ஒரு வழியாக, 144 தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. உலகத்தொலைக்காட்சிகள், எங்கள் வீட்டிலும் முழங்க ஆரம்பித்து விட்டன. ‘இரண்டு ஆண்டு காலம், தொலைக்காட்சியில் தொடர் நாடகமும், திரைப்படமும் பார்க்காமல் இருந்தால், தமிழ்க்குடி என்னவாகுமோ’ என்ற என் ஐயத்துக்கு, ‘அதெல்லாம் ஒரு வெங்காயமும் ஆகாது’ என்ற விடை கிடைத்திருக்கிறது.
விஷயம் இதுதான், மக்களே! மூத்த மகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுவதைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்குரிய என் மனைவியார், வீட்டுக்குள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
‘தொலைக்காட்சியில் நாடகமும், திரைப்படமும் பார்ப்பது, மகளின் படிப்புக்கு கேடு’ என்று மிகச்சரியாக கணித்துவிட்ட அவர், ஒரே உத்தரவில், தொலைக்காட்சியின் டி.டி.எச்., இணைப்பை துண்டித்து விட்டார்.
அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பம்சம், மகள் ஒன்பதாம் வகுப்பு சென்றவுடனேயே இந்த நடவடிக்கையை எடுத்து விட்டதுதான்.
அம்மணி உத்தரவு போட்டுவிட்டால், அப்புறம், அம்பானியாவது, கும்பானியாவது? ஆக, பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள், பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் இணைப்பு, ரீசார்ஜ் செய்யாமல் அம்போவென விடப்பட்டது.
‘நீண்ட காலம் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு காலாவதியாகி விடும், அப்புறம் உங்கள் கதி, அதோகதி’ என்ற, அம்பானிகள் கும்பலின் தொடர் அச்சுறுத்தல், அசட்டை செய்யப்பட்டது.
இரண்டாண்டு காலம்! எவ்வளவோ நாடகங்கள், எவ்வளவோ திரைப்படங்கள், பல்லாயிரம் சம்பவங்கள். எல்லாம், பத்திரிகையில் படிப்பதுடன் சரி.
உலகம் உருண்டை என்பதால், இரவும் பகலும் மாறி மாறி வரத்தானே செய்யும்? பொதுத்தேர்வு முடிந்தவுடனேயே, மீண்டும் டி.டி.எச்., ரீசார்ஜ் செய்வதற்கான உத்தரவை, மாண்புமிகு அம்மணி பிறப்பித்தார். அதன்படி, ‘காலாவதியாகி விடும்’ என்று, அம்பானிகள் கும்பல் அச்சுறுத்திய அதே டி.டி.எச்., ஸ்மார்ட் கார்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தொலைக்காட்சியை மீண்டும் இயக்கி வைக்கிற, வரலாற்றுச்சிறப்பு மிக்கதொரு வாய்ப்பு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த விடுமுறை தின மகிழ்ச்சியை, இணையத்தில் பகிர்ந்துகொள்வதில், உள்ளபடியே சமூகம் பெருமிதம் கொள்கிறது.

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    # மகளின் படிப்புக்கு கேடு’ என்று மிகச்சரியாக கணித்துவிட்ட அவர்#
    இந்த கணிப்பு சரியா ,தவறா என்று ரிசல்ட் காட்டத்தானே போகிறது ?

    Like

  2. KILLERGEE Devakottai சொல்கிறார்:

    விலகினால் நலமே…

    Like

  3. chitrasundar சொல்கிறார்:

    பத்தாம் வகுப்பு முடியும்வரை வலைப்பக்கம் தலை காட்டக்கூடாது என்பதும் 144 ல் ஒன்றா 🙂 அடுத்த தடையுத்தரவுக்கும்(12 ம் வகுப்பு பொதுத்தேர்வு) தயாராயிடுங்க.

    Liked by 1 person

    • ஹாஹாஹா! மேடம், உண்மையில் அப்படியொரு உத்தரவு வரவில்லை. ஆனால், நாளை மதிப்பெண் குறைந்துபோனால், வரலாற்றுப்பழிக்கு ஆளாக நேரிடுமோ என்றெண்ணி, நானே வலைப்பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது பாருங்களேன்) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்!

      Like

  4. பல நாட்கள் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் தள்ளுபடி இருக்குமே…?

    Liked by 1 person

  5. துளசிதரன், கீதா சொல்கிறார்:

    ஹஹஹஹஹ அட எல்லா வீட்டுலயும் இப்படித்தானோ…..ம்ம்ம் என்ன செய்ய..

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக