Posts Tagged ‘எஸ்.எஸ்.எல்.சி.’

பதினாறு ஆண்டுகால திருமண வாழ்க்கையில், எடுத்த முடிவில் பின்வாங்காமல், இறுதி வரை ஒரே நிலையில் நானிருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதை உணரும்போது, துக்கம் கொஞ்சம் தொண்டையை அடைக்கவே செய்கிறது. உறவினர், அண்டை, அயலார், அலுவலக நண்பர்கள் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும், மாமூல் வாழ்க்கையில் அப்படியொன்றும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடாதென்பதை நானறிவேன்; ஆனால், கட்டிய மனைவியின் உத்தரவை அப்படி, ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக எடுத்துக் கொள்ள முடியுமா?
அந்த உத்தரவை மீறி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’ என்பதை நீங்கள் அனைவரும் அறிந்தே இருப்பீர்கள். அத்தகைய பேரபாயத்தை சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலை, கடந்த வாரத்தில் எனக்கு ஏற்பட்டு விட்டது. அரசு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை, ‘மகளை அக்கவுண்ட்ஸ் குரூப்பில் சேர்த்து விடலாம்’ என்று பாட்டாகப் படித்துக்கொண்டிருந்த என் மனைவியார், தேர்வு முடிவைப் பார்த்தவுடன், அதுவும் 481 மதிப்பெண்கள் என்றவுடன், ‘கணிதம், உயிரியல் இருக்கும் முதல் குரூப்பில்தான் சேர்த்தாக வேண்டும்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.
உண்மையில், அதைக்கேட்டவுடன் எனக்கு பகீரென்றது. ‘கணிதம் என்றால், எட்டிக்காயாக கசக்கும் மகளை, இந்த கண்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறேனோ’ என்று பீதி தொற்றிக் கொண்டது. ஆனாலும், நமக்குள் இருக்கும் நடிகர் திலகத்தை தட்டியெழுப்பி, நடுக்கம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொண்டேன்.
‘அப்படியெல்லாம் அஞ்சி நடுங்குவதற்கு என்ன இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால், கணித டியூஷனுக்கு மகளை அழைத்துச்சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில், ஒரு மணி நேரம் கால் கடுக்க காத்திருந்ததும், எனக்குத்தானே தெரியும்?
காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு, வகுப்புத்தேர்வு, டியூஷனில் நடத்தப்படும் தேர்வு விடைத்தாள்கள் வீடு வரும்போதெல்லாம், கலவரம் தடுக்கும் பணியில் ஈடுபட்டவனுக்குத்தானே, காயத்தின் வலி தெரியும்? தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து விட்டு காத்திருப்பவன்போல், ‘திக் திக்’ மனநிலையுடன், தேர்வு விடைத்தாள்களை எதிர்கொண்டதெல்லாம் போதாதா? ‘மறுபடியும் முதலில் இருந்தா…’ என்கிற சினிமா வசனம், அந்த சில நாட்களில் மட்டும், பல நூறு முறை என் நினைவுக்கு வந்து விட்டது.
எவ்வளவோ கறாராக பேசியும், என் உறுதி குறையவில்லை என்பதாலோ என்னவோ, என் மனைவி கொஞ்சம் மனம் இரங்கி விட்டார். ஒரு வழியாக, பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பம் வாங்கி, அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டுமென்று பூர்த்தி செய்து கொடுத்தும் விட்டோம். ‘நானும் வருவேன்’ என்று விடாப்பிடியாக என்னுடன் பள்ளிக்கு வந்த மனைவி, ‘பள்ளி முதல்வரை சந்தித்துப் பேசலாம். அவர்கள் நிச்சயம் பர்ஸ்ட் குரூப்பில்தான் சேரச் சொல்வர். அப்போது பார்க்கலாம் உங்கள் ஜம்பத்தை’ என்று, என்னுடன் சவால் விட்டுக்கொண்டு இருந்தார்.
அதற்கு தகுந்தபடி, மதிப்பெண் குறைந்த மாணவிகளுக்கெல்லாம் உடனடியாக அட்மிஷன் கொடுத்த அந்தப்பள்ளி நிர்வாகம், எங்களைப் பார்த்து, ‘இன்று போய் நாளை வா’ என்று கூறி விட்டனர். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. மனைவிக்கோ, அப்படியொரு மகிழ்ச்சி. ‘நமக்கு அக்கவுண்ட்ஸ் குரூப் எல்லாம் தர மாட்டாங்க. பர்ஸ்ட் குரூப்தான். கன்வின்ஸ் பண்ணத்தான் நாளைக்கு வரச்சொல்றாங்க’ என்று கூவிக்கொண்டே வீடு வந்தார்.
நானும் பயந்துகொண்டே மறுநாள் சென்றேன். கூடவே, மனைவியும், மகளும்.
‘அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டாம், முதல் குரூப் எடுங்கள்’ என்று கூறினால், என்ன சொல்லி சமாளிப்பது என்று, ஏகப்பட்ட தயாரிப்புகளோடு சென்றேன். பள்ளி அலுவலக ஊழியரோ, ‘நேத்தே நீங்க பீஸ் கட்டியிருக்க வேண்டியது தானே, பிரின்ஸ்பல் நேத்தே அட்மிஷன் தரச் சொல்லிட்டாங்க’ என்று கூறி, வயிற்றில் பால் வார்த்தார். எனக்கும், மகளுக்கும், அப்படியொரு மகிழ்ச்சி. என் மனைவிக்குத்தான் பெரும் ஏமாற்றம். ஒரு மரியாதைக்கு கூட, ‘ஏன், அக்கவுண்ட்ஸ் செலக்ட் பண்றீங்க; பர்ஸ்ட் குரூப் எடுக்கவில்லையா’ என்று பிரின்ஸ்பல் கேட்கவில்லையாம்! ஆனாலும், இந்த உலகம் ரொம்பவும்தான் மோசம்!

