Posts Tagged ‘வீடு’

‘ஏதேனும் நற்செயலோ, அதிசயமோ நிகழ்ந்தால், மழை பெய்யும்’ என்பது, நம்மவர்களின் நீண்ட கால நம்பிக்கை. ரமணன் சொல்லும் அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையும், வெப்பச்சலனமும் தெரிந்திராத அந்தக்காலத்தில், மழை பெய்வதற்கான காரணங்கள் இவையாகத்தான் இருக்கும் என்று, பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இன்றும் சில கிராமப்புறங்களில், கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நம்பிக்கையாக இருக்கிறது. யாகம் செய்தால் மழை பெய்யும் என்று சிலரும், குறிப்பிட்ட ராகத்தை இசைத்தாலே மழை பெய்யும் என்று சிலரும், இன்னும் தீர்க்கமாக நம்புகின்றனர்.
மழை பெய்வதற்கான காரணங்கள் என்று நான் நம்பும் சிலவற்றை வெளியில் சொன்னால், வீட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தன்னலம் கருதி, அவற்றை நான், இப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை.
அலுவலகம் செல்லும்போது, அடையாள அட்டையைப் போலவே, மழைக்கோட்டும் எடுத்துக் கொண்டு போவது பலருக்கும் வாடிக்கை. மழைக்கோட்டு என்பது, மழையில் இருந்து மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்று கருதியிருப்பது, மாபெரும் அறிவீனம்.
இந்த அறிவியல் உண்மை, சட்டை, பேண்ட்டில் சேறுடன் வீட்டுக்குச் சென்று, வாங்கிக் கட்டிக் கொள்ளும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். நாட்டில், மழைக்கோட்டு விற்பனை பன்மடங்கு அதிகரிப்புக்கு காரணமும் இதுவே.
பின்விளைவுகளை கருத்தில் கொண்டும், அதிதீவிர முன்னெச்சரிக்கையாலும், வானத்தை பார்த்து, வானிலை அறிக்கை படித்து, ‘இன்று கட்டாயம் மழை வரும்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மழைக்கோட்டையும் கையோடு கொண்டு செல்வோம் பாருங்கள்; அன்று, நிச்சயம் மழை வராது.
எப்போதாவது ஒரு நாள் மழைக்கோட்டு இல்லாமல் போயிருப்போம்; அன்று பார்த்து, மழை பொத்துக்கொண்டு ஊத்தும். நமக்கும், மழைக்கும் அப்படியொரு பொருத்தம்.
ஆகவே, மழைக்கோட்டு கொண்டு செல்லும்போதெல்லாம், மறக்காமல் வருண பகவானையும் வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்? அப்படி மழைக்கோட்டு கொண்டு சென்று, மழையும் பெய்யும் நாட்களில், நான் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. வீட்டில் கிளம்பும்போது, மழை லேசாக பெய்ய ஆரம்பிக்கும்; நாமும், சந்திர மண்டலத்துக்குப் போகும் விண்வெளி வீரர் கணக்காக, தலை முதல் கால் வரை, மழைக்கோட்டு மாட்டிக் கொண்டு போனால், அரை மைலுக்கு அப்பாலேயே வெயிலாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்படுவோரெல்லாம், ‘என்ன உங்க ஊர்ல, மழை ரொம்ப அதிகமோ’ என்று கவலையோடும் கரிசனத்தோடும் விசாரித்து, மண்டை காய வைப்பர்.
ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கு மகள்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, ‘ரெயின் கோட் எடுத்து வெச்சுருக்கீங்களா’ என்று, கேட்டு வைத்தேன். பள்ளி விடும்போது, மழை பெய்து, அவர்கள் நனைந்து, சளிப்பிடித்து விட்டால், அப்புறம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்குமே?
ஆக, பயங்கர முன்ஜாக்கிரதையாக, நான் அப்படியொரு கேள்வியை கேட்டு வைக்க, அன்றைய சமையலில் ஏதோ ஒரு புதுமையை செய்திருந்த என் மனைவி, ‘நம்மைத்தான் கிண்டல் செய்கிறான் போல’ என்று நினைத்து, சண்டைக்கே வந்து விட்டார். தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம் ஆகி விட்டது. ச்சே… மழை படுத்தும்பாடு!

