Posts Tagged ‘டூவீலர்’

டூவீலர் வாங்கச் செல்லும்போது, விவரமான ஆட்களை உடன் அழைத்துச் செல்வது எல்லோருக்கும் வழக்கம்தான். மற்றவர் அழைத்துச் செல்வதற்கு காரணம் என்னவோ, எனக்குத்தெரியாது. ஆனால், நான் அழைத்துச் சென்றதற்கு ஒரே காரணம், ‘எனக்கு அதை ஓட்டத்தெரியாது’ என்பது தான். வாங்கும் வண்டியை வீடு வரை ஓட்டி வருவதற்கு ஆள் வேண்டுமல்லவா? ஆகவே, நன்கு வண்டி ஓட்டத் தெரிந்த ஆட்களை அழைத்துச் சென்று விடுவேன். முதல் முறை, மொபட் வாங்கியபோது அப்படித்தான்.
ஷோரூமில் இருந்து அலுவலகம் வரை, ஆபத்பாந்தவன் ஒருவர் வண்டியை ஓட்டி வந்தார். அதன்பிறகு வீடு செல்வதற்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. ‘இனி நான் வர முடியாது. நீயே ஓட்டிச்சென்று விடு’ என்று வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து விட்டார். நானும் அப்படியே ஆக்ஸிலரேட்டரை முறுக்கியபடி வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் வண்டியை ஸ்டார்ட் செய்வது எப்படியென்று தெரியாமல், மணிக்கணக்கில் போராடி, அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியதெல்லாம் தனிக்கதை.
அந்த மொபெட் அடிக்கடி கழுத்தறுத்த காரணத்தால், ‘பைக் வாங்கித் தொலையுங்கள்’ என்று, எல்லாம் வல்ல பொதுக்குழுவும், செயற்கரிய செய்யும் செயற்குழுவும் ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில், அதிகாரமே இல்லாத அவைத்தலைவராகிய நான், பணத்துடனும், பக்கபலமாக பைக் ஓட்டத்தெரிந்த இருவருடனும், ஷோரூமுக்கு போனேன். அவர்கள் பைக் ஒன்றை கொடுத்து விட்டனர்.
கூட வந்த நண்பர் கேட்டார்.
‘சார் ஒங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா’
‘தெரியாதே’
‘தெரியாம எப்படி சார்? அதுவும் பெரிய வண்டி எடுக்குறீங்க’
‘அதெல்லாம் ஓட்டலாங்க’
‘சார், பைக் ரெகுலரா ஓட்டறவுங்களே, இந்த வண்டி ஓட்டுறதுக்கு கொஞ்சம் தயங்குவாங்க’
‘அதெல்லாம் பாத்துக்குலாங்க, நீங்க இன்னிக்குமட்டும் வீட்டு வரைக்கு வண்டிய கொண்டு வந்து விட்டுருங்க’
அப்போதைக்கு அவர் வாயை மூடி விட்டேன். நண்பர் மனதுக்குள் சிரித்திருக்கக்கூடும்.
சரி, ஒரு வழியாக, நண்பரின் புண்ணியத்தில், பைக் வீடு வந்து விட்டது.
மனைவிக்கும், குழந்தைகளுக்கும், புது பைக்கில் சவாரி செய்ய ஆசை. ஆனால், நமக்குத்தான் பைக் ஓட்டத் தெரியாதே! ‘நல்லபடியாக பைக் ஓட்டிப் பழகியபிறகு கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறி விட்டேன். ‘இவுரு எப்ப பைக் ஓட்டிப் பழகுறது, நாம எப்ப சவாரி போறது’ என்று, யாரோ இழுப்பதுபோல் காதில் விழுந்தது. மானம் அவமானம் பார்த்தால் முடியுமா?
புது பைக் வீட்டுக்கு வந்து விட்ட காரணமோ என்னவோ, நாட்கள் வெகுவேகமாக நகரத் தொடங்கின. ஒரு வாரம் ஆனது, பத்து நாட்கள் ஆகின, 15 நாட்களும் வந்து விட்டன. அதிதீவிர முன்னெச்சரிக்கை உணர்வு தடுத்துக் கொண்டிருந்தபடியால், நான் பைக் ஓட்டவே இல்லை. அலுவலகத்திலும், வீட்டிலும், நக்கல், நையாண்டிகளுடன் பொழுதுகள் கடந்து கொண்டிருந்தன. நேரடியாக யாரிடமும் போய், ‘உங்கள் வண்டியில் ஓட்டிப்பழக்கி விடுங்கள்’ என்று கேட்பதற்கு கூச்சம்.
நண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்பேன். ஆலோசனை மட்டும்தான்; செய்முறைப் பயிற்சி எதுவும் இல்லை. ஆகவே, வீட்டில் நிறுத்தியிருந்த வண்டியில் தூசு படிய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச்செல்ல மனைவியின் சவுண்ட் வால்யூம் வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது.
‘இப்பிடி ஊட்டுக்குள்ள நிறுத்தி வெக்குறதுக்கா, அறுபதாயிரம் குடுத்து பைக் வாங்குச்சு’ என்று, காலையில் வீட்டுக்குள் கேட்ட கேள்வி, இரவு வரை, காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அன்று, இரவு முழுவதும் ஒரே யோசனை.