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் அது பற்றி கருத்துச் சொல்லும் வழக்கமுடைய நமக்கு, கடந்த இரண்டு மாதங்களும் மாபெரும் சோதனைக்காலமாக அமைந்து விட்டன. மூத்த மகளை, பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு பொறுப்பேற்றபோது, அது அவ்வளவு சிரமமானதாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

கருத்துச் சொல்வது, உலகின் மிக எளிமையான பணிகளில் முதன்மையானது; சுருக்கமாகச் சொன்னால், செத்துப்போன பாம்புகளை அடிப்பதற்கு ஈடானது. ‘எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும்’ என்பவர்கள்கூட, கருத்துக் கேட்டால், கூடை கூடையாக அள்ளி வீசுவர். தினம் தினம் 24 மணி நேர செய்திச் சேனல்களை பார்த்திருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத்தெரியும்.
ஆனால், இந்த கணக்குப் பாடம் சொல்லித்தருவதெல்லாம், கருத்துச் சொல்லும் வகையறாவில் வருவதில்லை. அதற்கு, நமக்கு முதலில் கணக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலமும், தமிழும் கூட அப்படித்தான்.
‘அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எல்லாம் தெரியும்’ என நினைத்திருக்கும் பிள்ளைகள் முன்னிலையில், ‘எனக்கு இந்தக்கணக்கு தெரியவில்லை, இந்தக்கேள்விக்கெல்லாம் விடை தெரியாது’ என்று கூறிக்கொண்டு, தந்தையும், தாயும் விழி பிதுங்கி நிற்பது எவ்வளவு கொடுமை?
அப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்க விரும்பாமல்தான், பெற்றோர், பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், நம்மைப்போன்றவர்களுக்கு அத்தகைய விவரம் கூட இல்லை.
அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தபிறகே, மண்டையில் விஷயம் உறைத்தது. கணிதப் பாடத்துக்கு மட்டுமே மகள் டியூஷன் சென்று கொண்டிருக்கிறாள்; அதுவும், வகுப்பெல்லாம் இல்லை; தேர்வு எழுதும் பயிற்சி மட்டுமே. யோசித்துப் பார்த்தால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத்தோன்றியது.
‘இப்ப இருந்து படித்தால்கூட நல்ல மார்க் வாங்கி விடலாம்’ என்று வகுப்பாசிரியை கூறினார். அந்த ஒரு வார்த்தையை ஆறுதலாக நம்பித்தான், நானும் மகளை தேர்வுக்கு தயார் செய்யும் பொறுப்பை முழு வீச்சில் ஏற்றுக் கொண்டேன்.
ஏற்றுக்கொண்ட பணி, ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு வந்தபிறகே, மற்ற வீரதீரப் பிரதாபங்களை வெளியிடுவது சிறப்பாக இருக்கும். ஆகவே, அதைப் பிறகு பார்ப்போம். இப்போது தேர்வு முடிந்து விட்டதாகையால், கருத்துச் சொல்லும் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியதாகி விட்டது.
கம்ப்யூட்டரை கையில் தொடாமல் இருந்த இந்த இரண்டு மாதங்களில், ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன.
ஹிலாரி கிளிண்டனுக்கு மீண்டும் தேர்தல் ஆசை வந்திருக்கிறது. இந்தியாவுடன் விரோதம் பாராட்டும் மில்பேண்ட் சகோதரர்கள், பிரிட்டனில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில்
மரம் வெட்டச்சென்ற 20 பேர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பீகாரில், தேர்வெழுதச் சென்ற மகன், மகள்களுக்கு, காப்பியடிக்க வசதியாக, புத்தகங்களை கொடுக்கச்சென்ற பெற்றோர், மாடி ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் முதல் உலகத் தொலைக்காட்சிகள் வரை ஒளிபரப்பாகி மானத்தை வாங்கி விட்டன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மியில் பூசல் வெடித்திருக்கிறது. தமிழகத்தில் ஊருக்கு ஊர் பால் குட ஊர்வலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லஞ்சமும் ஊழலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து விட்டன.
ஒபாமா, காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விட்டார். ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. மோடிக்கு வாய்த்தது, இன்னுமொரு வெளிநாட்டுப் பயணம். கருத்துக்கள் நிறைய இருக்கின்றன; எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!