பாம்பு விடும் சாபம்!

Posted: 03/02/2015 in அனுபவம், நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

இரவு 9 மணிக்கு சுட்டு வைத்த தோசையை, 11 மணிக்கு சாப்பிடுவதென்பது, கொடுமையினும் கொடுமை. அதனினும் பெரும் கொடுமை, அக்கம் பக்கம் எல்லோரும் தூங்கும்போது, தன்னந்தனியராய் சாப்பிடுவது! தன் கையே தனக்குதவி, தேங்காய் சட்னியே தோசைக்குதவி என்பதெல்லாம், அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
அன்றொரு நாள் இரவு, நான் அப்படியொரு கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஏதோ சரசரவென சத்தம். வெளியில் வந்து பார்த்தால், அது ஏதோ ஒரு வகை தெரியாத பாம்பு. கடைசிநேரச் செய்தி தரும் நிருபரின் பரபரப்போடும், ‘கரெக்சன்’ சொல்ல வரும் புரூப் ரீடரின் அவசரத்தோடும், வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. அய்யகோ, இது என்ன சோதனை? கையில் தோசையும், பிளேட்டுமாக, பாதி வயிறுடன் இருக்கும்போது தானா, பாம்பு வர வேண்டும்? அடிப்பதற்கு கூட, கையில் எதுவும் கிடைக்கவில்லை.
முன்னால் இருப்பது, வீடு கூட்டும் துடைப்பம் மட்டுமே. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்றெல்லாம், வாய்க்கு வக்கணையாக சொல்லி வைத்தவனை, துடைப்பத்தை வைத்து பாம்படிக்கச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. அப்போதைக்கு வேறு வழியில்லை. ‘ஆண்டவன் இன்று நமக்களந்தபடி, இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்று கவுண்டமணி லாங்வேஜில் எண்ணிக் கொண்டு, துடைப்பத்துடன் பாம்பைத் துரத்தினேன்.
முதல் அடி படவில்லை. அது இன்னும் வேகவேகமாக ஊர்ந்து, என் படபடப்பை அதிகரித்தது. இரண்டாவது அடி, லேசாக பட்டது. ‘ப்பூ, இவன் இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்றெண்ணியிருக்க வேண்டும். நான் இருக்கும் திசை நோக்கியே வர ஆரம்பித்தது. நல்ல வேளை, அடுத்த அடி, கொஞ்சம் பலமாக பட்டிருக்கிறது; பாம்பு சுருண்டு விழுந்து விட்டது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய ஓட்டப்பந்தய வீரர்கள், எம்பிக்குதித்து, சர்க்கஸ் வித்தை காட்டுவார்களே, நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லாத குறையை, தீர்த்து வைக்கத்தான் பாம்பார் வந்திருக்கிறார் எண்றெண்ணி, மகிழ்ச்சிக்கூத்தாடினேன்.
சரி, பாம்பு அடித்தாகி விட்டது. ‘நேரம் கெட்ட நேரத்தில் வீட்டினரை எழுப்பி, நம் பெருமையை நாமே பீத்திக்கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கும்’ என்று மண்டைக்குள் இருக்கும் பொதுக்குழுவும், செயற்குழுவும், பகுத்தறிவுத்தீர்மானம் வாசித்தன. ஆகவே, அப்போதைக்கு, பாம்பு ‘பாடி’யை டிஸ்போஸ் செய்வது என்றும், மறுநாள் காலை, தூங்கி எழுந்ததுமே, நள்ளிரவு சாகசத்தை ஊருலகத்துக்கு பறைசாற்றுவது என்றும் முடிவு செய்தேன்.