மறுநாள் காலை 6 மணியிருக்கும். வண்டியை கஷ்டப்பட்டு ஸ்டாண்டில் இருந்து நகர்த்தி, ஸ்டார்ட் செய்தேன். பட்டன் ஸ்டார்ட்டர் தானே, அதில் ஒன்றும் சிரமம் இல்லை. நாம் கொஞ்சம் உயரமாக வேறு இருப்பதால், இரு புறமும் கால்களை ஊன்றிக் கொண்டே செல்லவும் வசதியாக இருந்தது. மெதுமெதுவாக, ஒவ்வொரு கீராக மாற்றி, ஆக்ஸிலரேட்டரை முடுக்க, வண்டி நகர ஆரம்பித்தது. ‘எப்படி ஓட்டுகிறானோ’ என்ற கவலையிலும் பயத்திலுமாக, வீட்டில் எல்லோரும் பின்தொடர்ந்து பார்ப்பது தெரிந்தது. இந்த அற்புதக்காட்சியை, இவ்வளவு விரைவில் பார்க்க நேரிடும் என்று அவர்கள் கனவிலும் எண்ணியிருக்க வாய்ப்பில்லைதான்.
ஆரம்ப வினாடிகளில் இருந்த தடுமாற்றம், வண்டி நகரத் தொடங்கியதும், போயே விட்டது. அப்பா…! ஒரு வழியாக, பைக் ஓட்டியாகி விட்டது. ஓரிரு கிலோமீட்டர் சென்றபிறகு, வண்டியை திருப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். என் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதம், என் கண்களுக்கே தெரிவது போலிருந்தது. உலகத்தை வெற்றி கொண்ட மிதப்பு என்பார்களே, அன்று எனக்குள் வந்தது, அதையெல்லாம் கடந்த ஒன்று. பிறர் உதவியின்றி, பைக் ஓட்டிப்பழகியவர்களுக்குத் தெரியும், அது எப்படிப்பட்டதென்று!

எனது டூவீலர் திருட்டுப் போய் திரும்பக்கிடைத்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமே! அதன்பிறகு நடந்த சம்பவம் எல்லோரும் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அந்த மொபட்டின் அதிகபட்ச மார்க்கெட் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். அதை திருடனிடம் இருந்து ‘ரெக்கவரி’ செய்த போலீசார், ‘சார், எப்.ஐ.ஆர்., போட்டு விடுவோமே’ என்றனர். விஷயம் தெரியாத நானும், ‘சரி போடுங்கள்’ என்று கூறி விட்டேன்.
கடைசியில்தான் தெரிந்தது, ‘எப்.ஐ.ஆர்., போட்டு விட்டால், கோர்ட் மூலம் தான் வண்டியை எடுக்க முடியும்’ என்பது. ‘சரி, கோர்ட்டுக்கு போய் எடுத்து விட்டால் போகிறது’ என்று முடிவுக்கும் வந்து விட்டேன். அங்கே வக்கீல் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால்தான், வண்டியை தருவார்களாம்.
‘என்னடா இது, தலைவலியாய் இருக்கிறதே’ என்று எண்ணிக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்தேன். குற்றப்பிரிவு போலீஸ்காரர் சொன்னார். ‘சார், நமக்குன்னு ஒரு வக்கீல் இருக்கார், அவரப்போய் பாருங்க. ஏற்பாடு செய்வார்’ என்றார். நானும் அவரைப்போய் பார்த்தேன். அவர், ‘பீஸ் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்’ என்றார். ‘வண்டியின் மதிப்பே இரண்டாயிரம் தான் இருக்கும். அதை எடுப்பதற்கு இரண்டாயிரத்து ஐநூறு செலவு செய்வதெல்லாம் டூ மச்’ என்றேன். வக்கீல் உதட்டைப்பிதுக்கி விட்டார். அப்புறம் அங்கு வேலையில்லை.
‘சார் எப்.ஐ.ஆர்., போட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. உங்கள் வண்டியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம். அதை வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் பாடு’ என்றார், போலீஸ்காரர். எனக்கு ஆத்திரம் பொங்கியது.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். வேறு ஒரு வக்கீலிடம் அழைத்துப் போனார், நண்பர். விஷயத்தை புரிந்து கொண்ட வக்கீல், ‘சார், கோர்ட்டுல மாஜிஸ்திரேட் வரும்போது, யார் வேண்டுமானாலும் மனு தரலாம். நீங்கள் உங்கள் வண்டி வேண்டுமென்று, ஒரு மனு தாக்கல் செய்யுங்கள். மாஜிஸ்திரேட் ஒப்புக்கொள்வார்’ என்றார். அதற்குரிய ஆவணத்தையும் தயார் செய்து கொடுத்தார். ‘நான் உதவியது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்றும் கூறி விட்டார். இப்படி செய்வது தெரிந்தால், சக வக்கீல்கள் சண்டைக்கு வருவர் என்பது அவரது கவலை.
சரியென்று, நானும் அவர் தயார் செய்து கொடுத்த மனுவை, மாஜிஸ்திரேட் வரும்போது காத்திருந்து கொடுத்தேன். அவர் வண்டியைக் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இரண்டு. போலீஸ்காரர்கள் எதைச்செய்தாலும், அதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கும் என்பது ஒன்று. ஆகவே அவர்கள் எதைச்சொன்னாலும், அதற்கு எதிரான செயல்தான் நமக்கு நன்மை தரும் என்பது மற்றொன்று.