Archive for the ‘அனுபவம்’ Category

கொரியப்போர் குறித்த பிரபல நகைச்சுவை ஒன்றுண்டு. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் களம் இறங்கிய போர் அது. கொரிய வீரர்கள் முன்னிலையில், போர் உத்திகள் குறித்து அமெரிக்க ராணுவ தளபதி, உரை நிகழ்த்தினார்.

அவரது உரையை, கொரிய தளபதி ஒருவர், உள்ளூர் மொழியில், மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்க தளபதி, தன் பேச்சின் இடையே, ஆங்கிலத்தில் நகைச்சுவை துணுக்கு ஒன்றை குறிப்பிட்டார். பத்து நிமிடங்களுக்கு மேலாக, அவர் நீட்டி முழக்கிய நகைச்சுவையை, மொழி பெயர்க்க வேண்டிய கொரிய தளபதியோ, ஒரே வினாடியில் கூறி விட்டார். அதைக்கேட்டதும், கூடியிருந்த ராணுவ வீரர்கள் குபீர் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தனர்.
அமெரிக்க தளபதிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘நாம் பத்து நிமிடங்களுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டு கூறிய நகைச்சுவையை, இவன் ஓரிரு வினாடிகளில் கூறி விட்டானே’ என்ற திகைப்பு. அதைவிட ஆச்சர்யம், கொரியத் தளபதி ஒரே வினாடியில் சொன்ன நகைச்சுவைக்கு, வீரர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பதுதான்.
கொரிய தளபதியிடம், அமெரிக்க தளபதி, விசாரித்தார்.
‘‘நான் பத்து நிமிடம் சொன்னதை, நீ ஒரே வினாடியில் சொல்லி விட்டாயே, பாராட்டுக்கள்’’
‘‘இல்லையில்லை, நீங்கள் பேசியதை நான் மொழிபெயர்க்கவும் இல்லை, நகைச்சுவை சொல்லவும் இல்லை’’
இது கொரிய தளபதியின் மறுப்பு.
‘‘வேறு என்னதான் சொன்னாய்’’
ஆவல் தாங்க முடியாமல் விசாரித்தார் அமெரிக்கர்.
‘‘அமெரிக்க தளபதி ஜோக் சொல்லியிருக்கிறார். எல்லோரும் சிரியுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன்’’ என்றார், கொரியத்தளபதி.
‘பலம் பொருந்தியவர்கள் செய்யக்கூடியது, எதுவாக இருந்தாலும், அதற்கொரு ஆமாம் போட்டு வைப்போமே’ என்கிற மனித எண்ணம்தான், இத்தகைய மனநிலைக்கு முக்கிய காரணம். இப்படி பல சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்றன. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, பலப்பல உதாரணங்களை கூறிவிட முடியும்.
எங்கள் வீட்டில் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றை சொல்லியே தீர வேண்டும். சமையல் முடிந்து, சாப்பிட ஆரம்பித்தவுடன், என் மனைவி, ‘குழம்பு எப்படி’, ‘ரசம் எப்படி’, ‘பொரியல் எப்படி’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார். மகள்கள் இருவரும், அடுத்த வினாடியே, ‘சூப்பர்ம்மா’ என்று சொல்லி விடுவர். வேறு ஏதாவது சொன்னால், விளைவுகள் என்னவாக இருக்குமென்று, அவர்களுக்குத் தெரியாதா?
ஆகவே, சாப்பிட ஆரம்பிக்கும்முன்னரே, ‘குழம்பு சூப்பர்ம்மா’ என்று மகள்கள் இருவரும் சொல்லி விடுவதெல்லாம், எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக நடந்தேறியிருக்கிறது. தேங்காய் சட்னி, புதினா சட்னி முதல் கொத்தமல்லிச் சட்னி வரை, சாதாரண சாம்பார் முதல் சிக்கன், மட்டன் வரை எல்லாவற்றுக்கும், இதே கேள்வி; இதே பதில்தான் வரும். பல வீடுகளில் கணவன்மார்களும், தங்கள் நலன் கருதி, இதேபோன்று ‘மேட்ச் பிக்ஸிங்’ பதில்களை சொல்லிக் கொண்டிருப்பதாகவும் காதுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம், ‘கொரியத்தளபதியின் நகைச்சுவையை அவர்களும் படித்திருக்கக்கூடுமோ’ என்று, நான் எண்ணிக்கொள்வதுண்டு.

நண்பர் திருமணத்துக்காக, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தேன். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், வாய்ப்பிருந்தும் போகமுடியாத குறையை போக்கும் வகையில் அமைந்தது நண்பரின் திருமணம்.
முன்பிருந்ததை காட்டிலும், கோவிலில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், மலையிலும், கோவில் வளாகத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரியும். அவற்றின் பாவனைகளை ரசித்து மகிழ்வதற்கென்றே பக்தர்கள் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவர். கோவிலுக்கு செல்லும் சிறுவர், சிறுமியருக்கும், குரங்குக்கூட்டத்தின் சேட்டைகள்தான், நல்ல பொழுதுபோக்கு.
பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை, குரங்குகள் பறித்துச் செல்வதும், அதில் இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு, பையை வீசி எறிவதும், தினமும் பல முறை நடக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்கள். சென்னிமலை கோவிலிலும் இதே நிலை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.
நேற்று சென்றிருந்தபோது, தேடித் தேடிப்பார்த்தேன். ஒரு குரங்கு கூட தென்படவில்லை.
என்ன ஆயிருக்கும் அந்த குரங்குகள்? ஏனோ, மனதுக்குள் நெருடலாகவே இருந்தது.
ஆனால், வேறு ஒரு கூட்டத்தை கோவிலில் காண நேரிட்டது. அது, பணம் பறிக்கும் கூட்டம். சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்களை தேடி வந்து பொட்டு வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி, பணம் பறிக்கிறது. விவரம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பக்தர்கள், புலம்படியபடியே ‘காணிக்கை’ கொடுக்கின்றனர். சென்னிமலையிலும் இப்படி கட்டாய வசூல் நடப்பதை பக்தர்கள் காண முடியும்.
தமிழ்ப்புத்தாண்டில் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரும் வழியில் சென்னிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்தாண்டில் சென்றபோது, குடும்பத்தினர் வருவதற்காக நான் காத்திருந்த வேளை, பூஜைத்தட்டுடன் வந்த ஒருவர், திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டார். நான் கேட்கவே இல்லை. மறுப்பு தெரிவித்தபோது, ‘சாமி பிரசாதம், மறுக்கக்கூடாது’ என்கிறார்.
பொட்டு வைத்தவுடன் நகர்ந்தால், ‘காணிக்கை கொடுக்கணும்’ என்றார். பாக்கெட்டில், நூறும், ஐநூறுமாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘சில்லரை இல்லை’ என்றதற்கு, ‘கொடுங்க, நான் தருகிறேன்’ என்கிறார். சென்னிமலை ஆண்டவருக்காக, அந்த நபரை, சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தாண்டில் சென்றபோது, உஷாராகி விட்டோம்.
எனக்கென்னவோ, மலைக்கோவில்களில் குரங்குக்கூட்டம் குறைவதற்கும், பணம் பறிக்கும் கூட்டம் பெருகுவதற்கும், ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது!

இருப்பதில் சிறந்தவழி இதுவேயென்று, அரைமனது, கால் மனதுடன் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்ட அரசியல் கட்சிகள், கொண்டாட்ட மனநிலையில் இருப்பதற்கு, காரணம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்து விட்டன.
கேம்பஸ் இன்டர்வியூவில், இரண்டு மூன்று நிறுவனங்களின் அப்பாயின்மெண்ட் ஆர்டர் பெற்றுவிட்டு, எதில் சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மாணவர்களைப் போல், இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லிக்காய் மூட்டை போலிருந்த தமிழக பா.ஜ., கூட்டணி, இப்போது சந்தையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தே.மு.தி.க.,-ம.தி.மு.க.,-பா.ம.க., ஆகியவை நல்ல வியாபாரியை எதிர்பார்த்து நிற்கின்றன.
சந்தைக்கு இன்னும் கொஞ்சம் சரக்கு வரக்கூடும் போலிருக்கிறது. இருக்கும் சரக்குகளுக்கு, தி.மு.க., முதல் விலையைக் கூறி விட்டது. அவசரப்பட்டு விலைபோக சரக்குகள் தயாரில்லை.