பாம்பை மீண்டும் ஒரு முறை தலையை நசுக்கி, செத்துப்போய் விட்டதை உறுதி செய்து கொண்டு, அப்படியே துடைப்பத்தால் கூட்டி வீட்டுக்கு முன் இருந்த சாக்கடையில், கொண்டு சென்று தள்ளி விட்டேன். வீரதீரச் செயல் புரிந்த காரணமோ, என்னவோ, அன்றிரவு அவ்வளவாக தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை எழுந்ததும், வீட்டில் இருந்தவர்களிடம் சம்பவத்தை கூறினேன்.
அய்யா, அம்மா, குழந்தைகள் ஆர்வமாக கேட்டனர். மனைவி, கண்டுகொள்ளவே இல்லை. அதுகூட வருத்தமில்லை. ‘துடைப்பக்கட்டை வீணாய்ப்போச்சே’ என்று அவருக்கு பெரும் வருத்தம். ‘அடிக்குறதுக்கு வேற எதுமே கிடைக்கலியா’ என்று நொட்டை வேறு.
மகள்கள் இருவரும், ‘அடிச்ச பாம்பு எங்கே’ எனக்கேட்டனர். நான் சாக்கடையில் கொண்டு சென்று காட்டினேன். சத்திய சோதனை, அங்கே பாம்பைக் காணோம்! என் மனைவிக்கு நல்ல பாயிண்ட் கிடைத்துவிட்டது. ‘பாம்பு அடிச்சு, சாகடிச்சது உண்மைன்னா, இந்நேரம் அது டிச்சுக்குள்ள இருக்கணும், அப்டின்னா உங்கப்பா சும்மா கதை விடுது’ என்று, அடித்துக்கூறி விட்டார். ஊக்க மருந்தைக் காரணம் காட்டி, ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பறிக்கப்படும் வீரனைப்போல் ஆகிவிட்டது என் நிலைமை!
இது நடந்து, ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும். அதிகாலை 4 மணிக்கு பாத்ரூம் போவதற்காக எழுந்து சென்றேன். திரும்பி வந்து, வாசல் விளக்கு ஸ்விட்ச் ஆப் செய்ய கை நீட்டியபோது, ஏதோ அனிச்சைச் செயலாக ஸ்விட்ச் பாக்ஸ் கண்ணில் பட்டது. அங்கே ஒரு பாம்பு, அட்டென்ஷனில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அது, என்னையும், ஸ்விட்ச் ஆப் செய்யச் சென்ற என் கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. ‘ஜஸ்ட் மிஸ்’ என்பார்களே, அந்த வார்த்தைக்கு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது. நல்ல வேளை, அப்படியே கையை பின்னால் இழுத்துக் கொண்டேன். ஓரிரு வினாடிகள், கைகால் ஓடவில்லை. சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பிறகு… இவ்வளவு குளோஸ்அப்பில் பாம்பைப் பார்ப்பது அது தான் முதல் முறை.
சுதாரித்துக் கொண்டு, ‘அடிப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா’ என்று தேடினால், வழக்கம்போல, துடைப்பம்தான் முன்னால் இருக்கிறது. வேறெதுவும் கண்ணில் சிக்கவே இல்லை. பாம்பு வேறு, ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து இறங்க எத்தனிக்கிறது. இறங்கி விட்டால், வீட்டுக்குள் சென்று விடும். வேறு வழியில்லை. ஆகவே, துடைப்பம் மீண்டும் என் கைக்கு வந்தது. திருப்பி பிடித்து, ஸ்விட்ச் பாக்ஸ் உடன் சேர்ந்து அடித்தேன். ச்சே, பதட்டத்தில் குறி தவறி விட்டது.
சிக்ஸர் அடிக்கும் கட்டாயத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு, கடைசி பந்து வீசும் பவுலர் போல் என் நிலைமை. அதுவும், நோ பால் வீசினால் எப்படியிருக்கும்?
இப்போது, பாம்பு ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குலதெய்வத்தை கும்பிட்டு, அடுத்த அடி. துடைப்பத்தின் தாக்குதலில் நிலை குலைந்த பாம்பு, திண்ணையில் விழுந்தது. அதற்குள் மூன்றாவது அடியும் சேர்ந்து விழுந்ததில், தலைநசுங்கி விட்டது.
உண்மையில், அந்த வினாடியில் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வர்ணிக்க, ஓராயிரம் வைரமுத்துக்கள் சேர்ந்து வரவேண்டும். அப்படியொரு மகிழ்ச்சி. பாம்படித்த மகிழ்ச்சியா அது? இல்லவே இல்லை.
‘அடித்த பாம்பைக்காணோம்’ என்றதும், ‘பாம்பே அடிக்கவில்லை’ என்று அடித்துக்கூறியவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆகவே, இம்முறை, நான் தயவு தாட்சண்யம் எதுவும் பார்க்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த எல்லோரையும், எழுப்பி விட்டேன். எல்லோரும் பதட்டத்துடன் எழுந்து வந்தனர்.
திண்ணையில் செத்துக்கிடக்கும் பாம்பைக் கண்டதும், என் மனைவிக்கு பேரதிர்ச்சி. வெற்றிப் பெருமிதத்தில் நான்.
‘எங்க இருந்து வந்துச்சு’ என்றனர், குழந்தைகள்.
‘ஸ்விட்ச் பாக்ஸ் மேல இருந்துச்சு’
‘அன்னிக்கு உங்கப்பா அடிச்சேன்னு சொல்லிச்சே, அந்தப்பாம்பாத்தான் இருக்கும்’ என்றார், மனைவி.
சும்மா இருந்தால், அவரது கருத்தை ஒப்புக்கொண்டதாகி விடுமே!
‘இல்ல, அந்தப்பாம்பு பெருசா இருந்துச்சு. இது கொஞ்சம் சின்னது’
‘இது பெரியது, அது சிறியது’ என்றால், ‘அது தான் வளர்ந்துவிட்டது’ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறதே! ஆகவே, சர்வஜாக்கிரதையாகப் பேசினேன். ‘அப்டியா, சரி போகட்டும்’ என்று கூறி, ஒரு வழியாக, என் சாதனையை அங்கீகரிக்க முன்வந்திருந்த மனைவியாரின் கண்களில், பாம்பு ரத்தம் தோய்ந்திருந்த துடைப்பக்கட்டை பட்டுத்தொலைத்து விட்டது.
‘‘போச்சு போச்சு, இந்த சீமாறும் போச்சா? அம்பது ரூபா சீமாறு போச்சு,’’ என்று, ஆரம்பித்து விட்டார்.
‘செத்துப்போன பாம்பு, சாபம் விட்டிருக்குமோ’ என்று தோன்றியது எனக்கு.

