Posts Tagged ‘சதாம் ஹூசேன்’

மேற்குலகின் படைக்கலன்கள், நேட்டோ நாடுகளின் தளங்களில் மட்டுமில்லை; அவை அந்தந்த நாடுகளின் பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. தத்தம் நாட்டுப்படை செல்லும் இடங்களுக்கும், செல்ல முடியாத இடங்களுக்கும், இப்படைக்கலன்கள் ஊடுருவி சென்று விடுகின்றன. தம் நாட்டரசு எடுக்கும் முடிவை எதிர்த்து நிற்பவை, புல் பூண்டாக இருந்தாலும், ஈவு இரக்கமற்று சுட்டுத்தள்ளுகின்றன. 

அந்த ‛புண்ணியவான்’களுக்கு, நீதி, நியாயம், தர்மம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஆனாலும், உலகெங்கும் பத்திரிகை தர்மம் பற்றி வகுப்பெடுப்பது அவர்கள் தான். ‛மாறி வரும் உலகை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்’ என்று, நாடு நாடாகச்சென்று பேருரை நிகழ்த்துவதும் இந்தக்கூட்டமே.
தங்கள் நாட்டு நலன் என்று வரும்போது, தர்மம், நியாயம் எல்லாம் குப்பைக்குப் போய்விடும்.
இந்தப் பேருண்மை உலகுக்கு தெரியவந்து ஆண்டுகள் பலவாகினும், பட்டவர்த்தனமாக அம்பலமானது, வளைகுடாப் போர்களின்போது தான்.
‛எம்பெடட் ஜர்னலிசம்’ என்ற புதிய உத்தியின் மூலம், சதாம் உசேனை எதிர்த்துப் போர் புரிந்த அமெரிக்க பிரிட்டீஷ் படையினருடன், தோளோடு தோள் நின்று, போரிடாமல் போரிட்டனர், மேற்கத்திய செய்தியாளர்கள். இந்த கேடு கெட்ட வேலையின் நோக்கம் பற்றி செல்சியா மேனிங் என்கிற பிராட்லி மேனிங் எழுதியிருக்கும் கட்டுரை, அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவின் போர் ஆவணங்களை விக்கி லீக்சுக்கு கொடுத்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேனிங், எம்பெடட் ஜர்னலிசத்தால் மக்களுக்கு கிடைத்த தகவல்கள் எவ்வளவு பொய்யானவை என்று உடைத்துச்சொல்கிறார். படைகளுடன் செல்லும் செய்தியாளர், ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அவரது முந்தைய செயல்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
‛போர்க்களத்தில் இருந்து அனுப்பும் செய்திகள், படையினர் நலன் கருதியதாக இருத்தல் அவசியம். மீறினால், செய்தியாளர் வெளியேற்றப்படுவார். மீண்டும் போர்க்களம் செல்ல முடியாது’ என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஆகவே, உண்மை நிலைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத தகவல்களே பல நேரங்களில் செய்தியாக வெளியாகின என்று கூறியுள்ளார், மேனிங். உண்மையில் அவர் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
…..
சதாம் ஆட்சியின் கடைசி நாட்களில் நடந்த சம்பவம் இது. தலைநகர் பாக்தாதை அமெரிக்கப்படைகள் நெருங்கி விட்டனர். அமெரிக்க குண்டு வீச்சில் சதாம் உசேன் படுகாயமுற்றதாகவும், வெளிநாட்டுக்கு ரகசியமாக குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாகவும், மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அதுவும் பாக்தாத் நகர ஓட்டலில், அந்நாட்டு அரசின் பாதுகாப்பில் இருந்து கொண்டே.
இப்படிப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள், ஈராக் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. ‛அமெரிக்க குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் சதாம் உசேன் பார்வையிட்டார்’ என படக்காட்சியுடன் வெளியானது அந்த செய்தி.
மேற்குலக ஊடகங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா? செய்தியை ஒளிபரப்பாமல் இருக்கவும் முடியாது. ஈராக் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், சதாம் குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார். மக்களில் சிலர் ஓடோடி வந்து அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். சிலர் அவர் கைகளைப் பற்றி முத்தமிடுகிறார்கள். அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசும் சதாம் உசேனை கண்ட மேற்குலகம் அதிர்ச்சியில் உறைகிறது.
‛தப்பி ஓடி விட்டார்’ என்று நாம் கூறும் நபர், ஊருக்குள் மக்களுடன் கலந்துரையாடும் காட்சி வெளியானால் எப்படி இருக்கும்? இந்தக்காட்சியை பிபிசி செய்தியாளர் வர்ணித்த விதம் இருக்கிறதே! அது இன்னும் கொடுமையானது. ‛ஏ மேன் அப்பியர்ஸ் டூ பீ சதாம் ஹூசேன், இஸ் வாக்கிங் இன் த ஸ்ட்ரீட்’ என்றார் ராகே ஓமர் என்ற அந்த செய்தியாளர்.
‛சதாம் உசேன் போன்று தோற்றமளிக்கும் ஒருவர் வீதியில் நடந்து செல்கிறார்’ என்று ஆரம்பித்து ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை, ‛த மேன் அப்பியர்ஸ் டு பீ சதாம் உசேன்’ என்றார்.
பாவம், கடைசியில் அந்தக்காட்சிகளகள் உண்மையானவை, அந்த மனிதரும் சதாம் உசேன் தான், அந்தக்காட்சி ஒளிபரப்பாவதற்கு சற்றுமுன்னர் எடுக்கப்பட்ட காட்சிதான் என்பதெல்லாம் பின்னர் நிரூபணம் ஆனது. ஆக உண்மைச்செய்தியை தரவேண்டும் என்ற நோக்கம் எதுவும் மேற்கத்திய ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை.
இதற்கு சமீபத்திய உதாரணம், உக்ரைனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரைன் அரசுக்கு எதிராக, ஒரு கும்பல் தலைநகரில் போராட்டம் நடத்தியதை, மக்கள் புரட்சி செய்வதாக, மேற்கத்திய ஊடகங்கள், நாளும், பொழுதும் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் ரஷ்யாவுடன் இணைய கருத்து வாக்கெடுப்பு நடத்தியதை, மண் வாரித் தூற்றாத குறையாக, குற்றம் கூறிக் கொண்டிருக்கின்றன.
இப்படியெல்லாம் அக்கிரமம் செய்யும் மேற்கத்திய ஊடகங்கள்தான், பிற நாட்டு அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் வண்டி வண்டியாய் அறிவுரைகளை வாரி வழங்குகின்றன. கொடுமை!
……
ஈராக்கில் இப்போது நடந்து வரும் உள்நாட்டுப் போரில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பதென தெரியாமல், ஒபாமா அரசு திணறி வருகிறது. இதை நேர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கு, எந்த மேற்கத்திய ஊடகமும் தயாரில்லை.
அரசுக்கு வலித்து விடாதபடி, ஆலோசனைகளை மட்டும் அள்ளி அள்ளி வீசுகின்றனர். பாவம், ஒபாமா. ஆலோசனைக் குப்பைகளில், எந்தக்குப்பை நல்ல குப்பை எனத் தெரியாமல், பரிதவித்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் காது கேட்காதது போலவும், கண்கள் தெரியாதது போலவும் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரது நிலை, உண்மையிலேயே பரிதாபத்துக்குரியதுதான்.

……