Posts Tagged ‘சசிகலா’

தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சரியா, தவறா, ஜெ., தவறு செய்தாரா, இல்லையா என்று வாதிடவும், எழுதிடவும், நாட்டில் ஆயிரமாயிரம் பேர் இருக்கின்றனர். நமக்கு அந்த விவாதம் தேவையில்லை.
ஜெ., சார்பில் வழக்கு நடத்திய வக்கீல்கள் திறமையானவர்களா என்று யோசித்தாலே, இந்த வழக்கு, இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தெரிந்து விடும். சொத்து குவிப்பு வழக்கை ஆரம்ப காலங்களில் நடத்திக் கொண்டிருந்த வக்கீல் ஜோதி, ஏதோ மனவருத்தம் காரணமாக, தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார். ஜெயலலிதா தொடர்புடைய 113 வழக்குகளை அவர் நடத்திக் கொண்டிருந்தார். ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட டான்சி வழக்கில், அவரது பணி முக்கியமானதாக இருந்தது.
இவ்வளவு முக்கியமானவரை, எதிர்க்கட்சியினர் கொத்திக் கொண்டு போவதற்கு விட்ட தவறு யாருடையது?
சரி, ஜோதி போய் விட்டார். அதன்பிறகு, யாராவது தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டார்களா? விசுவாசமான ஆட்களாக இருந்தால் போதும், திறமை இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை என்கிற தகுதியின் அடிப்படையில், வழக்குகள் மக்குப்பிளாஸ்திரிகளால் நடத்தப்பட்டன. அதன் விளைவுதான், இப்படிப்பட்ட தீர்ப்பு.
பண பலமும், பக்கத்துணையாக உளவுத்துறையும் இருந்தால், எல்லாம் சாதித்து விட முடியும் என்ற எண்ணத்துக்கு சாவுமணி அடித்திருக்கிறது, இந்த தீர்ப்பு. பதினெட்டு ஆண்டு காலம் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு, இப்படியொரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

Advertisements

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து, அவர் துரத்தி விடப்பட்ட நிலையில், ‛சின்ன எம்.ஜி.ஆர்.,’ என்று அடைமொழி போட்டுக்கொண்டு, ஊர் ஊராய் கூட்டம் நடத்தியும், கோவில் கோவிலாய் பால்குடம் எடுத்தும், அலப்பறை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
‛கொல்லிமலையில், ரகசிய இடத்தில் சுதாகரன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று, எங்கள் தலைமை அலுவலகத்தில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டு விட்டார். விளைவு, அன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் எனக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. ‛உடனே போட்டோகிராபருடன் கொல்லிமலைக்கு கிளம்புங்கள், சுதாகரன் யாகம் பற்றி சிறப்புச் செய்தி தர வேண்டும்’ என்று உத்தரவு.
நாங்கள் இருவருமே, கொல்லிமலைக்கு சென்றதில்லை. ‛எப்படியாவது விசாரித்து பாேய்விடலாம்’ என்றால், நாங்கள் தங்கியிருந்த நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு நினைத்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. எங்களிடம் இருப்பதோ ஓட்டை உடைசலான டூவீலர்கள். உள்ளூர் டிவி நிருபர் ஒருவரிடம், ஏதோ ஒரு இடத்துக்குப் போவதாக சொல்லி, பைக் வாங்கி வந்தார் போட்டோகிராபர்.
இருவரும் புறப்பட்டோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. கொல்லிமலை என்பது, ஒரே ஊர் அல்ல; அதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருப்பதும், ஆங்காங்கே வனத்துக்குள் வீடுகள், பங்களாக்கள், கோவில்கள் இருப்பதும். எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‛எங்காவது, கோவிலில் யாகம் நடக்கிறதா’ என்று மொட்டையாக, வழியில் தென்படுவோரிடம் விசாரித்தோம். யாருக்கும் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
‛எட்டுக்கை காளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே சென்று விசாரியுங்கள்’ என்றார், ஒருவர். சரியென்று, அவர் காட்டிய வழியில் புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் சாமி சிலைகள். எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான சிகப்புத்துணி, குங்குமப்பொட்டு. ஆங்காங்கே வேலாயுதம், சூலாயுதம், அவற்றில் எலுமிச்சம் பழம் குத்தி, குங்குமம் வேறு தடவி விட்டிருந்தனர்.
பார்க்கும்போதே, அடி வயிற்றில் கிலி பரவுவது போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. எல்லாம், மரம், செடி, கொடிகளாகவே இருந்தன. ஆனால், விட்டலாச்சார்யா படம்போல, மூலைக்கு மூலை, வேல் கம்பும், ஏதோ ஒரு சிலையும், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமும். எனக்கு திரும்பிப் போய் விடலாம் போல் இருந்தது. தொண்டையும் வறண்டு விட்டது.
தேடிக் கொண்டே சென்றபோது, ஆற்றங்கரையில் ஒரு கோவில் இருந்தது. அங்கே ஐந்தாறு பேர் இருந்தனர். எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்திக் கொண்டனர். என்ன ஏதென்று விசாரணை வேறு. கேமரா பையை பார்த்து, அவர்களுக்கு பலத்த சந்தேகம். நாங்கள், ஏதோ ஒரு ஆள் பேரைச்சொல்லி, ‛அவர் வந்தாரா, அவர் தான் எங்களை வரச்சொன்னார்’ என்றோம்.
‛அப்படி யாரும் இல்லை’ என்றனர். ‛இங்கு ஏதும் விஷேசமா’ என்று கேட்டதற்கு, ‛இல்லையே’ என்றனர்.
கூலியாட்கள் போல் இருந்தது, அவர்கள் தாேற்றம். சுதாகரன் கோஷ்டியினர் போல் யாரும் தெரியவில்லை. அப்புறமாய் தைரியம் வந்து, ‛இந்த கோவிலில் ஏதாவது யாகம் நடக்கிறதா’ என்று கேட்டோம். ‛இன்று இல்லை, ஒரு வாரத்துக்கு முன் யாரோ நடத்தியதாக பேசிக்கொண்டார்கள், எங்களுக்கு தெரியாது’ என்றனர்.
ஒரு வழியாக, அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பி வரும் வழியிலும் ஆங்காங்கே விசாரணை. போலீசில் கேட்டும், உருப்படியான தகவல் எதுவும் இல்லை. கடைசிவரை, சுதாகரன் யாகம் நடத்தினாரா, இல்லையா என்பதை உறுதி செய்வார் யாருமில்லை. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னபோது, ‛சரி, விட்டுத் தொலையுங்கள் என்று கூறி விட்டனர். சுதாகரன் பற்றிய வழக்கு செய்திகள் கண்ணில் படும்போதெல்லாம், கொல்லிமலைக்கு தேடிக் கொண்டு சென்றது நினைவுக்கு வரும். அப்படி வந்ததுதான், இந்தப்பதிவு.