தமிழக காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை பிளவுபடுகிறது. குட்டிகளை விட்டு குளத்தின் ஆழம் பார்க்கும் குரங்குகளை எதிர்கொள்ள, ஓரணியில் இருந்த வாசனும், இளங்கோவனும், நேருக்கு நேர் மோதும் சூழல்.
பாவம் இளங்கோவன்! தலைக்கு மேல் வெள்ளம்போனபிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. முந்தைய முறையைப்போல் அல்லாமல், இப்போது அவரிடம் சத்தியமூர்த்தி பவன் இருக்கிறது; காங்கிரஸ் மைதானமும் இருக்கிறது; கட்சியும் பணம் தரக்கூடும். ஆகவே, வீடுகளை விற்கும் அவசியம் அவருக்கு இம்முறை வர வாய்ப்பில்லை.
தன்னை கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யாமல் விட்ட கோபத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை, ‘கோமாளின் கூட்டம்’ என்றார், மொகிந்தர் அமர்நாத். இன்றோ, நாளையோ வாசனும் அப்படிச் சொல்லக்கூடும்.
பதவி, பணம் இழந்து, மானம் இழந்து, தந்தைக்கிருந்த மரியாதையும் இழந்து நிற்கும் வாசன், மிஞ்சியிருக்கும் தொண்டர்களையும், ஜால்ராக்களையும், கரையேற்றி விடுவாரா, கால ஓட்டத்தில், காங்கிரஸ் வெள்ளத்தில் கரைந்து விடுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும்.

ஈராக், சிரியா, லிபியா, நைஜீரியா என உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், பெட்ரோலிய விலை குறைந்து கொண்டிருக்கிறது.
ஜூன் மாதம் இருந்ததை காட்டிலும், சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை
25 சதவீதம் சரிந்திருக்கிறது. இது, நான்கு ஆண்டுகளில் இல்லாத விலைக்குறைவு.
கடந்த நான்கு ஆண்டுகளாக பீப்பாய் 100 முதல் 105 டாலர் என்ற அளவில் இருந்த பெட்ரோலிய விலை, இப்போது 80 டாலருக்கும் கீழே வந்து விட்டது. வரும் மாதங்களில், இது 70 டாலராக குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இப்படி தாறுமாறாக சரியும் விலையானது, ரஷ்யா, வெனிசுலா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, கத்தார் போன்ற எண்ணெய் வளத்தை பின்னணியாகக் கொண்ட நாடுகளை பாதிக்கிறது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம், சவுதி அரேபியா தலைமையில் சங்கம் வைத்திருக்கின்றன. இவர்களது வேலை, ‘அங்கே சண்டை, இங்கே தகராறு, அவன் என்னைக் கிள்ளினான், இவன் என்னை அடித்தான்’ என்பதுபோல, ஏதாவது சிறுபிள்ளைத் தனமான காரணம் கூறி, விலையை உயர்த்துவது.
பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, உலக நாடுகளில் பெட்ரோலிய தேவை சரிந்தால், மார்க்கெட்டில் விலையும் சரிந்து விடும். ஆகவே, இவர்கள் உற்பத்தியை குறைத்து, விலையை நிலைநிறுத்திக் கொள்வர். நம்மைப் போன்ற ஏழை எளிய நாடுகளுக்கு அயோக்கியத்தனமாக தெரிந்தாலும், காலம் காலமாக இதுவே நடைமுறை.
இந்த தில்லாலங்கடி வேலையில், முன்னணியில் இருப்பது சவுதி அரேபியா.
ஒவ்வொரு முறையும், பெட்ரோலிய விலை சரியும்போதெல்லாம், சவுதி அரேபியா உற்பத்தியை குறைத்து, விலையை மீண்டும் மேலே கொண்டு வந்து விடும்.
இந்தமுறை, விலை சரிந்தும், சவுதி அரேபியா, தன் வேலையைக் காட்டாமல் இருக்கிறது. சர்வதேச அரசியலில் தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைக்கும் இரு நாடுகளின் எண்ணம்தான் இதற்கு காரணம். ஒன்று, சவுதி அரேபியா; சரி மற்றொன்று? வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் அமெரிக்கா தான்.
மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கா நேரடியாக சிரியா மீது போர் தொடுப்பதை, கடைசி நிமிடத்தில் நிறுத்தக் காரணமாக இருந்தது ரஷ்யா.
ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில், சிரியாவின் உற்ற நண்பனாக ரஷ்யா இன்றளவும் இருந்து வருகிறது. இது, ஆசாத்தை வீழ்த்துவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சவுதி அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
ஆகவே, உற்ற நண்பன் அமெரிக்காவின் ஆலோசனைப்படி, ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக, இடையூறு செய்யும் நோக்கத்துடன், பெட்ரோலிய விலைச்சரிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது சவுதி அரசு.
உக்ரைன் உள்ளிட்ட ஒவ்வொரு சர்வதேச விவகாரத்திலும் தனக்கு சவால் விடும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பாடம் கற்பிக்க, சவுதி அரேபியாவை, ஒபாமா பயன்படுத்திக் கொள்கிறார். தன் சொல் பேச்சுக் கேட்காத பிற பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள், வீணாய்ப்போனாலும், அமெரிக்காவுக்கு லாபம்தான்.
ஆகவே, ‘எண்ணெய் உற்பத்தி, அப்படியே தொடரட்டும்; விலைச்சரிவு வந்து, ரஷ்யா, வெனிசுலா, ஈரான் நாடுகள் நாசமாகட்டும்’ என்று, அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது.
சவுதியின் நடவடிக்கைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. முன்பெல்லாம் வளைகுடா நாடுகளுக்கு சவுதி தான் தலைமை வகித்துக் கொண்டிருந்தது. சர்வதேச விவகாரங்களில், சவுதியின் குரல்தான் வளைகுடாவின் குரலாக, இஸ்லாமிய நாடுகளின் குரலாக, எண்ணெய் வள நாடுகளின் குரலாக இருந்தது.
இப்போது, நிலைமை மாறி விட்டது. கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் போன்ற எண்ணெய் வள நாடுகள், சவுதியை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ‘அவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்ததுபோலிருக்கும்’ என்று சவுதி அரேபியோ பெட்ரோலிய விலைச்சரிவை அனுமதித்திருக்கிறது.
எதுவுமே செய்யாமல், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சவுதியின் செயலால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், குறைந்த விலையில், பெட்ரோலிய இறக்குமதி செய்கின்றன.
ஆகவே, ‘பெட்ரோல், டீசல் விலையை, அருண் ஜெட்லி குறைத்தார்’ என்று படித்து மகிழும் நிலை வரும்போது, ‘ஒபாமா-புதின் சண்டை என்றென்றும் தொடரட்டும்’ என்று, வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள், மக்களே!

சாதாரண திருட்டு சம்பவத்தைக் கூட, ‘கொள்ளையோ கொள்ளை’ என்று பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, தங்கள் உயிரை எடுப்பதாக, செய்தியாளர்கள் மீது போலீஸ் தரப்பில் புகார் கூறுவது வழக்கம். பாதிக்கப்பட்டவரை பொறுத்தவரை, கொள்ளைக்கும், திருட்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரண்டுமே பொருள் இழப்புத்தான்.
போலீஸ்காரர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. திருட்டு என்பது, ஆள் இல்லாத வீட்டில் நடப்பது; கொள்ளை என்பது, ஆள் இருக்கும் வீட்டில் அடித்துப்போட்டு, பணம், பொருளை பறித்துச் செல்வது. முன்னது, கொஞ்சம் கிரேடு கம்மி; பின்னது கிரேடு ஜாஸ்தி. சட்டம் இப்படி இருக்கையில், போலீஸ்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்?
ஆனால், செய்தியாளர்களுக்கு இருக்கும் சிரமங்கள் எல்லாம், போலீஸ்காரர்களுக்கு தெரியவா போகிறது? மாலைப்பத்திரிகைகளில் வேலை செய்யும் நிருபர்கள், அன்றைய காலை பத்திரிகைகள் எதிலும் வெளிவராத, புத்தம் புதிய செய்திகளை, சூடாகவும், சுவையாகவும் தர வேண்டியிருக்கும். ஆகவேதான், ஆளில்லா வீட்டில் நடக்கும் அரைப்பவுன், கால் பவுன் திருட்டெல்லாம், கொஞ்சம் காரமும், மணமும் சேர்க்கப்பட்டு, கொள்ளை செய்தியாக உருமாறி, பத்திரிகையில் வெளியாகி விடுகின்றன.
