Archive for the ‘கட்டுரை’ Category

திருச்செங்கோடு, கொங்கு மண்டலத்தின் முதன்மையான நகரங்களில் ஒன்று. அங்குள்ள மலைக்கோவில், தேவாரப்பாடல்களில் பாடப்பெற்றது; கொங்கெழு சிவத்தலங்களில் முதன்மையானது. ‘சிவனும், சக்தியும் ஒன்றுதான்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, மாதொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில், இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், சிவபெருமான்.

மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என மூன்றையும் கொண்டது இக்கோவில். சிவத்தலமும், வைணவத்தலமும் ஒன்றாக இருப்பதுவும் இதன் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட மலைக்கோவிலை சார்ந்தே, நகரமும், அதன் பொருளாதாரமும் உருவாகி வந்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புகளையும் கொண்டிருக்கும் திருச்செங்கோடு, தொழில் துறையில் கூட முன்னணி நகரம்தான். விசைத்தறி தொழிலும், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தொழிலும், லாரித் தொழிலும், திருச்செங்கோட்டின் பிரதான தொழில்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

கல்விச்சேவையை கை நிறைய, பை நிறைய லாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டிய தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய இருக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், அவரது அப்பா மோகன் குமாரமங்கலம், ரங்கராஜனின் தாத்தாவும், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தவருமான சுப்பராயன் ஆகியோரின் பூர்வீகம், திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற சிற்றூர். (பெருமாள் முருகன்கூட, இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்பது கூடுதல் தகவல்)

நாட்டின் முதலாவது காந்தி ஆசிரமம், திருச்செங்கோட்டில்தான் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது. இங்கிருந்துதான், ராஜாஜி மதுவிலக்கு மற்றும் கதர் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இப்படியெல்லாம், சிறப்புகளை கொண்டிருக்கும் திருச்செங்கோடு, ஏதோ மனிதக்கறி தின்னும் காட்டுமிராண்டிகள் வசிக்கும் வனமாக பலராலும் உருவகப்படுத்தப்படுவதை காணச்சகிக்காமல் எழுதப்பட்டதே இந்தப்பதிவு.

சர்ச்சைத்தீயை பற்ற வைத்தவர்களும் சரி, அதை அணைய விடாமல் பாதுகாப்பவர்களும் சரி, திருச்செங்கோட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் சேதம் விளைவிக்கின்றனர் என்பதே உண்மை. மிரட்டுவோருக்கு மட்டுமல்ல; மிரட்டலுக்கு அஞ்சி புறமுதுகிடுபவருக்கும், இதில் பங்குண்டு.
***
குறிப்பு 1: பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை;
ஆனால், அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு நிச்சயம் இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
***
குறிப்பு 2: திருச்செங்கோட்டில், பெருமாள் முருகனை கண்டித்து முழுமையாக கடையடைப்பு நடந்திருக்கிறது. ஜாதிய மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு, அங்கு அந்தளவுக்கு செல்வாக்கில்லை. மார்கழி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்லும் காலத்தில், திட்டமிட்டு கிளப்பிவிட்டதே, பிரச்னை காட்டுத்தீயாக பரவ, முக்கிய காரணமாகி விட்டது.

தமிழ் மீடியத்தில் படித்த பலருக்கும், ‘ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியவில்லையே’ என்ற வருத்தம், நிச்சயம் இருக்கும்; எனக்கும் பல ஆண்டுகள் அப்படித்தான் இருந்தது. எங்காவது பயணிக்கும்போது, சக பயணிகளான பொட்டு பொடிசுகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கிலத்திலேயே அழுவதைப் பார்க்கும்போது, பேரவமானமாக இருக்கும்.

பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு, லாலு பிரசாத், ராமவிலாஸ் பாஸ்வான் மாதிரியானவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு, நம் ஆங்கிலம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. எங்காவது ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு போயாவது, ஐயம் திரிபற ஆங்கிலம் பேசிப் பழகி விட வேண்டும் என்று தீராத ஆவல். ஒரு நாள் பேச்சுவாக்கில் இருந்தபோது, நண்பரும் அப்படியே சொன்னார். அப்புறமென்ன? துணைக்கு ஆள் கிடைத்து விட்டது; ‘பயிற்சி தரும் ஆள் யாராவது கிடைக்கட்டும்’ என்று காத்திருந்தோம்.
அப்படி இருந்த நாட்களில்தான், அலுவலகத்துக்கு பக்கத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆங்கில பேச்சுப்பயிற்சி சொல்லித்தருவதாக போர்டு மாட்டினார். அவர் பெரும்பாலான நேரங்களில் பயிற்சிக்கு ஆளில்லாமல், ரோட்டில் போகும் வரும் வாகனங்களை கணக்கெடுப்பதாக ஆபீஸ் பையன் தகவல் சொன்னான்.
ஆகவே, அந்த ஆசிரியையிடம் சென்று நானும் நண்பரும் விசாரித்தோம். ‘இரண்டு மாதம் வகுப்பு, மூவாயிரம் கட்டணம்’ என்று கறாராகப் பேசினார், ஆசிரியை. நாங்கள் இருவரும் பத்திரிகை செய்தியாளர்கள் என்று தெரிந்தவுடன், முன்கூட்டியே பணத்தை வைத்தால் தான் வகுப்பென்று (!) சொல்லி விட்டார். அவருக்கு என்ன பயமோ?
வேறு வழியின்றி மொத்தமாக முன்பணம் கொடுத்து வகுப்பில் சேர்ந்தோம். இருவருக்கு மட்டும் தனி வகுப்பு. இருவரது ஆங்கிலத் திறனையும் சோதித்த ஆசிரியை, இரண்டே மாதத்தில் இருவரையும் ஆங்கிலத்தில் பேச வைத்து விடுவதாக உறுதியாகச் சொன்னார். ஆக, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அமர்க்களமாக தொடங்கியது.
ஒரு குயர் நீளவாக்கு நோட்டுடனும், பேனா, பென்சில், அழிக்கும் ரப்பருடனும் நாங்கள் வகுப்புக்குச் செல்வது கண்டு, அக்கம் பக்கத்து அலுவலகத்தார் வாயைப்பிளந்தனர். கூடவே இருக்கும் சில பேரோ, கும்பல் கூடி பேசிச்சிரிப்பதும், குதூகலப்படுவதுமாக இருந்தனர். ‘காலம் போன கடைசில…’ என்பதாக, காதுபடப் பேசும் கருத்துக்கள் எல்லாம், நம்மைக் குறி வைத்து ஏவப்பட்டதாகவே எனக்குப் புலப்பட்டன. ‘நீங்க குடிங்க யுவர் ஹானர்’ என்ற லொடுக்குப்பாண்டி சினிமா டயலாக்போல, ‘அவங்க கெடக்குறாங்க சார்’ என்பான் ஆபீஸ் பையன்.
ஆரம்பத்தில் வகுப்பெல்லாம் ஜோராகத்தான் இருந்தது. வகுப்பில் மிகத்தீவிரமாக கவனித்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வீட்டில் எழுதிப்பார்க்கும் போதும், வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார்ப்பது போல கனவு காணும்போதும், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
கனவெல்லாம் நனவாகி விடுகிறதா என்ன? நண்பர் கொஞ்சம் விளையாட்டுப் பேர்வழி. ஆசிரியை, மிகத்தீவிரமாக ஆங்கில இலக்கணம் பற்றி வகுப்பெடுக்கும் வேளையில், ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்பார். ஆசிரியைக்கே தெரியாத ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் விசாரிப்பார். வெளியில் வேடிக்கையும் பார்ப்பார். திடீரென கெக்கே பிக்கேவென்று சிரித்தும் தொலைப்பார். அவருக்கு அடிக்கடி போன் வேறு வந்து விடும். ஆசிரியைக்கு சங்கடமாக இருக்கும்; எனக்கோ, தர்ம சங்கடமாக இருக்கும்.
நாட்கள் செல்லச்செல்ல, வகுப்புக்கு மட்டம் போடவும் ஆரம்பித்தார் நண்பர். அவர் வராமல் விடுவதுடன், ‘நாளைக்குப் போலாம் விடுங்க சார்’ என்று நமக்கும் வேறு சொல்லி விடுவார். ‘தனியாகப் போகத்தான் வேண்டுமா’ என்று நமக்கும் தோன்றும். இப்படியே, இன்று, நாளை என்று தள்ளிப் போடப்பட்ட வகுப்புக்கு, பிறகு போகவே இல்லை.
ஆசிரியை, நான்கைந்து முறை, ஆபீஸ் பையனிடம் சொல்லி விட்டார். வழியில் எதிர்ப்பட்டபோது, என்னிடமே ஒரு முறை விசாரித்தார். ‘ஒர்க் கொஞ்சம் அதிகமாய்டுச்சு பாத்திக்கிடுங்க’ என்று, நண்பரின் மொழியில் சொல்லி சமாளித்தேன். யார் விட்ட சாபமோ, மீதமிருந்த ஒரு மாத வகுப்புக்கு போக முடியவே இல்லை.
அதிர்ஷ்டவசமாகவும், தெய்வாதீனமாகவும், ஆங்கிலம் மயிரிழையில் உயிர் தப்பித்து விட்டதாக, அக்கம் பக்கத்து, அலுவலக வட்டாரங்களில், அவ்வப்போது கருத்து தெரிவிக்கப்படுவது, வழக்கமாகியிருந்தது. ஆள் இல்லாத நேரங்களில் உரக்கவும், இருக்கும் நேரங்களில் முணுமுணுப்பாகவும், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நமக்கு கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தன.
‘‘விடுங்க சார், பொறாமைக்காரப் பசங்க, எங்க இவுங்கல்லாம் இங்லீஷ் படிச்சுருவாங்ளோன்னு கடுப்புல கெடந்து அலையுதாணுக,’’ என்று, ஒரே வாக்கியத்தில், விமர்சனத்தை புறக்கணித்துவிட்டார் நண்பர். ஆண்டுகள் பல கடந்தாலும், ஆங்கிலம் பேசுவது என்னவோ, இன்னும் மாயமான் வேட்டையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது!

நண்பர் திருமணத்துக்காக, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தேன். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், வாய்ப்பிருந்தும் போகமுடியாத குறையை போக்கும் வகையில் அமைந்தது நண்பரின் திருமணம்.
முன்பிருந்ததை காட்டிலும், கோவிலில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், மலையிலும், கோவில் வளாகத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரியும். அவற்றின் பாவனைகளை ரசித்து மகிழ்வதற்கென்றே பக்தர்கள் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவர். கோவிலுக்கு செல்லும் சிறுவர், சிறுமியருக்கும், குரங்குக்கூட்டத்தின் சேட்டைகள்தான், நல்ல பொழுதுபோக்கு.
பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை, குரங்குகள் பறித்துச் செல்வதும், அதில் இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு, பையை வீசி எறிவதும், தினமும் பல முறை நடக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்கள். சென்னிமலை கோவிலிலும் இதே நிலை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.
நேற்று சென்றிருந்தபோது, தேடித் தேடிப்பார்த்தேன். ஒரு குரங்கு கூட தென்படவில்லை.
என்ன ஆயிருக்கும் அந்த குரங்குகள்? ஏனோ, மனதுக்குள் நெருடலாகவே இருந்தது.
ஆனால், வேறு ஒரு கூட்டத்தை கோவிலில் காண நேரிட்டது. அது, பணம் பறிக்கும் கூட்டம். சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்களை தேடி வந்து பொட்டு வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி, பணம் பறிக்கிறது. விவரம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பக்தர்கள், புலம்படியபடியே ‘காணிக்கை’ கொடுக்கின்றனர். சென்னிமலையிலும் இப்படி கட்டாய வசூல் நடப்பதை பக்தர்கள் காண முடியும்.
தமிழ்ப்புத்தாண்டில் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரும் வழியில் சென்னிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்தாண்டில் சென்றபோது, குடும்பத்தினர் வருவதற்காக நான் காத்திருந்த வேளை, பூஜைத்தட்டுடன் வந்த ஒருவர், திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டார். நான் கேட்கவே இல்லை. மறுப்பு தெரிவித்தபோது, ‘சாமி பிரசாதம், மறுக்கக்கூடாது’ என்கிறார்.
பொட்டு வைத்தவுடன் நகர்ந்தால், ‘காணிக்கை கொடுக்கணும்’ என்றார். பாக்கெட்டில், நூறும், ஐநூறுமாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘சில்லரை இல்லை’ என்றதற்கு, ‘கொடுங்க, நான் தருகிறேன்’ என்கிறார். சென்னிமலை ஆண்டவருக்காக, அந்த நபரை, சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தாண்டில் சென்றபோது, உஷாராகி விட்டோம்.
எனக்கென்னவோ, மலைக்கோவில்களில் குரங்குக்கூட்டம் குறைவதற்கும், பணம் பறிக்கும் கூட்டம் பெருகுவதற்கும், ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது!

