Posts Tagged ‘ஆர்.டி.ஓ.’

‘இரு சக்கர வாகனம் ஓட்டிப்பழகி விட வேண்டும்’ என்பது, என் மனைவியின் நீண்ட நாள் ஆசை, விருப்பம், கனவு, லட்சியம். அதற்கு முதல் இடையூறாக இருப்பது, நம்மைத்தவிர வேறு யாராக இருந்து விட முடியும்?
‘கொஞ்சம் கையில் பணம் தயார் செய்து வைத்துக் கொள்கிறேன், அப்புறமாய் ஓட்டிப் பழகிக் கொண்டு விடலாம், அதுவரை பொறுத்துக்கொள்’ என்று, நையாண்டி செய்தே காலத்தை ஓட்டினேன். மருத்துவச் செலவுக்கெல்லாம் கையில் பணம் வேண்டும்தானே!
‘கட்டிய மனைவி என்ற முறையில் உனக்கு செலவழிப்பது நியாயம். நீ விபத்து ஏற்படுத்தி விட்டாய் என்பதற்காக, ரோட்டில் செல்பவருக்கெல்லாம் நான் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே, அதற்குத்தான் யோசிக்கிறேன்’ என்றெல்லாம் என்னால் கடுப்பேற்றப்பட்டதாலோ, என்னவோ, என் மனைவிக்கு, லட்சிய தாகம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.
பல்லாண்டு காலம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் ஓடி ஓடி, ஓடாய்த் தேய்ந்த டிவிஎஸ் 50, வீட்டில் தனியறையில், ஓய்வில் இருந்தது. அதற்கொரு வாழ்வு கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, என் மனைவியும், மகள்களும், அதை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்ட ஆரம்பித்தனர்.
கிளட்ச், பிரேக் இரண்டையும் பிடித்துக்கொண்டே ஸ்டார்ட் செய்து, அப்படியே ஆக்சிலரேட்டரையும் முறுக்கி, நகர்த்தி, வாசலில் ஓட்ட ஆரம்பித்தனர். ‘சரி, எப்படியோ, ஓட்டிப்பழகினால் சரி’ என்று, நானும் விட்டு விட்டேன். எனக்காக பொறுத்துக் கொண்டதோ என்னவோ, அந்த டிவிஎஸ் 50யும் சில வாரம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு வாசலில் ஓடியது. இல்லையில்லை, நகர்ந்தது; ஊறியபடியே சென்றது.
அப்புறம் பாவம், கார்ப்பரேட்டரில் குபுக் குபுக்கென புகை வர ஆரம்பித்து விட்டது. ஸ்டார்ட் செய்தபிறகும், எங்கேயும் நகராமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்தது. ‘இதுவும் அப்பாவைப்போலவே இம்சிப்பதாக’ புகார் கூறிக்கொண்டே, மீண்டும் அதே அறையில் கொண்டுபோய் போட்டு விட்டனர். அப்படியும், டூவீலர் ஓட்டும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.
யாராவது ரோட்டில் பெண்கள் டூவீலர் ஓட்டிச்செல்வதை பார்த்து விட்டால் போதும், நமக்கு ‘வாழ்த்து’ மழை பொழிய ஆரம்பித்து விடும். ஓட்டிப்பழக்கி விடாதது குற்றமாம். என்ன கொடுமை சாமி!
‘ஏன் திருமணத்துக்கு முன்பே ஓட்டிப் பழகியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டிருக்கலாம்தான். கேட்டால் என்ன பதில் வருமென்று தெரியாதா என்ன? ‘பைக் ஓட்டிப் பழகியிருந்தால், நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்திருப்போமே’ என்று பதில் வரும். இதுபோன்ற கேள்வி பதில்களில், நிறைய முன் அனுபவம் உண்டென்பதால், அப்படி கேட்டுவிட வேண்டுமென்று, இப்போதெல்லாம் நமக்கும் தோன்றுவதே இல்லை.
இப்படியே காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ‘இந்த நிலை மாறும்’ என்பது மாறாத விதியல்லவா? அப்படியொரு மாற்றம், உறவுக்காரப் பெண்கள் இருவரால் வந்து விட்டது. ‘நாங்கள் டூவீலர் ஓட்டிப் பழகப் போகிறோம். லைசென்ஸ் உடன் சேர்ந்து 3500 ரூபாய் தான்’ என்று வீடு தேடி வந்து கொளுத்திப் போட, எங்கள் வீட்டில் ஊசிப்பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க விட்டது. ‘நானும் பழகப் போகிறேன்’ என்று, மறுநாளே கிளம்பிவிட்டார், மனைவி. மகள்களும், மாமியாரும் (எங்க அம்மாதான்) உசுப்பேற்றி விட, இப்போது பயிற்சி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு தினமும் கொண்டுபோய் விடுவது, நமக்கு பெரும் உத்யோகமாக மாறி விட்டிருக்கிறது. முன்பெல்லாம், மகள்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது என்ற அளவில் மட்டுமே இருந்த நமது, வீட்டுக்கடமைகளின் எல்லை, இப்போது ‘டிரைவிங்’ பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வரை, விரிவடைந்து விட்டது.