அதைப்படிக்கும் சம்பந்தப்பட்ட ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நிச்சயம், காதில் புகை வந்து விடும். பிறகு? எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., என ஊரில் இருக்கும் எல்லா அதிகாரிக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமே! அப்படி நான்கைந்து முறை பதில் சொல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டால் போதும்; செய்தியாளரை பார்க்கும்போது, குரல்வளையை கடித்து ரத்தம் குடித்து விடும் ஆவேசம், எந்த இன்ஸ்பெக்டருக்கும் வந்து விடும்.
திருட்டும், கொள்ளையும், கொலையும் நடக்கும்போது, செய்திக்குரிய தகவல்களை தருவதற்கு சலித்துக்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள், திருடன் சிக்கி விட்டால், செய்தியாளர்களுக்கு போன் மேல் போன் போட்டு உயிரை எடுப்பது வழக்கம். ஓடியதாகவும், துரத்தியதாகவும், ஆயுதத்தை காட்டி மிரட்டியதாகவும், தீரமுடன் போராடி மடக்கியதாகவும், கட்டிப்புரண்டு உருண்டதாகவும், அண்டமும், ஆகாசமும், அசந்துபோகுமளவுக்கு, புளுகுமூட்டைகளை அள்ளி விடுவதும் வாடிக்கை.
மாதம் ஒரு முறை குற்றப்பிரிவு போலீசாரின் கூட்டங்களை உயர் அதிகாரிகள் கூட்டுவர். அதில், கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் குற்ற வழக்குகள் குறித்து, உயர் அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்பார். அது ஒரு மகா இம்சை. அதற்குப் பயந்துதான், திருட்டுக்கும், கொள்ளைக்கும், எப்.ஐ.ஆர்., போடாமலேயே போலீசார் காலத்தை ஓட்டுவர். அப்படியும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உத்தரவுக்கு பயந்து எப்.ஐ.ஆர்., போடப்பட்ட திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும். அதற்கு, கூட்டத்தில் இருக்கும் சக போலீசார் முன்னிலையில், மானம், மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சமாளிப்பு பதில் சொல்லி முடிப்பதற்குள், தாவு தீர்ந்து விடும்.
சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவில் நோகாமல் மாமூல் வாங்கிக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு, குற்றப்பிரிவில் வேலை என்பது, பள்ளிக்கூட மாணவனை பெஞ்ச் மேல் நிற்கச்சொல்வதற்கு சமம். சிணுங்கிக்கொண்டு நிற்கும் சிறுவர்களைப்போல, அவர் வேண்டா வெறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அவரைப்போய், கண்டுபிடிக்கப்படாத திருட்டுக்கு பதில் சொல்லச் சொன்னால், எப்படியிருக்கும்? அவர், திருடர்களுக்கும், கேள்வி கேட்கும் அதிகாரிக்குமாய் சேர்த்து, மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைக்காத குறையாக, சாபம் விட்டுக்கொண்டிருப்பார்.
கடைசியில், ஏதாவது ஏமாளி, கோமாளிபோல, பிக்பாக்கெட் திருடர்கள் மாட்டிக் கொண்டுவிடுவர்; மிச்சம் மீதியிருக்கும் அனைத்து திருட்டுக் கேஸ்களிலும் ஈடுபட்டது அவர்கள்தான் என்று கூறி, ஒட்டு மொத்தமாக இருக்கும் பழைய எப்.ஐ.ஆர்., அனைத்தையும் காலி செய்து விடுவர்.
பார்த்திபன்&கவுண்டமணி நடித்த ‘டாட்டா பிர்லா’ என்றொரு படம் வந்தது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு இன்ஸ்பெக்டர் சொல்வார். ‘ஏலே, அந்த கொருக்குப்பேட்டை கொலைக்கேஸ இவம்மேல போடுலே, அந்த கற்பழிப்புக் கேஸ அவம்மேல போடுலே’ என்பார். போலீஸ் நடைமுறைகள் அறிமுகம் இருப்பவர்களுக்குத் தெரியும், அந்த சினிமா டயலாக்கில் இருக்கும் சத்தியம், எப்பேர்ப்பட்டதென்று!

திருட்டுப்புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்பவர்களுக்கு கிடைக்கும் முதல் மரியாதை இருக்கிறதே, அது நிச்சயம் ஆயுசுக்கும் மறக்காது. இன்ஸ்பெக்டரில் இருந்து, எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் முதல், ஸ்டேஷனை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் ஆயா வரைக்கும் எல்லோரும், ஏதோ சர்க்கஸ் கோமாளியைப் பார்ப்பது போல், பார்த்துப் பார்த்து கேள்வி கேட்பர்.
கடைசியில், ஒரு வெள்ளைக்காகிதத்தில் புகாருடன், மொபைல் எண், முகவரியை எழுதி வாங்கிக்கொண்டு, ‘சரி, போயிட்டு வாங்க, கிடைத்தால் சொல்லி அனுப்புகிறோம்’ என்று அனுப்பி விடுவர். அதோடு வந்து விட்டால் போதும்; திருட்டு போனதைத்தவிர, பெரிய அளவில் மன உளைச்சல் எதுவும் இருக்காது.
ஆனால், முதல் முறையாக ஸ்டேஷனுக்கு போகக்கூடிய சில விவரம் கெட்டவர்கள், ‘எப்.ஐ.ஆர்., எப்போ போடுவீங்க’ என்று, கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமல் கேட்டுத் தொலைத்து விடுவர். புகார் கொடுத்தவுடன் எப்.ஐ.ஆர்., போட வேண்டும் என்று கேட்பது, பெண்களிடம் வயதைக் கேட்பதை விடவும், ஆண்களிடம் சம்பளத்தை கேட்பதை விடவும் கொடிய குற்றம். அப்படி கேட்டவிட்ட பிறகு, அந்த போலீஸ் அதிகாரிக்கு காதிலும் மூக்கிலுமாய் கோபம் பொத்துக்கொண்டு வரும் பாருங்கள்; அதன்பிறகு இருக்கிறது, ‘ரமணா’ பாணி விசாரணை!.
பணம், நகை திருட்டுப் போனதாக சொல்பவரிடம், ‘உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க, எல்லாரையும் நல்லா விசாரிங்க’ என்று அறிவுரை கூறுவார். ‘உங்களுக்கு சிரமமா இருந்தா சொல்லுங்க, நானே வர்ரேன்’ என்பார். ‘கடைசியாக வீட்டுக்கு வந்த உறவுக்காரர் யார்’ என்றும், ‘உங்க வீட்டுக்கு அடிக்கடி வரக்கூடியவர் யார்’ என்றும் விசாரிப்பார். ‘பக்கத்து வீட்டுல நல்லா பழகக்கூடியவங்க இருக்காங்களா’ என்பார்.
இப்படி வீசப்படும் பவுன்சர்களை எல்லாம் மிகச்சரியாக எதிர்கொண்டு நிற்பவர்கள் வெகு சிலரே. பெரும்பகுதியினர், ‘அவுட்’ ஆகி, ‘சார், வீட்டுல நல்லா விசாரிச்சுட்டு வாரேன்’ என்று, தப்பியோடி விடுவர். ஓடாமல் நிற்கும் வெகுசிலருக்கு, இன்னும் ட்ரீட்மெண்ட் இருக்கிறது.
‘வீட்டுல மாமியார், அப்பா, அம்மா எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க, அவங்க எடுத்திருக்க மாட்டாங்க, எதுக்கும் ஒரு தடவை விசாரிச்சுடலாம்’ என்பார். உஷார் பேர்வழியாக இருந்தால், அந்த பவுன்சரோடு ‘அவுட்’ ஆகி விடுவார். அதன்பிறகும், சூடு சொரணை இல்லாமல் இருந்தால், அப்புறம் இருக்கவே இருக்கிறது, மெகா ட்ரீட்மெண்ட்.
வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா, எப்போதோ வந்து சென்ற மாமியார், மாமனார் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொல்வார். ‘பக்கத்து வீட்டில் விசாரிக்க வேண்டும்’ என்று, அவர்களுடைய மொபைல் எண்ணையும் கேட்டு வாங்குவர். கடைசியில், பணம், நகை போனதுடன், குடும்பத்தில் குழப்பமும் உண்டாகி விடும். அக்கம் பக்கத்து வீடுகளிலும், போலீஸ் விசாரணை நடந்து, சண்டை பெருத்து விடும். எல்லாவற்றுக்கும் காரணம், ‘எப்.ஐ.ஆர்., ஏன் போடவில்லை’ என்று கேட்டதாகத்தான் இருக்கும்.
ஆக, போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை, எப்.ஐ.ஆர்., என்பது, எப்படியும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்டவார்த்தை. அவர்களது அகராதியில், எப்.ஐ.ஆர்., என்பது, திருடனும் சிக்கி, திருட்டுப் பொருளும் மீட்கப்பட்டபிறகு போடப்பட வேண்டியது. திருட்டு நடந்த அன்றே எப்.ஐ.ஆர்., போடப்பட்டால், பாதிக்கப்பட்டவர், ஆளும் கட்சிக்காரராகவோ அல்லது அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவராகவோ, அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு மிகுந்தவராகவோ இருந்து தொலைத்திருப்பார் என்பதை அறிக!
அப்படி போடப்படும் எப்.ஐ.ஆர்.,களில் இருப்பதெல்லாம் முழு உண்மை என்று நம்பியிருந்தால், நம்மைப்போல் முட்டாள்கள் யாருமில்லை என்றே அர்த்தம். திருட்டு சம்பவம் நடக்கும்போது, பத்தாயிரம் ரூபாய் மதிப்பு மோட்டர் சைக்கிள் திருடு போனதாக வழக்கு பதியும் போலீசார், அதே மோட்டர் சைக்கிளை கண்டுபிடிக்கும்போது மட்டும் 40 ஆயிரம் மதிப்பு மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டதாக, கணக்கு காட்டுவர். இது ஒரு வகை தில்லாலங்கடி மோசடி!
பணம் பத்து லட்சம் திருட்டு போய் விட்டதாக ஒருவர் புகார் கொடுத்தால், போலீஸ் அதிகாரி கேட்கும் முதல் கேள்வியே, ‘அந்தப் பணத்துக்கு கணக்கு இருக்கிறதா, வரி கட்டியிருக்கிறீர்களா’ என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரு பவுன்சர் போதும்; ஆள் அவுட் ஆகி விடுவார். ‘வேணும்னா கொஞ்சம் கொறைச்சுப் போட்டுக்கலாம்’ என்பார், புகார்தாரர். பார்ட்டி மடங்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போலீஸ் அதிகாரி, ‘சார், எதுக்கு வீண் பிரச்னை, திருடனை புடிச்சுட்டு அப்புறம் போட்டுக்கலாம்’ என்று, அனுப்பி விடுவர். அப்புறம், திருடன் சிக்கினாலும், பாதிக்கப்பட்டவருக்கு பணம் முழுதாகக் கிடைக்காது என்பது தனிக்கதை.

நகராட்சி ஆணையர் ஒருவர் இருந்தார். ‘தடாலடிப் பேர்வழி’ என்று பெயரெடுத்தவர். அவருக்கு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஏதோ கொஞ்சம் பிரச்னை. வாரிய அதிகாரி, ஆணையரிடம் வார்த்தைக்கு வார்த்தை பேசிவிட்டார். அது ஏற்படுத்திய அஜீரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத ஆணையர், ‘வாட்டர் போர்டுக்காரனுக்கு ஒரு ஆப்பு வெச்சாகணும்’ என்று, சில நாட்களாகவே கருவிக் கொண்டிருந்தார்.
அவருக்கென்றே வந்தது ஒரு விவகாரம். குறிப்பிட்ட அந்த நகராட்சி சார்பில் குடிநீர் திட்டம் ஒன்றை, குடிநீர் வாரியம் செயல்படுத்தியிருந்தது. அதற்காக நகரின் மத்தியில் மேல்நிலைத் தொட்டி ஒன்றைக் கட்டியிருந்தனர். அந்த தொட்டியின் கீழ்ப்பகுதியில், சிறிய ஒற்றை அறை கட்டி, அதில் அலுவலகமும் அமைத்திருந்தது குடிநீர் வாரியம்.
திட்டம் நிறைவேறிவிட்டால், அந்த அலுவலகத்தை வாரியம் காலி செய்து விட வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், திட்டம் செயல்படுத்திய பிறகும், அலுவலகத்தை வாரிய அதிகாரிகள் காலி செய்யவில்லை. நகரின் மத்தியில் அப்படியொரு இடத்தில், அலுவலகம் கிடைப்பதென்றால் சிரமம் என்பதே அதற்கு முக்கிய காரணம்.
முந்தைய ஆணையாளர்கள் எல்லாம், ‘குடிநீர் வாரியமும் அரசுத்துறை தானே’ என்று, பெரும்போக்காக இருந்து விட்டனர். ஆனால் தடாலடி ஆணையரோ, லட்டுபோல் வாய்த்த விவகாரத்தை விடுவாரா? ‘உடனடியாக அலுவலகத்தை காலி செய்தாக வேண்டும்’ என்று, குடிநீர் வாரிய அதிகாரிக்கு சொல்லி அனுப்பினார்; நேரிலும்கூட சொன்னார்; ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று, நோட்டீசும் அனுப்பி வைத்தார்.
ஆனால், சொரணை கெட்ட குடிநீர் வாரிய அதிகாரியோ, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தன்னுடைய ராஜ முயற்சிகள் வீணாய்ப்போன ஆத்திரத்தில், பிரம்மாஸ்திரம் ஒன்றை பயன்படுத்தினார் ஆணையர். நகராட்சியில் சேகரமாகும் குப்பையை லாரிகளில் கொண்டுபோய், குடிநீர் வாரிய அலுவலகம் முன் கொட்டி, அலுவலக கதவை திறக்க விடாமல் அடைப்பதே அந்த பிரம்மாஸ்திரம்.
ஆணையரின் அதிரடி உத்தரவு, அவசர அவசியம் கருதி, அடுத்த அரை மணி நேரத்திலேயே அமல்செய்யப்பட்டது. ‘என் எடத்துல நான் குப்பை கொட்டறேன். யாரு கேக்க முடியும்’ என்பது ஆணையரின் வாதம். இந்த திடீர் தாக்குதலையும், துர்நாற்றத்தையும் தாங்கிக்கொள்வதற்கு சக்தியில்லாத குடிநீர் வாரிய அதிகாரி, கத்தினார்; கதறினார்; கூப்பாடு போட்டார். உடன் இருந்த ஊழியர்கள் கூட, அலுவலகம் பக்கம் வர மறுத்தனர். எவ்வளவு நேரம் மூக்கைப் பொத்திக் கொண்டு நின்றிருப்பது?
வாரிய தலைவரிடம் பேசினார்; துறை செயலரிடம் புலம்பினார்; தலைமைப் பொறியாளரிடம்கூட பேசினார். அந்தோ பரிதாபம்…அவரைக் காப்பாற்றுவார் யாருமில்லை. கடைசியில், கலெக்டரிடம்கூட கெஞ்சிப்பார்த்து விட்டார். ஆணையரின் தைரியத்தை அறிந்திருந்த எல்லோரும், ‘அந்தாள்கிட்ட எதுக்கு வீண் வம்பு, ஆபீசை காலி பண்ணிடுங்க’ என்று அறிவுரைதான் கூறினர். வேறு வழியில்லை. அலுவலகத்தை காலி செய்வதாக ஒப்புக்கொண்டார், குடிநீர் வாரியம்.
விஷயம் அறிந்த நானும், இன்னொரு நிருபரும், நகராட்சி ஆணையரை பார்க்கப் போனோம். செய்தி சேகரிக்கத்தான். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக இருந்தார் ஆணையர்.
சக நிருபர், கொஞ்சம் குறும்புக்காரர். ஆணையரை கொம்பு சீவி விட்டார்.
‘‘சார், கலக்கிட்டிங்க. ஏக்சன்னா இதுதான்சார் ஏக்சன். டவுனே அரண்டு போய்டுச்சு’’
‘‘அப்பிடியா, என்ன பேசிக்குறாங்க, டவுனுக்குள்ள?’’