சாதாரண திருட்டு சம்பவத்தைக் கூட, ‘கொள்ளையோ கொள்ளை’ என்று பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, தங்கள் உயிரை எடுப்பதாக, செய்தியாளர்கள் மீது போலீஸ் தரப்பில் புகார் கூறுவது வழக்கம். பாதிக்கப்பட்டவரை பொறுத்தவரை, கொள்ளைக்கும், திருட்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரண்டுமே பொருள் இழப்புத்தான்.
போலீஸ்காரர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. திருட்டு என்பது, ஆள் இல்லாத வீட்டில் நடப்பது; கொள்ளை என்பது, ஆள் இருக்கும் வீட்டில் அடித்துப்போட்டு, பணம், பொருளை பறித்துச் செல்வது. முன்னது, கொஞ்சம் கிரேடு கம்மி; பின்னது கிரேடு ஜாஸ்தி. சட்டம் இப்படி இருக்கையில், போலீஸ்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்?
ஆனால், செய்தியாளர்களுக்கு இருக்கும் சிரமங்கள் எல்லாம், போலீஸ்காரர்களுக்கு தெரியவா போகிறது? மாலைப்பத்திரிகைகளில் வேலை செய்யும் நிருபர்கள், அன்றைய காலை பத்திரிகைகள் எதிலும் வெளிவராத, புத்தம் புதிய செய்திகளை, சூடாகவும், சுவையாகவும் தர வேண்டியிருக்கும். ஆகவேதான், ஆளில்லா வீட்டில் நடக்கும் அரைப்பவுன், கால் பவுன் திருட்டெல்லாம், கொஞ்சம் காரமும், மணமும் சேர்க்கப்பட்டு, கொள்ளை செய்தியாக உருமாறி, பத்திரிகையில் வெளியாகி விடுகின்றன.
அதைப்படிக்கும் சம்பந்தப்பட்ட ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நிச்சயம், காதில் புகை வந்து விடும். பிறகு? எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., என ஊரில் இருக்கும் எல்லா அதிகாரிக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமே! அப்படி நான்கைந்து முறை பதில் சொல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டால் போதும்; செய்தியாளரை பார்க்கும்போது, குரல்வளையை கடித்து ரத்தம் குடித்து விடும் ஆவேசம், எந்த இன்ஸ்பெக்டருக்கும் வந்து விடும்.
திருட்டும், கொள்ளையும், கொலையும் நடக்கும்போது, செய்திக்குரிய தகவல்களை தருவதற்கு சலித்துக்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள், திருடன் சிக்கி விட்டால், செய்தியாளர்களுக்கு போன் மேல் போன் போட்டு உயிரை எடுப்பது வழக்கம். ஓடியதாகவும், துரத்தியதாகவும், ஆயுதத்தை காட்டி மிரட்டியதாகவும், தீரமுடன் போராடி மடக்கியதாகவும், கட்டிப்புரண்டு உருண்டதாகவும், அண்டமும், ஆகாசமும், அசந்துபோகுமளவுக்கு, புளுகுமூட்டைகளை அள்ளி விடுவதும் வாடிக்கை.
மாதம் ஒரு முறை குற்றப்பிரிவு போலீசாரின் கூட்டங்களை உயர் அதிகாரிகள் கூட்டுவர். அதில், கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் குற்ற வழக்குகள் குறித்து, உயர் அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்பார். அது ஒரு மகா இம்சை. அதற்குப் பயந்துதான், திருட்டுக்கும், கொள்ளைக்கும், எப்.ஐ.ஆர்., போடாமலேயே போலீசார் காலத்தை ஓட்டுவர். அப்படியும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உத்தரவுக்கு பயந்து எப்.ஐ.ஆர்., போடப்பட்ட திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும். அதற்கு, கூட்டத்தில் இருக்கும் சக போலீசார் முன்னிலையில், மானம், மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சமாளிப்பு பதில் சொல்லி முடிப்பதற்குள், தாவு தீர்ந்து விடும்.
சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவில் நோகாமல் மாமூல் வாங்கிக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு, குற்றப்பிரிவில் வேலை என்பது, பள்ளிக்கூட மாணவனை பெஞ்ச் மேல் நிற்கச்சொல்வதற்கு சமம். சிணுங்கிக்கொண்டு நிற்கும் சிறுவர்களைப்போல, அவர் வேண்டா வெறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அவரைப்போய், கண்டுபிடிக்கப்படாத திருட்டுக்கு பதில் சொல்லச் சொன்னால், எப்படியிருக்கும்? அவர், திருடர்களுக்கும், கேள்வி கேட்கும் அதிகாரிக்குமாய் சேர்த்து, மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைக்காத குறையாக, சாபம் விட்டுக்கொண்டிருப்பார்.
கடைசியில், ஏதாவது ஏமாளி, கோமாளிபோல, பிக்பாக்கெட் திருடர்கள் மாட்டிக் கொண்டுவிடுவர்; மிச்சம் மீதியிருக்கும் அனைத்து திருட்டுக் கேஸ்களிலும் ஈடுபட்டது அவர்கள்தான் என்று கூறி, ஒட்டு மொத்தமாக இருக்கும் பழைய எப்.ஐ.ஆர்., அனைத்தையும் காலி செய்து விடுவர்.
பார்த்திபன்&கவுண்டமணி நடித்த ‘டாட்டா பிர்லா’ என்றொரு படம் வந்தது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு இன்ஸ்பெக்டர் சொல்வார். ‘ஏலே, அந்த கொருக்குப்பேட்டை கொலைக்கேஸ இவம்மேல போடுலே, அந்த கற்பழிப்புக் கேஸ அவம்மேல போடுலே’ என்பார். போலீஸ் நடைமுறைகள் அறிமுகம் இருப்பவர்களுக்குத் தெரியும், அந்த சினிமா டயலாக்கில் இருக்கும் சத்தியம், எப்பேர்ப்பட்டதென்று!

