Posts Tagged ‘cpi’

காட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்!