‘‘சார், வாட்டர் போர்டுக்காரனுக்கு நல்ல வேணும்னு அஞ்சாவது வார்டு கவுன்சிலர் கூட சொன்னாங்க’’
‘‘பின்ன என்னங்க, ஆபீசைக்காலி பண்ணுடான்னா பண்ண வேண்டியது தானே? அங்கயும், இங்கயும் போன் பண்றான். டைம் வேணுங்குறான். கலெக்டர்கிட்ட பேசுவேங்குறான்’’
‘சார், அது என்ன பிரச்னை, வெவரமாச்சொல்லுங்களேன்’’
‘‘சார், எடம் என்னுது, கட்டடம் என்னுது, அதைக் கட்டுன துட்டும் என்னுது, காலி பண்ணுனா பண்ண வேண்டியதுதானே? ஏன் மாட்டேங்குறான்?’’
‘‘என்ன சார் நடந்துச்சு? மொதல்ல இருந்து சொல்லுங்க’’
‘‘சார், முனிசிபாலிட்டிக்கு ஒரு வாட்டர் ஸ்கீம் போட்டோம். அதை இம்ப்ளிமெண்ட் பண்றது வாட்டர் போர்டு. இதுக்காக வோர்ல்டு பேங்க்குல கடன் வாங்குறோம். கடன் வாங்குறது நானு, வட்டி கட்டறது நானு, கடன திருப்பிக் கட்டறதும் நானு. பணத்தைக் கொடுத்து, வாட்டர் ஸ்கீம் போடச்சொன்னா, அவன் என்ன பண்றான்? ஜீப் வாங்குறான். எதுக்கு ஜீப்பு. பஸ்சுல ஏறிப்போய், ஸ்கீம் போடமாட்டானா?
‘‘அந்த பணத்துலதான் தண்ணீத்தொட்டி கட்டுறான், கொழாய் போடறான், கட்டடமும் கட்டறான். கடேசில, கொழாய் உன்னுது, தண்ணி உன்னுது, தொட்டி உன்னுது, அடில இருக்குற கட்டடம் மட்டும் என்னுதுங்குறான். அதான் செவுள்ல விட்டாமாரி, விட்டம்பாருங்க ரெண்டு. ஆளு, துண்டக்காணோம், துணியக்காணோம்னு ஓடியே போய்ட்டான். நீ எங்க வேணும்னாலும் சொல்லு. இந்த முனிசிபால்ட்டிக்கு நான்தான் ராஜா’’
‘‘சார், அசத்திட்டிங்க சார். இப்படி நாலு கமிஷனர் இருந்தா, அட்மினிஸ்ட்ரேஷன்லாம் ஒழுங்கா நடக்கும்சார். இந்த பிரச்னை சம்பந்தமா, அவங்க டிப்பார்ட்மெண்ட்ல இருந்தோ, கலெக்டரோ யாரும் பேசலீங்ளா சார்’’
‘‘எவனாச்சும் எங்கிட்ட பேச முடியுமா சார்? சட்டப்படி நான் செஞ்சது எல்லாம் ரைட்டு சார், எங்கிட்ட எப்புடி பேச முடியும்?’’
அவ்வளவுதான். பேட்டி முடிந்தது. நானும், அந்த இன்னொரு நிருபரும் கிளம்பி விட்டோம்.
அந்த பாவப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரியைப் பார்த்தோம்.
‘‘சார், மனுசனா சார் அவன்? குப்பையைக் கொண்டாந்து ஆபீஸ் முன்னால கொட்டி, தெறக்க உடாம செஞ்சுட்டான்சார். அவன்லாம் நல்லாருப்பானா சார்,’’ என்றார் அவர்.
இரு அரசுத்துறையினருக்குள் நிலவிய இணக்கமற்ற சூழல் பற்றியும், அதனால் ஏற்பட்ட மோதல் பற்றியும், மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், எதுவும் நடந்து விடவில்லை. குடிநீர் வாரிய ஊழியர்கள், நாற்றத்தை சகித்துக் கொண்டு, அலுவலக சாமான்களை புதிய அலுவலகத்துக்கு தூக்கிச்சென்றனர்.
இப்படி பல வீர விளையாட்டுகளை விளையாடிய அந்த ஆணையர், வேறு நகராட்சிக்கு பணி மாறுதலில் சென்றபோது, ஏதோ விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி விட்டார். அவர் சஸ்பெண்ட் ஆன செய்தி, தமிழகம் முழுவதும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகியது. நிச்சயம் அந்த குடிநீர் வாரிய அதிகாரியும், அதைப் படித்திருப்பார். என்ன நினைத்திருப்பாரோ?

ஒரு நாள் காலை வேளையில், அலுவலகத்தில் இருந்தபோது, நண்பர் ஒருவர் தேடி வந்தார்.
‘‘சார், உங்களப் பாத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு வந்தேன்,’’ என்று ஆரம்பித்தார்.
நண்பர் வசதியானவர். சொந்த வீடு, வணிக வளாகம், கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறது. வயது 25க்குள் தான் இருக்கும்; திருமணம் ஆகாதவர்.
‘‘சொல்லுங்க, வீட்டுல ஏதாவது விஷேசமா?’’
‘‘ஆமாங்க, விஷேசம்தான்’’
‘‘அப்படியா, மகிழ்ச்சி’’ என்றேன்.
நண்பரே ஆரம்பித்தார்.
‘‘சார், வெளிநாடு போலாம்னு இருக்கேன்’’
நான் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. காரணம் இருக்கிறது. நண்பருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்து, அதன்பின் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டவர். தொழிற்கல்வி எதுவும் கற்கவில்லை. வியாபாரிகள், அன்றாட சம்பளம் பெறுபவர்களிடம் நாள் வட்டிக்கு விட்டிருந்தார். அதன் மூலம் அவருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் கிடைத்தது.
இதையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால், அவர் திடீரென வெளிநாடு போவதாக கூறியதும், எனக்கு உண்மையிலேயே பேரதிர்ச்சியாக இருந்தது.
‘‘அப்படியா, சந்தோஷம் சந்தோஷம். எந்த நாட்டுக்கு போறீங்க’’
‘‘லண்டன் போகப்போறேங் சார்’’
‘‘வெரிகுட், வெரிகுட், எப்படி யாராவது தெரிஞ்சவங்க மூலமா போறீங்ளா’’
‘‘இல்லிங் சார், எல்லாம் புரோக்கர் மூலமாத்தான் ஏற்பாடு நடக்குது. மொத்தமா ஒரு அமவுண்ட் குடுத்தாப்போதும், பாஸ்போர்ட், விசா எல்லாம் அவுங்களே எடுத்துக் குடுத்துருவாங் சார்’’
‘‘அப்படியா, நல்லா விசாரிச்சு, அப்புறமா பணம் கொடுங்க’’
‘‘ஆமாங் சார், எல்லாம் நல்ல விசாரிச்சுட்டுத்தான் ஏற்பாடு செய்றேங்’’
‘‘பரவால்லிங்க, லண்டன்ல என்ன மாதிரியான ஒர்க் பண்ணப்போறீங்க’’
‘‘எந்த வேலைன்னாலும் பரவால்லிங் சார். அங்கபோய் டிச்சு வழிக்கச்சொன்னாக்கூட செய்வேங்க, நமக்குத்தேவை பணம், அவ்வளவுதாங் சார்,’’
சிரித்தார் நண்பர்.
‘‘அப்படியில்லிங்க, ஏதாவது டெக்னிக்கலா செய்யக்கூடிய வேலைன்னா சம்பளம் நெறயக்கெடைக்கும். நான்&டெக்னிக்கல், வீட்டு வேலைன்னா, சம்பளம் பெரிசா கிடைக்காது, விசா வாங்குறதுல கூட பிரச்னை வரும்பாங்களே’’
‘‘அதெல்லாம் சட்டப்படி போறவனுக்குத்தாங் சார். நாமதான் அப்புடி போகப்போறதில்ல¬யே’’
கேட்டதும், எனக்கு இன்னும் அதிர்ச்சி.