Advertisement
பின்னூட்டங்கள்
 1. karanthaijayakumar சொல்கிறார்:

  பாம்புகளின் படையெடுப்பால்
  துடைப்பம் உடைந்ததுதான் மிச்சம்
  நல்ல அனுபவம் நண்பரே

  Like

 2. பாம்பை அடித்தால் சாபம்தான் போலுள்ளது. எனக்கென்னவோ அந்த பாம்புதான் இந்தப்பாம்பு என்று எண்ணத்தோன்றுகிறது.

  Like

 3. அன்பே சிவம் சொல்கிறார்:

  அடுத்தமுறை காணும்போது பாலும் முட்டையும் வாங்கித்தாருங்கள்!?

  Like

 4. chitrasundar சொல்கிறார்:

  அடுத்த நாள் காலை 11 மணி இல்லையே ! அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கோங்க.

  முதலில் அடித்த பாம்புதான் இது என்றால் பரவாயில்லை, இல்லையென்றால் கையோடுகையா வீட்டையும் சுத்தம்செய்து கொடுத்திடுங்க, சாபம் போய் பாராட்டு மழை பொழியும்.

  Like

  • வாங்க மேடம்! நல்ல வேளை, தோசை மாவை பிரிட்ஜ்ஜில் வைத்து மாதக்கணக்கில் காப்பதுபோல், தோசையை காப்பதற்கு இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடித்து விட்டால், தமிழ்நாட்டில் பாதிப்பேர் சாமியார் ஆகி விடுவார்கள் மேடம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

   Like

 5. // ஓராயிரம் வைரமுத்துக்கள் …. // ஹா… ஹா…

  Like

 6. thulasithillaiakathu சொல்கிறார்:

  ஹ்ஹஹஹஹஹஹ்! ஐயோ சிரித்து மாளவில்லை நண்பரே! பாம்பு அடித்ததை கில்லி அடித்தது போல் நகைச்சுவை கில்லி அடித்துவிட்டீர்கள்! ஒலிம்பிக்கில் இதையும் சேர்க்கச் சொல்லி குரல் எழுப்புவோம். குரல் எழுப்பவில்லை என்றால் நாமெல்லாம் வீரத் தமிழர்களே அல்ல!!! வைரமுத்துவைக் கவி பாடச் சொல்லுவோம்! அப்பவாவது மனைவி துடைப்பம் வேஸ்ட்னு சொல்லாம இருக்காங்களானு பாக்கலாமே! என்ன சொல்றீங்க நண்பரே! அஹஹ்ஹஹ்ஹ் சரி சரி எதுக்கும் நாகராஜருக்குப் பால் ஊத்துரேன்னு வேண்டிக்குங்க…அஹஹஹ் சும்மா…

  சத்தியமாக மிகவும் சிரித்து சிரித்து ரசித்தோம்…..அருமையான நகைச்சுவைப் பதிவு!!!

  Liked by 1 person

 7. thulasithillaiakathu சொல்கிறார்:

  நன்றி!

  Liked by 1 person

 8. ranjani135 சொல்கிறார்:

  பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் தன்னந்தனியாக அடித்திருக்கிறீர்களே, அதுவும் இரண்டு முறை! அதை நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியிருப்பது நன்றாக இருக்கிறது. ஊரார்கள் எல்லாம் நம்மைப் புகழுவார்கள் ஆனால் வீட்டில் ஊஹூம்…..! உங்கள் வீர சாகசங்கள் தொடரட்டும்! பாராட்டுக்கள்.

  பாம்புகள் இப்படி அடிக்கடி வருகின்றனவே, எப்படி அந்த வீட்டில் இருக்கிறீர்கள்?

  Like

  • வாங்க ரஞ்ஜனி மேடம், நாங்கள் வசிப்பது, கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர். இங்கே பாம்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பக்கத்து வீட்டில் என் உறவினர் ஒருவர் கோழிகள் வளர்க்கிறார். மற்ற இரு வீடுகள் புதர் மண்டியுள்ளன. ஆகவே, பாம்புகள் வருகை, சாதாரண நிகழ்வாகி விட்டது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்!

   Liked by 1 person

 9. GiRa ஜிரா சொல்கிறார்:

  சிரிச்சிக்கிட்டே படிச்சேன் 😃

  Like

 10. மலர்வண்ணன் சொல்கிறார்:

  திரும்பத் திரும்ப வருதுன்னா ஏதும் நாகதோசமா இருக்கப் போவுது..!?
  பரிகாரம் வேறொன்னுமில்ல, அடுத்த முறை பாம்பு வரையில அதை உத்துப் பாத்து “துடைப்பக் கட்ட பிஞ்சுடும்”ன்னு சொல்லிப் பாருங்க, அதுவா போயிடும்..!!
  நான் பாம்பு புடிச்ச கதை கீழே…
  http://www.malarinninaivugal.blogspot.com/2013/12/blog-post.html

  Like

 11. mahalakshmivijayan சொல்கிறார்:

