Archive for the ‘தமிழகம்’ Category

‘மது விலக்கெல்லாம், தமிழகத்தில் சாத்தியமில்லை’ என்று, ஒரே போடாகப் போட்டு விட்டார், நத்தம் விஸ்வநாதன். அவரைப் பொறுத்தவரை, மது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பதே, படுபயங்கரமானதாகத்தான் இருக்கும். நாம் அப்படியில்லையே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியைப் பிடித்து, அன்புமணி முதலமைச்சராகவும் பதவியேற்று, முதல் நாளே, ‘மதுக்கடைகள் க்ளோஸ்’ என்று, உத்தரவும் போட்டு விட்டால், எப்படியிருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்?
தமிழகத்தின் ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில், 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மதுக்கடை மூடப்பட்டால், அவர்கள் அரசின் வேறு துறைகளுக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அங்கே, இந்தளவுக்கு வருமானம் இருக்காது; அதாவது, சிங்கியடிக்க வேண்டியிருக்கும்.
மதுக்கடைகளும், அவற்றை ஒட்டிய மது குடிக்கும் ‘பார்’களும், பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. மதுக்கடைகளை மூடினால், அவற்றை எல்லாம் காலி செய்ய வேண்டியிருக்கும்.
அதன் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். பிற தொழில்களுக்கு வாடகைக்கு விட்டாலும், இந்தளவுக்கு வாடகை கிடைக்காது.
மதுக்கடை பார் ஒவ்வொன்றிலும், குறைந்தது, நான்கைந்து ஆட்களாவது வேலையில் இருப்பர். அவர்கள் தவிர, பஜ்ஜி, போண்டா, வடை சுடும் பிரிவொன்றும் பாருக்குள் இருக்கும்; அதிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பர்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நாளொன்றுக்கு, 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. கடைகளை மூடி விட்டால், அவர்களெல்லாம், வேறு பாவப்பட்ட தொழில்களுக்குப் போக வேண்டியிருக்கும்; அப்புறம், கஞ்சியோ, கூழோ குடிப்பதே பெரும்பாடாகி விடும்.
மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும், தண்ணீர் பாக்கெட், டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர், காராச்சேவு வினியோகம் செய்வதெற்கென்று, ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது.
மதுக்கடைகளை மூடி விட்டால், தமிழகத்தில் தண்ணீர் பாக்கெட் தயாரிக்கும் தொழிலே அழிந்து போகும் நிலை ஏற்படும். அதை நம்பியிருப்பவர்களை யார் காப்பாற்றுவார்?
டிஸ்போசபிள் கப், முறுக்கு, மிக்சர் விற்பனை படுத்து விட்டால், அவற்றை குடிசைத் தொழிலாக தயாரித்து விற்போர்பாடு, திண்டாட்டம்தான்.
மது உற்பத்தி ஆலைகள், தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, மதுக்கடைகள் முழு வீச்சில் இயங்க வில்லையெனில் சம்பளம் கிடைக்காது; போனஸ் வராது; அவர்களெல்லாம், பிக்பாக்கெட் வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கும்.
மது குடிப்பவர்களில் பெரும்பகுதியினருக்கு, சிகரெட் உற்ற துணையாக இருப்பது தெரிந்த விஷயம்தான். குவார்ட்டர் பாட்டிலை குடித்து முடிப்பதற்குள், நான்கு சிகரெட் குடிக்கும் ஆசாமிகள் நிறையப்பேர் இருக்கின்றனர்.
ஆக, மதுக்கடை இல்லையெனில், தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை மந்தமாகி விடும். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் ஒட்டுக் குடித்தனக்காரர்கள், குடும்பத்தோடு லாட்டரிச்சீட்டு விற்கத்தான் போவார்கள்.
மது குடித்து விட்டு, வாகனங்களில் செல்வோர் போலீசில் சிக்கி, தண்டம் அழுவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆக, கடையை மூடி விட்டால், போலீஸ் மாமூல் வாழ்க்கை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.
மதுக்கடைகளிலும், பார்களிலும், காலி மது பாட்டில்களை பொறுக்கி விற்று, பிழைப்பு நடத்துவதற்கென்று சில பேர் இருக்கின்றனர். மது விற்பனை இல்லையென்றால், காலி பாட்டில்களுக்கு அவர்கள் எங்கே போவார்கள்?
‘குடி’மகன்கள், எப்போதும் மதுக்கடை செயல்படும் ஏரியாவில்தான் இருப்பர். விளைவு, அப்பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை, மளிகைக்கடைகளில் பீடி, சிகரெட், வாழைப்பழம் என பலப்பலவற்றின் விற்பனை ஜரூராக இருக்கும். மதுவை ஒழித்தால், இந்த விற்பனையும் சேர்ந்தே ஒழிந்து போகும்.
‘பார்’ நடத்துவோர் அனைவரும், ஆளும் கட்சியினரே. நாள் தோறும் போஸ்டர் அச்சிடுவது, பிளக்ஸ் பேனர் தயார் செய்து மூலைக்கு மூலை வைப்பது என எல்லாவற்றுக்கும், தாராளமாகப் பாய்வது, இப்படி ‘பார்’ மூலம் தண்ணீராக பாயும் பணம்தான்.
அந்தப்பணம் வருவது தடைபட்டால், அப்புறம் பிளக்ஸ் பேனர், போஸ்டர் அச்சிடும் தொழில்கள் எல்லாம், மந்த நிலைக்கு சென்று விடவும் வாய்ப்புண்டு.
எல்லாவற்றையும் விட, மதுக்கடைகளால் இன்னொரு முக்கிய சமூக பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது. மாமியார், மருமகள் சண்டையில் இருந்தும், மனைவியின் அன்றாட இம்சைகளில் இருந்தும் தப்பிக்க எண்ணும் ஆண் மக்களுக்கு, ஒரே தீர்வாக இருப்பது மது மட்டுமே.
ஆக, பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும், மதுக்கடைகளுடன் வலைப்பின்னல் போல், இவ்வளவு தொடர்புகள் இருக்கும்போது, மதுவை ஒழித்தே தீர வேண்டும் என்று விடாப்பிடியாகவும், விஷமத்தனமாகவும் வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம்?
……….
டிஸ்கி: சமூகத்துக்கு மதுப்பழக்கம் இல்லை. மேற்கண்ட விவரங்கள் எல்லாம், ‘குடி’மக்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

கீறல் விழுந்த பழைய ரெக்கார்டுகளை கேட்ட அனுபவம், வாட்ஸப், பேஸ்புக் தலைமுறைகளுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு அந்த அனுபவத்தை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார், ரஜினி. பாவம், எவ்வளவோ அடிவாங்கியும், அவருக்கு இன்னும் புத்தி வரவில்லை போலிருக்கிறது.
‘கடவுள் விரும்பினால், அரசியலுக்கு வருவேன்’ என்பதாக, மீண்டும் ஒரு முறை அவரது திருவாய் மலர்ந்திருக்கிறது. அவர், ஏழு கடல் ஏழு மலை கடந்து கை ஊன்றிக்கரணம் போட்டு, அரசியல் களம் புகுந்துதான், ஏழரைக்கோடி தமிழர்களை உய்விக்க வேண்டும் என்றெல்லாம், கட்டாயம் எதுவுமில்லை.