‘‘சட்டப்படி இல்லைன்னா, என்ன செய்யப்போறிங்க’’
‘‘அதெல்லாம் புரோக்கர் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங் சார். கையில பணத்தோட ஏர்போர்ட்டுக்கு போய்ட்டாப் போதுங், லண்டனுக்கு கொண்டுபோய் சேக்குறது அவுங்க பொறுப்புன்னு சொல்லிருக்குறாங், சார்’’
‘‘இல்லிங்க, வெளிநாட்டுல வேலைவாங்கித்தர்றதுல நெறயப்பேரு ஏமாத்துறாங்க. அதுனால நீங்க என்ன முயற்சி செஞ்சாலும், ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சு, யாராச்சும் தெரிஞ்சவங்ககிட்ட ஐடியா கேட்டு செய்யுங்க’’
‘‘அதெல்லாம் யோசிச்சுத்தாங் சார் செய்றேன்’’
‘‘சரிங்க. லண்டன்ல யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்ளா’’
‘‘அங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லிங் சார், ஆனா நம்மூர்க்காரங்க நெறய இருக்குறதா சொல்றாங்க, அவுங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டா, அங்க போய் பாத்து அறிமுகம் ஆயிடலாமே’’
‘‘சரி, வேலைக்கு எப்படி ஏற்பாடு செய்வீங்க’’
‘‘அதெல்லாம் அங்க போய் நாமளா தேடிக்க வேண்டியதுதாங் சார்’’
‘‘நீங்க அதிகமாக ரிஸ்க் எடுக்குறமாதிரி தெரியுதுங்ளே, ஏதாச்சும் காரணம் இருக்குதா’’
‘‘இருக்குதுங் சார், எங்க வீட்டுல எங்க அண்ணன் பி.இ., படிச்சுருக்கான், எந்தம்பி பி.இ., படிக்கிறான். அவங்களுக்கு பணமும் இருக்கு, படிப்பும் இருக்கு. எங்கிட்ட படிப்பில்லை; பணம் மட்டும்தான் இருக்கு. அதனால ஏதாவது ஒரு வகையிலாவது அவீக ரெண்டு பேரைவிட அதிகமா சம்பாதிக்கணும். இன்னைக்கு ஊருக்குள்ள பணம் இருந்தாத்தாங்க மதிப்பு. லண்டன்லபோய், நாம என்ன வேலை செஞ்சாலும், அது இங்க யாருக்கும் தெரியப்போறதில்லை. நாம லண்டன்ல இருக்கோம்னுதான் மட்டும்தான் சொல்வாங்க. நமக்கு அதுதாங் சார் முக்கியம்’’
‘‘சரிங்க நீங்க முயற்சி எடுக்குறீங்க, மகிழ்ச்சி. ஆனா, லண்டன் போறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லங்க, யாராச்சும் புரோக்கர்கிட்ட மாட்டி ஏமாந்துறாதீங்க. எல்லாவிதமான முன்னெச்சரிக்கையும் பண்ணீட்டு அப்புறமா கௌம்பிப்போங்க. உங்க அப்பா, அம்மா படிக்காதவங்க, அவங்கள சிரமப்படுத்துற மாதிரி ஏதாச்சும் பண்ணீறாதீங்க’’
‘‘அதெல்லாம் பண்ண மாட்டேங் சார். அடுத்த வாரம் பிளைட்டுங்க. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேங் சார்’’
‘‘ஓகேங்க. மகிழ்ச்சி. லண்டன் போய்ட்டு போன் பண்ணுங்க’’
‘‘சரிங்சார், நான் வரேங் சார்’’
நண்பர் புறப்பட்டு விட்டார்.
அலுவலக நண்பர்கள் சிரித்தனர். எனக்கு முன்பே அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது.
படிப்பறிவு இல்லாதவர்கள், வேலைக்காக பிரிட்டன் செல்வதற்கு விசா கிடைக்காது. சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் புரோக்கர் மூலம் நண்பர் முயற்சிப்பது புரிந்தது. அதுவும், பாரீஸ் சென்று, அங்கிருந்து சரக்கு ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிகளில் பதுங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று புரோக்கர் சொல்லியிருக்கிறார். அதற்கெல்லாம் நண்பர் தலையாட்டி விட்டார்.
இடையில் போலீசில் பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டும். அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். ஜாமினில் எடுப்பதாக புரோக்கர் சொன்னாராம்.
அகதிகள் மீது ஐரோப்பிய நாடுகள் காட்டும் இரக்கத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் சட்ட விரோத கும்பல்கள்தான், இத்தகைய ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி கண் முன்னாலேயே அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நண்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர், இதேபோல் சட்டவிரோதமாக லண்டனுக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தில், அவரது மனைவி இங்கே ‘டாம்டூம்’ என செலவு செய்வதைப் பார்த்ததும்தான், நண்பருக்கு ஆசை வந்திருக்கிறது. ‘லண்டனில் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை குப்பையை கொட்டுவது போல பணத்தை கொட்டி வைத்திருக்கின்றனர், அள்ளிச் செல்வதற்கு ஆளில்லை போலிருக்கிறது’ என்று நினைத்து விட்டாரோ என்னவோ?
நண்பரின் அம்மா, அப்பாவை பார்த்தேன். மகன் வெளிநாடு போவதில் அவர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. ஊரார், உறவுகளை எல்லாம் அழைத்து, கிடாய் வெட்டி விருந்து வைத்து, மகன் வெளிநாடு செல்வதை கொண்டாடினர். விருந்து முடிந்த இரு நாட்களில், விமானப்பயணம். உறவுக்காரர்கள் பத்துப்பேருக்கு மேல் சென்று, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வந்தனர்.
அதன்பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.
ஓரிரு மாதங்கள் கழிந்திருக்கும். ஆபீசில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது.
‘‘சார், அந்தண்ணா லண்டன் போனாங்கில்லியா, அதுல ஏதோ பிரச்னை போல சார், அவங்க அப்பா, அம்மா எல்லாம் எப்பப்பாத்தாலும் ஒரே அழுகாச்சு,’’ என்றான், ஆபீஸ் பையன்.
கேட்பதற்கே சங்கடமாக இருந்தது.
அவர்களது வீட்டுக்குப் போனேன். எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
‘‘பையன் அங்கபோய், சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கானாங் கண்ணு,’’ என்று கதறி அழுதார், நண்பரின் அப்பா.
நண்பர் கொண்டு போன பணத்தை, புரோக்கர்கள் அச்சுறுத்தி பறித்துக்கொண்டு விட்டனர். பாரீசில் இருந்து, லண்டனுக்கு போக முடியவில்லை. திருச்சியில் இருந்து கொழும்பு, கொழும்புவில் இருந்து பாங்காக், அங்கே ஒரு மாதம் முகாம், அங்கிருந்து பாரீஸ் வரைதான் போக முடிந்திருக்கிறது. அதற்குள் பணம் தீர்ந்து விட்டது.
‘மேலும் பணம் கொடுத்தால் லண்டன் போக முடியும்’ என்று புரோக்கர் சொல்லி விட்டார். யாரோ ஆட்களைப் பிடித்து, புரோக்கர் வங்கிக்கணக்கில் பணம் போட்டார்கள். அப்படியும் லண்டன் போக முடியவில்லை. மூன்று மாதங்கள் கடந்து விட்டன. புரோக்கர்களுக்கு கொடுத்தது, விமானப்பயணம், சாப்பாட்டுச் செலவு என ஆறு லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழித்து விட்டார்கள். லண்டன் கண்ணுக்குத் தெரிந்தபாடில்லை.
இதற்குள், யார் என்ன சொன்னார்களோ, நண்பருக்கு பயம் தட்டி விட்டது. ‘நான் இந்தியாவுக்கே போய் விடுகிறேன், என் பாஸ்போர்ட்டை கொடுங்கள்’ என்று புரோக்கர்களிடம் கேட்டிருக்கிறார். ‘அதற்கு இன்னும் பணம் வேண்டும்’ என்று புரோக்கர்கள் கேட்டு தகராறு செய்திருக்கின்றனர். கடைசியில், வேறு வழியில்லாமல், அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து, மீண்டும் சொந்த ஊருக்கு வந்து விட்டார் நண்பர்.
என்னை சந்திக்க வெட்கப்பட்டுக் கொண்டு, சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார்.
வழியில் ஒருநாள் தென்பட்டபோது, கண்களில் கொஞ்சம் கண்ணீரும், நெறைய வருத்தமும் தென்பட்டன.
