மறுபடியும் மொதல்ல இருந்தா…!

Posted: 29/05/2015 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, , , , ,

பதினாறு ஆண்டுகால திருமண வாழ்க்கையில், எடுத்த முடிவில் பின்வாங்காமல், இறுதி வரை ஒரே நிலையில் நானிருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதை உணரும்போது, துக்கம் கொஞ்சம் தொண்டையை அடைக்கவே செய்கிறது. உறவினர், அண்டை, அயலார், அலுவலக நண்பர்கள் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும், மாமூல் வாழ்க்கையில் அப்படியொன்றும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடாதென்பதை நானறிவேன்; ஆனால், கட்டிய மனைவியின் உத்தரவை அப்படி, ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக எடுத்துக் கொள்ள முடியுமா?
அந்த உத்தரவை மீறி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’ என்பதை நீங்கள் அனைவரும் அறிந்தே இருப்பீர்கள். அத்தகைய பேரபாயத்தை சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலை, கடந்த வாரத்தில் எனக்கு ஏற்பட்டு விட்டது. அரசு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை, ‘மகளை அக்கவுண்ட்ஸ் குரூப்பில் சேர்த்து விடலாம்’ என்று பாட்டாகப் படித்துக்கொண்டிருந்த என் மனைவியார், தேர்வு முடிவைப் பார்த்தவுடன், அதுவும் 481 மதிப்பெண்கள் என்றவுடன், ‘கணிதம், உயிரியல் இருக்கும் முதல் குரூப்பில்தான் சேர்த்தாக வேண்டும்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.
உண்மையில், அதைக்கேட்டவுடன் எனக்கு பகீரென்றது. ‘கணிதம் என்றால், எட்டிக்காயாக கசக்கும் மகளை, இந்த கண்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறேனோ’ என்று பீதி தொற்றிக் கொண்டது. ஆனாலும், நமக்குள் இருக்கும் நடிகர் திலகத்தை தட்டியெழுப்பி, நடுக்கம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொண்டேன்.
‘அப்படியெல்லாம் அஞ்சி நடுங்குவதற்கு என்ன இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால், கணித டியூஷனுக்கு மகளை அழைத்துச்சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில், ஒரு மணி நேரம் கால் கடுக்க காத்திருந்ததும், எனக்குத்தானே தெரியும்?
காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு, வகுப்புத்தேர்வு, டியூஷனில் நடத்தப்படும் தேர்வு விடைத்தாள்கள் வீடு வரும்போதெல்லாம், கலவரம் தடுக்கும் பணியில் ஈடுபட்டவனுக்குத்தானே, காயத்தின் வலி தெரியும்? தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து விட்டு காத்திருப்பவன்போல், ‘திக் திக்’ மனநிலையுடன், தேர்வு விடைத்தாள்களை எதிர்கொண்டதெல்லாம் போதாதா? ‘மறுபடியும் முதலில் இருந்தா…’ என்கிற சினிமா வசனம், அந்த சில நாட்களில் மட்டும், பல நூறு முறை என் நினைவுக்கு வந்து விட்டது.
எவ்வளவோ கறாராக பேசியும், என் உறுதி குறையவில்லை என்பதாலோ என்னவோ, என் மனைவி கொஞ்சம் மனம் இரங்கி விட்டார். ஒரு வழியாக, பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பம் வாங்கி, அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டுமென்று பூர்த்தி செய்து கொடுத்தும் விட்டோம். ‘நானும் வருவேன்’ என்று விடாப்பிடியாக என்னுடன் பள்ளிக்கு வந்த மனைவி, ‘பள்ளி முதல்வரை சந்தித்துப் பேசலாம். அவர்கள் நிச்சயம் பர்ஸ்ட் குரூப்பில்தான் சேரச் சொல்வர். அப்போது பார்க்கலாம் உங்கள் ஜம்பத்தை’ என்று, என்னுடன் சவால் விட்டுக்கொண்டு இருந்தார்.
அதற்கு தகுந்தபடி, மதிப்பெண் குறைந்த மாணவிகளுக்கெல்லாம் உடனடியாக அட்மிஷன் கொடுத்த அந்தப்பள்ளி நிர்வாகம், எங்களைப் பார்த்து, ‘இன்று போய் நாளை வா’ என்று கூறி விட்டனர். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. மனைவிக்கோ, அப்படியொரு மகிழ்ச்சி. ‘நமக்கு அக்கவுண்ட்ஸ் குரூப் எல்லாம் தர மாட்டாங்க. பர்ஸ்ட் குரூப்தான். கன்வின்ஸ் பண்ணத்தான் நாளைக்கு வரச்சொல்றாங்க’ என்று கூவிக்கொண்டே வீடு வந்தார்.
நானும் பயந்துகொண்டே மறுநாள் சென்றேன். கூடவே, மனைவியும், மகளும்.
‘அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டாம், முதல் குரூப் எடுங்கள்’ என்று கூறினால், என்ன சொல்லி சமாளிப்பது என்று, ஏகப்பட்ட தயாரிப்புகளோடு சென்றேன். பள்ளி அலுவலக ஊழியரோ, ‘நேத்தே நீங்க பீஸ் கட்டியிருக்க வேண்டியது தானே, பிரின்ஸ்பல் நேத்தே அட்மிஷன் தரச் சொல்லிட்டாங்க’ என்று கூறி, வயிற்றில் பால் வார்த்தார். எனக்கும், மகளுக்கும், அப்படியொரு மகிழ்ச்சி. என் மனைவிக்குத்தான் பெரும் ஏமாற்றம். ஒரு மரியாதைக்கு கூட, ‘ஏன், அக்கவுண்ட்ஸ் செலக்ட் பண்றீங்க; பர்ஸ்ட் குரூப் எடுக்கவில்லையா’ என்று பிரின்ஸ்பல் கேட்கவில்லையாம்! ஆனாலும், இந்த உலகம் ரொம்பவும்தான் மோசம்!