எப்படியும், இன்னும் ஒரு சில நாட்களில் பயிற்சி முடிந்து விடும். அதன்பிறகு, வீட்டு வாசலிலும், வீதியிலும்தான் டூவீலர் ஓட்டியாக வேண்டும். என்ன நடக்குமோ என்பதை நினைத்தால்தான், வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் இருக்கிறது.
‘முன்பெல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு, ஆண்களை மட்டுமே பெண்கள் நம்பியிருந்தனர். பைக் ஓட்டிப் பழகிய பிறகுதான், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெண்ணடிமைத் தனத்துக்கு உண்மையான முடிவு, பைக் ஓட்டிப்பழகியதில் தான் இருக்கிறது’ என்ற அர்த்தம் வரக்கூடிய கட்டுரையொன்றை, ஆங்கில பத்திரிகையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுவேறு, நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!

ஆர்.டி.ஓ., ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீஸ் என்பார்களே, வட்டார போக்குவரத்து அலுவலகம்… அங்கே சென்றிருந்தேன். வேறெதற்கு? லைசென்ஸ் எடுப்பதற்குத்தான்! ‘இத்தனை நாளாக லைசென்ஸ் எடுக்கவில்லையா’ என்றெல்லாம், ‘இந்தியன்’ படத்தில் வரும் செந்தில் கேரக்டர் போல் கேள்வி கேட்கக்கூடாது. எடுக்கவில்லை. அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள். ‘சரி, இப்போது எடுப்பது ஏன்’ என்று கேட்கிறீர்களா? அதற்கும் காரணம் இருக்கிறது. அதெல்லாம், வெளியில் சொல்ல முடியாது.
விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொரு முறையும் எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுநர் உரிமம் எடுக்கும்போதெல்லாம், என் கெட்ட நேரம் அதிகமாகி, வேலைப்பளுவோ, வேறு ஏதாவது கிரக தோஷமோ வந்து விடும்; அப்படியே எல்.எல்.ஆர்., உரிமமும் காலாவதியாகி விடும். இப்படியே 18 ஆண்டு இடைவெளியில், மூன்று எல்.எல்.ஆர்.,களை தொலைத்தாகி விட்டது.
நான்காவாது முறையாக எல்.எல்.ஆர்., எடுத்தபோதே, ‘இந்தமுறை எப்படியாவது லைசென்ஸ் எடுத்தே தீர வேண்டும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். தினமும் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம், இந்த வாரத்துக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்று மனதுக்குள் தோன்றும்.
இப்படியே நாட்கள் ஓடின. வாரங்கள் நகர்ந்தன. மாதங்களும் ஒவ்வொன்றாய் போய்க் கொண்டே இருந்தன. நான்காவது எல்.எல்.ஆர்., காலாவதி ஆவதற்கு கொஞ்சம் நாட்கள் இருக்கும்போது, பீதி பற்றிக் கொண்டது.
சரி, இனியும் தாமதித்தால், இந்த எல்.எல்.ஆரும்., காலாவதியாகிவிடும் என்றெண்ணி, ஒரு நாள், வண்டியுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை அணுகி, என்னென்ன ஆவணங்கள் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.
‘எல்லாம் எடுத்துக் கொண்டு, ஓரிரு நாட்களில் வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு வந்தேன். அப்படியும் ஒரு வாரம் வீட்டை விட்டும், ஆபீசை விட்டும் நகர முடியவில்லை. கடைசியில், சந்தேகத்தில் எல்.எல்.ஆர்., உரிமத்தை எடுத்துப்பார்த்தபோது, காலாவதியாவதற்கு ஒரு நாள் மட்டுமே இருப்பது தெரிந்தது. அய்யகோ! என்ன ஒரு நெருக்கடி?
பதறியடித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்து, புறப்பட்டேன், கோவை புதுாருக்கு. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் அது. பணியில் இருந்த ஊழியர், எனது எல்.எல்.ஆர்., படிவத்தை வாங்கிப்பார்த்தார்.
‘எடுத்து ஆறு மாசம் ஆச்சு போலருக்குதே’ என்றவர், ‘சார், இன்னிக்குத்தான் கடைசி நாளு. என் லைப்லயே கடைசி நாள்ல வந்து லைசென்ஸ்க்கு அப்ளை பண்ணுற மொத ஆளு நீங்கதான்’ என்றார். எனக்கு பெருமிதம் தாங்கவில்லை. ‘இதைத்தானே எதிர்பார்த்தேன்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்.
‘சரி, பணம் கட்டீட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்தார்.
வரிசையில் காத்திருந்தபோது, அருகேயிருந்த ஒருவர் குசலம் விசாரித்தார்.