‘‘நீங்க மட்டுமில்லிங் சார், நெறயப்பேரு எவ்வளோ சொல்லியும் கேட்காம வெளிநாடுபோய், பணம் லட்சக்கணக்குல போனதுதான் மிச்சங் சார். உசுரோட வந்தாப்போதும்னு ஆயிடுச்சுங். உங்கள மாதிரி படிச்சவங்க எப்படியோ தப்பிச்சுக்குறாங் சார். என்னை மாதிரி படிக்காதவன்னா எல்லாரும் நல்லா ஏமாத்தறாங் சார். இனிமே ஆயுசுக்கும் ஒத்தப் பைசா கூட ஏமாற மாட்டேங் சார்,’’ என்றார்.
‘ஜெயிலுக்குப் போகாமல் தப்பி வந்தது பெரும்பாடு’ என்பதுபோல் பேசினார் நண்பர்.
அனுபவம், மிகக்கடினமான பாடங்களையும் எளிமையாகப் புரிய வைத்து விடுவதை அன்று அவரிடம் கண்டுகொண்டேன்.

எந்த வீட்டிலும் வாடகைக்கு குடி வருபவர், சாமான்களை இறக்கி வைத்தவுடன் செய்யும் முதல் வேலை, சுத்தியல் கொண்டு சுவரில் ஆணி அடிப்பதுதான். உழைத்துச் சேமித்த பணத்தில் இடத்தை வாங்கி, மாதக்கணக்கில் அரசுத்துறை அலுவலகங்களுக்கு அலைந்தலைந்து அனுமதி வாங்கி, இன்ஜினியர் முதல் கொத்தனார், சித்தாள் வரை ஏமாந்து, வீடு கட்டிப் பெருமூச்சு விட்டவருக்குத் தெரியும்; அடிக்கப்படும் ஆணி, துளைத்துச்செல்வது, சுவரில் அல்ல; அவரது நெஞ்சில் என்று. இந்த வார்த்தைகளில் இருக்கும் வலியும், வேதனையும் எப்படிப்பட்டதென்று, வீட்டுக்காரர் பதைபதைப்பதை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
‘வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்தது அந்தக்காலம். வீடு கட்டுவதற்கும், கல்யாணம் நடத்தி முடிப்பதற்கும் பட வேண்டிய சிரமங்களை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட வாக்கியம் அது. அதோடு,
‘கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுப்பார்’ என்பதையும் இப்போது சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு வாடகைக்கு குடியிருப்பவர்கள், பாடாய் படுத்துவது இந்தக்காலம்.
வீட்டு உரிமையாளரை, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆனந்தராஜ், பொன்னம்பலம்போல சித்தரிக்கும் சினிமாக்கள் வந்திருக்கின்றன; நகைச்சுவை துணுக்குகளும் வெளியானதுண்டு. வாடகைக்கு குடியிருப்பவர், வீட்டுக்காரரை ஏமாற்றுவது போல் சினிமாக்களும் வந்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இருக்கும் பிரச்னைகளை, சினிமாக்காரர்களும், துணுக்கு எழுதுவோரும் தொடுவதேயில்லை.
வீட்டு உரிமையாளர், மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகவும், தண்ணீர் கட்டணம் தனியாக வசூலிப்பதாகவும் புகார்களும், பத்திரிகை செய்திகளும் வெளியாவதுண்டு. வாடகைக்கு குடியிருப்பவர், வீட்டில் செய்யும் அழிச்சாட்டியங்கள் எங்காவது வெளியில் தெரிகின்றனவா?
வீட்டுக்காரர் குடிப்பழக்கம் இல்லாதவராக இருப்பார். குடி வருபவர் அப்படி இருப்பாரா? தினமும் குடித்து விட்டு வந்து, மனைவி, குழந்தைகளை தாறுமாறாக திட்டித்தீர்ப்பார். சில வீடுகளில் மீன், மாட்டுக்கறி விரும்ப மாட்டார்கள். குடி வரும் குடும்பம், அதை விரும்பிச்சாப்பிடும்.
துணி துவைப்பதாக கூறி, ஏரியாவையே மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்வர். அதுவும் தண்ணீர் பிரச்னை அதிகம் இருக்கும் காலங்களில், ‘வாடகைதான் தருகிறோமே’ என்ற உரிமையில், பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் ஊற்றி துவைத்தெடுக்கும்போது, வீட்டுக்காரர் கண்களிலும், காதுகளிலும் புகை வரும் பாருங்கள். வீட்டுக்காரருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஜென்மப்பகையாக இருக்கும். குடி வருபவர், பக்கத்து வீட்டுக்காரருடன் பூர்வ ஜென்மத்து உறவுபோல பழக ஆரம்பிப்பார்.
வீட்டுக்காரருக்கும், அவரது உறவுக்காரர்களுக்கும் இடையே கோள் மூட்டி விடும் திருப்பணியை சில வாடகை குடித்தனக்காரர்கள் செவ்வனே செய்து விடுவர். வீட்டு உரிமையாளர் பற்றியும், அவரது மனைவி, மக்கள் பற்றியும், வெளியில் தாறுமாறான பிரசாரம் செய்யும் வாடகையாளர்களும் இருக்கின்றனர்.
ஏதோ கணவன், மனைவி, ஒரு குழந்தை என்று நம்பி, வாடகைக்கு வீடு தருவது வீட்டு உரிமையாளருக்கு வழக்கமாக இருக்கும்; இரண்டாம் வாரமே, ஊரில் இருந்து ஒரு படையே வீட்டில் வந்து இறங்கி விடும். அவர்களில் சில பேர், நிரந்தரமாகவே தங்கி விடுவர்.
சமையல் செய்கிறேன் பேர்வழி என்று சுவரெல்லாம் கரிப்பிடிக்க வைப்பர். குழந்தைகள், கிரிக்கெட் விளையாடி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துத் தொலைப்பர். பென்சில், பேனா, ஸ்கெட்ச், க்ரையான் கொண்டெழுதி, அலங்கோலமாய் சுவரை மாற்றி விடுவர். இப்படியெல்லாம், வீட்டுக்காரரை படுத்தியெடுக்கும் வாடகைக்காரர்கள் உண்டு.
குடி வந்த புதிதில் பூனை போல் பதுங்கி விட்டு, நாட்கள் செல்லச்செல்ல, புலியாக பாய்பவர்களும் இருப்பர். ஆரம்பத்தில் உறவு முறை கொண்டாடி, குழம்பும், ரசமும், பொரியலும் பரிமாறி, அடுத்த சில மாதங்களில், குசலம், குடுமிப்பிடியாக உருமாறி, பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று, வீட்டை காலி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
பழைய படம் ஒன்றில், வீட்டு உரிமையாளர் கவுண்டமணி, தன் வீட்டில் குடியிருப்போரை பார்த்துப்பேசுவதாய் வரும், ‘இந்த சிங்காரச் சென்னை மாநகரத்துல…இப்படி ஒரு சிறப்பான வீட்டைக்கட்டி…’ என்றொரு டயலாக் வரும். உண்மையில், ஒவ்வொருவருக்கும், அவரவர் வீடு, சிறப்பான வீடு தான். வாடகைக்கு வருபவருக்கு, அத்தகைய சிறப்பான வீட்டுக்கு வரும்போது, குறைகள் எதுவும் கண்களுக்குத் தெரியாது.
நாட்கள் செல்லச்செல்ல, வீட்டில் இருக்கும் குறைபாடுகள் எல்லாம், பூதாகரமாகத் தெரியும். அப்புறமென்ன, வாடகை பாக்கி, கிடுக்கிப்பிடி, வாய்த்தகராறு, வீட்டைக்காலி செய்வதெல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறி விடும்.
நமக்கு இந்த சப்ஜெக்டில் பேரனுபவம் இருக்கிறது. வாடகைக்கு குடி வைத்து விட்டு, பிறகு அவர்களை காலி செய்த அனுபவம் மட்டுமல்ல; வாடகைக்கு குடியிருந்த அனுபவமும் இருக்கிறது. பட்டிமன்றம் நடத்தினால், வீட்டு உரிமையாளர் தரப்புக்கே என் ஆதரவு. காரணம், வீட்டு உரிமையாளர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள் ஆயிற்றே! ‘வீட்டில் சாப்பாடு கிடைக்கணுமா, வேண்டாமா’ என்ற குரல், உங்களுக்கு கேட்டிருக்க வேண்டுமே!

