Posts Tagged ‘kandasamy’

தமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆங்கில மீடியத்தில் கல்லூரிப் படிப்பை தொடர்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், ஒன்றா… இரண்டா…? எனக்கும் அந்த அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் கந்தசாமியைப் போலில்லை. சூது வாது தெரியாமல் எதார்த்தமாக பேசுபவர்களை, எங்கள் ஊர்ப்பக்கம் வெள்ளைச்சோளம் என்பர். அதிலும் அக்மார்க் வெள்ளைச்சோளமாக இருப்பான் கந்தசாமி. 

சொந்த ஊர் சின்னத்தாராபுரம் பக்கத்தில் கன்னிவாடி. அப்பா, மேட்டுக்காட்டில் முருங்கைக்காய் சாகுபடி செய்கிறார். மகனாவது படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்பது அவர் ஆசை. தெரிந்தவர் கையை காலைப்பிடித்து, கேட்ட அளவுக்கு நன்கொடையும் கொடுத்து மகனுக்கு கோயமுத்தூர் கல்லூயில் சீட் வாங்கி சேர்த்து விட்டார்.
கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், கந்தசாமிக்கு வகுப்பறை என்றாலே வேப்பங்காயாகத்தான் இருந்தது. காரணம், வாத்தியார்கள் மட்டுமல்ல; பெஞ்சில் பக்கத்தில் உட்காரும் மாணவர்களும் தான். கந்தசாமி வாயைத்திறந்தாலே இந்தப்பக்கம் இருவர், அந்தப்பக்கம் இருவர் என ஒரு கூட்டமே குபீர் சிரிப்பில் மூழ்கியது.
‘நாம் தமிழில் பேசும் அழகை வியந்து ரசிக்கிறார்கள் போலும்’ என்றுதான் நீண்ட காலம் அவனும் நினைத்திருந்தான். காலப்போக்கில்தான், தான் கிண்டல் செய்யப்படுவதை உணர்ந்து கொண்டான் கந்தசாமி.
கிராமிய மணம் வீசும் அவன் பேச்சுக்கும், நவநாகரிகம் உச்சத்தில் இருக்கும் வகுப்பறை சூழலுக்கும் சம்மந்தமே இல்லை. ஆங்கில வார்த்தைகள் அறவே வர மறுத்தன. அதிலும் குறிப்பாக, டிரிக்னாமெட்ரி, வெக்டார் கேல்குலஸ் போன்றவற்றை நாளொன்றுக்கு சில முறையாவது சொல்லித்தொலைக்க வேண்டியிருந்தது.
ஆங்கிலப்பாடத்தில் வந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வேறு, அவன் தூக்கத்தைக் கெடுத்தன. ஒருநாள் பகல் பொழுதில் கேட்டான், ”ராசு… எவன்டா, இதையெல்லா வேலப் பொழப்பில்லாம உக்காந்து எழுதறது”
”இல்ல மாப்ழ… அவன் ஒர்த்தன் இர்க்கான்டா, ஷேக்ஸ்பியர்னு பேரு, குன்னூர்காரன்தாண்டா. ஆனா செம மண்ட… இப்புடியெல்லாம் எழுதாதடான்னு எல்லாருமே சொல்லிக்கூட கேக்க மாட்டேங்குறாண்டா… ஒருநாளைக்கு நேர்ல போயி ஒரு மெரட்டு மெரட்டீட்டு வர்லாம்ட்டு இருக்றோம்,” என்றான் ராஜேந்திரன்.
”கெரகம், எழுதுறத எழுதறான், தமிழ்ல எழுதித்தொலைக்க வேண்டீது தான,” என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி.
தமிழிலும் அவனுக்கு ஆகாத விஷயங்கள் நிறைய இருந்தன. ஜ, ஷ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள், அவனிடம் சிக்கி பெரும்பாடுபட்டன. ஆங்கில எப் அல்லது பிஎச் எழுத்துகள் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கும்.
எந்த சந்தேகம் வந்தாலும், ராஜேந்திரனிடம் தான் கேட்பான்.
‛‛ராசு, இத்தச்சோடு லைபரி கட்டி, ஒரு கத புஸ்தகங்கூட இல்ல. தெண்டக்கருமாந்திரமாக்குது’’ என்பது, கல்லுாரி நுாலகம் பற்றிய கந்தசாமியின் கருத்து.
ஒரு நாள் கந்தசாமியோடு பேசிக் கொண்டிருந்தபோது, அரபிக்கடல் ஊட்டிக்கு அருகில் இருப்பதாக ராஜேந்திரனும், இன்னும் சிலரும் சேர்ந்து சொல்லி வைத்திருப்பது தெரியவந்தது. ராஜேந்திரனிடம் விசாரித்தேன். ‛‛மாப்ள… ரொம்ப அப்பாவியா இருக்காண்டா… என்ன சொன்னாலும் நம்பிக்குறான்டா…,’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜேந்திரன்.
ஒரு நாள் விடுதி அறையில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பிசிக்ஸ் பாடத்தை தமிழில் படிப்பதை பார்த்த கந்தசாமிக்கு, பெரும் ஆச்சர்யம். அதிகாலை முதலே ஹாஸ்டல் முழுவதும் விசாரித்து விட்டு, நேரமாகவே வந்து பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தான்.
ராஜேந்திரன் பஸ்சில் இருந்து இறங்கியதும், ஆர்வத்துடன் ஒடி வந்தான்.
‛‛ராசு… ஒரு முக்கீமான விசியத்த சொல்லாம உட்டிட்டியே’’ என ஆரம்பித்தான்.
‛‛என்ன மாப்ள, என்ன மேட்டரு’’
‛‛பிசிக்ஸ் பாடத்த ஆஸ்டல்ல அஞ்சாறு பேரு தமிழ்ல படிக்கிறானே’’
‛‛ஆமா, மாப்ள உனக்குத்தெரியாதா…?’’
‛‛தெரிலியே ராசு. நமக்கு ஒரே வெசனம். அதுலயும் பெயில் ஆயிருவம்னு’’
”உனக்கு மேட்டர் தெரியும்னு நெனச்சனே. என் பிரண்ட் ஒர்த்தன், இன்ஜினியரிங்லயே ரெண்டு செமஸ்டரு தெலுங்குல எழுதுனானே”
”நாமுளும் அப்ப எல்லாத்தையும் தமிழ்ல எழுதிக்குலாமா ராசு?”
”ஓ… தாராளமா எழுதுலாமே!”
கந்தசாமிக்கு அப்போதுதான் கடவுள் கண் திறந்து வழிகாட்டியது போல உற்சாகத்தில் இருந்தான். அவன் அந்தப்பக்கம் போனதும், ராஜேந்திரனும் இன்னும் சிலரும், விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
”மாப்ள கரெக்டா சொல்லீர்டா… இல்லீனா கந்தசாமி, இங்லீஷ் பரிச்சய தமிழ்ல எழுதீருவாண்டா,” என்றான் மற்றொருவன்.
கந்தசாமியை சந்தித்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இப்போதும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் தடுமாற்றம் வரும்போதெல்லாம், அவன் நினைவு வந்து விடும். கூடவே குன்னூர் ஷேக்ஸ்பியரும் வந்து விடுவார்; குபீர் சிரிப்பும் வந்து விடும்.

Advertisements