தீபாவளி நெருங்கி விட்டது. வீட்டுக்குழந்தைகள் அனைவருக்கும் பட்டாசு ஞாபகமாகவே இருக்கும். ‘எங்க வீட்டில் 5 ஆயிரத்துக்கு பட்டாசு’ என்றொருவன் சொன்னால், அவனை விட அதிக தொகைக்கு நாம் வாங்கி விட வேண்டும் என்று, அப்பாவிடம் அடம் பிடிப்பான் மற்றொருவன். ‘அவங்க வீட்டில் 20 ராக்கெட் வாங்கிட்டாங்க, நாம 25 ராக்கெட்டாவது வாங்கியாக வேண்டும்’ என்று வாண்டு, அழுது கொண்டிருக்கும். சில வீட்டுப் பெரியவர்கள், ‘கேட்குறத வாங்கிக்குடுப்பா’ என்பர். அங்கே இருக்கும் வீட்டம்மா, முடியாது என்று பிரேக் போடுவார்.
சில வீட்டில் மனைவியர், ‘பட்டாசு நிறைய வாங்கலாம்’ என வேண்டுதல் வைத்தால், ‘காசைக் கரியாக்க வேண்டாம்’ என்று பெரியவர்கள் குறுக்கே நிற்பர். இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், குடும்பத்தலைவர் பட்டாசு வாங்கப் போனால், விலைப்பட்டியலே மயக்கம் தருவதாக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலைப் பட்டியல், ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போவதைப் பார்த்தால், மாதச்சம்பளம் வாங்குவோர் எல்லாம் என்னதான் செய்வார்களோ தெரியவில்லை, பாவம்.
பட்டாசு விலை உயர்வுக்கான காரணங்களில் முக்கியமானது லஞ்சம். பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தில் நடக்கும் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு தரப்படும் லஞ்சம் என நீங்கள் நினைத்தால், அது மிக மிகத்தவறு.
விற்பனையாகும் இடத்தில் தரப்படும் லஞ்சம் இருக்கிறதே, அது உற்பத்தியாகும் இடத்தில் தரப்படும் லஞ்சத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம். சந்தேகம் இருந்தால், யாராவது பட்டாசுக் கடை நடத்தியவரை கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு பட்டாசுக் கடை வைக்க வேண்டுமெனில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம், அதாங்க லைசென்ஸ் பெற வேண்டும். ‘கலெக்டர் ஆபீசில் இருக்கும் டி.ஆர்.ஓ.,விடம் லைசென்ஸ் வாங்கணும், அவ்வளவுதானே’ என்கிறீர்களா, அது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல.
போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 முக்கிய துறைகளில் இருந்தும் அனுமதி பெற வேண்டும். இது தவிர, நீங்கள் கடை வைக்கப்போகும் இடம் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியிடம் இருந்து, உதாரணத்துக்கு மாநகராட்சி, நகராட்சியாக இருந்தால் கமிஷனர், டவுன் பஞ்சாயத்தாக இருந்தால் செயல் அலுவலர் ஆகியோரிடம் இருந்து, ஆட்சேபம் இல்லா சான்று பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சென்றால், டி.ஆர்.ஓ.,வின் கீழ் செயல்படும் ஒரு அலுவலர், லைசென்ஸ் கொடுத்து விடுவார்.
இவ்வளவுதாங்க, இதை வாங்கி விட்டால், கடை வைத்து விடலாம். வாங்கியவர்களை கேட்டுப் பாருங்கள், இது, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிய தீவுக்குள் சிறைபட்ட இளவரசியை மீட்டு வரும் அம்புலிமாமா கதைகளைவிட, சுவாரசியமானதாக இருக்கும்.
இந்த ஒவ்வொரு துறைக்கும் குறைந்தது ஏழெட்டு முறை சென்று வர வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மட்டுமல்ல, அவரது டிரைவர், உதவியாளர் வரை லஞ்சம் தர வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி, சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு வந்தவுடனேயே, அதாவது கடை திறப்பதற்கு முன்பாகவே, பண்டல் பண்டலாக, பட்டாசு கிப்ட் பாக்ஸ் தண்டம் அழ வேண்டியிருக்கும்.
இந்த நடைமுறைகளை எல்லாம், லஞ்சம் தராமல், கிப்ட் பாக்ஸ் அழாமல், கடந்து வர வேண்டும் என்று யாரேனும் மடையர்கள் நினைத்தால், குறைந்தது 3 மாதம், காலை முதல் மாலை இதே வேலையாக அலைந்து கொண்டிருக்கத் தயாராக இருந்தால் போதும். ‘அப்படி அலைந்தால், லைசென்ஸ் கிடைத்து விடும் அல்லவா’ என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
‘சரி, லைசென்ஸ் வாங்குவதற்கு வேறு வழியே இல்லையா’ என்பது தானே சந்தேகம்? வழி இருக்கிறது. இதற்கென ஊருக்கு ஊர் அரசு அங்கீகாரம் பெற்ற லஞ்ச புரோக்கர்கள் இருக்கின்றனர். அவர்களை அணுகினால், ஆடாமல், அசையாமல், அலைச்சல் இல்லாமல், இருந்த இடத்திலேயே லைசென்ஸ் வாங்கி விட முடியும். அதற்கு அவர்கள் சொல்லும் சேவைக்கட்டணம், ரஜினியின் சிவாஜி படத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். பல பேர், அதைக் கேட்டவுடனேயே பட்டாசு வியாபாரம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு விடுவர்.
‘ஏதோ, சீசன் வியாபாரம், கொஞ்சம் காசு பார்க்கலாம்’ என்று பட்டாசு விற்க நினைத்து, சிவகாசியில் போய் பட்டாசு வாங்கி வந்து விட்டு, லைசென்ஸ்க்கு மனு கொடுத்த அப்பாவிகள் இருக்கிறார்களே, அவர்கள் படும் அவதியும், பாடும் புலம்பலையும் கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை, லைசென்ஸ் கையில் கிடைக்காது. லஞ்சமும், கிப்ட் பாக்சும் பறிப்பதற்கான எளிய வழிமுறை, லைசென்ஸ் தராமல் இழுத்தடிப்பதுதானே!
லஞ்சம் கை மாறாமல், கடை திறக்கும் தைரியம் யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, புரோக்கர்களுடையது. ‘சார், லைசென்ஸ் கையில வாங்காம கடை போட்டீங்க, அப்புறம் பிரச்னைதான், மொத்த பட்டாசையும் போலீஸ் வந்து அள்ளிட்டுப் போயிடுவாங்க’ என்று புரோக்கர்கள் அச்சுறுத்துவர். பெரும்பாலான அரசுத்துறை ஊழியர்களும், இதே டயலாக்கை, ஏற்ற இறக்கத்துடன் பேசி வைப்பர்.
‘லஞ்சம் கொடுத்தவர்களுக்கு லைசென்ஸ் முன்னதாகவே கிடைத்து விடுமா’ என்றெல்லாம் கேட்டு விடவேண்டாம். கிடைக்காது, தரப்படாது. காரணத்தில்தான் இருக்கிறது, அரசு ஊழியர்களின் புத்திசாலித்தனம். ஏதாவது வெடி விபத்து நேரிட்டால், லைசென்ஸ் கொடுத்த அதிகாரிகளுக்கு பிரச்னை வந்து விடுமே? அப்படி நேரிட்டால், லைசென்ஸ் தரவில்லை என்று சமாளித்து விடலாம் அல்லவா?
அதாவது, தீபாவளிக்கு முதல் நாள் மதியத்துக்கு மேல்தான், லைசென்ஸ் வழங்கும் வேலை நடக்கும். பெரும்பாலானவர்களுக்கு முதல்நாள் இரவு, பட்டாசு விற்பனை முடிந்தநிலையில்தான் லைசென்ஸ் கிடைக்கும். டி.ஆர்.ஓ., ஆபீசில் வேலை பார்க்கும் அலுவலர் ஒருவர், ‘முக்கியமான பேப்பர்’ எல்லாம் வாங்கிக் கொண்டு, ‘பிழைத்துப் போகட்டும்’ என்று பெருந்தன்மையாக லைசென்ஸ் கொடுப்பார்.
லஞ்சத்தை முன்னதாகவே கொடுத்தவர்கள், லைசென்ஸ் கையில் கிடைக்காதபோதே, தைரியமாக கடை துவக்கி விடுவர். பட்டாசுக் கடை நடத்த ஆயிரத்து எட்டு விதிமுறைகள் இருக்கின்றன. அவை பற்றி எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. காரணம், சம்பந்தப்பட்ட புரோக்கர், அனைத்து அரசு துறையினர் வசமும், பெயர், விவரம் சொல்லியிருப்பார்.
லஞ்சம் தராத, நெளிவு சுளிவுகளை அறியாத ஓரிரு ஏமாளிகள் இருக்கிறார்களே, அவர்களுக்குத்தான் இந்த விதிமுறைகள் எல்லாம். அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
‘யாருக்குமே லைசென்ஸ் தரவில்லை, எப்படி அவன் மட்டும் கடை போடுகிறான்’ என்று போவோர், வருவோரிடம் எல்லாம் வெட்டி விசாரணை செய்வர். ‘சரி நாமும் கடை போடலாம்’ என்று போட்டால், போலீஸ் வந்து பட்டாசை அள்ளிச்சென்று விடும். அப்புறம், ஆயுசுக்கும் பட்டாசுக்கடை நடத்தும் எண்ணமே அவர்களுக்கு வராது.
தற்போதைய நிலையில், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பட்டாசின் விலையிலும், குறைந்தது 25 சதவீதம் வரை லஞ்சமாகவே தரப்பட்டிருக்கும். ஆகவே, சிவகாசிக்காரர்கள் விலையை தாறுமாறாக ஏற்றி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால், அது உண்மையல்ல; பொய்யின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