……………
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம், வாடகைக்கு குடியிருந்தது. குடும்பத்தில் கடைசி மகன், பத்தாம் வகுப்பு படித்திருந்தான். அவன் வீட்டில் சும்மா இருப்பதால், உதவி செய்வதாக எண்ணி, தன் சீட்டு வசூல் வேலைக்கு அமர்த்திக் கொண்டார், வீட்டு உரிமையாளர். தினமும் மாலை வேலைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு நேரில் சென்று, சீட்டுப் பணம் வசூலிப்பது, வீட்டு உரிமையாளர் சொல்லும் வேலைகளை செய்வது, அவனுக்கு அன்றாட வேலையானது.
இரண்டாண்டுகள் கடந்தன. வாடகைக்கு குடியிருப்பவருக்கு, வீட்டு உரிமையாளர் மேல் ஏதோ அதிருப்தி. ‘வேலைக்குப் போக வேண்டாம்’ என்று மகனிடம் சொல்லி விட்டார். வீட்டு உரிமையாளரும், சரியென்று ஒப்புக்கொண்டார். ‘வேறு பையனை வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். வாடிக்கையாளர் வீடுகளை மட்டும் காட்டி விடு’ என்றார். பையனும் சரியென்றான்.
அவன் அப்பா, ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று கூறி விட்டார்.
இங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது.
வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவருக்கும் வாக்குவாதம்.
‘‘வேலைக்கு வரலைன்னா, பொறுப்பு ஒப்படைக்கணுமா, வேண்டாமா’’
வீட்டுக்காரர் ஆவேசமாக கேட்டார்.
‘‘ஆமா, பெரிய கவர்னர் உத்யோகம். பொறுப்பு ஒப்படைச்சாத்தான் அடுத்தவரு வந்து பதவியேத்துக்குவாரா?’’
இது வாடகைக்கு இருப்பவரின் பதில் கேள்வி.
வீட்டுக்காரருக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வேடிக்கை பார்த்த சில பேர், சூழ்நிலை தெரியாமல் சிரித்துத் தொலைத்து விட்டனர். அவ்வளவுதான். வீட்டுக்காரர் சொல்லி விட்டார்.
‘‘எங்க வீட்டுல இருந்துட்டு, என்னைவே கிண்டல் பண்றீங்களா? மொதல்ல வீட்டைக்காலி பண்ணுங்க’’
வாடகை பார்ட்டியின் மனைவியும், மகளும் எவ்வளவோ பேசியும், வீட்டுக்காரர் இறங்கி வர மறுத்து விட்டார்.
‘‘என்னப்பாத்து, கவர்னர் உத்யோகமான்னு கேட்டவங்களை எங்க வீட்டுல எப்படி குடி வைக்க முடியும்? காலி பண்ணிட்டு வேற வேலையப்பாருங்க’’
இது என் கண் முன்னால் நடந்த சம்பவம்.
…….

மருத்துவம் என்பது மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை; மனதை வருடும் வார்த்தைகளில்தான் அதிகமிருக்கிறது. இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சிடுசிடுவென எரிந்து விழும் மருத்துவர்களிடம் சென்றால், நோய்க்கொடுமை மேன்மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. இது, நானறிந்த உளவியல்.
நோயாளியிடமோ, உடன் வருபவரிடமோ, கூடுதலாக ஓரிரு வார்த்தைகள் கூடப் பேசாத டாக்டர்களை பார்த்திருக்கிறேன். கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல விரும்பாமல், எரிந்து விழும் டாக்டர்களையும் சந்தித்திருக்கிறேன். நோயாளியை ஏறெடுத்துக்கூட பார்க்காத டாக்டர்களும் உண்டு. இவர்களுக்கு மாறாக, ‘போதும் போதும்’ என்கிற அளவுக்கு நோயாளியிடம் பேசும் டாக்டர்களையும் பார்த்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் டாக்டர், மருத்துவமனையில் இருந்தால், அந்த இடமே கலகலப்பாக இருக்கும். நோயாளியிடம் சத்தமாகத்தான் பேசுவார்; விசாரிப்பார்; கண்டிப்பார். அவர் பேசுவது, அந்த மருத்துவமனையில் இருக்கும் அத்தனை அறைகளுக்கும் கேட்கும். அவர், போனில் பேசினால் கூட அப்படித்தான். அங்கு ரகசியம் என்பதே கிடையாது. அவரிடம் சென்று விட்டால், ஆலோசனை, வைத்தியம் எல்லாமே, முன்பு சொன்னது போலவே, ‘போதும்போதும்’ என்கிற அளவுக்கு இருக்கும்.
அய்யாவுக்கு உடல் நலம் பாதித்தால், ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். அந்த மருத்துவர், வெறும் எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தவர். அய்யாவைப் பார்த்ததும், ‘வாங்க கவுண்டரே… வாங்க…வாங்க…வாங்க…’ என்பார். ‘உங்களுக்கென்ன கவுண்டரே… நீங்கெல்லாம் அந்தக்காலத்துல ஏர் ஓட்டி வெவசாயம் செஞ்சவங்க. உங்களுக்கெல்லாம் 100 வருஷத்துக்கு ஒண்ணும் ஆகாது. ஏதாவது கொஞ்சம் அங்க இங்க வலியாகும். அதுக்கு ஒரு ஊசி போட்டோ சரியாப்போகும்’ என்பார்.
உடலை பரிசோதனை செய்வார். கை காலை நீட்டி மடக்கச்சொல்வார். ‘எங்கே தொந்தரவு’ என்று கேட்பார். ஒரு ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து விடச்சொல்லி, நெஞ்சிலும், முதுகிலும் ஸ்டெத் வைத்து பரிசோதிப்பார். ‘வீட்டில் மரம் பூ பூக்கிறதா, காய்கறி போட்டிருக்கிறீர்களா’ என்றெல்லாம் கேட்பார். நடந்து காட்டச்சொல்வார். கடைசியில், ‘உங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை’ என்று கூறி விடுவார்.
‘நான் பரிசோதனை செஞ்சதில, உங்க ஒடம்புல எந்த பிரச்னையும் இல்லிங்க, மனசுக்குள்ள தான் ஏதோ கொஞ்சம் கவலை இருக்குறாப்புல தெரியுது. என்ன கவலைன்னு எங்கிட்டச் சொல்லுங்க. உங்க மகன்கிட்ட நான் பேசுறேன்’ என்பார். ‘ஒரு கவலையும் இல்லிங்க, பசிதான் ஆக மாட்டேங்குது’ என்பார் அய்யா.
‘அந்தக்காலத்துல ஏர் ஓட்டும்போது, சாப்பிட்ட அளவு இப்ப நீங்க சாப்பிட முடியாது. கொஞ்சம் கொறைவாத்தான் சாப்பிடணும். நல்லா பசியாகுறதுக்கு, ஜீரணம் ஆகுறதுக்கு மாத்திரை தரலாம். வேற எதுவும் வேண்டாம். நீங்க தெனமும் நல்லா கொஞ்ச தூரம் நடந்தாலே போதும்; எல்லாம் செரியாகிடும்’ என்பார்.
மருத்துவரின் பேச்சிலேயே அய்யாவின் உபாதைகளில் பெரும்பகுதி குணமாகி விடும். அப்புறம், பெயரளவில் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக் இஞ்செக்சன் போட்டு விடுவார். இப்படித்தான் பல பேருக்கு சிகிச்சை அளிக்கிறார், அந்த மருத்துவர்.
பெரிய அளவில் பணம் பறிப்பதாகவும் அவர் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால் கூட்டம் மட்டும் குறைவதில்லை. வெறும் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களுக்கு மதிப்பில்லாத இந்தக்காலத்திலும், அந்த மருத்துவமனைக்கு அவ்வளவு கூட்டம் வருவதற்கு மருத்துவரின் பேச்சு சாமர்த்தியமே காரணம்.
கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சென்றால், உயர்தரமான சிகிச்சை கிடைக்கும், மூட்டை மூட்டையாக மருந்து, மாத்திரைகளும் கிடைக்கும். அங்கிருக்கும் மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும், நம் உடல் உபாதைகளைப் பற்றி அறிந்த அளவுக்கு, மன உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தெரிந்திருக்காது. ஆகவே, மருந்து, மாத்திரைகளில் மட்டுமில்லை மருத்துவம் என்பதை உணர்ந்து கொண்ட மருத்துவரை தேடிச்சென்றால், நோயும் குணமாகும்; நோய் கண்ட மனமும் குணமாகும்.