மாயமான் வேட்டை!

Posted: 30/11/2014 in அனுபவம், கட்டுரை, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

தமிழ் மீடியத்தில் படித்த பலருக்கும், ‘ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியவில்லையே’ என்ற வருத்தம், நிச்சயம் இருக்கும்; எனக்கும் பல ஆண்டுகள் அப்படித்தான் இருந்தது. எங்காவது பயணிக்கும்போது, சக பயணிகளான பொட்டு பொடிசுகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கிலத்திலேயே அழுவதைப் பார்க்கும்போது, பேரவமானமாக இருக்கும்.

பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு, லாலு பிரசாத், ராமவிலாஸ் பாஸ்வான் மாதிரியானவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு, நம் ஆங்கிலம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. எங்காவது ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு போயாவது, ஐயம் திரிபற ஆங்கிலம் பேசிப் பழகி விட வேண்டும் என்று தீராத ஆவல். ஒரு நாள் பேச்சுவாக்கில் இருந்தபோது, நண்பரும் அப்படியே சொன்னார். அப்புறமென்ன? துணைக்கு ஆள் கிடைத்து விட்டது; ‘பயிற்சி தரும் ஆள் யாராவது கிடைக்கட்டும்’ என்று காத்திருந்தோம்.
அப்படி இருந்த நாட்களில்தான், அலுவலகத்துக்கு பக்கத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆங்கில பேச்சுப்பயிற்சி சொல்லித்தருவதாக போர்டு மாட்டினார். அவர் பெரும்பாலான நேரங்களில் பயிற்சிக்கு ஆளில்லாமல், ரோட்டில் போகும் வரும் வாகனங்களை கணக்கெடுப்பதாக ஆபீஸ் பையன் தகவல் சொன்னான்.
ஆகவே, அந்த ஆசிரியையிடம் சென்று நானும் நண்பரும் விசாரித்தோம். ‘இரண்டு மாதம் வகுப்பு, மூவாயிரம் கட்டணம்’ என்று கறாராகப் பேசினார், ஆசிரியை. நாங்கள் இருவரும் பத்திரிகை செய்தியாளர்கள் என்று தெரிந்தவுடன், முன்கூட்டியே பணத்தை வைத்தால் தான் வகுப்பென்று (!) சொல்லி விட்டார். அவருக்கு என்ன பயமோ?
வேறு வழியின்றி மொத்தமாக முன்பணம் கொடுத்து வகுப்பில் சேர்ந்தோம். இருவருக்கு மட்டும் தனி வகுப்பு. இருவரது ஆங்கிலத் திறனையும் சோதித்த ஆசிரியை, இரண்டே மாதத்தில் இருவரையும் ஆங்கிலத்தில் பேச வைத்து விடுவதாக உறுதியாகச் சொன்னார். ஆக, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அமர்க்களமாக தொடங்கியது.
ஒரு குயர் நீளவாக்கு நோட்டுடனும், பேனா, பென்சில், அழிக்கும் ரப்பருடனும் நாங்கள் வகுப்புக்குச் செல்வது கண்டு, அக்கம் பக்கத்து அலுவலகத்தார் வாயைப்பிளந்தனர். கூடவே இருக்கும் சில பேரோ, கும்பல் கூடி பேசிச்சிரிப்பதும், குதூகலப்படுவதுமாக இருந்தனர். ‘காலம் போன கடைசில…’ என்பதாக, காதுபடப் பேசும் கருத்துக்கள் எல்லாம், நம்மைக் குறி வைத்து ஏவப்பட்டதாகவே எனக்குப் புலப்பட்டன. ‘நீங்க குடிங்க யுவர் ஹானர்’ என்ற லொடுக்குப்பாண்டி சினிமா டயலாக்போல, ‘அவங்க கெடக்குறாங்க சார்’ என்பான் ஆபீஸ் பையன்.
ஆரம்பத்தில் வகுப்பெல்லாம் ஜோராகத்தான் இருந்தது. வகுப்பில் மிகத்தீவிரமாக கவனித்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வீட்டில் எழுதிப்பார்க்கும் போதும், வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார்ப்பது போல கனவு காணும்போதும், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
கனவெல்லாம் நனவாகி விடுகிறதா என்ன? நண்பர் கொஞ்சம் விளையாட்டுப் பேர்வழி. ஆசிரியை, மிகத்தீவிரமாக ஆங்கில இலக்கணம் பற்றி வகுப்பெடுக்கும் வேளையில், ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்பார். ஆசிரியைக்கே தெரியாத ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் விசாரிப்பார். வெளியில் வேடிக்கையும் பார்ப்பார். திடீரென கெக்கே பிக்கேவென்று சிரித்தும் தொலைப்பார். அவருக்கு அடிக்கடி போன் வேறு வந்து விடும். ஆசிரியைக்கு சங்கடமாக இருக்கும்; எனக்கோ, தர்ம சங்கடமாக இருக்கும்.
நாட்கள் செல்லச்செல்ல, வகுப்புக்கு மட்டம் போடவும் ஆரம்பித்தார் நண்பர். அவர் வராமல் விடுவதுடன், ‘நாளைக்குப் போலாம் விடுங்க சார்’ என்று நமக்கும் வேறு சொல்லி விடுவார். ‘தனியாகப் போகத்தான் வேண்டுமா’ என்று நமக்கும் தோன்றும். இப்படியே, இன்று, நாளை என்று தள்ளிப் போடப்பட்ட வகுப்புக்கு, பிறகு போகவே இல்லை.
ஆசிரியை, நான்கைந்து முறை, ஆபீஸ் பையனிடம் சொல்லி விட்டார். வழியில் எதிர்ப்பட்டபோது, என்னிடமே ஒரு முறை விசாரித்தார். ‘ஒர்க் கொஞ்சம் அதிகமாய்டுச்சு பாத்திக்கிடுங்க’ என்று, நண்பரின் மொழியில் சொல்லி சமாளித்தேன். யார் விட்ட சாபமோ, மீதமிருந்த ஒரு மாத வகுப்புக்கு போக முடியவே இல்லை.
அதிர்ஷ்டவசமாகவும், தெய்வாதீனமாகவும், ஆங்கிலம் மயிரிழையில் உயிர் தப்பித்து விட்டதாக, அக்கம் பக்கத்து, அலுவலக வட்டாரங்களில், அவ்வப்போது கருத்து தெரிவிக்கப்படுவது, வழக்கமாகியிருந்தது. ஆள் இல்லாத நேரங்களில் உரக்கவும், இருக்கும் நேரங்களில் முணுமுணுப்பாகவும், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நமக்கு கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தன.
‘‘விடுங்க சார், பொறாமைக்காரப் பசங்க, எங்க இவுங்கல்லாம் இங்லீஷ் படிச்சுருவாங்ளோன்னு கடுப்புல கெடந்து அலையுதாணுக,’’ என்று, ஒரே வாக்கியத்தில், விமர்சனத்தை புறக்கணித்துவிட்டார் நண்பர். ஆண்டுகள் பல கடந்தாலும், ஆங்கிலம் பேசுவது என்னவோ, இன்னும் மாயமான் வேட்டையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது!