ஆர்.டி.ஓ., ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீஸ் என்பார்களே, வட்டார போக்குவரத்து அலுவலகம்… அங்கே சென்றிருந்தேன். வேறெதற்கு? லைசென்ஸ் எடுப்பதற்குத்தான்! ‘இத்தனை நாளாக லைசென்ஸ் எடுக்கவில்லையா’ என்றெல்லாம், ‘இந்தியன்’ படத்தில் வரும் செந்தில் கேரக்டர் போல் கேள்வி கேட்கக்கூடாது. எடுக்கவில்லை. அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள். ‘சரி, இப்போது எடுப்பது ஏன்’ என்று கேட்கிறீர்களா? அதற்கும் காரணம் இருக்கிறது. அதெல்லாம், வெளியில் சொல்ல முடியாது.
விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொரு முறையும் எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுநர் உரிமம் எடுக்கும்போதெல்லாம், என் கெட்ட நேரம் அதிகமாகி, வேலைப்பளுவோ, வேறு ஏதாவது கிரக தோஷமோ வந்து விடும்; அப்படியே எல்.எல்.ஆர்., உரிமமும் காலாவதியாகி விடும். இப்படியே 18 ஆண்டு இடைவெளியில், மூன்று எல்.எல்.ஆர்.,களை தொலைத்தாகி விட்டது.
நான்காவாது முறையாக எல்.எல்.ஆர்., எடுத்தபோதே, ‘இந்தமுறை எப்படியாவது லைசென்ஸ் எடுத்தே தீர வேண்டும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். தினமும் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம், இந்த வாரத்துக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்று மனதுக்குள் தோன்றும்.
இப்படியே நாட்கள் ஓடின. வாரங்கள் நகர்ந்தன. மாதங்களும் ஒவ்வொன்றாய் போய்க் கொண்டே இருந்தன. நான்காவது எல்.எல்.ஆர்., காலாவதி ஆவதற்கு கொஞ்சம் நாட்கள் இருக்கும்போது, பீதி பற்றிக் கொண்டது.
சரி, இனியும் தாமதித்தால், இந்த எல்.எல்.ஆரும்., காலாவதியாகிவிடும் என்றெண்ணி, ஒரு நாள், வண்டியுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை அணுகி, என்னென்ன ஆவணங்கள் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.
‘எல்லாம் எடுத்துக் கொண்டு, ஓரிரு நாட்களில் வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு வந்தேன். அப்படியும் ஒரு வாரம் வீட்டை விட்டும், ஆபீசை விட்டும் நகர முடியவில்லை. கடைசியில், சந்தேகத்தில் எல்.எல்.ஆர்., உரிமத்தை எடுத்துப்பார்த்தபோது, காலாவதியாவதற்கு ஒரு நாள் மட்டுமே இருப்பது தெரிந்தது. அய்யகோ! என்ன ஒரு நெருக்கடி?
பதறியடித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்து, புறப்பட்டேன், கோவை புதுாருக்கு. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் அது. பணியில் இருந்த ஊழியர், எனது எல்.எல்.ஆர்., படிவத்தை வாங்கிப்பார்த்தார்.
‘எடுத்து ஆறு மாசம் ஆச்சு போலருக்குதே’ என்றவர், ‘சார், இன்னிக்குத்தான் கடைசி நாளு. என் லைப்லயே கடைசி நாள்ல வந்து லைசென்ஸ்க்கு அப்ளை பண்ணுற மொத ஆளு நீங்கதான்’ என்றார். எனக்கு பெருமிதம் தாங்கவில்லை. ‘இதைத்தானே எதிர்பார்த்தேன்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்.
‘சரி, பணம் கட்டீட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்தார்.
வரிசையில் காத்திருந்தபோது, அருகேயிருந்த ஒருவர் குசலம் விசாரித்தார்.
‘‘என்ன சார், ஆயிரம் ரூபா நோட்டா’’
‘‘ஆமா’’
‘‘இங்க இங்க ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா நோட்டெல்லாம் செல்லாது, தெரியாதா’’
‘‘எனக்குத் தெரியாதே’’
‘‘தெரிஞ்சு வெச்சுருக்கணும் சார். அங்க பாருங்க’’
அவர் கைகாட்டிய திசையில் பார்த்தால், ‘கள்ள நோட்டு கண்டறிவது எப்படி’ என்று பத்திரிகையில் வந்த செய்தியை, ‘ஜெராக்ஸ்’ செய்து ஒட்டியிருந்தனர்.
‘‘ஆயிரம், ஐநுாறுல நெறய கள்ளநோட்டு வாரதால, அதயெல்லாம் வாங்க மாட்டோம்னு சொல்வாங்க. சில்லரை வெச்சுக்குறது நல்லது’’
‘‘கள்ள நோட்டுன்னு சந்தேகம் இருந்தா, செக் பண்ணி வாங்கட்டும். அதுக்கு, ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா வாங்க மாட்டாங்கன்னா எப்புடி’’
‘‘அது அப்புடித்தான். ரொம்ப சந்தேகம்னா, கவுன்ட்டர்ல கேட்டுப்பாருங்க’’
நாமென்ன அந்தளவுக்கு விவரம் இல்லாதவர்களா என்ன? உடனடியாக, பக்கத்தில் இருந்த கடையில், சில்லரை மாற்றிக்கொண்டு வந்து, மீண்டும் வரிசையில் நின்று கொண்டேன்.
லைசென்ஸ் எடுக்க 350 ரூபாய் கட்டணம். செலுத்த வரும் ஒவ்வொருவரிடமும் 350 ரூபாய் சரியாக சில்லரை இருந்தால் மட்டுமே படிவத்தை வாங்கினார், கவுன்ட்டரில் இருந்த ஆசாமி. யாராவது, தப்பித்தவறி, 400 ரூபாய் கொடுத்தால்கூட, திருப்பி அனுப்பினார். கூடவே தாறுமாறாக திட்டவும் செய்தார். அவரது உருட்டல் மிரட்டலுக்கு பயந்தே, அனைவரும் சில்லரை வாங்கிக் கொண்டு வந்தனர். நான் பார்த்தவரை, அவர் யாருக்கும் சில்லரை கொடுக்கவே இல்லை.
சரி, அவரையும் கடந்தாகி விட்டது. அடுத்தது, வேறு ஒரு கவுன்ட்டர். அங்கேயிருந்தபோது, மொபைல்போன் அழைப்பு. ஒரு அரசு அதிகாரி கூப்பிட்டார். லைசென்ஸ் எடுக்க காத்திருப்பதாக கூறியதும், கெக்கேபிக்கேவெனச் சிரித்தார்.
‘‘சார், நெஜமாத்தான் சொல்றீங்களா’’
‘‘ஆமா சார், இப்பத்தான் வந்துருக்கேன்’’
‘‘சரி சார். அப்ப நேரா, ஆர்டிஓவை போய் பாருங்க, வேணும்னா போன் பண்ணிச்சொல்றேன்’’
‘‘விடுங்க சார், ஆர்.டி.ஓ.,வைப்போய் பாக்குறது சரியாக இருக்காது. வரிசைல நின்னே வாங்கிடறனே’’
இப்படி நான் பேசிக் கொண்டிருந்ததும், அங்கிருந்த பெண் ஊழியருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‘‘அலோ யாரு நீங்க. மொதல்ல வெளிய போங்க… என்ன ஆர்.டி.ஓ., ஆர்.டி.ஓ.,னு போன்ல பேச்சு?’’
அதற்குமேல், மரியாதையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உடனடியாக போன் அழைப்பை துண்டித்துக் கொண்டு, வரிசையில் அமைதியாக நின்று கொண்டேன்.
அங்கிருந்த ஊழியர் கேட்டார்.
‘‘யாரு உங்களுக்கு பார்ம் பில்லப் பண்ணாங்க’’
‘‘ஏன் ஏதாச்சும் தப்பாருக்குதா’’
‘‘இல்ல சரியாருக்குது. அதான் யாருன்னு கேக்குறேன்’’
‘‘எங்க ஆபீஸ்ல பில்லப் பண்ணிக் கொடுத்தாங்க’’
‘‘எந்த ஆபீஸ்’’
‘‘சுந்தராபுரம் ஆபீஸ்’’
‘‘என்ன வேலை பாக்குறீங்க’’
‘‘ஆபீஸ் ஸ்டாப்’’
‛‛அதாங்க, என்ன வேலை’’
‛‛எழுதுற வேலை’’
அதற்குமேல், அவர் கேள்வி கேட்கவில்லை. முகம் மட்டும், இஞ்சி தின்ற குரங்கு போலாகி விட்டது, பாவம்! இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை பெண் ஊழியர், என்னை முன்பே எச்சரிக்கை செய்திருந்தது, எத்தகைய தீர்க்க தரிசனம் என்பது அப்போதுதான் புரிந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று முட்டுக்கட்டைகளை கடந்து வாங்கிய எனது டிரைவிங் லைசென்ஸை, பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் பெருமிதம் இருக்கிறதே! அப்பப்பா…அதெல்லாம் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் புரியும், மக்களே!