ஏற்கனவே இங்கு, புரட்சியாளர்களும், இனமானத் தமிழர்களும், இன்னும் சில கத்தரி, தக்காளி, வெங்காயங்களும், அரசியலை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, கடும் இட நெருக்கடி நிலவிக் கொண்டிருப்பதாலும், இருக்கின்றவர்கள் இம்சையே சகிக்க முடியாத சாக்கடையாக ஓடிக் கொண்டிருப்பதாலும், மேலும் ஒரு சாக்கடை இங்கு யாருக்கும் தேவையில்லை என்பதை, அவர் மண்டையில் உறைக்கும்படி யார்தான் சொல்லப் போகிறார்களோ?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, ஒரு முறை அவர் ஏதோ உளறி வைக்கப்போய், ஆட்சி மாறிய கதை தமிழகத்தில் நடந்து விட்டது. அவரது உளறலுக்கு, அடுத்த தேர்தலிலேயே மார்க்கெட் போன கதை நாடறியும். ஆகவே, வண்டி ஓட வேண்டுமெனில், வாலைச் சுருட்டிக் கொண்டு வாழ்த்துப்பா பாடுவதே உசிதமென, அவர் காலத்தை ஓட்டுவதை கலையுலகம் அறியும்; கண்மணிகளாம் ரசிகர்களும் அறிவர்.
அரசியல் அதிகாரத்தை அடைவதுபோல் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நிச்சயமாக, ரஜினிக்கும் உண்டு. ஆனால், அவருக்காக காத்திருந்த ரயில் புறப்பட்டுப் போய், 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் டிக்கெட்டை காட்டி விற்க முயற்சிப்பது, குள்ளநரித்தனமேயன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?
இப்படி அவ்வப்போது பேசுவதன் மூலம், அவர் சம்பாதிக்கப்போவது, நக்கல், நய்யாண்டிகளை மட்டுமே. கிணற்றில் குதியென்றால், கேள்வி கேட்காமல் குதிக்கும் ரசிகர் கூட்டம், தமிழகத்தில் அவருக்கிருந்த காலம் மாறி, பல்லாண்டுகள் கடந்து விட்டன.
முதல் ஷோ டிக்கெட், அணிவதற்கு டிஷர்ட், தொப்பி, தோளில் மாட்டும் பை, தோரணம், கொடிக்கெல்லாம் கொள்ளை விலை வைத்து, வகை தொகையாய் வசூலித்து, முடிந்தமட்டும் சுரண்டிக் கொழுத்த ரஜினியின் குடும்ப வரலாறு, ரசிகக்கண்மணிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சொந்தக்காசு செலவழித்து கட்சி நடத்துவதற்கெல்லாம், அவருக்கு வீட்டனுமதி கிடைக்காது என்பதை, ரசிகர்கள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டார்கள்.
‘அவர் அரசியலுக்கு வருவார்; ஆட்சியைப் பிடிப்பார்; நாமும், ஒன்றியம், நகரம், வட்டம், கவுன்சிலராகி காசு பார்க்கலாம்’ என்ற கனவில் திரிந்த ரசிகர்கள், கிழடு தட்டிப்போய், மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம், இப்போதைய ரஜினியின் பேச்சு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத்தான் இருக்கும்.
கடவுள் விட்ட வழியென்றும், எல்லாம் அவர் விருப்பம் என்றும் ஏதாவது பேசிக்கொண்டு திரிந்தால், பா.ஜ.,காரர்கள் மனம் இளகி, ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் கூட, ரஜினியின் பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்.
‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்றார் அப்துல் கலாம். ரஜினியையும் சில கனவுகள், தூங்க விடாமல் செய்கின்றனபோலும். ஊமையர் கனவு கண்டதுபோல், அவரால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

நண்பர் திருமணத்துக்காக, காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தேன். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், வாய்ப்பிருந்தும் போகமுடியாத குறையை போக்கும் வகையில் அமைந்தது நண்பரின் திருமணம்.
முன்பிருந்ததை காட்டிலும், கோவிலில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், மலையிலும், கோவில் வளாகத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரியும். அவற்றின் பாவனைகளை ரசித்து மகிழ்வதற்கென்றே பக்தர்கள் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவர். கோவிலுக்கு செல்லும் சிறுவர், சிறுமியருக்கும், குரங்குக்கூட்டத்தின் சேட்டைகள்தான், நல்ல பொழுதுபோக்கு.
பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை, குரங்குகள் பறித்துச் செல்வதும், அதில் இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு, பையை வீசி எறிவதும், தினமும் பல முறை நடக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்கள். சென்னிமலை கோவிலிலும் இதே நிலை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.
நேற்று சென்றிருந்தபோது, தேடித் தேடிப்பார்த்தேன். ஒரு குரங்கு கூட தென்படவில்லை.
என்ன ஆயிருக்கும் அந்த குரங்குகள்? ஏனோ, மனதுக்குள் நெருடலாகவே இருந்தது.
ஆனால், வேறு ஒரு கூட்டத்தை கோவிலில் காண நேரிட்டது. அது, பணம் பறிக்கும் கூட்டம். சுவாமி சன்னதியில் இருந்து வெளியே வரும் பக்தர்களை தேடி வந்து பொட்டு வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி, பணம் பறிக்கிறது. விவரம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பக்தர்கள், புலம்படியபடியே ‘காணிக்கை’ கொடுக்கின்றனர். சென்னிமலையிலும் இப்படி கட்டாய வசூல் நடப்பதை பக்தர்கள் காண முடியும்.
தமிழ்ப்புத்தாண்டில் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரும் வழியில் சென்னிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்தாண்டில் சென்றபோது, குடும்பத்தினர் வருவதற்காக நான் காத்திருந்த வேளை, பூஜைத்தட்டுடன் வந்த ஒருவர், திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துவிட்டார். நான் கேட்கவே இல்லை. மறுப்பு தெரிவித்தபோது, ‘சாமி பிரசாதம், மறுக்கக்கூடாது’ என்கிறார்.
பொட்டு வைத்தவுடன் நகர்ந்தால், ‘காணிக்கை கொடுக்கணும்’ என்றார். பாக்கெட்டில், நூறும், ஐநூறுமாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘சில்லரை இல்லை’ என்றதற்கு, ‘கொடுங்க, நான் தருகிறேன்’ என்கிறார். சென்னிமலை ஆண்டவருக்காக, அந்த நபரை, சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தாண்டில் சென்றபோது, உஷாராகி விட்டோம்.
எனக்கென்னவோ, மலைக்கோவில்களில் குரங்குக்கூட்டம் குறைவதற்கும், பணம் பறிக்கும் கூட்டம் பெருகுவதற்கும், ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது!

இருப்பதில் சிறந்தவழி இதுவேயென்று, அரைமனது, கால் மனதுடன் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்ட அரசியல் கட்சிகள், கொண்டாட்ட மனநிலையில் இருப்பதற்கு, காரணம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்து விட்டன.
கேம்பஸ் இன்டர்வியூவில், இரண்டு மூன்று நிறுவனங்களின் அப்பாயின்மெண்ட் ஆர்டர் பெற்றுவிட்டு, எதில் சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மாணவர்களைப் போல், இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லிக்காய் மூட்டை போலிருந்த தமிழக பா.ஜ., கூட்டணி, இப்போது சந்தையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தே.மு.தி.க.,-ம.தி.மு.க.,-பா.ம.க., ஆகியவை நல்ல வியாபாரியை எதிர்பார்த்து நிற்கின்றன.
சந்தைக்கு இன்னும் கொஞ்சம் சரக்கு வரக்கூடும் போலிருக்கிறது. இருக்கும் சரக்குகளுக்கு, தி.மு.க., முதல் விலையைக் கூறி விட்டது. அவசரப்பட்டு விலைபோக சரக்குகள் தயாரில்லை.
தமிழக காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை பிளவுபடுகிறது. குட்டிகளை விட்டு குளத்தின் ஆழம் பார்க்கும் குரங்குகளை எதிர்கொள்ள, ஓரணியில் இருந்த வாசனும், இளங்கோவனும், நேருக்கு நேர் மோதும் சூழல்.
பாவம் இளங்கோவன்! தலைக்கு மேல் வெள்ளம்போனபிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. முந்தைய முறையைப்போல் அல்லாமல், இப்போது அவரிடம் சத்தியமூர்த்தி பவன் இருக்கிறது; காங்கிரஸ் மைதானமும் இருக்கிறது; கட்சியும் பணம் தரக்கூடும். ஆகவே, வீடுகளை விற்கும் அவசியம் அவருக்கு இம்முறை வர வாய்ப்பில்லை.