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    நீங்கள் மட்டுமல்ல ,இந்த மாயமான் வேட்டையில் நிறைய பேர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் !

    Like

    • வாருங்கள் ஐயா. நாட்டில், ஸ்போக்கன் இங்லீஷ் பயிற்சி அளிப்பதாகக்கூறி பணம் சம்பாதிக்கும் பல பேருக்கு, இலக்கண சுத்தமாகவோ, அசுத்தமாகவோ, ஆங்கிலம் பேச வராது என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இதை நாம் சொன்னால்…!

      Like

  2. தேவையில்லாத ஒன்று என்று பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும்…

    Like

  3. bandhu சொல்கிறார்:

    ஆங்கிலத்தில் பேசுவதை தவிர வேறு வழியில்லை எனும்போது தன்னால் வந்துவிடும். விட்டுத் தள்ளுங்கள்!

    Like

  4. karanthaijayakumar சொல்கிறார்:

    வகுப்பிற்குச் சென்று ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்வது என்பது இயலாதது என்பதே என் கருத்து நண்பரே.
    ஆங்கித்தில் பேச வேண்டுமானால், தவறாகப் பேசிவிடுவோமோ என்ற கூச்சத்தை முதலில் விட வேண்டும், தவறாக இருந்தாலும் பேசுங்கள், ஆங்கிலம் தன்னால் வந்துவிடும்

    Like

  5. ranjani135 சொல்கிறார்:

    யுவர் ஆனர்! கருத்துரை இட்டவர்களின் கருத்துக்களை மறுக்கிறேன். பத்து வருடங்களாக ஆங்கிலம் பேசக் கற்பித்தவள் என்கிற முறையில்! 🙂 🙂

    Liked by 1 person

    • வாருங்கள் மேடம். தொடர்ந்து வகுப்புக்குப் போயிருந்தால், என்னாலும் ஆங்கிலம் பேசியிருக்க முடியும் என்பதே என் கருத்தும்கூட. சம்பந்தப்பட்ட ஆசிரியை, ‘உங்கள் நண்பருக்கு ஆர்வமில்லை, நீங்கள் மட்டும் வாருங்கள்’ என்று கூறிவிட்டார். எனக்குத்தான், அப்படிப்போக மனமில்லை. கருத்துக்கு நன்றி மேடம்!

      Like

  6. Palanisamy R சொல்கிறார்:

    விடுங்க சார், பொறாமைக்காரப் பசங்க, எங்க இவுங்கல்லாம் இங்லீஷ் படிச்சுருவாங்ளோன்னு கடுப்புல கெடந்து அலையுதாணுக

    Like

  7. mahalakshmivijayan சொல்கிறார்:

    வணக்கம் ஆறுமுகம் சார்! ஆங்கிலத்தில் பேச ஆசைபடுவது மாயமான் பிடித்த கதை இல்லை! முடிந்தால் இவ்வுலகில் முடியாதது ஒன்றும் இல்லை.. படம் பார்க்க பிடிக்குமா உங்களுக்கு?? அப்படி ஒரு வேளை பிடித்தால் நன்கு ஸ்டார் மூவீஸில் படம் பார்க்க ஆரம்பியுங்கள்.. கீழே சப் டைட்டிலோடு படத்தை கவனியுங்கள். தெரியாத வார்த்தைகளுக்கு dictionary பார்த்து கொள்ளுங்கள் . ஓரளவு வார்த்தைகளை உபயோக படுத்த கற்று கொண்ட பின்னே அதை உபயோகம் செய்து பேச முயற்சி செய்யுங்கள். கைகளை தட்ட தட்ட தான் ஓசை எழும்பும்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🙂

    Like

  8. chollukireen சொல்கிறார்:

    எல்லாம் புரியும்,மனதில் வாக்கியங்கள் உருவாகும். மருமகள்கள் படித்தவர்களாக வந்து விடவே இது தப்போ,அது தப்போ என்று வந்ததைக்கூட தடைசெய்து விட்டேன். இப்படியும் சில ென்னைப் போன்ற பிரகிருதிகள். அன்புடன்

    Like

பின்னூட்டமொன்றை இடுக