எங்கே போய்விடும் காஸ் மானியம்?

Posted: 29/12/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

ஊருக்குள் யாரைப் பார்த்தாலும், சமையல் காஸ், ஆதார் அட்டை, மானியம் என்றே பேசிக்கொள்கின்றனர். நமக்கு, மனைவி, குழந்தைகள், அம்மா, அய்யா, ஆடு, மருத்துவமனை என்றே பொழுது கழிகிறது. வீட்டுப்பாடம் சொல்லித்தருவதற்கும், வீட்டுக்கு சுண்ணாம்படிப்பதற்கும் நேரமின்றி நான் தடுமாறுவது, வானத்தில் சஞ்சரிக்கும் தேவர்களுக்கும், தேவதூதர்களுக்கும் தெரியாதா என்ன? ஆகவே, நானும், யாரேனும் தேவதூதர்கள், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குப்போட்டு, இந்த அயோக்கியத்தனத்துக்கு முடிவு கட்டுவார்கள் என்று, ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.
ஆனால், அந்த தேவதூதர்களுக்கும், நம்மைப்போலவே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்திருக்க வேண்டும். யாருமே வழக்குப்போடவில்லை. அந்தோ பரிதாபம்! கடைசியில், நானும், அந்த வரிசையில் போய் நிற்க வேண்டிய அவலம் வந்து விட்டது. ஆனால், ஒரு விஷயம் பாருங்கள்! நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ, என்னவோ, என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. பணம் பைசா இல்லாவிட்டாலும், திசைக்கொன்றாக நான்கு வங்கி கணக்குகளும் இருக்கின்றன. எல்.பி.ஜி., அடையாள எண்ணும் வாங்கி விட்டேன். கடைசியாக காஸ் வாங்கிய ரசீது கூட, கையில் இருக்கிறது.
எல்லாவற்றையும், நகல் எடுத்துக் கொண்டு, வங்கிக்கும், சமையல் காஸ் ஏஜென்சிக்கும் போவது தான் பாக்கி. ஆனால், நமக்குத்தான் ஆயிரம் வேலைகள் இருக்கின்றனவே? நாட்கள் தள்ளிக்கொண்டே போகின்றன. நம்மைப்போன்று, பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்காகத் தானே, கடைசி நாள் என்று ஒன்றையும், கருணைக்காலம் என்று ஒன்றையும் முடிவு செய்கின்றனர்?
ஆகவே, நான் டிச.,31ம் தேதியன்று, வங்கிக்கும், காஸ் ஏஜென்சிக்கும் போகலாம் என்று இருக்கிறேன். அன்று வங்கியிலும், காஸ் ஏஜென்சியிலும் என்னதான் நடக்கிறது என்று, காத்திருந்து வேடிக்கை பார்த்து விட வேண்டியது என்று, இப்போதே முடிவு செய்து விட்டேன்.
என்ன, வீட்டுப்பக்கம் இருந்து கிளம்பி வரும் தொணதொணப்பை சமாளித்தாக வேண்டும். தினமும் ஆயிரமாயிரம் அம்புகளையும், கம்புகளையும் சமாளிக்கும் நமக்கு, இதுவெல்லாம் எம்மாத்திரம்?
சரி, போகட்டும் விடுங்கள். இந்த எண்ணெய் நிறுவனத்தினர் இருக்கின்றனரே, அமெரிக்க தூதரகம் முன் விசாவுக்கு காத்திருப்பதற்குக்கூட கூச்சப்படும் ஆசாமிகளையும், தங்கள் காஸ் ஏஜென்சி முன் கால் கடுக்க நிற்க வைத்த சதிகாரக்கூட்டம்! ஏதாவது குழப்படி செய்து, நம்மைப் போன்ற நல்லவர்களுக்கும், இம்சையை ஏற்படுத்த திட்டம் தீட்டி இருப்பர். ஆகவே, அவர்களை எப்போதும் நான் நம்புவதே இல்லை. இப்போதைக்கு அவர்களை சமாளிக்கவும் என்னிடம் ஒரு பெரும் ஆயுதம் இருக்கிறது. ஆம், எங்கள் வீட்டில் இன்னும் பயன்படுத்தப்படாத முழு சிலிண்டர் இருக்கிறது. அது தீரும்போதுதானே, மானியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

பின்னூட்டங்கள்
  1. ranjani135 சொல்கிறார்:

    நாங்கள் பண்ணிவிட்டோம் அதனால் கவலை இல்லை. இனி மானியப் பணம் வந்துவிடும்.
    தமாஷ் இருக்கட்டும், இதற்கெல்லாம் எளிய வழியை யாரவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே!

    Like

    • மேடம், மானியத்துக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழியே இல்லையாம். உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. இன்னும், காஸ் புத்தகம் ஜெராக்ஸ், ரசீது ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு நேரில் வாருங்கள் என்கின்றனர், மடையர்கள்!

