ஆடு!

Posted: 28/12/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, ,

வீட்டில், அம்மா ஆடு வளர்த்தார்; மாடு வளர்த்தார்; கோழி வளர்த்தார்; நாயும் வளர்த்தார். உலகம் உருண்டை அல்லவா? அந்த அடிப்படையிலும், வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தில் இருக்கும் பிடிப்பின்பேரிலும், மீண்டும் ஆட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும்.

திடீரென்று ஒரு நாள், ‘ஆடு எங்காவது இருந்தால், விலைக்கு வாங்கிக்கொள்ளலாம், பிடித்துக்கொண்டு வா’ என்று, பக்கத்து வீட்டுப் பையனுக்கு உத்தரவு கொடுத்து விட்டார். இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட, நானும், அய்யாவும், ‘எப்படியாவது, ஆடு வாங்கும் திட்டத்தை பணால் ஆக்க வேண்டும்’ என்று கங்கணம் கட்டி களம் இறங்கினோம்.
ஆடு வாங்க புறப்பட்ட நபரை, கடுமையாக எச்சரித்தோம். ‘ஆடு எங்குமே கிடைக்கவில்லை என்று சொல்லி சமாளித்தே ஆக வேண்டும்’ என்று எங்களால் கொலை மிரட்டல் விடப்பட்ட அந்த ஆசாமி, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல், வீதியெங்கும் விஷயத்தை உளறிக் கொட்டி விட்டான். ஆக, நமது ராஜதந்திர முயற்சிகள் எல்லாம், வீணாகி, வீதி மண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
அடுத்த முறை, அம்மா சர்வ ஜாக்கிரதையாக காரியத்தை மேற்கொண்டார். வீட்டு ஜன்னலில் கட்டப்பட்ட ஆடு, ‘மே, மே’ என்று கத்தியபோது தான், ஆடு வாங்கப்பட்டு விட்ட மேட்டரே, எனக்கும், அய்யாவுக்கும் தெரியவந்தது. ஆடு வாங்கிய நாளன்று, என்னைப்போலவே, அய்யாவும், தன் வன்மையான கண்டனத்தை அம்மாவிடம் பதிவு செய்தார். மறுநாள் என்ன நினைத்தாரோ, சல்லைக்கொக்கியுடன், ஆட்டுக்கு தீவனம் கொண்டு வரக்கிளம்பி விட்டார். ‘இவனுடன் கூட்டணி சேர்ந்தால், வீண் பிரச்னை’ என்று ஒரு வேளை நினைத்திருக்கலாம்.
முதல் நாள் எங்களுடன் சேர்ந்து, ஆடு வாங்கியதை நையாண்டி செய்து கொண்டிருந்த, எனதருமை மனைவியோ, மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம், ‘நான்தான் ஆட்டில் பால் கறப்பேன்’ என்று கிளம்பி விட்டார். அரை லிட்டருக்கும் மேலாக பால் கறந்தாகி விட்டது. அன்று முதல் என் மகள்கள் இருவரும் சுடச்சுட ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தனர். நான் மட்டும் விரோதியாக இருந்து என்ன பயன்? ஆகவே, நானும் ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தேன்.
இப்படியே, மூன்று மாதங்கள், வீட்டில் எல்லோரும் ஆட்டுப்பால் குடித்தோம். அய்யாவும், அம்மாவும், ஆட்டுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும், தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது, கொசு கடித்தால், புகை மூட்டம் போடுவது என்று பரபரப்பாகி விட்டனர். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மட்டும், அம்மாவே வைத்துக் கொண்டார்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள், ஆட்டுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஒரே இடத்தில் அசையாமலும், அசை போடாமலும், நின்று கொண்டிருந்தது. அய்யாவும், அம்மாவும், தங்களுக்குத் தெரிந்த வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர்.
ஒரு மடியில் பால் கட்டிக் கொண்டு இருப்பது மறுநாள் தான் தெரிந்தது. கடுமையான வீக்கம். ஆட்டுக்கு, நிற்கவும் முடியவில்லை; படுக்கவும் முடியவில்லை. அம்மாவுக்கு பயம் கண்டு விட்டது. அய்யாவுக்கு வேறு, ஒரு வாரமாக காய்ச்சல். நான் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று, வந்து கொண்டிருந்தேன்.
கால்நடை மருத்துவமனைக்கு ஆட்டை அழைத்துச் செல்வதற்கெல்லாம் அம்மாவால் முடியாது. இதெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான், ‘ஆடெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று நானும், அய்யாவும் சொன்னோம். அப்போது ஏற்க மறுத்த அம்மா, ஆடு நோய்வாய்ப்பட்டதும், வருத்தப்பட்டார். அவரது இப்போதைய கவலை, ‘ஆடு செத்துப் போய் விட்டால், ஆறாயிரம் ரூபாய் போய்விடுமே’ என்பதுதான்.
இதை நினைத்தே, அவருக்கு ரத்த அழுத்தம் வேறு அதிகரித்து விட்டது. திடீரென ஒரு நாள் காலை, ‘எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை. சிரமமாக இருக்கிறது’ என்றார். எனக்கு திடுக்கென்றது. ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாமல் இருந்து விட்டாரோ என்று பயம் வேறு. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ வந்து விட்டது. மருத்துவமனைக்கு சென்று விட்டோம். உடனுக்குடன் சிகிச்சை. ரத்த அழுத்தம் 220 என்ற அளவில் இருந்தது. மருத்துவர், ‘நல்ல வேளை, உடனே வந்தீர்கள்’ என்றார்.
ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தைக் கேட்ட மருத்துவர், குபீரென சிரித்தார். ‘ஆறாயிரம் ரூபாய் ஆட்டுக்கு கவலைப்பட்டு, அதைப்போல் இரு மடங்கு மருத்துவச் செலவு செய்கிறார்களே’ என்பது, அவருக்கு சிரிப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மூன்று நாட்கள், குளுக்கோஸ், மருந்து, மாத்திரை என்று சிகிச்சை பெற்றபின், வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அம்மா.
அதற்குள் நானும், கால்நடை மருத்துவரை, கெஞ்சிக்கூத்தாடி, வீட்டுக்கு அழைத்து வந்து, ஆட்டுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்தேன். அவரும், தொடர்ந்து ஒரு வாரம் ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் போட்டு, ஆட்டை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.
தினமும் அவர் ஆட்டுக்கு சிகிச்சை அளித்துச் செல்லும் போதெல்லாம், நான் 100 ரூபாய் கொடுத்தனுப்புவது வழக்கம். அவர், பணம் வாங்குவதற்கு சங்கடப்படுவார். ‘பரவாயில்லை, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று, கட்டாயப்படுத்தி கொடுத்தனுப்புவேன். ‘அவர் ஆட்டை மட்டும் காப்பாற்றவில்லை’ என்பது, எனக்குத்தானே தெரியும்!