  ஆறுமுகம் சார் கலக்கல் பதிவு! நான் சிறு வயதாக இருந்த பொழுது அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படும்.. நீங்கள் சொல்வது போல் ஜஸ்ட் மிஸ்ஸு நிறைய தடவை ஆனதுண்டு! அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படாமல் இருக்க , சங்கரன்கோவிலுக்கு சென்று அங்குள்ள பாம்பின் புற்றுக்கு பால் ஊற்றி விட்டு வந்தோம்! அதன் பிறகு அவ்வளவாக தென்படவில்லை! மேலும் , எங்க ஊரு பக்கம் , கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைப்பர்! எங்க வீட்டுல மட்டும் யாராவது இப்படி சீமாரை எடுத்து பிச்சுட்டா , நான் பத்ரகாளி ஆயிடுவேன் :Dஎன்னால் உங்க மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது சார்! எப்படி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி வாங்குவோம் தெரியுமா சார் 😀

  Liked by 1 person

  • வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மகாலஷ்மி மேடம்! எங்க ஊருப்பக்கம், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் மிகவும் பிரபலம். பாம்புத்தொல்லை இருந்தால், அங்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதையெல்லாம் செய்து பார்த்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடைசியில், கேட்டுக்கு இரும்பு வலை போட்டபிறகுதான், தொல்லை முடிவுக்கு வந்தது.
   சீமாறு பிரச்னை, மறுமுறை வரக்கூடாது என்பதற்காக, குண்டாந்தடியும், அரக்கு மட்டையும் தயார் செய்து வைத்துக்கொண்டது தனிக்கதை. பார்த்துப் பார்த்து, சீமாறு வாங்குவதால்தான், இங்கும் இவ்வளவு பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
   வருகைக்கும், முகநுல் பகிர்வுக்கும் நன்றி மேடம்!

   Liked by 1 person

 12. chollukireen சொல்கிறார்:

  உங்களின் பாம்பு விடும் சாபம் உண்மை நிகழ்ச்சியானதால் ,அதை விவரித்திருக்கும் விதமும் , மிக்க ரஸிக்கும்படி இருக்கிறது. டவுன் களில் பாம்பு வருவதில்லையா?அங்கும் சற்று உள்ளடங்கிய புகுதிகளில் பாம்புகள் வருகிறது. பக்கங்களில் மனை வாங்கிப்போட்டு வீடு கட்டாமல் பாழ் மனைகளாக காட்சியளிக்கும் வீடுகளின் பக்கத்திலுள்ள வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நாகராஜாக்கள் இருக்கிறது.. அவர்கள் பயப்படாமல் அதை ஓட்டியும் விடுகிறார்கள்.
  நல்ல பாம்பு. . அடிக்கக் கூடாதாம். தவளை பிடிக்க விஜயமாம். . நான் ஒருமுறை குட்டிப்பாம்பை மிதித்து விட்டேன். ஒருமுறை வீட்டைச் சுற்றி வரும்போது வாக்கிங். என்னைப்பார்த்து அது உஸ்,உஸ் என்று சீருகிறது., நான் அப்படியே நின்று விட்டேன். நாகராஜா நல்லபடிபோய்விடு என்று சொல்லி ஒரு நீண்ட கழியால் எங்கள் மாப்பிள்ளை அதை தூக்கி எதிரில் உள்ள பாழில் வீசி விட்டார்.
  அது வரும்,போகும் என்று சொன்னதுதான் இன்னமும் மனதில் இருக்கிறது. . இது
  வலசரவாக்கம் பக்கமுள்ள ஆலப்பாக்கம்.. இப்படி சில அனுபவங்கள் ஞாபகம் வந்தது.
  சீமாறு அடி வாங்கிய நாகராஜா கடைசியில் உங்களைக் கடைசியில் நல்ல அனுபவத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய ஸந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளார். ஹாஸ்யம் ததும்ப சிரித்து மகிழும்படியான பதிவு. நன்றி. அன்புடன்

  Liked by 1 person

 13. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சீமாறு – இதைக் கேட்டு எத்தனை காலமாகிவிட்டது. விளக்குமாறு, துடைப்பம். சீமாறு ‘நேரடித் தமிழ் சொல்லா? கரந்தையார் விளக்குவாரா?

  Like

 14. yarlpavanan சொல்கிறார்:

  பாம்பு பற்றிய பதிவு
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s