தன்னை கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யாமல் விட்ட கோபத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை, ‘கோமாளின் கூட்டம்’ என்றார், மொகிந்தர் அமர்நாத். இன்றோ, நாளையோ வாசனும் அப்படிச் சொல்லக்கூடும்.
பதவி, பணம் இழந்து, மானம் இழந்து, தந்தைக்கிருந்த மரியாதையும் இழந்து நிற்கும் வாசன், மிஞ்சியிருக்கும் தொண்டர்களையும், ஜால்ராக்களையும், கரையேற்றி விடுவாரா, கால ஓட்டத்தில், காங்கிரஸ் வெள்ளத்தில் கரைந்து விடுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும்.

திருட்டுப்புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்பவர்களுக்கு கிடைக்கும் முதல் மரியாதை இருக்கிறதே, அது நிச்சயம் ஆயுசுக்கும் மறக்காது. இன்ஸ்பெக்டரில் இருந்து, எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் முதல், ஸ்டேஷனை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் ஆயா வரைக்கும் எல்லோரும், ஏதோ சர்க்கஸ் கோமாளியைப் பார்ப்பது போல், பார்த்துப் பார்த்து கேள்வி கேட்பர்.
கடைசியில், ஒரு வெள்ளைக்காகிதத்தில் புகாருடன், மொபைல் எண், முகவரியை எழுதி வாங்கிக்கொண்டு, ‘சரி, போயிட்டு வாங்க, கிடைத்தால் சொல்லி அனுப்புகிறோம்’ என்று அனுப்பி விடுவர். அதோடு வந்து விட்டால் போதும்; திருட்டு போனதைத்தவிர, பெரிய அளவில் மன உளைச்சல் எதுவும் இருக்காது.
ஆனால், முதல் முறையாக ஸ்டேஷனுக்கு போகக்கூடிய சில விவரம் கெட்டவர்கள், ‘எப்.ஐ.ஆர்., எப்போ போடுவீங்க’ என்று, கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமல் கேட்டுத் தொலைத்து விடுவர். புகார் கொடுத்தவுடன் எப்.ஐ.ஆர்., போட வேண்டும் என்று கேட்பது, பெண்களிடம் வயதைக் கேட்பதை விடவும், ஆண்களிடம் சம்பளத்தை கேட்பதை விடவும் கொடிய குற்றம். அப்படி கேட்டவிட்ட பிறகு, அந்த போலீஸ் அதிகாரிக்கு காதிலும் மூக்கிலுமாய் கோபம் பொத்துக்கொண்டு வரும் பாருங்கள்; அதன்பிறகு இருக்கிறது, ‘ரமணா’ பாணி விசாரணை!.
பணம், நகை திருட்டுப் போனதாக சொல்பவரிடம், ‘உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க, எல்லாரையும் நல்லா விசாரிங்க’ என்று அறிவுரை கூறுவார். ‘உங்களுக்கு சிரமமா இருந்தா சொல்லுங்க, நானே வர்ரேன்’ என்பார். ‘கடைசியாக வீட்டுக்கு வந்த உறவுக்காரர் யார்’ என்றும், ‘உங்க வீட்டுக்கு அடிக்கடி வரக்கூடியவர் யார்’ என்றும் விசாரிப்பார். ‘பக்கத்து வீட்டுல நல்லா பழகக்கூடியவங்க இருக்காங்களா’ என்பார்.
இப்படி வீசப்படும் பவுன்சர்களை எல்லாம் மிகச்சரியாக எதிர்கொண்டு நிற்பவர்கள் வெகு சிலரே. பெரும்பகுதியினர், ‘அவுட்’ ஆகி, ‘சார், வீட்டுல நல்லா விசாரிச்சுட்டு வாரேன்’ என்று, தப்பியோடி விடுவர். ஓடாமல் நிற்கும் வெகுசிலருக்கு, இன்னும் ட்ரீட்மெண்ட் இருக்கிறது.
‘வீட்டுல மாமியார், அப்பா, அம்மா எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க, அவங்க எடுத்திருக்க மாட்டாங்க, எதுக்கும் ஒரு தடவை விசாரிச்சுடலாம்’ என்பார். உஷார் பேர்வழியாக இருந்தால், அந்த பவுன்சரோடு ‘அவுட்’ ஆகி விடுவார். அதன்பிறகும், சூடு சொரணை இல்லாமல் இருந்தால், அப்புறம் இருக்கவே இருக்கிறது, மெகா ட்ரீட்மெண்ட்.
வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா, எப்போதோ வந்து சென்ற மாமியார், மாமனார் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொல்வார். ‘பக்கத்து வீட்டில் விசாரிக்க வேண்டும்’ என்று, அவர்களுடைய மொபைல் எண்ணையும் கேட்டு வாங்குவர். கடைசியில், பணம், நகை போனதுடன், குடும்பத்தில் குழப்பமும் உண்டாகி விடும். அக்கம் பக்கத்து வீடுகளிலும், போலீஸ் விசாரணை நடந்து, சண்டை பெருத்து விடும். எல்லாவற்றுக்கும் காரணம், ‘எப்.ஐ.ஆர்., ஏன் போடவில்லை’ என்று கேட்டதாகத்தான் இருக்கும்.
ஆக, போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை, எப்.ஐ.ஆர்., என்பது, எப்படியும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்டவார்த்தை. அவர்களது அகராதியில், எப்.ஐ.ஆர்., என்பது, திருடனும் சிக்கி, திருட்டுப் பொருளும் மீட்கப்பட்டபிறகு போடப்பட வேண்டியது. திருட்டு நடந்த அன்றே எப்.ஐ.ஆர்., போடப்பட்டால், பாதிக்கப்பட்டவர், ஆளும் கட்சிக்காரராகவோ அல்லது அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவராகவோ, அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு மிகுந்தவராகவோ இருந்து தொலைத்திருப்பார் என்பதை அறிக!
அப்படி போடப்படும் எப்.ஐ.ஆர்.,களில் இருப்பதெல்லாம் முழு உண்மை என்று நம்பியிருந்தால், நம்மைப்போல் முட்டாள்கள் யாருமில்லை என்றே அர்த்தம். திருட்டு சம்பவம் நடக்கும்போது, பத்தாயிரம் ரூபாய் மதிப்பு மோட்டர் சைக்கிள் திருடு போனதாக வழக்கு பதியும் போலீசார், அதே மோட்டர் சைக்கிளை கண்டுபிடிக்கும்போது மட்டும் 40 ஆயிரம் மதிப்பு மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டதாக, கணக்கு காட்டுவர். இது ஒரு வகை தில்லாலங்கடி மோசடி!
பணம் பத்து லட்சம் திருட்டு போய் விட்டதாக ஒருவர் புகார் கொடுத்தால், போலீஸ் அதிகாரி கேட்கும் முதல் கேள்வியே, ‘அந்தப் பணத்துக்கு கணக்கு இருக்கிறதா, வரி கட்டியிருக்கிறீர்களா’ என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரு பவுன்சர் போதும்; ஆள் அவுட் ஆகி விடுவார். ‘வேணும்னா கொஞ்சம் கொறைச்சுப் போட்டுக்கலாம்’ என்பார், புகார்தாரர். பார்ட்டி மடங்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போலீஸ் அதிகாரி, ‘சார், எதுக்கு வீண் பிரச்னை, திருடனை புடிச்சுட்டு அப்புறம் போட்டுக்கலாம்’ என்று, அனுப்பி விடுவர். அப்புறம், திருடன் சிக்கினாலும், பாதிக்கப்பட்டவருக்கு பணம் முழுதாகக் கிடைக்காது என்பது தனிக்கதை.