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    சும்மாவா சொன்னார்கள் ,ஆடு அரைப்பணம்; மேய்ப்புக்கூலி முக்கால் பணம் என்று ?

    Like

  2. ranjani135 சொல்கிறார்:

    ஆடு அரைப்பணம்; சுமைகூலி முக்காப்பணம் என்பதை பகவான்ஜி கொஞ்சம் மாற்றிவிட்டாரோ? எனிவே, எங்களை எல்லாம் ஆடு பற்றி நினைக்க வைத்துவிட்டீர்கள்!

    Like

  3. RajalakshmiParamasivam. சொல்கிறார்:

    அம்மா உடல் நலமாயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
    // ‘அவர் ஆட்டை மட்டும் காப்பாற்றவில்லை’ என்பது, எனக்குத்தானே தெரியும்!//,
    சில சமயங்களில் வெளியே சொல்ல முடியாமல் சில காரியங்களை நாம் செய்கிறோம் என்பதை நானும் பல சமயங்களில் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    Like

    • வாருங்கள் மேடம், அம்மா இப்போது உடல் நலம் தேறி வருகிறார். ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கும் தானே? வருகைக்கும், தங்கள் அன்புக்கும் நன்றி மேடம்

      Like

  4. mahalakshmivijayan சொல்கிறார்:

    ஒரே ஒரு ஆடு உங்கள் வீட்டில் உள்ள அத்தனை நபர்களையும் இப்படி ஆட்டுவித்து விட்டதே 🙂

    Like

  5. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    Like

  6. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    Like

  8. puthuvai velou சொல்கிறார்:

    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    http://www.kuzhalinnisai.blogspot.com

    Like

  9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    சரியான பழமொழி – சுண்டைக்காய் கால்பணம். சுமை கூலி முக்காப் பணம். மெல்லிய நகைச்சுவையோடு இருக்கிறது உங்கள் இடுகை.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s