சிறுவனாக இருக்கும்போது, யாராவது நாயை அழைத்துக் கொண்டு ‘வாக்கிங்’ போவதைப்பார்த்தால், சிரிப்பாக இருக்கும். ‘வீட்டில் வேலை எதுவுமின்றி, நாய் மேய்க்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்வேன். ‘ஊரார் உறவுகள் மத்தியில் பெருமை பேசவும், பந்தா காண்பிக்கவும் நாய் மேய்க்கின்றனர்’ என்பதே, அவர்களைப்பற்றிய என் எண்ணமாக இருந்தது. அப்படி நினைப்பதற்கு காரணங்கள் இருந்தன. எங்கள் வீட்டிலும் நாய் வளர்த்தோம். ஆனாலும், நாங்கள் ஒரு நாளும், வீதி வீதியாக நாயை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றதில்லை.
ஆகவே, நாயை பிடித்துக் கொண்டு செல்பவர்கள் எல்லாம், பந்தா பேர்வழிகள் என்பதாகவே, என் மனதில் வெகு காலமாய் பதிந்து விட்டது. சரி, தலைவலியும், பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே, அப்படியொரு பிரச்னை எனக்கும் வந்தது.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ‘டாமி’யை கருணைக்கொலை செய்தபின், ‘நாயெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று, வீட்டுச் செயற்குழு தீர்மானம் நிறைவேறியிருந்தது.
ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகள், தன் பள்ளித்தோழி வீட்டில் இருந்து, நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டாள். பொதுக்குழு தலைவர் என்ற முறையில், நாயெல்லாம் வேண்டாம் என்று, என் கருத்தை தெரிவித்தேன். அய்யாவும் அப்படியே சொன்னார். அம்மா மட்டும், பேத்திகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அம்மா வரட்டும் என்றனர், மகள்கள் இருவரும். அம்மாவின் அதிகாரம் அறிந்த பிள்ளைகள்.
‘நாய் வீட்டில் அசுத்தம் செய்யும், நம் வீடென்றால் சுத்தம் செய்து விடலாம். பக்கத்து வீட்டின் முன் செய்துவிட்டால், அவர்கள் சண்டைக்கு வருவர்’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். ‘அம்மா வந்தவுடன் காட்டிவிட்டு, அப்புறம் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றனர், மகள்கள் இருவரும்.
அம்மா வந்தார். நாய்க்குட்டியை பார்த்தவுடன், ‘சீனு’ என்று பெயர் சூட்டி விட்டார். ஆக, வழக்கு, வாதம், எதிர்வாதம், தீர்ப்பு என எதற்குமே இடமில்லாத வகையில், அன்றே நாய்க்குட்டி வீட்டில் குடியேறி விட்டது. சொன்னபடியே, சில நாட்கள் நாய்க்குட்டியை பார்த்துப் பார்த்து பராமரித்த அக்காவும், தங்கையும், அதன்பிறகு எங்கள் பக்கம் தள்ளி விட்டனர்.
என்னைப்போலவே, முதலில் நாய்க்குட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்த அய்யாவும், நாளடைவில் சமாதானம் ஆகி விட்டார். அதன் உணவு, பராமரிப்பு எல்லாம் அவர் சார்ந்த துறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. உடன் விளையாடுவது மட்டுமே, பேத்திகள் வேலையாக இருந்தது.
நாய்க்குட்டி ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால்கூட, அய்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நாய்க்குட்டி சோறே திங்கவில்லை’ என்று, வழியில் செல்வோர், வருவோரிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார். இரவுப்பணி முடிந்து, 2 மணிக்கு வீட்டுக்குப்போனால், விழித்திருந்து, ‘நாய்க்குட்டி சாப்பிடவே இல்லை. ஊசி போடறவுனை வரச்சொல்லப்பா’ என்பார்.
இப்படியாக, நாய்க்குட்டி வளர ஆரம்பித்தது. அதை குறித்த நேரத்துக்கு வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். அக்காவும், தங்கையும், சில நாட்கள் அழைத்துச் சென்றனர்.
அக்கா வளர்ந்த பெண் என்பதால், நாய் இழுத்தாலும் பிடித்துக் கொள்வாள். தங்கை அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், உள்ளுக்குள் பயமாக இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்கள் மீது இழுத்துச் சென்று தள்ளி விடுமே என்பதுதான் பயத்துக்கு காரணம்.
ஆதலால், இப்போதெல்லாம், தினமும் நான்கு வேளைக்கு குறையாமல், நாயை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை, நம்மிடம் வந்து சேர்ந்து விட்டது. நாம் இல்லையென்றால், வீட்டம்மா அழைத்துச் செல்ல வேண்டும். நம்மை நாயுடன் தெருவில் பார்க்கும் பல பேர் விசாரித்து விட்டார்கள். என்ன நாய் மேய்க்கிறாப்புலயா என்று. நமக்குத்தெரியாதா, கேள்வியின் நோக்கம் என்னவென்று?