மாதொருபாகன்- தொடரும் சர்ச்சை!

Posted: 16/01/2015 in இதழியல், கட்டுரை, கருத்து, கவிதை, மொக்கை

திருச்செங்கோடு, கொங்கு மண்டலத்தின் முதன்மையான நகரங்களில் ஒன்று. அங்குள்ள மலைக்கோவில், தேவாரப்பாடல்களில் பாடப்பெற்றது; கொங்கெழு சிவத்தலங்களில் முதன்மையானது. ‘சிவனும், சக்தியும் ஒன்றுதான்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, மாதொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில், இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், சிவபெருமான்.

மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என மூன்றையும் கொண்டது இக்கோவில். சிவத்தலமும், வைணவத்தலமும் ஒன்றாக இருப்பதுவும் இதன் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட மலைக்கோவிலை சார்ந்தே, நகரமும், அதன் பொருளாதாரமும் உருவாகி வந்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புகளையும் கொண்டிருக்கும் திருச்செங்கோடு, தொழில் துறையில் கூட முன்னணி நகரம்தான். விசைத்தறி தொழிலும், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தொழிலும், லாரித் தொழிலும், திருச்செங்கோட்டின் பிரதான தொழில்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

கல்விச்சேவையை கை நிறைய, பை நிறைய லாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டிய தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய இருக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், அவரது அப்பா மோகன் குமாரமங்கலம், ரங்கராஜனின் தாத்தாவும், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தவருமான சுப்பராயன் ஆகியோரின் பூர்வீகம், திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற சிற்றூர். (பெருமாள் முருகன்கூட, இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்பது கூடுதல் தகவல்)

நாட்டின் முதலாவது காந்தி ஆசிரமம், திருச்செங்கோட்டில்தான் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது. இங்கிருந்துதான், ராஜாஜி மதுவிலக்கு மற்றும் கதர் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இப்படியெல்லாம், சிறப்புகளை கொண்டிருக்கும் திருச்செங்கோடு, ஏதோ மனிதக்கறி தின்னும் காட்டுமிராண்டிகள் வசிக்கும் வனமாக பலராலும் உருவகப்படுத்தப்படுவதை காணச்சகிக்காமல் எழுதப்பட்டதே இந்தப்பதிவு.

சர்ச்சைத்தீயை பற்ற வைத்தவர்களும் சரி, அதை அணைய விடாமல் பாதுகாப்பவர்களும் சரி, திருச்செங்கோட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் சேதம் விளைவிக்கின்றனர் என்பதே உண்மை. மிரட்டுவோருக்கு மட்டுமல்ல; மிரட்டலுக்கு அஞ்சி புறமுதுகிடுபவருக்கும், இதில் பங்குண்டு.
***
குறிப்பு 1: பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை;
ஆனால், அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு நிச்சயம் இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
***
குறிப்பு 2: திருச்செங்கோட்டில், பெருமாள் முருகனை கண்டித்து முழுமையாக கடையடைப்பு நடந்திருக்கிறது. ஜாதிய மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு, அங்கு அந்தளவுக்கு செல்வாக்கில்லை. மார்கழி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்லும் காலத்தில், திட்டமிட்டு கிளப்பிவிட்டதே, பிரச்னை காட்டுத்தீயாக பரவ, முக்கிய காரணமாகி விட்டது.

பின்னூட்டங்கள்
  1. pkandaswamy சொல்கிறார்:

    அந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை. ஏன், சமீப காலங்களாக எந்தப் புத்தகங்களையுமே வாங்கவுமுல்லை, படிக்கவுமில்லை. பெருமாள் முருகன் அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதான் எழுதியிருப்பார் என்று என்னால் யூகிக்கவும் முடியவில்லை. எதுவாகினும் எழுதுவதற்கு முன் விளைவுகளைப் பற்றி சிந்தித்திருக்கவேண்டும்.

    அவர் இதை இரு அரசியல் அல்லது சமூக அமைப்பு சார்ந்து எழுதியிருந்தால் அவருக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர் எடுத்த முடிவு துர்ப்பாக்கியமே.

    Like

    • பெருமாள் முருகன் பிரச்னை, மிகச்சிக்கலானதற்கு இரு வலுவான காரணங்கள் இருப்பதாக, நண்பர்கள் தெரிவித்தனர். ஒன்று, அவர் கைநிறைய சம்பளம் பெறும் அரசூழியர்; மற்றொன்று, அவர் ஜாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர். இதுபோதாதா?

      Like

  2. karanthaijayakumar சொல்கிறார்:

    பெருமாள் முருகனின் கதையினைப் படித்தேன் நண்பரே
    எனக்கு உடன்பாடில்லை
    புனைவுக் கதை என்று இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஊரினைச் சுட்டிக் காட்டி, அங்குள்ள கோயில் திருவிழாவின் ஒரு நாளில், யாரும் யாருடனும் வேண்டுமானாலும், கூடலாம், என்று விவரித்திருப்பது வேதனை அளிக்கின்றது நண்பரே
    நுலிலும் உடன் பாடில்லை,
    பெருமாள் முருகனின் முடிவிலும் உடன்பாடில்லை

    Like

    • பெருமாள் முருகனை ஆதரிக்கும் பெரும்பான்மையோர், அவரது புத்தகத்தில் இருக்கும் கருத்தை ஏற்க மாட்டார்கள். திருச்செங்கோடு நகரம் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அப்படியிருக்கும் கோவிலின் திருவிழாவைப் பற்றி, தாறுமாறாக எழுதுவது சரியன்று. குழந்தையில்லாத தம்பதிகளின் உணர்வுகளை படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று, ஊர் பெயரைப் போட்டு எழுதி விட்டதும், மிகத்தவறானது.

      Like

  3. Bagawanjee KA சொல்கிறார்:

    நூல் வெளிவந்து நாலாண்டுகளுக்கு பின் இந்த போராட்டம் ,காரணம் ,அரசியல் லாபம் கருதி மதவாதிகளின் தூண்டுதல் என்றே நினைக்க வேண்டியுள்ளது !

    Like

    • ஐயா, இது நிச்சயம் உள்நோக்கத்துடன் சில பேரால் தூண்டி விடப்பட்ட போராட்டம் என்பதை உள்ளூர் மக்கள் அறிந்தே இருக்கின்றனர். ஆனால், பிரச்னை காட்டுத்தீயாக பரவியதற்கு, ஊர் மக்கள் மத்தியில் கோவில் மீதும், திருவிழா மீதும் இருக்கும் அபிமானமும் முக்கிய காரணம். வைகாசி விசாக தேர்த்திருவிழா என்பது கேலிக்குரிய ஒன்றாகி விட்டது. விழாவுக்கு பெண்கள் வருவதே சந்தேகம் என்ற நிலை திருச்செங்கோட்டில் உருவாகியிருக்கிறது. போராட்டம் வலுப்பெற்றதற்கு இதுவும் முக்கிய காரணம்.

      Like

  4. S.Andichamy சொல்கிறார்:

    பண்டிகை தினால்கூட பாதவாவாடா.அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம்தான்.புதியதல்ல.

    Like

    • ஐயா, நாகரிகம் அடையாத மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் அத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கலாம். அதை, தற்போதைய ஊர்ப் பெயருடன், கோவில் பெயருடன் சம்பந்தப்படுத்தி எழுதும்போதுதான் பிரச்னை, பூதாகரமாகிறது.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s