நகராட்சி ஆணையர் ஒருவர் இருந்தார். ‘தடாலடிப் பேர்வழி’ என்று பெயரெடுத்தவர். அவருக்கு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஏதோ கொஞ்சம் பிரச்னை. வாரிய அதிகாரி, ஆணையரிடம் வார்த்தைக்கு வார்த்தை பேசிவிட்டார். அது ஏற்படுத்திய அஜீரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத ஆணையர், ‘வாட்டர் போர்டுக்காரனுக்கு ஒரு ஆப்பு வெச்சாகணும்’ என்று, சில நாட்களாகவே கருவிக் கொண்டிருந்தார்.
அவருக்கென்றே வந்தது ஒரு விவகாரம். குறிப்பிட்ட அந்த நகராட்சி சார்பில் குடிநீர் திட்டம் ஒன்றை, குடிநீர் வாரியம் செயல்படுத்தியிருந்தது. அதற்காக நகரின் மத்தியில் மேல்நிலைத் தொட்டி ஒன்றைக் கட்டியிருந்தனர். அந்த தொட்டியின் கீழ்ப்பகுதியில், சிறிய ஒற்றை அறை கட்டி, அதில் அலுவலகமும் அமைத்திருந்தது குடிநீர் வாரியம்.
திட்டம் நிறைவேறிவிட்டால், அந்த அலுவலகத்தை வாரியம் காலி செய்து விட வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், திட்டம் செயல்படுத்திய பிறகும், அலுவலகத்தை வாரிய அதிகாரிகள் காலி செய்யவில்லை. நகரின் மத்தியில் அப்படியொரு இடத்தில், அலுவலகம் கிடைப்பதென்றால் சிரமம் என்பதே அதற்கு முக்கிய காரணம்.
முந்தைய ஆணையாளர்கள் எல்லாம், ‘குடிநீர் வாரியமும் அரசுத்துறை தானே’ என்று, பெரும்போக்காக இருந்து விட்டனர். ஆனால் தடாலடி ஆணையரோ, லட்டுபோல் வாய்த்த விவகாரத்தை விடுவாரா? ‘உடனடியாக அலுவலகத்தை காலி செய்தாக வேண்டும்’ என்று, குடிநீர் வாரிய அதிகாரிக்கு சொல்லி அனுப்பினார்; நேரிலும்கூட சொன்னார்; ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று, நோட்டீசும் அனுப்பி வைத்தார்.
ஆனால், சொரணை கெட்ட குடிநீர் வாரிய அதிகாரியோ, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தன்னுடைய ராஜ முயற்சிகள் வீணாய்ப்போன ஆத்திரத்தில், பிரம்மாஸ்திரம் ஒன்றை பயன்படுத்தினார் ஆணையர். நகராட்சியில் சேகரமாகும் குப்பையை லாரிகளில் கொண்டுபோய், குடிநீர் வாரிய அலுவலகம் முன் கொட்டி, அலுவலக கதவை திறக்க விடாமல் அடைப்பதே அந்த பிரம்மாஸ்திரம்.
ஆணையரின் அதிரடி உத்தரவு, அவசர அவசியம் கருதி, அடுத்த அரை மணி நேரத்திலேயே அமல்செய்யப்பட்டது. ‘என் எடத்துல நான் குப்பை கொட்டறேன். யாரு கேக்க முடியும்’ என்பது ஆணையரின் வாதம். இந்த திடீர் தாக்குதலையும், துர்நாற்றத்தையும் தாங்கிக்கொள்வதற்கு சக்தியில்லாத குடிநீர் வாரிய அதிகாரி, கத்தினார்; கதறினார்; கூப்பாடு போட்டார். உடன் இருந்த ஊழியர்கள் கூட, அலுவலகம் பக்கம் வர மறுத்தனர். எவ்வளவு நேரம் மூக்கைப் பொத்திக் கொண்டு நின்றிருப்பது?
வாரிய தலைவரிடம் பேசினார்; துறை செயலரிடம் புலம்பினார்; தலைமைப் பொறியாளரிடம்கூட பேசினார். அந்தோ பரிதாபம்…அவரைக் காப்பாற்றுவார் யாருமில்லை. கடைசியில், கலெக்டரிடம்கூட கெஞ்சிப்பார்த்து விட்டார். ஆணையரின் தைரியத்தை அறிந்திருந்த எல்லோரும், ‘அந்தாள்கிட்ட எதுக்கு வீண் வம்பு, ஆபீசை காலி பண்ணிடுங்க’ என்று அறிவுரைதான் கூறினர். வேறு வழியில்லை. அலுவலகத்தை காலி செய்வதாக ஒப்புக்கொண்டார், குடிநீர் வாரியம்.
விஷயம் அறிந்த நானும், இன்னொரு நிருபரும், நகராட்சி ஆணையரை பார்க்கப் போனோம். செய்தி சேகரிக்கத்தான். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக இருந்தார் ஆணையர்.
சக நிருபர், கொஞ்சம் குறும்புக்காரர். ஆணையரை கொம்பு சீவி விட்டார்.
‘‘சார், கலக்கிட்டிங்க. ஏக்சன்னா இதுதான்சார் ஏக்சன். டவுனே அரண்டு போய்டுச்சு’’
‘‘அப்பிடியா, என்ன பேசிக்குறாங்க, டவுனுக்குள்ள?’’
‘‘சார், வாட்டர் போர்டுக்காரனுக்கு நல்ல வேணும்னு அஞ்சாவது வார்டு கவுன்சிலர் கூட சொன்னாங்க’’
‘‘பின்ன என்னங்க, ஆபீசைக்காலி பண்ணுடான்னா பண்ண வேண்டியது தானே? அங்கயும், இங்கயும் போன் பண்றான். டைம் வேணுங்குறான். கலெக்டர்கிட்ட பேசுவேங்குறான்’’
‘சார், அது என்ன பிரச்னை, வெவரமாச்சொல்லுங்களேன்’’
‘‘சார், எடம் என்னுது, கட்டடம் என்னுது, அதைக் கட்டுன துட்டும் என்னுது, காலி பண்ணுனா பண்ண வேண்டியதுதானே? ஏன் மாட்டேங்குறான்?’’
‘‘என்ன சார் நடந்துச்சு? மொதல்ல இருந்து சொல்லுங்க’’
‘‘சார், முனிசிபாலிட்டிக்கு ஒரு வாட்டர் ஸ்கீம் போட்டோம். அதை இம்ப்ளிமெண்ட் பண்றது வாட்டர் போர்டு. இதுக்காக வோர்ல்டு பேங்க்குல கடன் வாங்குறோம். கடன் வாங்குறது நானு, வட்டி கட்டறது நானு, கடன திருப்பிக் கட்டறதும் நானு. பணத்தைக் கொடுத்து, வாட்டர் ஸ்கீம் போடச்சொன்னா, அவன் என்ன பண்றான்? ஜீப் வாங்குறான். எதுக்கு ஜீப்பு. பஸ்சுல ஏறிப்போய், ஸ்கீம் போடமாட்டானா?
‘‘அந்த பணத்துலதான் தண்ணீத்தொட்டி கட்டுறான், கொழாய் போடறான், கட்டடமும் கட்டறான். கடேசில, கொழாய் உன்னுது, தண்ணி உன்னுது, தொட்டி உன்னுது, அடில இருக்குற கட்டடம் மட்டும் என்னுதுங்குறான். அதான் செவுள்ல விட்டாமாரி, விட்டம்பாருங்க ரெண்டு. ஆளு, துண்டக்காணோம், துணியக்காணோம்னு ஓடியே போய்ட்டான். நீ எங்க வேணும்னாலும் சொல்லு. இந்த முனிசிபால்ட்டிக்கு நான்தான் ராஜா’’
‘‘சார், அசத்திட்டிங்க சார். இப்படி நாலு கமிஷனர் இருந்தா, அட்மினிஸ்ட்ரேஷன்லாம் ஒழுங்கா நடக்கும்சார். இந்த பிரச்னை சம்பந்தமா, அவங்க டிப்பார்ட்மெண்ட்ல இருந்தோ, கலெக்டரோ யாரும் பேசலீங்ளா சார்’’
‘‘எவனாச்சும் எங்கிட்ட பேச முடியுமா சார்? சட்டப்படி நான் செஞ்சது எல்லாம் ரைட்டு சார், எங்கிட்ட எப்புடி பேச முடியும்?’’