சிறுவனாக இருக்கும்போது, யாராவது நாயை அழைத்துக் கொண்டு ‘வாக்கிங்’ போவதைப்பார்த்தால், சிரிப்பாக இருக்கும். ‘வீட்டில் வேலை எதுவுமின்றி, நாய் மேய்க்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்வேன். ‘ஊரார் உறவுகள் மத்தியில் பெருமை பேசவும், பந்தா காண்பிக்கவும் நாய் மேய்க்கின்றனர்’ என்பதே, அவர்களைப்பற்றிய என் எண்ணமாக இருந்தது. அப்படி நினைப்பதற்கு காரணங்கள் இருந்தன. எங்கள் வீட்டிலும் நாய் வளர்த்தோம். ஆனாலும், நாங்கள் ஒரு நாளும், வீதி வீதியாக நாயை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றதில்லை.
ஆகவே, நாயை பிடித்துக் கொண்டு செல்பவர்கள் எல்லாம், பந்தா பேர்வழிகள் என்பதாகவே, என் மனதில் வெகு காலமாய் பதிந்து விட்டது. சரி, தலைவலியும், பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே, அப்படியொரு பிரச்னை எனக்கும் வந்தது.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ‘டாமி’யை கருணைக்கொலை செய்தபின், ‘நாயெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று, வீட்டுச் செயற்குழு தீர்மானம் நிறைவேறியிருந்தது.
ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகள், தன் பள்ளித்தோழி வீட்டில் இருந்து, நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டாள். பொதுக்குழு தலைவர் என்ற முறையில், நாயெல்லாம் வேண்டாம் என்று, என் கருத்தை தெரிவித்தேன். அய்யாவும் அப்படியே சொன்னார். அம்மா மட்டும், பேத்திகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அம்மா வரட்டும் என்றனர், மகள்கள் இருவரும். அம்மாவின் அதிகாரம் அறிந்த பிள்ளைகள்.
‘நாய் வீட்டில் அசுத்தம் செய்யும், நம் வீடென்றால் சுத்தம் செய்து விடலாம். பக்கத்து வீட்டின் முன் செய்துவிட்டால், அவர்கள் சண்டைக்கு வருவர்’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். ‘அம்மா வந்தவுடன் காட்டிவிட்டு, அப்புறம் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றனர், மகள்கள் இருவரும்.
அம்மா வந்தார். நாய்க்குட்டியை பார்த்தவுடன், ‘சீனு’ என்று பெயர் சூட்டி விட்டார். ஆக, வழக்கு, வாதம், எதிர்வாதம், தீர்ப்பு என எதற்குமே இடமில்லாத வகையில், அன்றே நாய்க்குட்டி வீட்டில் குடியேறி விட்டது. சொன்னபடியே, சில நாட்கள் நாய்க்குட்டியை பார்த்துப் பார்த்து பராமரித்த அக்காவும், தங்கையும், அதன்பிறகு எங்கள் பக்கம் தள்ளி விட்டனர்.
என்னைப்போலவே, முதலில் நாய்க்குட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்த அய்யாவும், நாளடைவில் சமாதானம் ஆகி விட்டார். அதன் உணவு, பராமரிப்பு எல்லாம் அவர் சார்ந்த துறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. உடன் விளையாடுவது மட்டுமே, பேத்திகள் வேலையாக இருந்தது.
நாய்க்குட்டி ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால்கூட, அய்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நாய்க்குட்டி சோறே திங்கவில்லை’ என்று, வழியில் செல்வோர், வருவோரிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார். இரவுப்பணி முடிந்து, 2 மணிக்கு வீட்டுக்குப்போனால், விழித்திருந்து, ‘நாய்க்குட்டி சாப்பிடவே இல்லை. ஊசி போடறவுனை வரச்சொல்லப்பா’ என்பார்.
இப்படியாக, நாய்க்குட்டி வளர ஆரம்பித்தது. அதை குறித்த நேரத்துக்கு வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். அக்காவும், தங்கையும், சில நாட்கள் அழைத்துச் சென்றனர்.
அக்கா வளர்ந்த பெண் என்பதால், நாய் இழுத்தாலும் பிடித்துக் கொள்வாள். தங்கை அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், உள்ளுக்குள் பயமாக இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்கள் மீது இழுத்துச் சென்று தள்ளி விடுமே என்பதுதான் பயத்துக்கு காரணம்.
ஆதலால், இப்போதெல்லாம், தினமும் நான்கு வேளைக்கு குறையாமல், நாயை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை, நம்மிடம் வந்து சேர்ந்து விட்டது. நாம் இல்லையென்றால், வீட்டம்மா அழைத்துச் செல்ல வேண்டும். நம்மை நாயுடன் தெருவில் பார்க்கும் பல பேர் விசாரித்து விட்டார்கள். என்ன நாய் மேய்க்கிறாப்புலயா என்று. நமக்குத்தெரியாதா, கேள்வியின் நோக்கம் என்னவென்று?

ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்கினால், தொலைக்காட்சியில் காட்டுகின்றனர், பத்திரிகையில் செய்தி வெளியிடுகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். கால்நடைத்துறையினரும் பரபரக்கின்றனர்.
வன விலங்குகளுக்கு நோய் தாக்கினாலோ, யாரேனும் அடித்துக் கொன்று விட்டாலோ கூட, அப்படித்தான் உலகமே பதைபதைக்கிறது.
ஆனால், நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அப்படியொன்றும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்வதில்லை. பாசத்துடன் நாய் வளர்ப்பவர்களை தவிர, வேறு யாரும் நாய்களுக்கு வரும் நோயைப் பற்றியெல்லாம் கவலைப்படவே தயாரில்லை.
எங்கள் வீட்டில் கடந்த இரு வாரங்களாக நாய்க்குட்டிக்கு உடல்நலம் கெட்டு விட்டது. மூன்று வெவ்வேறு டாக்டர்கள், கம்பவுண்டர்களிடம் காட்டி, ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்து, எதுவும் கேட்கவில்லை. கடைசியில், மாரியம்மன், தீர்த்தம், திருநீறு தான், நாய்க்குட்டியை காப்பாற்றியது.
அய்யா வேண்டிக் கொண்டபடி, மாரியம்மனுக்கு நாய் பொம்மை செய்து வைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். எங்கள் வீடு மட்டுமில்லை. ஊரில் பல இடங்களில் நாய்கள் நோய்வாய்ப்பட்டு விட்டன. எல்லாம் வயிற்றுப்போக்கு, வாந்தி தான். கவனிப்பில்லாத நாய்கள் செத்துப்போனதும் நடந்திருக்கிறது.
விசாரித்தால், இங்கு மட்டுமில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் இப்போது ஏதோ ஒரு வகை நோய் பரவுவதாக கூறுகின்றனர். ஆனாலும், கால்நடைத்துறையினர் யாரும், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, ஆடு, மாடு, எருமை இறந்துபோனால், பிரச்னை. விவசாயிகள் போர்க்கொடி உயர்த்துவர், சட்டசபையில், பார்லிமெண்டில் கூட பேசுவர், கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டியிருக்கும். கால்நடைகள், நாட்டின் வளம் என்பர். நாய்களுக்கு அப்படியில்லை தானே?.
ஒரு வகையில், கால்நடைகளுக்கு இருக்கும் பொருளாதார முக்கியத்துவம் நாய்களுக்கு இல்லை என்பதும் உண்மையே. ஆனால், நாய்களால் தான், குடும்பத்தினரின் பொருளாதாரம் காப்பாற்றப்படுகிறது என்பதை, பாதிக்கப்படும் வரை, யாரும் ஒப்புக் கொள்வதே இல்லை.
நாய் இல்லாத வீடுகள், எந்தவித பாதுகாப்பும் இல்லாத வீடுகள். அங்கு திருடர்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட முடியும். நாய் இருக்கும் வீடுகளில் அப்படி நுழைந்து விட முடியுமா? அப்படியெனில், வீட்டின் செல்வத்தை காக்கும் நாய்களும் இந்த நாட்டின் செல்வம் தானே? ஆக, நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அது நாட்டுப்பிரச்னை என்றல்லவா ஆகிறது?
நாய்கள் இல்லாத உலகத்தை எண்ணிப்பாருங்கள்… முடியுமா என்ன? அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்? எந்த வீட்டிலும், பணம், பொருள் பாதுகாப்பாக இருக்க முடியாது. கொள்ளையர் கொட்டம் அதிகரித்து விடும். ஆகவே மக்களே, நாய் நன்றியுள்ள விலங்கு என்று பாடப்புத்தகங்களில் எழுதி, பள்ளிக்குழந்தைகள் சொல்லிக்கிழித்ததெல்லாம் போதும்; நாய்க்கு நோயென்றால், நடவடிக்கை உடனே எடுங்கள். அது, நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