‘‘என்ன சார், ஆயிரம் ரூபா நோட்டா’’
‘‘ஆமா’’
‘‘இங்க இங்க ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா நோட்டெல்லாம் செல்லாது, தெரியாதா’’
‘‘எனக்குத் தெரியாதே’’
‘‘தெரிஞ்சு வெச்சுருக்கணும் சார். அங்க பாருங்க’’
அவர் கைகாட்டிய திசையில் பார்த்தால், ‘கள்ள நோட்டு கண்டறிவது எப்படி’ என்று பத்திரிகையில் வந்த செய்தியை, ‘ஜெராக்ஸ்’ செய்து ஒட்டியிருந்தனர்.
‘‘ஆயிரம், ஐநுாறுல நெறய கள்ளநோட்டு வாரதால, அதயெல்லாம் வாங்க மாட்டோம்னு சொல்வாங்க. சில்லரை வெச்சுக்குறது நல்லது’’
‘‘கள்ள நோட்டுன்னு சந்தேகம் இருந்தா, செக் பண்ணி வாங்கட்டும். அதுக்கு, ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா வாங்க மாட்டாங்கன்னா எப்புடி’’
‘‘அது அப்புடித்தான். ரொம்ப சந்தேகம்னா, கவுன்ட்டர்ல கேட்டுப்பாருங்க’’
நாமென்ன அந்தளவுக்கு விவரம் இல்லாதவர்களா என்ன? உடனடியாக, பக்கத்தில் இருந்த கடையில், சில்லரை மாற்றிக்கொண்டு வந்து, மீண்டும் வரிசையில் நின்று கொண்டேன்.
லைசென்ஸ் எடுக்க 350 ரூபாய் கட்டணம். செலுத்த வரும் ஒவ்வொருவரிடமும் 350 ரூபாய் சரியாக சில்லரை இருந்தால் மட்டுமே படிவத்தை வாங்கினார், கவுன்ட்டரில் இருந்த ஆசாமி. யாராவது, தப்பித்தவறி, 400 ரூபாய் கொடுத்தால்கூட, திருப்பி அனுப்பினார். கூடவே தாறுமாறாக திட்டவும் செய்தார். அவரது உருட்டல் மிரட்டலுக்கு பயந்தே, அனைவரும் சில்லரை வாங்கிக் கொண்டு வந்தனர். நான் பார்த்தவரை, அவர் யாருக்கும் சில்லரை கொடுக்கவே இல்லை.
சரி, அவரையும் கடந்தாகி விட்டது. அடுத்தது, வேறு ஒரு கவுன்ட்டர். அங்கேயிருந்தபோது, மொபைல்போன் அழைப்பு. ஒரு அரசு அதிகாரி கூப்பிட்டார். லைசென்ஸ் எடுக்க காத்திருப்பதாக கூறியதும், கெக்கேபிக்கேவெனச் சிரித்தார்.
‘‘சார், நெஜமாத்தான் சொல்றீங்களா’’
‘‘ஆமா சார், இப்பத்தான் வந்துருக்கேன்’’
‘‘சரி சார். அப்ப நேரா, ஆர்டிஓவை போய் பாருங்க, வேணும்னா போன் பண்ணிச்சொல்றேன்’’
‘‘விடுங்க சார், ஆர்.டி.ஓ.,வைப்போய் பாக்குறது சரியாக இருக்காது. வரிசைல நின்னே வாங்கிடறனே’’
இப்படி நான் பேசிக் கொண்டிருந்ததும், அங்கிருந்த பெண் ஊழியருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‘‘அலோ யாரு நீங்க. மொதல்ல வெளிய போங்க… என்ன ஆர்.டி.ஓ., ஆர்.டி.ஓ.,னு போன்ல பேச்சு?’’
அதற்குமேல், மரியாதையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உடனடியாக போன் அழைப்பை துண்டித்துக் கொண்டு, வரிசையில் அமைதியாக நின்று கொண்டேன்.
அங்கிருந்த ஊழியர் கேட்டார்.
‘‘யாரு உங்களுக்கு பார்ம் பில்லப் பண்ணாங்க’’
‘‘ஏன் ஏதாச்சும் தப்பாருக்குதா’’
‘‘இல்ல சரியாருக்குது. அதான் யாருன்னு கேக்குறேன்’’
‘‘எங்க ஆபீஸ்ல பில்லப் பண்ணிக் கொடுத்தாங்க’’
‘‘எந்த ஆபீஸ்’’
‘‘சுந்தராபுரம் ஆபீஸ்’’
‘‘என்ன வேலை பாக்குறீங்க’’
‘‘ஆபீஸ் ஸ்டாப்’’
‛‛அதாங்க, என்ன வேலை’’
‛‛எழுதுற வேலை’’
அதற்குமேல், அவர் கேள்வி கேட்கவில்லை. முகம் மட்டும், இஞ்சி தின்ற குரங்கு போலாகி விட்டது, பாவம்! இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை பெண் ஊழியர், என்னை முன்பே எச்சரிக்கை செய்திருந்தது, எத்தகைய தீர்க்க தரிசனம் என்பது அப்போதுதான் புரிந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று முட்டுக்கட்டைகளை கடந்து வாங்கிய எனது டிரைவிங் லைசென்ஸை, பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் பெருமிதம் இருக்கிறதே! அப்பப்பா…அதெல்லாம் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் புரியும், மக்களே!