அவ்வளவுதான். பேட்டி முடிந்தது. நானும், அந்த இன்னொரு நிருபரும் கிளம்பி விட்டோம்.
அந்த பாவப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரியைப் பார்த்தோம்.
‘‘சார், மனுசனா சார் அவன்? குப்பையைக் கொண்டாந்து ஆபீஸ் முன்னால கொட்டி, தெறக்க உடாம செஞ்சுட்டான்சார். அவன்லாம் நல்லாருப்பானா சார்,’’ என்றார் அவர்.
இரு அரசுத்துறையினருக்குள் நிலவிய இணக்கமற்ற சூழல் பற்றியும், அதனால் ஏற்பட்ட மோதல் பற்றியும், மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், எதுவும் நடந்து விடவில்லை. குடிநீர் வாரிய ஊழியர்கள், நாற்றத்தை சகித்துக் கொண்டு, அலுவலக சாமான்களை புதிய அலுவலகத்துக்கு தூக்கிச்சென்றனர்.
இப்படி பல வீர விளையாட்டுகளை விளையாடிய அந்த ஆணையர், வேறு நகராட்சிக்கு பணி மாறுதலில் சென்றபோது, ஏதோ விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி விட்டார். அவர் சஸ்பெண்ட் ஆன செய்தி, தமிழகம் முழுவதும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகியது. நிச்சயம் அந்த குடிநீர் வாரிய அதிகாரியும், அதைப் படித்திருப்பார். என்ன நினைத்திருப்பாரோ?

ஒரு நாள் காலை வேளையில், அலுவலகத்தில் இருந்தபோது, நண்பர் ஒருவர் தேடி வந்தார்.
‘‘சார், உங்களப் பாத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு வந்தேன்,’’ என்று ஆரம்பித்தார்.
நண்பர் வசதியானவர். சொந்த வீடு, வணிக வளாகம், கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறது. வயது 25க்குள் தான் இருக்கும்; திருமணம் ஆகாதவர்.
‘‘சொல்லுங்க, வீட்டுல ஏதாவது விஷேசமா?’’
‘‘ஆமாங்க, விஷேசம்தான்’’
‘‘அப்படியா, மகிழ்ச்சி’’ என்றேன்.
நண்பரே ஆரம்பித்தார்.
‘‘சார், வெளிநாடு போலாம்னு இருக்கேன்’’
நான் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. காரணம் இருக்கிறது. நண்பருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்து, அதன்பின் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டவர். தொழிற்கல்வி எதுவும் கற்கவில்லை. வியாபாரிகள், அன்றாட சம்பளம் பெறுபவர்களிடம் நாள் வட்டிக்கு விட்டிருந்தார். அதன் மூலம் அவருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் கிடைத்தது.
இதையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால், அவர் திடீரென வெளிநாடு போவதாக கூறியதும், எனக்கு உண்மையிலேயே பேரதிர்ச்சியாக இருந்தது.
‘‘அப்படியா, சந்தோஷம் சந்தோஷம். எந்த நாட்டுக்கு போறீங்க’’
‘‘லண்டன் போகப்போறேங் சார்’’
‘‘வெரிகுட், வெரிகுட், எப்படி யாராவது தெரிஞ்சவங்க மூலமா போறீங்ளா’’
‘‘இல்லிங் சார், எல்லாம் புரோக்கர் மூலமாத்தான் ஏற்பாடு நடக்குது. மொத்தமா ஒரு அமவுண்ட் குடுத்தாப்போதும், பாஸ்போர்ட், விசா எல்லாம் அவுங்களே எடுத்துக் குடுத்துருவாங் சார்’’
‘‘அப்படியா, நல்லா விசாரிச்சு, அப்புறமா பணம் கொடுங்க’’
‘‘ஆமாங் சார், எல்லாம் நல்ல விசாரிச்சுட்டுத்தான் ஏற்பாடு செய்றேங்’’
‘‘பரவால்லிங்க, லண்டன்ல என்ன மாதிரியான ஒர்க் பண்ணப்போறீங்க’’
‘‘எந்த வேலைன்னாலும் பரவால்லிங் சார். அங்கபோய் டிச்சு வழிக்கச்சொன்னாக்கூட செய்வேங்க, நமக்குத்தேவை பணம், அவ்வளவுதாங் சார்,’’
சிரித்தார் நண்பர்.
‘‘அப்படியில்லிங்க, ஏதாவது டெக்னிக்கலா செய்யக்கூடிய வேலைன்னா சம்பளம் நெறயக்கெடைக்கும். நான்&டெக்னிக்கல், வீட்டு வேலைன்னா, சம்பளம் பெரிசா கிடைக்காது, விசா வாங்குறதுல கூட பிரச்னை வரும்பாங்களே’’
‘‘அதெல்லாம் சட்டப்படி போறவனுக்குத்தாங் சார். நாமதான் அப்புடி போகப்போறதில்ல¬யே’’
கேட்டதும், எனக்கு இன்னும் அதிர்ச்சி.
‘‘சட்டப்படி இல்லைன்னா, என்ன செய்யப்போறிங்க’’
‘‘அதெல்லாம் புரோக்கர் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங் சார். கையில பணத்தோட ஏர்போர்ட்டுக்கு போய்ட்டாப் போதுங், லண்டனுக்கு கொண்டுபோய் சேக்குறது அவுங்க பொறுப்புன்னு சொல்லிருக்குறாங், சார்’’
‘‘இல்லிங்க, வெளிநாட்டுல வேலைவாங்கித்தர்றதுல நெறயப்பேரு ஏமாத்துறாங்க. அதுனால நீங்க என்ன முயற்சி செஞ்சாலும், ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சு, யாராச்சும் தெரிஞ்சவங்ககிட்ட ஐடியா கேட்டு செய்யுங்க’’
‘‘அதெல்லாம் யோசிச்சுத்தாங் சார் செய்றேன்’’
‘‘சரிங்க. லண்டன்ல யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்ளா’’
‘‘அங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லிங் சார், ஆனா நம்மூர்க்காரங்க நெறய இருக்குறதா சொல்றாங்க, அவுங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டா, அங்க போய் பாத்து அறிமுகம் ஆயிடலாமே’’
‘‘சரி, வேலைக்கு எப்படி ஏற்பாடு செய்வீங்க’’
‘‘அதெல்லாம் அங்க போய் நாமளா தேடிக்க வேண்டியதுதாங் சார்’’
‘‘நீங்க அதிகமாக ரிஸ்க் எடுக்குறமாதிரி தெரியுதுங்ளே, ஏதாச்சும் காரணம் இருக்குதா’’
‘‘இருக்குதுங் சார், எங்க வீட்டுல எங்க அண்ணன் பி.இ., படிச்சுருக்கான், எந்தம்பி பி.இ., படிக்கிறான். அவங்களுக்கு பணமும் இருக்கு, படிப்பும் இருக்கு. எங்கிட்ட படிப்பில்லை; பணம் மட்டும்தான் இருக்கு. அதனால ஏதாவது ஒரு வகையிலாவது அவீக ரெண்டு பேரைவிட அதிகமா சம்பாதிக்கணும். இன்னைக்கு ஊருக்குள்ள பணம் இருந்தாத்தாங்க மதிப்பு. லண்டன்லபோய், நாம என்ன வேலை செஞ்சாலும், அது இங்க யாருக்கும் தெரியப்போறதில்லை. நாம லண்டன்ல இருக்கோம்னுதான் மட்டும்தான் சொல்வாங்க. நமக்கு அதுதாங் சார் முக்கியம்’’
‘‘சரிங்க நீங்க முயற்சி எடுக்குறீங்க, மகிழ்ச்சி. ஆனா, லண்டன் போறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லங்க, யாராச்சும் புரோக்கர்கிட்ட மாட்டி ஏமாந்துறாதீங்க. எல்லாவிதமான முன்னெச்சரிக்கையும் பண்ணீட்டு அப்புறமா கௌம்பிப்போங்க. உங்க அப்பா, அம்மா படிக்காதவங்க, அவங்கள சிரமப்படுத்துற மாதிரி ஏதாச்சும் பண்ணீறாதீங்க’’
‘‘அதெல்லாம் பண்ண மாட்டேங் சார். அடுத்த வாரம் பிளைட்டுங்க. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேங் சார்’’
‘‘ஓகேங்க. மகிழ்ச்சி. லண்டன் போய்ட்டு போன் பண்ணுங்க’’
‘‘சரிங்சார், நான் வரேங் சார்’’
நண்பர் புறப்பட்டு விட்டார்.