பின்னூட்டங்கள்
 1. yarlpavanan சொல்கிறார்:

  அக்கவுண்ட்ஸ் குரூப்
  பர்ஸ்ட் குரூப்
  எதுவாயினும் பரவாயில்லை
  நம்ம பிள்ளை
  பெரிய அறிஞராக வரவேண்டும்
  என்ற உளப் (மனப்) பாங்கு
  நம்மில் மலர வேண்டும்!

  Like

  • வாருங்கள் ஐயா. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; படிக்கும் பிள்ளை, எந்தத்துறையிலும் சாதிக்கும் என்று முடிவு செய்தே, இந்த துறையை தேர்வு செய்திருக்கிறோம் ஐயா. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

   Like

 2. நல்ல அனுபவம். பலருக்குப் பயன்படும்.

  Like

 3. bandhu சொல்கிறார்:

  அக்கௌண்ட்ஸ் பிரிவு எடுத்தது நல்ல தேர்வு. லட்சக் கணக்கில் இன்ஜினியர்களை உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்கிறோம். மற்ற பிரிவு எடுப்பவர்கள் குறைந்த அளவில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்!

  Like

  • வாருங்கள் ஐயா. டாக்டர் படிப்புக்கு ஆசைப்பட்டு, அது கிடைக்காமல் போனதால் இன்ஜினியர் படிப்புக்கு சேருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இவர்களால் நாட்டுக்கும் பயன் குறைவு; வீட்டுக்கும் பயன் குறைவு.

   Like

 4. karanthaijayakumar சொல்கிறார்:

  சில ஆண்டுகளில் தெருவில் இருக்கும் அனைத்துஇளைஞர்களுமே பொறியாளர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது
  அனைவருக்கும் வேலை எப்படி கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை
  தங்கள் மகளுக்கு சரியான தேர்வைத்தான் செய்து இருக்கிறீர்கள்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தங்கள் அன்பு மகளுக்கும் வாழ்த்துக்கள்

  Like

  • வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா! நீங்கள் கூறுவது சரிதான் ஐயா. வீட்டுக்கு ஒரு பொறியாளர் என்று அரசோ, கல்லூரிக்காரர்களோ. கோஷம் எழுப்பியபடி சேர்க்கை நடத்துவது மட்டும்தான் பாக்கி என்ற நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது.

   Like

 5. அப்பாடா…! தப்பித்தீர்கள்…!

  Like

 6. chitrasundar சொல்கிறார்:

  உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் ! நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மகளுடன் சேர்ந்து உழைத்த அப்பாவின் உழைப்பும் வீணாகவில்லை.

  எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும், அம்மாவும் அப்பாவும்தான் குரூப் செலக்ட் பண்ணியிருக்கீங்களே தவிர, மகளுக்கு எது படிக்க விருப்பம் என கடைசிவரை சொல்லவே இல்லையே ?

  பதிவில் காமெடி களைகட்டுது !

  Like

  • வாருங்கள் மேடம். கணிதம் ஒன்றைத்தவிர வேறு எதையும் படிப்பதற்கு மகள் தயாராக இருக்கிறாள். ஆகவே அதைத்தான் தேர்வு செய்தோம். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் மேடம்

   Like

 7. ranjani135 சொல்கிறார்:

  நல்லவேளை, தப்பித்தீர்கள்!
  நல்ல மதிப்பெண் எடுத்த உங்கள் பெண்ணிற்கும், அவளது விருப்படியே கல்லூரியில் பாடத்தேர்வு செய்து சேர்த்துவிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள். மகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! (அது சரி, இதழியல் படிக்க விருப்பமில்லையோ?)

  Liked by 1 person

 8. chollukireen சொல்கிறார்:

  அனுபவம் இருக்கிறதே அதை விவரத்த விதம் ஹாஸ்யத்துடனிருக்கிறது.. மார்க்குகள்தான் படிப்பை நிர்ணயிக்கிறது என்பதை எதிர்க்கும் விதமாக மகளின் இஷ்டத்திற்கு படிப்பு அமைந்தது ஒரு சவால்தான். வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு.. அன்புடன்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s