திருச்செங்கோடு, கொங்கு மண்டலத்தின் முதன்மையான நகரங்களில் ஒன்று. அங்குள்ள மலைக்கோவில், தேவாரப்பாடல்களில் பாடப்பெற்றது; கொங்கெழு சிவத்தலங்களில் முதன்மையானது. ‘சிவனும், சக்தியும் ஒன்றுதான்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, மாதொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில், இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், சிவபெருமான்.
மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என மூன்றையும் கொண்டது இக்கோவில். சிவத்தலமும், வைணவத்தலமும் ஒன்றாக இருப்பதுவும் இதன் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட மலைக்கோவிலை சார்ந்தே, நகரமும், அதன் பொருளாதாரமும் உருவாகி வந்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புகளையும் கொண்டிருக்கும் திருச்செங்கோடு, தொழில் துறையில் கூட முன்னணி நகரம்தான். விசைத்தறி தொழிலும், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தொழிலும், லாரித் தொழிலும், திருச்செங்கோட்டின் பிரதான தொழில்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.
கல்விச்சேவையை கை நிறைய, பை நிறைய லாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டிய தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய இருக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், அவரது அப்பா மோகன் குமாரமங்கலம், ரங்கராஜனின் தாத்தாவும், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தவருமான சுப்பராயன் ஆகியோரின் பூர்வீகம், திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற சிற்றூர். (பெருமாள் முருகன்கூட, இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்பது கூடுதல் தகவல்)
நாட்டின் முதலாவது காந்தி ஆசிரமம், திருச்செங்கோட்டில்தான் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது. இங்கிருந்துதான், ராஜாஜி மதுவிலக்கு மற்றும் கதர் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இப்படியெல்லாம், சிறப்புகளை கொண்டிருக்கும் திருச்செங்கோடு, ஏதோ மனிதக்கறி தின்னும் காட்டுமிராண்டிகள் வசிக்கும் வனமாக பலராலும் உருவகப்படுத்தப்படுவதை காணச்சகிக்காமல் எழுதப்பட்டதே இந்தப்பதிவு.
சர்ச்சைத்தீயை பற்ற வைத்தவர்களும் சரி, அதை அணைய விடாமல் பாதுகாப்பவர்களும் சரி, திருச்செங்கோட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் சேதம் விளைவிக்கின்றனர் என்பதே உண்மை. மிரட்டுவோருக்கு மட்டுமல்ல; மிரட்டலுக்கு அஞ்சி புறமுதுகிடுபவருக்கும், இதில் பங்குண்டு.
***
குறிப்பு 1: பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை;
ஆனால், அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு நிச்சயம் இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
***
குறிப்பு 2: திருச்செங்கோட்டில், பெருமாள் முருகனை கண்டித்து முழுமையாக கடையடைப்பு நடந்திருக்கிறது. ஜாதிய மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு, அங்கு அந்தளவுக்கு செல்வாக்கில்லை. மார்கழி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்லும் காலத்தில், திட்டமிட்டு கிளப்பிவிட்டதே, பிரச்னை காட்டுத்தீயாக பரவ, முக்கிய காரணமாகி விட்டது.