அலுவலக நண்பர்கள் சிரித்தனர். எனக்கு முன்பே அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது.
படிப்பறிவு இல்லாதவர்கள், வேலைக்காக பிரிட்டன் செல்வதற்கு விசா கிடைக்காது. சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் புரோக்கர் மூலம் நண்பர் முயற்சிப்பது புரிந்தது. அதுவும், பாரீஸ் சென்று, அங்கிருந்து சரக்கு ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிகளில் பதுங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று புரோக்கர் சொல்லியிருக்கிறார். அதற்கெல்லாம் நண்பர் தலையாட்டி விட்டார்.
இடையில் போலீசில் பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டும். அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். ஜாமினில் எடுப்பதாக புரோக்கர் சொன்னாராம்.
அகதிகள் மீது ஐரோப்பிய நாடுகள் காட்டும் இரக்கத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் சட்ட விரோத கும்பல்கள்தான், இத்தகைய ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி கண் முன்னாலேயே அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நண்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர், இதேபோல் சட்டவிரோதமாக லண்டனுக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தில், அவரது மனைவி இங்கே ‘டாம்டூம்’ என செலவு செய்வதைப் பார்த்ததும்தான், நண்பருக்கு ஆசை வந்திருக்கிறது. ‘லண்டனில் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை குப்பையை கொட்டுவது போல பணத்தை கொட்டி வைத்திருக்கின்றனர், அள்ளிச் செல்வதற்கு ஆளில்லை போலிருக்கிறது’ என்று நினைத்து விட்டாரோ என்னவோ?
நண்பரின் அம்மா, அப்பாவை பார்த்தேன். மகன் வெளிநாடு போவதில் அவர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. ஊரார், உறவுகளை எல்லாம் அழைத்து, கிடாய் வெட்டி விருந்து வைத்து, மகன் வெளிநாடு செல்வதை கொண்டாடினர். விருந்து முடிந்த இரு நாட்களில், விமானப்பயணம். உறவுக்காரர்கள் பத்துப்பேருக்கு மேல் சென்று, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வந்தனர்.
அதன்பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.
ஓரிரு மாதங்கள் கழிந்திருக்கும். ஆபீசில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது.
‘‘சார், அந்தண்ணா லண்டன் போனாங்கில்லியா, அதுல ஏதோ பிரச்னை போல சார், அவங்க அப்பா, அம்மா எல்லாம் எப்பப்பாத்தாலும் ஒரே அழுகாச்சு,’’ என்றான், ஆபீஸ் பையன்.
கேட்பதற்கே சங்கடமாக இருந்தது.
அவர்களது வீட்டுக்குப் போனேன். எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
‘‘பையன் அங்கபோய், சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கானாங் கண்ணு,’’ என்று கதறி அழுதார், நண்பரின் அப்பா.
நண்பர் கொண்டு போன பணத்தை, புரோக்கர்கள் அச்சுறுத்தி பறித்துக்கொண்டு விட்டனர். பாரீசில் இருந்து, லண்டனுக்கு போக முடியவில்லை. திருச்சியில் இருந்து கொழும்பு, கொழும்புவில் இருந்து பாங்காக், அங்கே ஒரு மாதம் முகாம், அங்கிருந்து பாரீஸ் வரைதான் போக முடிந்திருக்கிறது. அதற்குள் பணம் தீர்ந்து விட்டது.
‘மேலும் பணம் கொடுத்தால் லண்டன் போக முடியும்’ என்று புரோக்கர் சொல்லி விட்டார். யாரோ ஆட்களைப் பிடித்து, புரோக்கர் வங்கிக்கணக்கில் பணம் போட்டார்கள். அப்படியும் லண்டன் போக முடியவில்லை. மூன்று மாதங்கள் கடந்து விட்டன. புரோக்கர்களுக்கு கொடுத்தது, விமானப்பயணம், சாப்பாட்டுச் செலவு என ஆறு லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழித்து விட்டார்கள். லண்டன் கண்ணுக்குத் தெரிந்தபாடில்லை.
இதற்குள், யார் என்ன சொன்னார்களோ, நண்பருக்கு பயம் தட்டி விட்டது. ‘நான் இந்தியாவுக்கே போய் விடுகிறேன், என் பாஸ்போர்ட்டை கொடுங்கள்’ என்று புரோக்கர்களிடம் கேட்டிருக்கிறார். ‘அதற்கு இன்னும் பணம் வேண்டும்’ என்று புரோக்கர்கள் கேட்டு தகராறு செய்திருக்கின்றனர். கடைசியில், வேறு வழியில்லாமல், அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து, மீண்டும் சொந்த ஊருக்கு வந்து விட்டார் நண்பர்.
என்னை சந்திக்க வெட்கப்பட்டுக் கொண்டு, சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார்.
வழியில் ஒருநாள் தென்பட்டபோது, கண்களில் கொஞ்சம் கண்ணீரும், நெறைய வருத்தமும் தென்பட்டன.
‘‘நீங்க மட்டுமில்லிங் சார், நெறயப்பேரு எவ்வளோ சொல்லியும் கேட்காம வெளிநாடுபோய், பணம் லட்சக்கணக்குல போனதுதான் மிச்சங் சார். உசுரோட வந்தாப்போதும்னு ஆயிடுச்சுங். உங்கள மாதிரி படிச்சவங்க எப்படியோ தப்பிச்சுக்குறாங் சார். என்னை மாதிரி படிக்காதவன்னா எல்லாரும் நல்லா ஏமாத்தறாங் சார். இனிமே ஆயுசுக்கும் ஒத்தப் பைசா கூட ஏமாற மாட்டேங் சார்,’’ என்றார்.
‘ஜெயிலுக்குப் போகாமல் தப்பி வந்தது பெரும்பாடு’ என்பதுபோல் பேசினார் நண்பர்.
அனுபவம், மிகக்கடினமான பாடங்களையும் எளிமையாகப் புரிய வைத்து விடுவதை அன்று அவரிடம் கண்டுகொண்டேன்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்த, கட்சிக்காரர்களும், சங்கத்தினரும் கடைப்பிடிக்கும் ஜனநாயக வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் எல்லாம் பார்த்திருப்பீர்கள். தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது.
நின்று கொண்டே கோஷம் போட்டால் ஆர்ப்பாட்டம், உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டால் தர்ணா, அதையே குறிப்பிட்ட நேரத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை செய்தால் உண்ணாவிரதம். இப்படித்தான், மக்கள் மட்டுமல்ல; அரசியல் கட்சியினரும் புரிந்து வைத்திருக்கின்றனர்.