 

பயணங்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. அதுவும், தனிமை இணைந்திருக்கும் பயணங்கள், மனதை வருடும் அற்புதத்தருணங்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, வழியெங்கும் மனிதர்களையும், மலைகளையும், மரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் பயணங்கள் தரும் அனுபவம், குதூகலமானது.
அப்படியெல்லாம் ஆழ்ந்து அனுபவித்த காலம், ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே சமீபத்திய பயணங்கள் எனக்கு உணர்த்துகின்றன. காரணம், மொபைல் போன். பயணிக்கும் அனைவரும், ஊர், உறவுகளுடன் தொடர்பில் இணைந்திருக்க உதவும் மொபைல் போன்கள், தனிமை விரும்பும் பயணிகளை இம்சிப்பதாகவே மாறி விட்டன.
டிரைவர், கண்டக்டருடன் 50 பேர் பயணிக்கும் ஒரு அரசு பஸ்சில், சுமார் 45 பேராவது கையில் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். பாதிப்பேர் பேசிக்கொண்டும், மீதிப்பேர் அதில் விளையாடிக்கொண்டும் பயணிக்கின்றனர். விளையாடுபவர்களால் யாருக்கும் இம்சையில்லை. பேசிக் கொண்டே செல்பவர்களில் பாதிப்பேர், கிசு கிசு குரலில் ரகசியம் பேசுவர். அவர்களையும் விட்டு விடலாம்.
மற்றவர்கள் தான், பிரச்னைக்குரிய வகையினர். தண்டோரா போடாத குறையாக பேசுவது இவர்கள் வழக்கம்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்காமல் பேசிக்கொள்ளும் கலையை இந்தியர்களில் பல பேர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், கற்றுக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது.
‛கேட்பவர்களுக்கு காது கிழிந்தாலும் பரவாயில்லை’ என்று, தொண்டை கிழியப் பேசும் இக்கூட்டம், படுத்தும்பாடு பெரும்பாடு! இவர்களைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். போன் ஸ்பீக்கரில் பாட்டு போட்டு உயிரை எடுக்கும் கூட்டம் செய்யும் கொடுமை இருக்கிறதே! இவர்களையெல்லாம், குண்டர் சட்டத்தில் போட்டாலும் தகும்.
முன் சீட்டில் இருப்பவர் அஜீத் பாட்டு போட்டால், பின் சீட்டில் இருப்பவர் விஜய் பாட்டு போட்டு விடுவார். இப்படி பஸ்சுக்குள் ஐந்தாறு பேர், ஸ்பீக்கரில் பாட்டு ஒலிபரப்பியபடியே உற்சாகப் பொங்கல் பொங்கியபடி பயணிப்பர். இந்த அழகில், எங்கேயிருக்கிறது தனிமை?

……………..

முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் பற்றிய நகைச்சுவை ஒன்றுண்டு. எதிர்க்கட்சி எம்.பி., ஒருவர், உரத்த குரலில் போன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு எரிச்சலுற்ற சர்ச்சில், ‛அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று கேட்டாராம். அருகில் இருந்தவர், ‛அவர் ஸ்காட்லாந்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்றாராம். ‛சரி பேசட்டும், போனை பயன்படுத்த வேண்டியது தானே’ என்றாராம், சர்ச்சில். நம்மாட்கள் பலர், இத்தகைய நக்கலுக்கு பாத்திரமானவர்களே.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இம்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும், ‛நாடு’ எனப்படும் 14 கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும், கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் ஆயிரத்து 300 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்திருக்கின்றன.

குளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை. 

இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.