      Like

  2. Bagawanjee KA சொல்கிறார்:

    மானியம் வங்கிக் கணக்கில் எத்தனை நாட்கள் ஏறும் ?திடீரென்று ஒருநாள் மானியமே இல்லை என்று நம் தலையில் இடியை இறக்கத்தான் போகிறது !
    அதற்கு மக்களை இந்த பாடு படுத்துவது நியாயமே இல்லை !காங்கிரஸ் ஆட்சி செய்ததையே நாங்களும் செய்வோம் என்றால் இவர்களுக்கு வோட்டு போட்டதன் பலன்தான் என்ன ?

    Like

    • இன்றில்லா விட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் மறுநாள்… ஆக என்றாவது ஒரு நாள் நீங்கள் சொன்னது நடக்கத்தான் போகிறது ஐயா. அதற்குத்தயாராக இருந்து கொள்ள வேண்டியதுதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா

      Like

  3. mahalakshmivijayan சொல்கிறார்:

    இந்த காஸ் படுத்தும் பாடு இருக்கிறதே உய்யுயையையோ!!!!

    Like

  4. தி தமிழ் இளங்கோ சொல்கிறார்:

    எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாகவே சொன்னீர்கள். போகின்ற போக்கைப் பார்த்தால் அடுத்த தடவை வேறு கட்சி ஆட்சிதான் போலிருக்கிறது.

    Like

    • வாருங்கள் ஐயா. காஸ் மானியத்துக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், பல குடும்பங்களில் பிரச்னைகள் வருகின்றன. மகன், மகள் எங்காவது தொலைதூரங்களில் இருக்கும் குடும்பங்களில், பெரியவர்கள் மட்டுமே இருக்கும் வீடுகளில் எல்லாம், எத்தனை சிரமங்கள்? வாட்டும் வெயிலில் எங்கோ இருக்கும் காஸ் ஏஜென்சியை தேடி அலைபவர்கள் எத்தனை பேர்? இடிப்பாரை இல்லா மன்னர்கள் ஆட்சி, இப்படித்தான் இருக்கும்போலும்!

      Like

  5. தி தமிழ் இளங்கோ சொல்கிறார்:

    காஸ் (GAS) மானியம் இருக்கட்டும். முதலில் ப்ளாக்கரில் வலைப்பதிவை தொடங்குங்கள். உங்கள் பதிவினில் (WordPress ) ஒரு கருத்துரையை போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. உங்கள் கருத்துரைப் பெட்டியில் கருத்துரைகள் அதிகம் வராததற்கு இதுவே காரணம்.

    Like

    • ஐயா. பிளாக்கரில் எனது வலைப்பக்கம் இருக்கிறது. சிரமப்பட்டு அதை தமிழ் மணத்திலும் இணைத்து விட்டேன். ஆனால், நான் வலைப்பக்கத்தின் பெயர் அடையாளத்தில் செய்த மாற்றம் காரணமாக, தமிழ் மணம் ஏற்க மறுக்கிறது. மீண்டும் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். காத்திருப்பில் இருக்கிறது. அந்த வலைப்பக்கத்திலும் அவ்வப்போது பதிவுகள் போடுவது வழக்கம். தங்கள் பார்வைக்காக இந்த பதிவு, ஐயா http://migavumnallavan.blogspot.in/2014/11/blog-post_4.html

      Like

  6. karanthaijayakumar சொல்கிறார்:

    ஆதார் அட்டை ஏற்கனவே பெற்றுவிட்டேன் ஐயா
    அதனால் வேலை முடிந்து விட்டது.
    ஒன்று மட்டும் புரியவில்லை, எதற்காக மானியம் தரவேண்டும்,
    அதற்கு பதிலாக விலையைக் குறைத்து விடலாமே

    Like

    • வாருங்கள் ஐயா, எல்லாம் ஏமாற்று வேலை. இந்தியர்களின் ஏமாளித்தனத்தை நன்கறிந்த மேற்குலக நாடுகளும், அவர்தம் கருவியாக பயன்படும் சர்வதேச நிதி நிறுவனங்களும், மானியத்தை ஒழிப்பதற்கு போட்டுக்கொடுத்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி இப்போது அமலாகியுள்ளது. மறுபகுதி, விரைவில் அமலாகுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

      Like

  7. chitrasundar சொல்கிறார்:

    வெளியூர் வாசம் என்பதால் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றி தெரியவில்லை. அதைப் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Like

  8. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    Like

  9. ootynews சொல்கிறார்:

    சார்… கடைசியில டிசம்பர் 31ம் தேதி அன்றாவது போய் பதிவு செய்தீர்களா… அல்லது நம்மல மாதிரி இன்னும் பெண்டிங் வைச்சிருக்கீங்களா….? மார்ச் வரை டைம் இருக்கு என்று சொல்றதால மெதுவா பதிவு பண்ணிக்கலாம்…. இப்போ கையெழுத்து வாங்க சில வங்கிகளில் ரூ.30. வசூல் பண்றாங்களாம். இது என்னதான் நடக்கும் சார்….

    Like

பின்னூட்டமொன்றை இடுக