அப்படியெனில் உண்ணாவிரதம் என்பது கோஷம் போடுவது மட்டும்தானா? சாப்பிடாமல் இருப்பதில்லையா என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக கேட்டு விட வேண்டாம். இந்தக்காலத்தில், எந்த மடையர்கள், சாப்பிடாமல் வந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்?
இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வாரா வாரம் உண்ணாவிரத போராட்டங்கள் நடக்கின்றன. காலை 9 மணி முதல் பத்து மணிக்குள் தொடங்கி மாலை 5.30 முதல் 6 மணிக்குள் முடிக்கப்படுகின்றன. காலை வரும்போதே வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றனர், இரவும் வீட்டுக்குப் போய் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவர். இடையே நான்கைந்து முறை ஸ்னாக்ஸ், டீ என்று விழுங்கி வயிற்றை நிரப்பி விடுவர். இதற்குப் பெயர்தான் உண்ணாவிரதமா?
இதையெல்லாம் உண்ணாவிரதம் என்றே அறிவித்துக் கொள்வதே தவறு. உண்ணாவிரதம் என்பது எப்படி இருக்க வேண்டும்? குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கழிவறை தவிர வேறெங்கும் செல்ல முடியாதபடி கண்காணிப்பு இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் வேண்டுமானால் குடிக்க அனுமதிக்கலாம். எக்காரணம் கொண்டும், கார் போன்ற வாகனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.
இப்படிப்பட்ட நிபந்தனைகளை செயல்படுத்தினால் மட்டுமே அது உண்ணாவிரதம். இல்லையெனில் அது, வெறும் தர்ணா போராட்டம், சும்மா உட்கார்ந்து கோஷம் போட்டு எழுந்து செல்லுதல் என்றே அறிவிக்கப்பட வேண்டும். எது எதற்கோ, பொது நல வழக்கு தொடரும் ஆர்வலர்கள், இதற்கு ஒரு வழக்கு தொடர்ந்தால், இம்சைக்கு ஏதாவது முடிவு வந்தாலும் வரும்.

தீபாவளி நெருங்கி விட்டது. வீட்டுக்குழந்தைகள் அனைவருக்கும் பட்டாசு ஞாபகமாகவே இருக்கும். ‘எங்க வீட்டில் 5 ஆயிரத்துக்கு பட்டாசு’ என்றொருவன் சொன்னால், அவனை விட அதிக தொகைக்கு நாம் வாங்கி விட வேண்டும் என்று, அப்பாவிடம் அடம் பிடிப்பான் மற்றொருவன். ‘அவங்க வீட்டில் 20 ராக்கெட் வாங்கிட்டாங்க, நாம 25 ராக்கெட்டாவது வாங்கியாக வேண்டும்’ என்று வாண்டு, அழுது கொண்டிருக்கும். சில வீட்டுப் பெரியவர்கள், ‘கேட்குறத வாங்கிக்குடுப்பா’ என்பர். அங்கே இருக்கும் வீட்டம்மா, முடியாது என்று பிரேக் போடுவார்.
சில வீட்டில் மனைவியர், ‘பட்டாசு நிறைய வாங்கலாம்’ என வேண்டுதல் வைத்தால், ‘காசைக் கரியாக்க வேண்டாம்’ என்று பெரியவர்கள் குறுக்கே நிற்பர். இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், குடும்பத்தலைவர் பட்டாசு வாங்கப் போனால், விலைப்பட்டியலே மயக்கம் தருவதாக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலைப் பட்டியல், ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போவதைப் பார்த்தால், மாதச்சம்பளம் வாங்குவோர் எல்லாம் என்னதான் செய்வார்களோ தெரியவில்லை, பாவம்.
பட்டாசு விலை உயர்வுக்கான காரணங்களில் முக்கியமானது லஞ்சம். பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தில் நடக்கும் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு தரப்படும் லஞ்சம் என நீங்கள் நினைத்தால், அது மிக மிகத்தவறு.
விற்பனையாகும் இடத்தில் தரப்படும் லஞ்சம் இருக்கிறதே, அது உற்பத்தியாகும் இடத்தில் தரப்படும் லஞ்சத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம். சந்தேகம் இருந்தால், யாராவது பட்டாசுக் கடை நடத்தியவரை கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு பட்டாசுக் கடை வைக்க வேண்டுமெனில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம், அதாங்க லைசென்ஸ் பெற வேண்டும். ‘கலெக்டர் ஆபீசில் இருக்கும் டி.ஆர்.ஓ.,விடம் லைசென்ஸ் வாங்கணும், அவ்வளவுதானே’ என்கிறீர்களா, அது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல.
போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 முக்கிய துறைகளில் இருந்தும் அனுமதி பெற வேண்டும். இது தவிர, நீங்கள் கடை வைக்கப்போகும் இடம் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியிடம் இருந்து, உதாரணத்துக்கு மாநகராட்சி, நகராட்சியாக இருந்தால் கமிஷனர், டவுன் பஞ்சாயத்தாக இருந்தால் செயல் அலுவலர் ஆகியோரிடம் இருந்து, ஆட்சேபம் இல்லா சான்று பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சென்றால், டி.ஆர்.ஓ.,வின் கீழ் செயல்படும் ஒரு அலுவலர், லைசென்ஸ் கொடுத்து விடுவார்.
இவ்வளவுதாங்க, இதை வாங்கி விட்டால், கடை வைத்து விடலாம். வாங்கியவர்களை கேட்டுப் பாருங்கள், இது, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிய தீவுக்குள் சிறைபட்ட இளவரசியை மீட்டு வரும் அம்புலிமாமா கதைகளைவிட, சுவாரசியமானதாக இருக்கும்.
இந்த ஒவ்வொரு துறைக்கும் குறைந்தது ஏழெட்டு முறை சென்று வர வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மட்டுமல்ல, அவரது டிரைவர், உதவியாளர் வரை லஞ்சம் தர வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி, சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு வந்தவுடனேயே, அதாவது கடை திறப்பதற்கு முன்பாகவே, பண்டல் பண்டலாக, பட்டாசு கிப்ட் பாக்ஸ் தண்டம் அழ வேண்டியிருக்கும்.
இந்த நடைமுறைகளை எல்லாம், லஞ்சம் தராமல், கிப்ட் பாக்ஸ் அழாமல், கடந்து வர வேண்டும் என்று யாரேனும் மடையர்கள் நினைத்தால், குறைந்தது 3 மாதம், காலை முதல் மாலை இதே வேலையாக அலைந்து கொண்டிருக்கத் தயாராக இருந்தால் போதும். ‘அப்படி அலைந்தால், லைசென்ஸ் கிடைத்து விடும் அல்லவா’ என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
‘சரி, லைசென்ஸ் வாங்குவதற்கு வேறு வழியே இல்லையா’ என்பது தானே சந்தேகம்? வழி இருக்கிறது. இதற்கென ஊருக்கு ஊர் அரசு அங்கீகாரம் பெற்ற லஞ்ச புரோக்கர்கள் இருக்கின்றனர். அவர்களை அணுகினால், ஆடாமல், அசையாமல், அலைச்சல் இல்லாமல், இருந்த இடத்திலேயே லைசென்ஸ் வாங்கி விட முடியும். அதற்கு அவர்கள் சொல்லும் சேவைக்கட்டணம், ரஜினியின் சிவாஜி படத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். பல பேர், அதைக் கேட்டவுடனேயே பட்டாசு வியாபாரம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு விடுவர்.
‘ஏதோ, சீசன் வியாபாரம், கொஞ்சம் காசு பார்க்கலாம்’ என்று பட்டாசு விற்க நினைத்து, சிவகாசியில் போய் பட்டாசு வாங்கி வந்து விட்டு, லைசென்ஸ்க்கு மனு கொடுத்த அப்பாவிகள் இருக்கிறார்களே, அவர்கள் படும் அவதியும், பாடும் புலம்பலையும் கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை, லைசென்ஸ் கையில் கிடைக்காது. லஞ்சமும், கிப்ட் பாக்சும் பறிப்பதற்கான எளிய வழிமுறை, லைசென்ஸ் தராமல் இழுத்தடிப்பதுதானே!
