா செம மண்ட… இப்புடியெல்லாம் எழுதாதடான்னு எல்லாருமே சொல்லிக்கூட கேக்க மாட்டேங்குறாண்டா… ஒருநாளைக்கு நேர்ல போயி ஒரு மெரட்டு மெரட்டீட்டு வர்லாம்ட்டு இருக்றோம்,” என்றான் ராஜேந்திரன்.
”கெரகம், எழுதுறத எழுதறான், தமிழ்ல எழுதித்தொலைக்க வேண்டீது தான,” என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி.
தமிழிலும் அவனுக்கு ஆகாத விஷயங்கள் நிறைய இருந்தன. ஜ, ஷ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள், அவனிடம் சிக்கி பெரும்பாடுபட்டன. ஆங்கில எப் அல்லது பிஎச் எழுத்துகள் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கும்.
எந்த சந்தேகம் வந்தாலும், ராஜேந்திரனிடம் தான் கேட்பான்.
‛‛ராசு, இத்தச்சோடு லைபரி கட்டி, ஒரு கத புஸ்தகங்கூட இல்ல. தெண்டக்கருமாந்திரமாக்குது’’ என்பது, கல்லுாரி நுாலகம் பற்றிய கந்தசாமியின் கருத்து.
ஒரு நாள் கந்தசாமியோடு பேசிக் கொண்டிருந்தபோது, அரபிக்கடல் ஊட்டிக்கு அருகில் இருப்பதாக ராஜேந்திரனும், இன்னும் சிலரும் சேர்ந்து சொல்லி வைத்திருப்பது தெரியவந்தது. ராஜேந்திரனிடம் விசாரித்தேன். ‛‛மாப்ள… ரொம்ப அப்பாவியா இருக்காண்டா… என்ன சொன்னாலும் நம்பிக்குறான்டா…,’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜேந்திரன்.
ஒரு நாள் விடுதி அறையில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பிசிக்ஸ் பாடத்தை தமிழில் படிப்பதை பார்த்த கந்தசாமிக்கு, பெரும் ஆச்சர்யம். அதிகாலை முதலே ஹாஸ்டல் முழுவதும் விசாரித்து விட்டு, நேரமாகவே வந்து பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தான்.
ராஜேந்திரன் பஸ்சில் இருந்து இறங்கியதும், ஆர்வத்துடன் ஒடி வந்தான்.
‛‛ராசு… ஒரு முக்கீமான விசியத்த சொல்லாம உட்டிட்டியே’’ என ஆரம்பித்தான்.
‛‛என்ன மாப்ள, என்ன மேட்டரு’’
‛‛பிசிக்ஸ் பாடத்த ஆஸ்டல்ல அஞ்சாறு பேரு தமிழ்ல படிக்கிறானே’’
‛‛ஆமா, மாப்ள உனக்குத்தெரியாதா…?’’
‛‛தெரிலியே ராசு. நமக்கு ஒரே வெசனம். அதுலயும் பெயில் ஆயிருவம்னு’’
”உனக்கு மேட்டர் தெரியும்னு நெனச்சனே. என் பிரண்ட் ஒர்த்தன், இன்ஜினியரிங்லயே ரெண்டு செமஸ்டரு தெலுங்குல எழுதுனானே”
”நாமுளும் அப்ப எல்லாத்தையும் தமிழ்ல எழுதிக்குலாமா ராசு?”
”ஓ… தாராளமா எழுதுலாமே!”
கந்தசாமிக்கு அப்போதுதான் கடவுள் கண் திறந்து வழிகாட்டியது போல உற்சாகத்தில் இருந்தான். அவன் அந்தப்பக்கம் போனதும், ராஜேந்திரனும் இன்னும் சிலரும், விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
”மாப்ள கரெக்டா சொல்லீர்டா… இல்லீனா கந்தசாமி, இங்லீஷ் பரிச்சய தமிழ்ல எழுதீருவாண்டா,” என்றான் மற்றொருவன்.
கந்தசாமியை சந்தித்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இப்போதும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் தடுமாற்றம் வரும்போதெல்லாம், அவன் நினைவு வந்து விடும். கூடவே குன்னூர் ஷேக்ஸ்பியரும் வந்து விடுவார்; குபீர் சிரிப்பும் வந்து விடும்.