லஞ்சம் கை மாறாமல், கடை திறக்கும் தைரியம் யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, புரோக்கர்களுடையது. ‘சார், லைசென்ஸ் கையில வாங்காம கடை போட்டீங்க, அப்புறம் பிரச்னைதான், மொத்த பட்டாசையும் போலீஸ் வந்து அள்ளிட்டுப் போயிடுவாங்க’ என்று புரோக்கர்கள் அச்சுறுத்துவர். பெரும்பாலான அரசுத்துறை ஊழியர்களும், இதே டயலாக்கை, ஏற்ற இறக்கத்துடன் பேசி வைப்பர்.
‘லஞ்சம் கொடுத்தவர்களுக்கு லைசென்ஸ் முன்னதாகவே கிடைத்து விடுமா’ என்றெல்லாம் கேட்டு விடவேண்டாம். கிடைக்காது, தரப்படாது. காரணத்தில்தான் இருக்கிறது, அரசு ஊழியர்களின் புத்திசாலித்தனம். ஏதாவது வெடி விபத்து நேரிட்டால், லைசென்ஸ் கொடுத்த அதிகாரிகளுக்கு பிரச்னை வந்து விடுமே? அப்படி நேரிட்டால், லைசென்ஸ் தரவில்லை என்று சமாளித்து விடலாம் அல்லவா?
அதாவது, தீபாவளிக்கு முதல் நாள் மதியத்துக்கு மேல்தான், லைசென்ஸ் வழங்கும் வேலை நடக்கும். பெரும்பாலானவர்களுக்கு முதல்நாள் இரவு, பட்டாசு விற்பனை முடிந்தநிலையில்தான் லைசென்ஸ் கிடைக்கும். டி.ஆர்.ஓ., ஆபீசில் வேலை பார்க்கும் அலுவலர் ஒருவர், ‘முக்கியமான பேப்பர்’ எல்லாம் வாங்கிக் கொண்டு, ‘பிழைத்துப் போகட்டும்’ என்று பெருந்தன்மையாக லைசென்ஸ் கொடுப்பார்.
லஞ்சத்தை முன்னதாகவே கொடுத்தவர்கள், லைசென்ஸ் கையில் கிடைக்காதபோதே, தைரியமாக கடை துவக்கி விடுவர். பட்டாசுக் கடை நடத்த ஆயிரத்து எட்டு விதிமுறைகள் இருக்கின்றன. அவை பற்றி எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. காரணம், சம்பந்தப்பட்ட புரோக்கர், அனைத்து அரசு துறையினர் வசமும், பெயர், விவரம் சொல்லியிருப்பார்.
லஞ்சம் தராத, நெளிவு சுளிவுகளை அறியாத ஓரிரு ஏமாளிகள் இருக்கிறார்களே, அவர்களுக்குத்தான் இந்த விதிமுறைகள் எல்லாம். அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
‘யாருக்குமே லைசென்ஸ் தரவில்லை, எப்படி அவன் மட்டும் கடை போடுகிறான்’ என்று போவோர், வருவோரிடம் எல்லாம் வெட்டி விசாரணை செய்வர். ‘சரி நாமும் கடை போடலாம்’ என்று போட்டால், போலீஸ் வந்து பட்டாசை அள்ளிச்சென்று விடும். அப்புறம், ஆயுசுக்கும் பட்டாசுக்கடை நடத்தும் எண்ணமே அவர்களுக்கு வராது.
தற்போதைய நிலையில், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பட்டாசின் விலையிலும், குறைந்தது 25 சதவீதம் வரை லஞ்சமாகவே தரப்பட்டிருக்கும். ஆகவே, சிவகாசிக்காரர்கள் விலையை தாறுமாறாக ஏற்றி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால், அது உண்மையல்ல; பொய்யின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தேன். தோட்டத்துடன் அமைந்திருக்கிறது, அவர்கள் வீடு. நான் கடைசியாக அங்கு சென்று 30 ஆண்டுகள் இருக்கும். பள்ளிச்சிறுவனாக இருந்த காலம். அப்போது நான் பார்த்த தோட்டத்துக்கும், இப்போது இருக்கும் தோட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள்.
வளமான மண் கொண்ட, நெல் உட்பட அனைத்து பயிர்களும் விளையும் நஞ்சை நிலம் அது. ஓரடி நிலம் கூட, வீணாக்காமல், பயிர் விளைவிக்கப்பட்ட பூமி. இப்போது, தலைகீழாக மாறியிருந்தது. தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. தென்னை இல்லாத இடங்களில் எல்லாம், பார்த்தீனியம் செடிகள்.
குறிப்பிட்ட அந்த தோட்டம் தான் என்றில்லை. அக்கம் பக்கத்தில், எங்கு பார்த்தாலும், பார்த்தீனியம் செடிகளே வியாபித்திருந்தன. எல்லாம் ஒரு காலத்தில், உணவுப்பயிர் உற்பத்தியான நிலங்கள்.
‘விவசாயம் செய்வதில் பயனில்லை’ என்று முடிவு கட்டி நிலத்தை விற்றவர்கள் பாதிப்பேர். மீதிப்பேரில் பெரும்பகுதியினர், ‘உணவுப்பயிர்களை விளைவிப்பதில் பயனில்லை’ என்று தென்னைக்கு மாறி விட்டனர். கோவை மாவட்டத்தில், இப்படித்தான், விவசாயம் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.
…….
கோவை மாநகருக்கு வெளியே, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லும் சாலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது குறிச்சி குளம். 330 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பினால், சுற்றியிருக்கும் 30 சதுர கிலோமீட்டர் பரப்பில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
சிறுவனாக இருந்த காலத்தில், இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததை பார்த்திருக்கிறேன். குளத்தில் அலையடிக்கும்போது, தண்ணீர் பொள்ளாச்சி சாலை மீதேறி வந்து விடும் கண்கொள்ளாக் காட்சியை கண்டு நடுங்கியதெல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. சமீப காலங்களில் அந்தளவுக்கு குளத்தில் தண்ணீர் நிரம்பியதே இல்லை.
அதற்கான காரணங்கள் பல. குளக்கரையில் குடிசை அமைத்து வசிப்பவர்கள், தண்ணீர் நிரம்ப விடுவதில்லை. கரையை மட்டமாக்கி விட்டனர். பல்லாண்டுகளாக சேர்ந்த மண் காரணமாக, குளத்தில் பல இடங்கள் மேடாக காட்சியளிக்கின்றன. கொஞ்சநஞ்சம் இருக்கும் தண்ணீரையும், ஆகாயத்தாமரைகள் கபளீகரம் செய்கின்றன.
குளத்தின் பரிதாப நிலைக்கு இதுமட்டும்தான் காரணம் என்று, பலரைப்போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாகத்தான், இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது.
நொய்யல் ஆற்றின் வழியோரத்தில் இருக்கும் குளங்களால் பயன்பெறும் விவசாயிகளில் சிலர், தங்கள் பகுதி குளங்கள் முழுவதும் நிரம்பியபிறகே, மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கின்றனர். அதற்குள் மழை நின்று விடுகிறது. கடந்த மூன்றாண்டாக குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராததற்கு, இதுவே காரணம் என்று, இப்போது தான் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் இறங்கியதால், இப்போது குளத்துக்கு கொஞ்சம் தண்ணீராகவது வந்திருக்கிறது. ‘பக்கத்து ஊர் குளத்துக்கு தண்ணீர் போகக்கூடாது’ என்று நினைக்கும் நம்மவர்கள் தான், தண்ணீர் பிரச்னையில் கேரளாவையும், கர்நாடகாவையும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
……